Saturday, 16 March 2019

பொள்ளாச்சி பயங்கரம்!
பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரம் மனதை பதைபதைக்க வைக்கிறது. ஒருகட்டத்துக்கு மேல் அந்த வீடியோவில் அந்தப் பெண்களின் கதறலைக் கேட்க முடியவில்லை. கண்ணீர்தான் வருகிறது. உணர்ச்சி வேகத்தில் நாமே அந்த கொடூரர்களை ஏதாவது செய்யவேண்டும் போல தோன்றுகிறது. ஆனால் உணர்ச்சி வசப்படாமல் அல்லது சமூக வலைத்தளங்களில் மட்டும் பொங்கிக் கொண்டிருக்காமல் அந்தக் கயவர்களுக்கு எப்படி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதை பற்றி யோசிக்க வேண்டும்.

எனக்கும் இந்த தேர்தலில் அடிமை அதிமுக அரசு தோற்கவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் அதற்காக தயவுசெய்து இதை அரசியல் நோக்கத்தோடு மட்டும் பார்க்காதீர்கள். முதல் காரணம் வருகின்ற செய்திகள் இதில் அதிமுக என்ற கட்சியில் இருப்பவர்கள் மட்டும் இல்லை. கட்சி சார்பாக நாம் இங்கே சண்டை போட்டுக்கொண்டிருக்க அங்கே கட்சி பாகுபாடு இல்லாமல் பெண்களை வேட்டையாடி இருக்கின்றன அந்த நாய்கள். இரண்டாவது காரணம் இதை அரசியல் நோக்கத்தோடு மட்டுமே அணுகினால் தேர்தலுக்கு பிறகு இந்த விவகாரம் நீர்த்துப் போய்விடும். அல்லது கூட்டணியை பொறுத்து பலர் மௌனமாகி விடுவார். இப்போதே பிஜேபி, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளிடம் இருந்த எந்த எதிர்வினையும் இல்லை.

ஆகவே இதை தயவுசெய்து அரசியல் நோக்கத்தோடு அடையாளப்படுத்த வேண்டாம். இதைக் கண்டிக்க நாம் அரசியல்வாதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு அக்காவுக்கு தம்பியாகவோ அல்லது ஒரு தங்கைக்கு அண்ணனாகவோ இருந்தாலே போதும். அதுகூட வேண்டாம் குறைந்தபட்ச மனிதாபிமானம் மிக்க மனிதனாக இருந்தாலே போதும். இந்த சம்பவத்தை கொஞ்சம் பொறுப்புடன் அணுகுங்கள். சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை கண்ணை மூடிக்கொண்டு பரப்பாதீர்கள். மக்களிடம் பயத்தையும் பதட்டத்தையும் விதைக்காதீர்கள்.

இப்போது அரசியல் ஆக்கப்படுவது தேர்தலுக்கு பிறகு அனைவரின் ஜாதியும் தோண்டி எடுக்கப்பட்டு முக்கிய பிரச்சனையில் இருந்து விலகி உன் ஜாதியா என் ஜாதியா என ஜாதிச்சண்டை ஆகி விடும். ஆகவே இதை கண்டிக்க சாதி மதம் அரசியல் பார்க்காமல் அனைவரும் கை கோர்க்க வேண்டியது மிக அவசியம்.

முதல் உண்மை இந்த சம்பவத்தில் கைதானவர்கள் யாரையும் ஜாமீனில் விடுவிக்கவில்லை. புகார் செய்த பெண்ணின் அண்ணனை ஆள் வைத்து மிரட்டிய வழக்கில் மிரட்டப் போன நபர்கள் மட்டுமே நிபந்தனை ஜாமீனில் உள்ளனர். அதற்கு சேர்த்துதான் கைதானவர்கள் மீது மிரட்டல் வழக்கும் போடப்பட்டுள்ளுது. இரண்டாவது இது கற்பழிப்பு வழக்கு இல்லை. இருநூறு பெண்கள் முன்னூறு பெண்கள் கற்பழிப்பு என்று நீங்களே அந்தப் பெண்களை கேவலப்படுத்தாதீர்கள். பாலியல் துன்புறுத்தல் வழக்கு மட்டுமே இது.

இன்னொரு பயமும் இயற்கையாக எழுகிறது. இதுவரை கைப்பற்றப்பட்ட காணொளிகள் மற்றும் இன்னும் அந்தக் கயவர்களிடம் மீதமிருக்கும் காணொளிகள் பாதுகாப்பு பற்றியது. உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் நாட்டின் ராணுவ கோப்புகளே காணாமல் போகும் காலம் இது. அந்த காணொளிகள் வெளியில் கசிந்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை எதற்குப் பயந்து புகார் அளிக்காமல் இருந்தார்களோ அதற்கு அர்த்தமே இல்லாமல் அந்தப் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.

சமூக வலைத்தளங்களில் உள்ளவர்களின் பார்வைக்கு தப்பி தவறி அந்தக் காணொளிகள் வந்தால் "அக்கிரமத்தைப் பாரீர்" என்று கண்ணை மூடிக்கொண்டு பரப்பாமல் உங்களுக்கு அனுப்பிய அல்லது அப்லோட் செய்த தளத்தை பற்றி காவல் துறையில் புகார் அளியுங்கள். பாதிக்கப்பட்ட இருநூறு பெண்களை வைத்து, பெண்கள் எப்படி இருக்கவேண்டும் என்றும் அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் அட்வைஸ் மழை பொழியாமல் அவர்களை அப்படி ஆக்கிய அந்த ஆறு ஆண்களை வைத்து ஆண்களை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் அவர்கள் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்றும் உங்கள் பிள்ளைகளுக்கோ தம்பி அண்ணன்களுக்கோ கற்றுக்கொடுங்கள்.

இறுதியாக.. அந்தக் கயவர்களின் முகங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவது சரியாக இருந்தாலும் அவர்கள் குடும்பத்தோடு மற்றும் சகோதரிகளோடு இருக்கும் புகைப்படங்களை பகிர்வது அவர்களுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்றே காட்டுகிறது. எந்த ஒரு தாய் தகப்பனும் அல்லது சகோதரிகளும் அந்தக் கயவர்களின் இந்த மறுபக்கத்தை அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே உணர்ச்சி வேகத்தில் எதையும் செய்யாமல் கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். சமூக வலைத்தளத்தில் இருப்பதாலேயே எல்லாவற்றிற்கும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கயவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுங்கள் அல்லது தண்டனை வாங்கி கொடுக்கும் ஆட்கள் ஆட்சிக்கு வர வாக்களியுங்கள். அதுமட்டுமே உங்கள் இப்போதைய கடமை.