Saturday, 19 January 2019

மாட்டுப்பொங்கல்!
மாட்டுப்பொங்கல்! கிராமங்களை இன்னும் கிராமமாக உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு திருவிழா! பெயர் என்னமோ மாட்டுப்பொங்கல்தான்! ஆனால் வீட்டில் உள்ள ஆடு, கோழி, நாய் போன்றவற்றிற்கும் இன்றுதான் பொங்கல்! இது பொங்கல் என்பதை விட ஒரு நன்றி கூறும் விழா. இந்த ஓராண்டு காலம் எனக்கு உறுதுணையாக இருந்து என் வாழ்வாதாரத்தை என் வாழ்க்கையை உயர்த்த துணை புரிந்த உனக்கு என் நன்றி என்று தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு விழா. இதன் பாரம்பரியத்தின் வேர் தேடினால் அது சிந்து சமவெளி காலத்திற்கு முன் கொண்டு போய் விடும். ஆதி தமிழர்கள் இயற்கையோடும் கால்நடைகளோடும் இயைந்த ஒரு வாழ்க்கையை நடத்தியவன். அதன் தொடர்ச்சிதான் இது.

என் சிறுவயது மாட்டுப்பொங்கல் இன்றும் நினைவில் உள்ளது. அப்போதெல்லாம் ஊரில் விவசாயம் செய்யாதவர்களை கூட பார்க்கலாம் ஆனால் ஆடு மாடு இல்லாதவர்களைப் பார்க்க முடியாது. மாட்டுப்பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னமே அதற்கு தயாராக துவங்கி விடுவோம். கொம்புகளை இழைத்து மெருகேற்றி முதல் நாள் வண்ணம் தீட்டுவோம். மூக்கனாங் கயறு திரித்து கழுத்துக் கயறு மாற்றுவது வரை அந்த ஒரு வாரத்தில் நடக்கும். மூக்கணாங் கயறு திரித்து மாட்டுக்கு மூக்கு கயறு மாற்றுவது என்பது ஒரு கலை. அதனால் என் தெருவில் அனைவரது வீட்டு மாடுகளுக்கும் மாற்ற அப்பாவுக்கு ஒரு வாரம் முழுவதும் வேலை இருக்கும்.

மாட்டுப்பொங்கல் முதல் நாள் இரவே தெரு நண்பர்கள் கூட்டம் போட்டு முடிவு செய்வோம். காலையில் காட்டுக்கு போக. குளிரையும் பொருட்படுத்தாது விடிகாலை எழுந்து வையைக்கரை பத்தைக்கு போவோம். கள்ளியம் பட்டை, ஆவாரம் பூ, கூழைப்பூ, மாவிலை போன்றவற்றை தெருவிற்கே சேர்த்து கொண்டு வருவோம் தோரணம் கட்ட. மறக்காமல் துவரை செடி குச்சியும் வெட்டிக்கொள்வோம். மாடுகளைப் பிடித்துக்கொண்டு கண்மாய்க்கு செல்வோம் குளிப்பாட்ட. கடைசியாக எங்கள் வீட்டில் இருந்த மாடுகளின் பெயர்கள் இன்றும் ஞாபகம் உள்ளது. கொரட்டை, காக்காச்சி என்ற பசு மாடும் மண்டையன் என்ற உழவு மாடும். மூணுமே ரொம்ப சாது. இதுல மண்டையன் மட்டும்தான் வெளி ஆட்களை பார்த்தல் முட்டுவான்.

குளிப்பாட்டி பசு மாடுகளுக்கு கொம்பில் முகத்தில் மஞ்சள் பூசி பொட்டு வைத்து, மண்டையனுக்கு கொம்பில், முகத்தில் மற்றும் திமிலில் சந்தனம் பூசி பொட்டு வைத்துப் பார்த்தல் அவ்வளவு அழகாக இருக்கும். அவைகளை வீட்டில் விட்டு விட்டு திரும்ப கும்பலாக கண்மாய்க்கு போவோம். போகும் முன் மறக்காமல் எங்கள் மணியையும்(நாய் ) குளிப்பாட்டி கட்டி விடுவோம்.கண்மாய்க்கு போகும்போது  கையில் ஒரு சொம்பையும் வெட்டி வந்த துவரங் குச்சியையும் எடுத்து போவோம். கண்மாயில் ஆட்டம் போட்டுவிட்டு சருகு கூட்டி நெருப்பு வைத்து துவரங்குச்சியை அதில் வாட்டி அதில் உள்ள பட்டையை உரித்து விடுவோம். பிறகு பெரியமடை புறமடை போய் அதில் அந்த துவரங்குச்சியால் மூன்று முறை அடித்து சொம்பு நிறைய நீர் எடுத்து வீட்டுக்கு வந்து விடுவோம்.

இனி எல்லாம் அம்மா மற்றும் அக்காக்களின் வேலை. அம்மா மாட்டுக்கூடத்தில் மண் பானையில் பொங்கலிட்டு இறக்கி வைத்துவிட்டு வாழைக்காய் பொடிமாஸ், பலாக்காய் குருமா, பரங்கிக்காய் புளிக்கறி,முளைக்கீரை மசியல்,சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொரியல்,வள்ளிக்கிழங்கு கூட்டு,கருணைக்கிழங்கு மசியல்,கூட்டுக்காய் குழம்பு,பருப்பு மசித்து நெய் கூட்டி எல்லாம் தயார் செய்து மாட்டுக்கூடத்தில் கடகாப்பொட்டியை (பனையோலையால் செய்த பெரிய அளவு பெட்டி) தலை கீழாகக் கவிழ்த்து அதன் மீது இலை விரித்து பொங்கலை வைத்து,எல்லாப்பதார்த்தங்களையும் பரப்பி வைப்பார்கள். அதற்குள்ளாக நானும் அப்பாவும் கரும்பை சிறு துண்டுகளாக வெட்டி நூலில் கட்டி எல்லா மாட்டு கழுத்திலும் கட்டி, கழுத்து மற்றும் கொம்பில் பூ சுற்றி விடுவோம். எங்கள் மணிக்கும் கரும்பு கட்டி விடுவோம். 
கட்டுத்தரை(மாட்டு தொழுவம்) வாசலில் நாங்கள் கொண்டுவந்த கள்ளிப்பட்டை, கூழைப்பூ, ஆவாரம்பூ, மாவிலை கொண்டு தோரணம் கட்டி அதில் கோடி துணி(புதுத் துணி) போடுவோம். பிறகு நல்ல நேரம் முடிவதற்குள் பெரியவர்கள் பசங்களை அழைத்துக்கொண்டு வந்து திருஷ்டி கழிப்போம். "பொங்கலோ பொங்கல்.நாடு செழிக்க நல்ல மழை பெய்ய,ஊரு செழிக்க உத்தம மழை பெய்ய பொங்கலோ பொங்கல்,நாலு காட்டுல ஒரு காடு பாங்காடு கிடக்க பொங்கலோ பொங்கல்" என்று பெரியவர் ஒருவர் கூற மற்றவர் பொங்கலோ பொங்கல் என்று கூவியபடி மாட்டுக்கொட்டகையையும், மாடுகளையும்  சுற்றிவருவோம. மூன்றாவது சுற்றில் சோற்றோடு சேர்த்து எல்லாப் பதார்த்தங்களையும் பிசைந்து மூன்று மாவிலையில் எடுத்துக்கொள்வோம். 

சனி மூலை  கன்னி மூலை, வாயு மூலை ஆகிய மூன்று மூலைகளில் மாவிலையை வைத்த சோற்றை நீர் தெளித்து வைப்போம். அக்னி மூலையில் மட்டும் சிறிது நெருப்புத்துண்டை வைப்போம். பிறகு சூடம் ஏற்றி குடும்பத்தோடு விழுந்து வணங்கி பிசைந்த சோற்றை மாடுகளுக்கும் சிறிது கொடுப்போம். மாடு அவிழ்ப்பதற்குள் ஒரு பெரிய கலவரமே(சந்தோசமான) நடக்கும். தயாராக வைத்திருக்கும் மாட்டுத்தண்ணி, கலர் தண்ணி சிலசமயம் சாணித்தண்ணி கூட முறை வரும் (மாமன், மச்சான்) ஆட்களின் மேல் ஊற்றுவோம். ஒவ்வொரு வீட்டிலும் இது நடக்கும். பிறகு மாடுகளை அவிழ்த்தால் அதன் கழுத்தில் இருக்கும் கரும்பை அறுக்க பெரிய போட்டியே நடக்கும். மஞ்சுவிரட்டுக்கு இணையானது அது. முடிவில் யார் எத்தனை மாட்டு கரும்பை அறுத்தோம் என்று கணக்கெடுப்பு நடத்தி அடுத்த வருடம் அந்த சாதனையை முறியடிக்க சபதம் எடுப்போம்.

பிறகு மாடுகள் வீட்டுக்குள் வரும்போது மறக்காமல் உலக்கையை போட்டு வைத்து தாண்டி வரச் செய்வார்கள். இந்தக் கொண்டாட்டமெல்லாம் மதியம் வரை நடக்கும். பிறகு மாலை வந்து விட்டால் கொப்பி கொட்டுவது என்ற ஒரு நிகழ்வு. சாணத்தை சிறு உருண்டைகளாக ஆக்கி அதில் ஆவாரம்பூ இதழ்களை வைத்து ஒட்டி தயார் செய்வார்கள் பெண்கள். அதற்கு கொப்பிக் கட்டை என்று பெயர். வயதுப்பெண்கள், பெண் குழந்தைகள் அனைவரும் கண்மாய் படித்துறைக்கு கொப்பி கொண்டு செல்வார்கள்.ஒரு தட்டில் கொப்பிக்கட்டைகள் பரப்பி,வெற்றிலை,பாக்கு வைத்து,சுட்ட பனங்கிழங்கு வைத்து,படைத்த உணவுக்கலவை வைத்த தட்டை தலையில் வைத்து ஊர்வலமாகச்சென்று சலவைத் தொழிலாளச் சகோதரர்கள் படித்துறையில் விரித்திருக்கும் வேட்டியில் கொட்டிவிட்டு,கொப்பிக்கட்டைகளை எடுத்துக்கொண்டு திரும்பி வந்து பிள்ளையார் கூடத்தில் தட்டுகளை வைத்து சாமிகும்பிட்டு அங்கேயே சிறிது நேரம் விளையாடுவார்கள். வாய்க்காலில் தண்ணீர் போனால் அதை எடுத்து மாற்றி மாற்றி ஊற்றியும் விளையாடுவார்கள். 

காலப்போக்கில் இப்போது விவசாயம் இல்லை, கால்நடை வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. கண்மாயில் தண்ணீர் இருப்பதில்லை. கொப்பி கொட்டுவது அடியோடு இல்லை. ஆனாலும் மாட்டுப்பொங்கல் என்றால் ஒரு உற்சாகம் வரத்தான் செய்கிறது. மாடுகள் இல்லையென்றாலும் இன்றும் எங்கள் வீட்டில் பொங்கல் வைத்து மாடு உள்ள வீட்டிற்கு அதை கொடுத்தனுப்பி சேர்த்து படைக்க சொல்கிறோம். நாங்கள் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை அடுத்த தலைமுறைக்கு சொல்வதற்காயினும் இதை தொடர்ந்து செய்கிறோம். விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் நம் குழந்தைகளுக்காவது இதை செய்ய வேண்டும். 

No comments:

Post a Comment