Monday, 24 September 2018

"வைகைப்புயல்" வடிவேலு




"என் தங்கை கல்யாணி" படம். 1988-ல் டி.ராஜேந்தரின் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு... Etc.. இப்படி அவரின் பலமுகத் திறமையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த படம். அந்த படத்தில் ஒரு சிறுவன் தன் வீட்டு எதிரே ஒருவர் சைக்கிளை நிறுத்த அந்த சைக்கிளில் இருந்து பெல் திருடும் காட்சி வரும். கொஞ்ச நேரத்தில் அந்த ஆள் திரும்ப வந்து கத்தி ஊரைக்கூட்டி கொஞ்ச நேரத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு போய்விடுவார். இப்போது தேடிப்பிடித்து அந்தக் காட்சியை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க்கிறீர்களா? இருக்கிறது! ஏனென்றால் அப்போது அந்தக் காட்சியில் அந்த சைக்கிளை ஒட்டியவருக்கும் அதைப் பார்த்த மக்களுக்கும் தெரிந்திருக்கவில்லை இன்னும் சில வருடங்களில் அந்தப் புயல்தான் தமிழ்நாட்டை மையம் கொள்ளப் போகிறது என்று! ஆம்.. அந்தப் புயல்தான் "வைகைப்புயல்" வடிவேலு!

1960-ல் மதுரை மாவட்டம் ஐராவதநல்லூரில் சாதாரண கூலித் தொழிலாளி குடும்பத்தில் பிறந்து படிப்பு வாசனை இல்லாமல் புகைப்படங்களுக்கு பிரேம் பண்ணும் கடையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார் ஆரம்ப காலத்தில். நடிப்பு ஆர்வத்தில் அப்போதே உள்ளூர் மேடை நாடகங்களில் நகைச்சுவை வேடங்களை ஏற்று நடிக்க, நண்பர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் உற்சாகம் கொடுக்க மனைவி குழந்தைகளை விட்டு ஒரு நல்ல நாள் பார்த்து திறமையோடும் பை நிறைய கனவுகளோடும் கோடம்ப்பாகத்துக்கு பஸ் ஏறியிருக்கிறார். கோடம்பாக்கத்தின் மந்திரக்கதவு அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் திறந்துவிடுவது இல்லை. இவரும் முட்டி மோதி கடைசியில் கிடைத்த ஒரு சின்ன வாய்ப்புதான் நான் முதலில் சொன்ன "என் தங்கை கல்யாணி" படத்தில் ஒரு காட்சியில் வந்தது. 

அதன்பிறகு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் தோல்வியோடும் விரக்தியோடும் சொந்த ஊருக்கு போய் பழைய தொழிலை பார்த்து வந்ததாய் வடிவேலுவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். திறமையான குழந்தைகளை கலைத்தாய் அவ்வளவு சீக்கிரம் கைவிட்டுவிட மாட்டார் என்பதற்கிணங்க ராஜ்கிரண் மூலம் மீண்டும் தூது அனுப்புகிறார் கலைத்தாய் 1990-ல். மதுரை பக்கம் ஷூட்டிங் போன ராஜ்கிரணை சந்தித்து அங்கேயே நடித்து காண்பித்து அவரை சமாதானப்படுத்தி என் ராசாவின் மனசிலே படத்தில் ஒரு கேரக்டர் வாங்கி விடுகிறார் வடிவேலு. அதில் ஏற்கனவே கவுண்டமணி மற்றும் செந்தில் என்ற இரு ஜாம்பவான்கள் உண்டு. ஆனால் அவர்களையும் மீறி அறிமுக வடிவேலு கவனம் ஈர்த்தார். கவுண்டமணியிடம் வந்து "அண்ணே என் பொண்டாட்டி செத்து போய்ட்டாண்ணே' என்று சொல்லும் காமெடியும் பட்டாபட்டியோடு வெளியே வரும் கவுண்டமணியை பார்த்து சிரித்துவிட்டு "சிரிக்கலண்ணே.. கொட்டாவி விட்டேன்' என்று சொல்லும் மாடுலேஷன் எல்லாம் எவர்கிரீன்.

என் ராசாவின் மனசிலே படம் 1991 தமிழ் வருடப்பிறப்பிற்கு வந்தது. ஆனால் அதன்பிறகும் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கவில்லை. ஏனென்றால் அப்போது கவுண்டமணி-செந்தில் காம்போவின் பொற்காலம் அது. அவர்களை மீறி யாரும் அடுத்த காமெடியனை யோசிக்கவில்லை. ஆனாலும் வடிவேலு இந்தமுறை சோர்ந்துவிடாமல் அங்கேயே ராஜ்கிரண் அலுவலகத்திலே கிடைத்த வேலைகளை செய்துகொண்டு வாய்ப்புக்காக அலைந்திருக்கிறார். 1992-ம் வருடம் அவருக்கு ஒரு முக்கியமான வருடம். அவர் நடித்து ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் சின்னக்கவுண்டர் படமும் சிங்காரவேலன் படமும் ஒருவகையில் கவனம் ஈர்த்தது என்றால் தேவர் மகன் படம் காமெடியையும் தாண்டி வடிவேலுவின் குணச்சித்திர நடிப்பை ரசிக்க வைத்தது. அதிலும் கை வெட்டப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்பொழுது பார்க்கவரும் கமலிடம் "ஒத்தக் கையால காரு கூட ஓட்டிருவே அய்யா.. என்ன எழவு திங்கிற கைலே கழுவனும்..கழுவுற கைலே திங்கணும்' என்று தன் இயலாமையை சொல்லும்போது கமலுடன் சேர்ந்து பார்க்கிற ரசிகனுக்கும் கண்ணீர் வர வைக்கின்ற காட்சி அது. 

இதற்கு பிறகு வாய்ப்புக்காக அவர் காத்திருக்கவில்லை. அவருக்காக வாய்ப்புகள் காத்திருக்க ஆரம்பித்தன. ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போல கவுண்டமணி-செந்தில் ஆதிக்கத்தைத் தாண்டி அவரால் தனி காமெடி டிராக்கில் அவரை நிரூபிக்க இயலவில்லை. அதற்கு தீர்வாகத்தான் 1993 இறுதியில் "கிழக்கு சீமையிலே' படம் வந்தது. வடிவேலுவின் டைமிங் சென்ஸுக்கும் பாடி லேங்குவேஜ்க்கும் சரியான தீனி போட்ட படம் அது. அதுபோக காதலுக்கு துணையாக குணச்சித்திரத்திலும் வெளுத்து வாங்கியிருப்பார். 1994-ல் வந்த ராஜகுமாரன், கருத்தம்மா போன்ற படங்கள் இவரை இன்னும் உயர்த்தியது என்றால் காதலன் படம் உச்சத்தில் கொண்டுபோய் வைத்தது. பேட்டராப் பாடலில் நடனத்திலும் என்னால் இரசிக்கவைக்க முடியும் என்று காட்டினார்.

1995-ல் வந்த எல்லாமே என் ராசாதான் படத்தில் "எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டு பாடும்" என்று ஒரு பாடகனாகவும் தன்னை அடையாளப்படுத்தினார். வருடத்திற்கு 365 நாட்கள் போதாமல் நடித்துக்கொண்டிருந்தாலும் 1996-ல் வந்த "பாஞ்சாலங்குறிச்சி' படம் வடிவேலுவின் எவர்க்ரீன் க்ளாஸிக் காமெடியால் மக்களைக் கவர்ந்தது. அதுவும் சுருண்டுகொள்ளும் மூங்கில் பாயை விரிக்க அவர் படும் பாட்டை இன்று பார்த்தாலும் சிரிப்பு வரும். பிறகு 1997-ல் வந்த "பாரதிக்கண்ணம்மா" படம் வடிவேலுவின் காமெடியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது. பார்த்திபன்-வடிவேலு காமெடிக்கு ஒரு புதிய பாதையை வகுத்தது. அதே ஆண்டு வந்த பொற்காலம் படம் காமெடியையும் தாண்டி மீண்டும் அவருக்குள் உள்ள அற்புத நடிகனை அடையாளங் காட்டியது.

1998-ம் வருடம் டஜன் கணக்கில் படங்கள் நடித்தாலும் "கண்ணாத்தாள்" படத்தில் வந்த சு.ப -வை யாராலும் மறக்கமுடியாது. கிராமங்களில் நடைமுறையில் அன்றாடம் பார்க்கும் உதார் பார்ட்டிகளை நம் கண்முன்னே நிறுத்தியிருப்பார். அதிலும் விஷம் கலந்த சரக்கை மிரட்டி குடித்துவிட்டு "என்னடா தொண்டை கம்முது?" என்கிற மாடுலேஷன் வேறு யாராலும் முடியாதது. ஆடு திருடி விட்டு பஞ்சாயத்தில் அவர் செய்யும் அலப்பறை அல்ட்டிமேட் ரகம். 1999-ம் வருடமும் மாதக் கணக்கைவிட அதிக படங்களில் நடித்தாலும் நேசம்புதுசு படத்தில் வரும் "என்ன கைய புடிச்சு இழுத்தியாடா?' காமெடியும் பாட்டாளி படத்தில் வடிவுக்கரசியாக அவர் செய்யும் அலப்பறைகளும் இன்றும் ரசிக்க வைக்கும். பிறகு 2000-ம் வருடத்தில் வந்த வெற்றிக்கொடிகட்டு படத்தை பற்றி சொல்லவே வேண்டாம். அதே வருடத்தில் வந்த மனுநீதி படத்தின் "செவள.. தாவுடா தாவு' காமெடி நினைத்தாலும் சிரிப்பு வரும் ரகம். அதே வருடத்தில் வந்த "மாயி" படம் வடிவேலுவின் அளவில்லாத அலப்பறைகளை கண்முன் நிறுத்தியது.

2001-ம் வருடம் வடிவேலுக்கு மட்டும் அல்ல காமெடி ரசிகர்களுக்கும் பொற்காலம்தான். "பிரெண்ட்ஸ்" படத்தில் நேசமணியாக பட்டையைக் கிளப்பியவர் "என் புருஷன் குழந்தை மாதிரி' படத்தில் 'காதை தொட்டுட்டேனே' என்ற லூசிடம் மாட்டி சின்னாபின்னமானவர் "மனதை திருடிவிட்டாள்" படத்தில் ஸ்டீவ் வாக்காக வந்து "ஒய் பிளட்? சேம் பிளட்.. " என்று ரசிக்கவைத்தார். அடுத்த "தவசி" படத்திலே ஒசாமா பின் லேடன் அட்ரஸ் கேக்கும் பைத்தியத்திடம் மாட்டி சிக்கிச் சிதறினார். பிறகு 2003-ம் வருடம் வசீகரா படத்தில் கட்டப்பொம்முவாக வசீகரித்தவர் வின்னர் படத்தில் கைப்புள்ளையாக வந்து சிரிக்க தெரியாதவர்களையும் சிரிக்க வைத்திருப்பார். இதில் எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது படம் முழுவதும் சிரித்துக் கொண்டிருப்பதுதான் நமது வேலை என்று ஆக்கியிருப்பார். பிறகு "கிரி" வீரபாகு, "ஏய்" பழனி, "எங்கள் அண்ணா" மயில்சாமி, "சச்சின்" அய்யாசாமி, இங்கிலீஸ்காரன் "தீப்பொறி திருமுகம், "தலைநகரம்" நாய் சேகர், என நமக்கு ஓய்வே வழங்காமல் சிரிக்க வைத்தார்.

2006-ல் வந்த "இம்சை அரசன் 23-ம் புலிகேசி" வடிவேலு கேரியருக்கு மட்டும் அல்ல தமிழ் சினிமாவிற்கே ஒரு முக்கியமான படம். புலிகேசியாகவும், உக்கிரபுத்திரனாகவும் வடிவேலு கலக்கிய படம். இப்போது கூட சேனல் மாற்றுகையில் இதன் காட்சிகளை எந்த சேனலில் போட்டாலும் ஒரு நிமிடமாவது பார்த்துவிட்டுத்தான் அடுத்த சேனல் மாற்ற மனது வரும். இதில் இப்படியென்றால் அதே வருடம் வந்த "எம்டன் மகன்" படமும் ஒரு முக்கியமான படம். அக்காவை கட்டி மாமனிடம் மாட்டி முழிப்பவர் ஒரு தாய்மாமனாக அக்கா பையனிடம் ஆதரவாக இருக்கும் பாசப்பிணைப்பை கண்முன்னே காண்பிப்பார். அடுத்த "ஜில்லுன்னு ஒரு காதல்" படத்திலே வெள்ளைச்சாமியாக வந்து கிராமத்து வெத்துவேட்டை கண்முன் நிறுத்துவார். இவர் இப்படித்தான், எதையும் முன்முடிவோடு அணுக விடாத நடிப்புதான் இவர் வெற்றி. 

"போக்கிரி" சங்கி மங்கி, "கருப்பசாமி குத்தகைக்காரர்" படித்துறை பாண்டி, தொட்டால் பூமலரும்" கபாலிகான், "ஆர்யா" ஸ்னேக் பாபு, "மருதமலை" ஏட்டு ஏகாம்பரம், "ஆதவன்' பானர்ஜி, "கச்சேரி ஆரம்பம்" தீபாவளி, "சுறா" அம்பர்லா, "நகரம்" ஸ்டைல் பாண்டி, "காவலன்" அமாவாசை வரை இப்படி எண்ணற்ற தன் அவதாரங்களால் மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டவர் 2011 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்துடனான தனது சொந்தப் பிரச்சனைக்காக தவறான வழிகாட்டுதலில் தவறான முடிவெடுத்தார். பகுதி நேரமாக பிரச்சாரம் செய்ய வந்தவர் கூடிய கூட்டத்தைப் பார்த்து முழு நேரமாக பிரச்சாரத்தில் இறங்கினார். ஆனால் அவரது கணிப்பையும் மீறி அதிமுக - விஜயகாந்த் கூட்டணி வெற்றிபெற்றது. அதன்பிறகு அரசியல் சினிமா இரண்டிலும் இருந்து அறிவிக்கப்படாத ஓய்வில் இருந்தார். 



பிறகு 2014-ல் "தெனாலிராமன்" படத்தின் மூலம் கதாநாயகனாக ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பிறகு 2015-ல் "எலி" படத்தின் மூலம் வந்தார். ஆனால் அதுவும் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. கடைசியாக "கத்திச் சண்டை" மற்றும் "சிவலிங்கா" படங்களில் பழைய பாணியில் காமெடி ரோலில் தலை காட்டினார். நகைச்சுவையில் தன்னைத் தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைப்பது என்ற புதிய உத்தியைக் கையாண்டு மக்களை சிரிக்க வைத்தவர். எந்த நகைச்சுவை சானலை திருப்பினாலும் அதில் வடிவேலு காமெடி ஓடிக்கொண்டிருக்கும் என்பதே இவர் சாதனையை சொல்லும். காலங்கள் மாறி இன்று சோசியல் மீடியாவின் தாக்கத்தில் மீம்ஸ் என்ற வசனமில்லா நகைச்சுவை என்ற காலத்தில் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் தேவைப்படுவது வடிவேலுவின் ரியாக்சன்கள் என்பதிலே அவரது முக்கியத்துவம் நமக்கு புரிபடும். அரசியல்,சினிமா, பொது இப்படி எதைக் கலாய்க்க வேண்டுமென்றாலும் வடிவேலுவின் படங்கள்தான் அதற்கு அகராதி. 

ஐந்து முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதினை வாங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பது பாடல்களைப் பாடியிருக்கிறார். இன்று நாம் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போதே நமது உணர்வுகளைச் சொல்ல "வட போச்சே" இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டு இருக்கு?' "சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு" போன்ற அவரது ஒன்லைனர் காமெடிகள்தான் நமக்குத் தேவைப்படுகிறது! இதெல்லாம் சாகாவரம் பெற்ற வசனங்கள். வடிவேலுவுக்கு பிறகும் அவரது பெயரைச் சொல்லிக்கொண்டிருக்க போவது இதுபோன்ற வசனங்கள்தான்! ஏதாவது செய்து மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று பெட்டி கட்டி மதுரையில் இருந்து கோடம்பாக்கம் வந்தவரை மக்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றனர். நான் என்ன செய்தாலும் மக்கள் சிரிக்க வேண்டும் அவர் நினைத்த போது அவரை திரும்ப மதுரைக்கே அனுப்பிவிட்டார்கள் மக்கள். ஏதாவது செய்து சிரிக்க வைக்க வேண்டும் என்ற அதே பழைய வடிவேலுவாக அவர் திரும்ப வரவேண்டும். நாங்கள் காத்திருக்கிறோம்! 




 

No comments:

Post a Comment