Wednesday, 19 September 2018

நாட்டார் தெய்வங்கள்! (2) - பதினெட்டாம்படிக் கருப்பர்!

 

காலம் அறியாத அந்தக் காலத்தில்(புரிதலுக்காக கிபி ஆறாம் நூற்றாண்டு எனக்கொள்க) அடர்ந்த கானகத்தின் இரவு அது. மேற்கு தொடர்ச்சி மலையின் மலையாள நாட்டில் இருந்து நீண்ட அந்த நீண்ட கணவாயைத் தாண்டி சமவெளியை வந்தடைந்தன அந்த மூன்று புரவிகளும். தூரத்தில் ஒரு சிற்றோடை ஓடிய சலசலப்பும் காட்டு மிருககங்களின் கர்ஜனையையும் தவிர அங்கே வேறு சத்தம் இல்லை. நிலா மட்டும் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்லிச் சிரித்ததுக் கொண்டிருந்தது. நடுவில் உள்ள நல்ல உயரமான உயர்சாதிப் புரவியில் உள்ளவன்தான் முதலில் குதித்தான். குதித்ததும் புரவியின் பிடரியைத் தடவி அதன் காதில் ஏதோ சொன்னான். ஓய்வு கிடைத்த மகிழ்ச்சியில் குதிரை சிற்றோடையைப் பார்த்து குதித்து ஓடி நீர் அருந்திவிட்டு நிதானமாகப் புல் மேய ஆரம்பித்தது.

அதற்குள் முன் பின் வந்தவர்களும் குதித்து இறங்கி நடுவில் வந்தவனின் கட்டளைக்காக காத்து நின்றார்கள். முதலில் இறங்கியவன் யார் இவர்கள் இருவரும் யார் என்று இப்போது பார்த்துவிடுவோம். முதலில் இறங்கியவன் வளம் மிக்க வற்றாத பொருநை நதி பாயும் மலையாள நாட்டில் வஞ்சி நகரைத் தலைநகராய் கொண்டு(இன்றைய திருவாங்கூர்) ஆட்சி புரியும் மன்னன் ஏனாதி திருக்குட்டுவன். கூட வந்த இருவரும் அவரின் மெய்க்காப்பாளர்கள் பாஸ்கர மற்றும் ரவிவர்மா. ஆனால் இப்போது அவன் மன்னனாக வரவில்லை. ஒரு யாத்ரீகனாக பாண்டிய நாட்டு ராஜ்யத்துக்கு உட்பட்ட துவாரபதி நாட்டில் அடர்ந்த காடுகளை அரணாகக் கொண்ட இருக்கும் திருமாலிருஞ்சோலை(இப்போதைய அழகர்மலை) நோக்கி போய்க்கொண்டிருக்கிறான். 

ஒரு திங்களுக்கு முன்பு வரை திருக்குட்டுவன் நினைத்திருக்கவில்லை, இப்படி அடையாளம் மறைத்து மனிதத் தடம் இல்லா கானகம் ஊடறுத்து இப்படி ரதம் கூட இல்லாமல் நீண்ட புரவிப்பயணம் மேற்கொள்ளுவோம் என்று.அன்று அரசவையில் கொழு மண்டபத்தில் வீற்றிருக்கும்பொழுது, வஞ்சியில் இருந்து தென்னாடு திருமாலிருஞ்சோலை நோக்கி ஆன்மீகப் பயணம் போன அடியார்கள் பிரசாதத்துடன் காண விரும்புவதாக வந்து காவலர்கள் சொன்னார்கள். "உள்ளே வர சொல்" என்று கூறிவிட்டு சிம்மாசனம் விட்டு இறங்கி நின்றான் வரவேற்க. உள்ளே வந்த அடியார்கள் ஐவரும் மன்னனை ஆசிர்வதித்து திருமாலிருஞ்சோலை பெருமாளின் கருந்துளசியும் நூபுரகங்கை தீர்த்தமும் கொடுத்தார்கள். பயபக்தியுடன் வாங்கியவன் பின் அவர்களை அமரச்செய்து பயணம் பற்றியும் கோவிலைப் பற்றியும் விசாரிக்க துவங்கினான்.

அடியார்கள் பெருமாளின் அழகையும் அதனாலேயே சுந்தரராஜ பெருமாள் என்று வழங்குவதையும். அதுபோக "அபரஞ்சி" என்ற தேவலோக தங்கத்தால்செய்யப்பட்ட உற்சவரின் அழகையும் வர்ணிக்க வர்ணிக்க திருக்குட்டுவனுக்கும் அந்தப் பெருமாளை உடனே தரிசிக்க வேண்டும் என்ற அடக்கமுடியாத ஆவல் எழுந்தது. ஆனால் அப்போது மதுரையை தலைநகராக கொண்டு ஆண்டுவந்த பராங்குசப் பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது திருமாலிருஞ்சோலை. அனுமதி பெற்று பரிவாரங்களுடன் போக அப்போதிருந்த எல்லைப்பூசல் இடந்தரவில்லை. படையெடுத்து வென்று போவது அவ்வளவு சாதாரணம் அல்ல. ஆகவே உடனே ஒரு யாத்ரீகனாக போக முடிவு செய்தான். கூட இரண்டு மெய்க்காப்பாளர்களையும் அழைத்துக்கொண்டு இரவு பகல் பாராது பயணம் செய்து இதோ அதம்பநாடு(தற்போதைய திண்டுக்கல் பகுதி) வந்துவிட்டான். 

காடுகளையும் மேற்கே மலைகளையும் அரனாகக் கொண்ட அதம்பநாட்டு சமவெளியில் இரவைக் கழித்துவிட்டு விடிவதற்கு சில நாழிகை  இருக்கும் போதே திருமாலிஞ்சோலை நோக்கி புரவியைத் தட்டிவிட்டான். புரவியின் வேகத்தில் சூரியன் வந்து ஒரு நாழிகைக்குள்ளே கோவிலை வந்தடைந்தான். நேரே புரவியை நூபுரகங்கை நோக்கி விரட்டி நீராடிவிட்டு சாதாரண பக்தன் போல உள்ளே போனான். போனவன் சுந்தர்ராஜப் பெருமாளின் அழகில் மயங்கி அபரஞ்சி தங்கத்தில் ஜொலிக்கும் உற்சவரின் அழகில் தன்னை மறந்து கைகூப்பியபடியே பசி மறந்து உலகம் மறந்து தன்னை மறந்து உச்சிப் பொழுது நடை சாற்றும்வரை நின்றான். பிறகு வெளியில் வந்தவன் மெய்க்காப்பாளர்களைக் கூட கண்டுகொள்ளாமல் புரவியை விரட்டியவன் வஞ்சி நகர் வந்து கோட்டை வாயிலை அடைந்ததும்தான் சுயநினைவுக்கு வந்தான்.

அரண்மனையை அடைந்தவன் நிலைகொள்ளாமல் தவித்தான். பெருமாளின் அழகும் சக்தியும் அவனை தூங்கவிடாமல் செய்தது. எப்படியாவது பெருமாளை அதன் சக்தியோடு தனது வஞ்சியில் ஆவாகனம் செய்யத் துடித்தான். உடனே மந்திர தந்திரங்களிலும் வேதங்களிலும் தேர்ந்த பதினெட்டுப் பனிக்கர்களை வரவழைத்தான். அனைவரையும் அடியார்கள் போல வேடமிட்டு திருமாலிருஞ்சோலை சென்று சுந்தராஜப்பெருமானை அதன் சக்தியோடு கவர்ந்து வஞ்சியில் வந்து ஆவாகனம் செய்யக் கட்டளையிட்டான். உடனே பனிக்கர்களும் நாள் நட்ச்சத்திர பார்த்து காவலுக்கு மலையாளக் கருப்பனை பணித்து ஹோரை பார்த்து வஞ்சியில் இருந்து திருமாலிஞ்சோலை நோக்கிக் கிளம்பினர். 

அடியார்கள் போல வந்ததால் அதிக சிரமம் இல்லாமல் ஊர்களைக் கடந்து  ஒரு மாலைப்பொழுதில் திருமாலிஞ்சோலை வந்தடைந்தார்கள். ஊருக்குள் சற்று ஓய்வெடுத்துவிட்டு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நூபுர கங்கையில் நீராடி பெருமாளின் சன்னதி சென்றனர். உள்ளே போனதுமே பெருமாளின் அழகில் சொக்கி நின்றான் காவலுக்கு வந்த கருப்பு. தன்னை மறந்தான், தன் வேலை மறந்தான் கண்களில் கண்ணீர் மல்க கூப்பிய கரங்களுடன் பெருமாளை நோக்கி நின்றான். பதினெட்டு பனிக்கர்களும் வந்தவேலை மறக்காமல் கோவிலை மந்திரக்கட்டுக்குள் கொண்டுவந்து முதலில் அழகரின் சத்தியை கலசத்தில் ஆவாகனம் செய்ய ஆரம்பித்தனர். இதைப்பார்த்த பட்டர் ஒருவர் பதறி அடித்து ஊருக்குள் ஓடி ஊர்மக்களை திரட்டிவந்தார். ஆனால் அவர்களால் மாத்திரக்கட்டு இருப்பதால் சன்னதி வாயில் தாண்டி வரமுடியவில்லை. அழகரே, பெருமாளே என்ன இது சோதனை என்று கைகூப்பி கண்ணீர் விட்டுக் கதறினர் மக்கள்.

தன்னை மறந்து கைகூப்பி நின்ற கருப்புக்கு பெருமாள் உத்தரவிட திடீரென்று ஆவேசம் வந்தவராக பதினெட்டு பனிக்கர்களையும் ஒருவர் பின் ஒருவராக வெட்டி சன்னதி வாசல் தாண்டி வீசினான் கருப்பு. அப்படியும் ஆவேசம் அடங்காமல் பதினெட்டு பேர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி பதினெட்டுப் படிகளாகச் செய்து பதினெட்டாம் படியின்மீது ஏறி நின்றான் கருப்பு. பெருமாளின் உத்தரவின் பேரில் அன்றில் இருந்து பதினெட்டு படி மீது ஏறிநின்று பதினெட்டாம்படிக் கருப்பாக இன்றும் தன்னை நம்பி வந்தவர்களைக் காவல் காத்து வருகிறான் அந்த மலையாளக் கருப்பு! இதுதான் பதினெட்டாம்படிக் கருப்பு தமிழகத்தை அடைந்த கதை. அன்று முதல் அழகருக்கு படைக்கப்படும் அர்த்தஜாம பிரசாதங்கள்தான் கருப்புக்கும் படைக்கப்படும். கோவில் பாதுகாப்பை கருப்பு ஏற்ற நாளில் இருந்து அழகரின் நகைகளுக்கும் 
உடமைகளுக்கும் கருப்புதான் காவல். சித்திர திருவிழாவிற்கு அழகர் மதுரைக்கு புறப்படும்போதும், திரும்பி வந்த பிறகும் நகைகளின் பட்டியல் கருப்பு முன்பு படித்துக்காட்டப்பட்ட பிறகே பெட்டியில் இருந்து எடுக்கவும் பிறகு பூட்டவும்படும். இன்றுவரை இதுதான் நடைமுறை. கருப்புக்கு உருவம் இல்லை. பதினெட்டுப் படிகளும் அருவாளும்தான் அடையாளம். வரும் பக்தர்கள் பதினெட்டுப் படி மீது இருக்கும் கதவிற்குதான் சந்தனம், ஜவ்வாது பூசி, ரோஜாப்பூ சம்பங்கி மாலை அணிவித்து வழிபடுவார்கள். 

இவன் சன்னதியில் தீர்த்துக்கொண்ட பஞ்சாயத்துக்கள் ஏராளம். ஏனென்றால் இங்கு பொய் சொல்ல முடியாது. மீறி சொன்னால் கருப்பு தண்டித்துவிடும் என்ற பயம் இன்றளவும் மக்களிடம் உண்டு. ஒவ்வொரு ஆடிப் பவுர்ணமி போதும் மட்டுமே கருப்பின் நெடுங்கதவு திறக்கப்படும். ஆடித்தேருக்கு கள்ளழகரைக் காண ஒரு கூட்டம் போக கருப்புக்கு கிடாய் வெட்டி படையல் போடவும் இன்றும் மக்கள் வண்டி கட்டிப் போகும் வழக்கம் உள்ளது. அதில் நமது பாலைய நாடும் அடக்கம். ஆனால் ஆதியில் கொற்றவை வழிபாடு வழக்கத்தில் இருந்த சோழ நாட்டில் இருந்து குடிபெயர்ந்து பிற்பாடு பாண்டியர் வசம் வந்த பாலைய நாட்டில் குடியேறிய நமக்கும், நகரத்தார்களுக்கும் கருப்பனை எப்போது ஏற்றுக்கொண்டோம் என்பது தனி ஆராய்ச்சிக்கு உட்பட்டது. ஆனால் நம் ஊர்களில் உள்ள எல்லாக் கருப்பும் இந்த பதினெட்டாம்படி கருப்புக்கு அடங்கியதுதான். இங்கு இருந்து மண் எடுத்துதான் நம் வசதிக்கேற்ப பெயரிட்டு நம் குல முன்னோர்களையும் அவனுள் அடக்கி வணங்கி வருகிறோம். ஆனாலும் ஒருமுறையேனும் பதினெட்டாம்படி கருப்பரை தரிசிக்காமல் நம் பகுதி மக்களுக்கு வாழ்வு முழுமையடைவதில்லை. 

"எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

அக்கினியில் பிறந்தவராம் அரனாரியின் மைந்தனவன்
எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்
சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்
எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி"

பின்குறிப்பு: கருப்பு அழகர் கோவிலில் ஐக்கியமான காலம் குறித்து தெளிவான ஆதாரங்கள் இல்லை. மேலும் அப்போதைய மன்னர்கள் குறித்தும் தகவல்கள் இல்லை. ஏன்  அழகர் கோவில் எந்தக் காலத்தில் யாரால் கட்டப்பட்டது என்ற வரலாறு கூட இல்லை. பிறகு பிற்காலப் பாண்டியர்களாலும், நாயக்கர்களாலும் பல திருப்பணிகள் நடந்ததற்கு மட்டுமே ஆதாரங்கள் உள்ளது. ஆகவே இந்தக் கதை நடந்த காலம் மற்றும் பெயர்கள் கற்பனையாக நானே உருவாக்கிக்கொண்டது.

எவ்வாறு செல்வது? பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 843 LSS, 844 EXP, 844 LSS எண் நகரப் பேருந்துகள் உள்ளன. பயண நேரம் 0.40 நிமிஷம். ஆட்டோ மற்றும் டாக்சி வசதி உண்டு. அருகிலுள்ள இரயில் நிலையம் மதுரை ஜங்சன். அருகிலுள்ள விமானநிலையம் மதுரை. விமான நிலையம் .

சிவகங்கை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து செல்பவர்கள் நந்தம் திண்டுக்கல் சாலை போய் நத்தத்தில் பேருந்து எடுக்கலாம். அல்லது மதுரைக்கு முன்பே மேலூரில் இறங்கி அழகர் கோவிலுக்கு பேருந்து வசதி உண்டு. 

No comments:

Post a Comment