Thursday, 27 September 2018

ஆனந்த ராகங்கள்! (1)

தனது எல்.எம்.எல்.வெஸ்பா ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு இசைஞானி இளையராஜாவின் பாடல் பதிவு அரங்கத்திற்குள் வருகிறார் உமா ரமணன். எப்போதும் போல் அல்லாமல் ஒரு வித்தியாசமான சூழலை உணர்கிறார். எப்போதும் துணைக்கு தன் தாயை அழைத்துவருபவர் அன்று தனியாக வந்திருக்கிறார். பாடல் பதிவு அரங்கத்திற்குள் உள்ளே போனதுமே அங்கு உள்ள வாத்தியக்காரர்களைப் பார்த்து ஒருகணம் திகைத்து நின்று விட்டார். இது நடக்கும் வருடம் 1981-ம் வருடம். 

அப்போது அவர் புதிய பாடகி கூட இல்லை. கணக்கில்லாத மேடை கச்சேரிகளை தன் கணவர் A.V. ரமணனனுடன் சேர்ந்து பண்ணியவர். அதுபோக 1977-ல் ஸ்ரீக்ருஷ்ணலீலை படத்தில் பாடகியாக தன் கணவர் கூடவே சேர்ந்து பாடி அறிமுகமானவர். அது கவனிக்கப்படாமல் போக மூன்று வருடம் கழித்து 1980-ல் ரமணனின் இசையில் நீரோட்டம் என்ற படத்தில் "ஆசை இருக்குதே நெஞ்சுக்குள்ளே" என்ற பாடல் பாடுகிறார். தமிழ் திரை இசையின் துரதிஷ்டம் அப்போதும் அது அதிக கவனம் ஈர்க்காமல் போகிறது. பிறகுதான் இசைஞானியின் கண்ணில் பட்டு நிழல்கள் என்ற படத்தில் "பூங்கதவே தாழ் திறவாய்" பாடலைப் பாடி தமிழ் திரை இசையின் பூங்கதவைத் திறந்துகொண்டு வருகிறார். படம் தோல்வி ஆனால் இன்றுவரை இசைக்காகப் பேசப்படும் படம். பின்னர் மூடுபனி படத்தில் "ஆசை ராஜா ஆரீரோ.. ' ஒரு சின்ன பிட் ஆனால் அதில் கூட அந்தக் குரலில் வெளிப்படும் தாய்மை, உருக்கம், ஆதரவு அனைத்தையும் குழைந்து கொடுத்திருப்பார்.
பிறகு 1981-ல் இசைஞானி தொடர்ந்து அவரைப் பாட வைக்கிறார். அதில் குறிப்பிட்டு சொல்லும்படி என்றால் கர்ஜனை படத்தில் "என்ன சுகமான உலகம்" மற்றும் நண்டு படத்தில் "மஞ்சள் வெயில் மாலை" பாடல்களை சொல்லலாம். ஆனாலும் அவருக்கு ஒரு பிரேக் த்ரூ பாடல் கிடைக்கவில்லை. இது இசைஞானிக்கும் தோன்றியதோ என்னவோ. அவருக்குக்காகவே ஒரு பாடலை தயார் செய்து அழைத்துவிட்டார். அந்தப் பாடலை உமா ரமணன் அவர்கள் பாட வந்த காட்சியைத்தான் நாம் முதல் பத்தியில் பார்த்தது. 

உள்ளே வந்து திகைத்து நின்றவர் மெதுவாக சூழலை உள்வாங்குகிறார். வயலின், செல்லோ, கிடார், புல்லாங்குழல் என இசைக்கலைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இசைக்கோர்வையை வாசிக்க பயிற்சியில் இருந்தனர். மெதுவாக உதவியாளர் வந்து பாடல் பதிவு இன்று மாலை வரை இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். அப்போதே பாடல் எவ்வளவு கடினமாக இருக்கும் என்று தெரிந்துவிடுகிறது அவருக்கு. ஆனால் அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை இந்தப்பாடல்தான் தனக்கு வாழ்நாள் அடையாளமாகவும் இளையராஜாவின் சரித்திரம் பேசும்வரை இந்தப் பாடலும் பேசப்படப்போகிறது என்று. அந்தப் பாடல்தான் பன்னீர்ப்புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற..

"ஆனந்த ராகம் கேட்கும் காலம்"  என்று எடுத்ததுமே பல்லவியில் நமது ஆன்மாவை ஊடுருவி உள்ளே இருந்து கொண்டே சின்ன ஜதியில் ஆடினால் எப்படி இருக்கும்! அப்படிதான் அதன் சரணம் வரும் 

"துள்ளி வரும் உள்ளங்களில்,
தூது வந்து தென்றல் சொல்ல தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்த தாளங்களே வெள்ளி மலைக் கோலங்களை, அள்ளி கொண்ட மேகங்களை காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்ததின் பாவங்களே கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ பற்றிக் கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ ராகங்கள் பாட, தாலங்கள் போட 
வானெங்கும் போகதோ " ..  

இதில் அவர் எங்கு மூச்சு எடுப்பார் என்று யோசிக்கும்போதே "ஆனந்த ராகம்.. என்று மீண்டும் பல்லவியைப் பிடிப்பார். நம்மை அங்கும் இங்கும் அசைய விடாமல் அந்த காதலர்களின் பின்னாலயே ஓடவைக்கும் அதிசயம் இந்தப் பாடலில் உண்டு. அது இசையாலா அல்லது உமா அவர்களின் குரலாலா என்பது பிரித்தறிய இயலாதது. பல்லவி முடிந்ததும் ஒரு வயலின் இசைக்கோர்வை வரும். எனக்குத்தெரிந்து இந்தப் பாடலுக்குப் பிறகு தளபதி படத்தில்தான் "ராக்கம்மா கையத்தட்டு' பாடலில் அதை உணரமுடியும். இடையிசையில் வரும் வயலின் இசைக்கோர்வை நம்மை குதிக்க வைக்கும் என்றால்  நடுவில் குழல் ஓசை நம்மை ஆரத்தழுவி அமைதிப்படுத்தும். இப்படி வயலின் இசைக்கும் குழல் ஓசைக்கும்  நடுவே நாம் மூச்சு முட்டும்போதே உமா ரமணன் ஆரம்பிப்பார்... 

"வண்ண வண்ண எண்ணங்களும்,
வந்து விழும் உள்ளங்களும் வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே சின்ன சின்ன மின்னல்களும் சிந்தனையின் பின்னல்களும் சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும் இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும் காவிய ராகம், காற்றினில் கேட்கும் காலங்கள் ஆரம்பம்… "

என்று மூச்சு எடுக்க நேரம் இல்லாத நீண்ட நெடிய மாரத்தான் ஓடியது போல மீண்டும் "ஆனந்த ராகம் என்று பாடி லாலலாலா லாலலாலா லாலாலாலா என்ற ஹம்மிங்கோடு நிறுத்துவார். அவர் நிறுத்தி விடுவார் ஆனால் நம்மால்தான் உடனே மீண்டுவர இயலாது. ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒரு ஞாபங்களை கிளறிவிடும் என்பார்கள். அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் இந்தப்பாடல் எல்லோருக்கும் ஒரே ஞாபகத்தைத்தான் கிளறும். அது முதல் காதல்! அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு.

உமா ரமணன் அவர்களின்திரையிசைப் பாடல்களை பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்தேன். ஆனால் இந்த ஒரு பாடலே ஒரு முழுக்கட்டுரையை நிரப்பிவிட்டது. இந்தப்பாடலுக்கு இந்த நியாயம் கூட போதாதுதான். முன்பே சொன்னதுபோல் இசைஞானி இளையராஜாவின் சரித்திரம் இருக்கும்வரை இந்தப்பாடல் குறிப்பிடப்படும். இந்தப்பாடல் குறிப்பிடப்படும்வரை உமா ரமணன் அவர்களில் இந்தக் குரலும் போற்றப்படும்!

பாடலை நீங்களும் கேளுங்கள்
உமா ரமணன் அவர்கள் பாடுவதே ஒரு தியானம் செய்வது போலத்தான் இருக்கும். சின்ன தலையசைப்பு கூட இருக்காது. நின்ற இடத்திலே நின்று கடவுளிடம் ஏதோ பிராத்தனை செய்வது போலத்தான் இருக்கும். ஆனால் இசை மட்டும் வெள்ளமாய் மடைதிறந்து வரும். வயது அறுபதுகளில் இருந்தாலும் அதே குரல் வளம் ! 2014-ல் கோலாலம்பூரில் ஒரு இசைநிகழ்ச்சியில் இதே பாடலை அவர் பாடியது! இந்தப் பாடல் உருவான விதம்பற்றி இளையராஜாவின் அனுபவத்தோடு நீங்களும் பாருங்கள் (8.20 - 20.00 நிமிடங்கள்)
1 comment: