Thursday, 26 July 2018

முற்றம் வைத்த வீடு.


சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். தானியங்கி இமிக்ரேசன் முடிந்ததும் என் கடவுச்சீட்டை வாங்கிச் சரி பார்த்த  பாதுகாவலரிடம்  "தேங்க்ஸ்" என்று ஒற்றை வரியில் கடமைக்கு சொல்லிவிட்டு விலகி நடக்க ஆரம்பித்தேன். விமான நிலையைம் ஏராளமான யூனிட் மின்சாரத்தை விழுங்கிக்கொண்டு பளிச்சென இருந்தது. பூச்செடிகளின் முன்பு ஒரு காதல் ஜோடி கட்டிப்பிடித்தபடி செல்பி எடுத்துகொண்டிருன்தனர். ஆனால் அதை ரசித்துப்பார்க்கும் மனநிலையில்தான் நான் இல்லை. கொஞ்ச தூரம் நடந்ததும் டூட்டி ப்ரீ ஷாப் வித விதமான பாட்டில்களோடு தன்னை அலங்கரித்துக்கொண்டு பயணிகளை உள்ளே இழுத்துக்கொண்டிருந்தது. வழக்கமான பயணம் என்றால் இமிக்ரேசன் தாண்டி அந்தக் கடைக்கு அருகே போவதற்குள் பிராந்தியா விஸ்கியா? ஒண்ணா ரெண்டா என்று ஒரு பட்டிமன்றமே நடத்திக்கொண்டு செல்வேன். ஆனால் இப்போது உள்ள மனநிலையில் அங்கு நின்று கூட பார்க்காமல் எனக்கான கேட் நம்பரை பார்த்து நடக்க ஆரம்பித்தேன்.

சுமார் அரை கிலோ மீட்டர் நடந்திருப்பேன்! இருப்பதுலே ஆகக்கடைசி வாயில்(கேட்) எனக்கு. கூட்டம் அனைத்தும் ஏற்கனவே உள்ளே சென்று காத்திருக்கும் வராந்தாவில்(வெயிடிங் லாஞ்ச்) குவிந்திருந்தது. பேருக்கு இரண்டு மாற்று துணிகள் வைத்திருந்த கைபையை ஸ்கேனுக்கு அனுப்பிவிட்டு உள்ளே சென்றேன். வழக்கமாக பயணங்களோடு எடுத்து செல்லும் ஐபேட் கூட எடுக்க வில்லை. நான் உள்ளே செல்வதற்கும் விமானத்திற்கு அழைப்பதற்கும் சரியாக இருந்தது. அழைத்து முடிப்பதற்குள் அருகே சென்று குமிந்தனர் நம்மவர்கள். விமானப் பயணங்களில் நம்மவர்கள் என்னை ஆச்சர்யப்படுத்தும் அல்லது சிரிப்பை வரவைக்கும் பல விசயங்கள் உண்டு. அதில் ஒன்று அழைத்தவுடன் கும்பலாக போய் நிற்பது. இங்கு 90காசு கொடுத்து காப்பி வாங்கும் கடையில் கால்மணி நேரம் வரிசையில் நிற்பவர்கள் 900டாலர் கொடுத்து வாங்கும் விமான பயணத்திற்கு 10நிமிடம் பொறுமையாக  இருப்பதில்லை.

ஒருவழியாக உள்ளே சென்று இருக்கையை தேடி அமர்ந்து கண்களை கைகுட்டையால் மறைத்துக்கொண்டு இருக்கை பட்டையை அணிந்துகொண்டு சாய்ந்துவிட்டேன். வழக்கமாக அருகில் இருப்பவரிடம் மெதுவாக பேச்சு கொடுத்து அப்பிடியே பீரோடு ஒயின் கலந்து அடிக்கும் என்  அனுபவத்தையும் ரம்மோடு வெந்நீர் ஊற்றி அதில் மிளகுதூள் போட்டு அடித்தால் சளிக்கு நல்லது என்ற அவர்களின் அனுபவங்கள் வரை பரிமாறிக்கொள்வது வழக்கம். ஆனால் இப்போது யாரோடும் பேசும் மனநிலையில் இல்லை. கேப்டன் இனிய காலை வணக்கம் சொல்வது மங்கலாக கேட்டது. விமானப் பணிப்பெண்கள் அவசரகால யுத்திகளை ஊமை பாஷையில் 80 களின் தூர்தர்சனின் மதிய செய்தியை போல சொல்லி சிறுவயதை  ஞாபப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

முன்சீட்டில் ஒரு குழந்தை வீறிட்டு அமைதியைக் குலைத்து அழுதது. பக்கத்து சீட் ஆசாமி தான் விமானத்தில் வந்து அமர்ந்துவிட்டதாக நூறாவது முறை தொலைபேசியில் யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தார். பின்சீட்டில் ஒருவர் பிளாக் லேபிள் தீர்ந்துருச்சு மாப்ள அதான் ரெட்லேபில் வாங்கியிருக்கேன் என்று தொலைபேசியில் சொல்லிக்கொண்டிருந்தார் பணத்தை மிச்சம் பண்ணிய திருப்தியுடன். ரயில், பஸ் அல்லது விமானம் இப்படி எந்தப் பயணமாக இருந்தாலும் கடைசி நேர உரையாடல் நம்மவர்களுக்கு எப்பொழுதுமே சுவாரஸ்யம்தான். இதன் உளவியலை தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நினைவுச் செல்கள் என்னை இது எதிலும் நிலைக்கவிடவில்லை. நேற்று இரவு நடந்தது மெதுவாக மனதில் ஓடியது. 

இரவு சாப்பாடு சம்பிரதாயங்களை முடித்து விட்டு படுக்கைக்கு வர 11 மணி ஆகிவிட்டது. வெளிநாட்டு வாழ்க்கையில் சாப்பாடு கூட சம்ப்ரதாயம்தான். எப்போதும் போல வீட்டுக்கு போன் செய்ய ஆயத்தமானேன். அதற்கு முன்னதாகவே என் கைபேசி என் அம்மா நம்பரை தாங்கி அழைத்தது. எனக்கு ஆச்சர்யம் கொஞ்சம் பயம் வேறு. ஏதேனும் அவசரம் இல்லையென்றால் எனக்கு அழைக்க மாட்டார்கள். ஏதேனும் தேவை என்றால் கூட நானாக பேசும்போதுதான் சொல்வார்களே தவிர அழைத்து கேட்க மாட்டார்கள். என்னவாக இருக்கும் என்ற யோசனையோடே திரும்ப அழைத்தேன். தம்பி.. என்று கூறிவிட்டு அழுகையை அடக்க முடியாமல் அழுதார்கள். எனக்கு பதறிவிட்டது, அப்பாவில் ஆரம்பித்து மனதிற்கு நெருக்கமான அனைவர் பெயரையும் சொல்லி நலம்தானே என்றேன். எல்லோரும் நல்லா இருக்கோம்.. ஆனா நம்ம பழைய வீடு...என்று இழுத்தார்கள். 

கொஞ்சம் புரிந்துவிட்டது. அப்பாவின் தவறு இப்பொழுது துரத்தி அடிக்கிறது. எங்கள் பரம்பரை பழைய வீட்டை அப்பா அவரது தம்பியின் பேரில் உள்ள நம்பிக்கையில் அவரின் தொழில் தேவைக்கு லோன் வாங்க அவர் பெயருக்கு எப்பவோ எழுதிக்கொடுத்துவிட்டார். வசதி வாய்ப்பு இல்லாத போது பாசம் மட்டுமே போதும் என்று இருந்தவருக்கு வசதி வாய்ப்புகள் வந்ததும் இந்த வீடே என்னுடையது என்று எங்களை வீதியில் துரத்தினார். பின்னர் நான் சம்பாதித்து வீடு கட்டியது எல்லாம் படையப்பா பார்ட் 2 கதை. ஆனால் ஒரே பாட்டில் முடியாமல் இடையில் 15 நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. கூடவே நீண்ண்ண்ண்ட சட்டப் போராட்டமும். 

"தம்பி.. என்னாச்சு?" என்றார்கள் அம்மா மறுமுனையில். ம்ம்.. சொல்லும்மா இருக்கேன் என்றேன் என் நினைவுகளை மீட்டுக்கொண்டு. "இன்னைக்கு சாயங்காலம் வீடு அவங்களுக்குன்னு தீர்ப்பாயிருச்சு தம்பி, நாளைக்கே வந்து இடிக்க போறாங்களாம்"  என்று அழுகையினூடே சொன்னார்கள் அம்மா. "சரிம்மா போன வை" என்று அலைபேசியை துண்டித்துவிட்டு படுத்துவிட்டேன். பிறந்ததில் இருந்து கூடவே இருந்த நண்பனை இழக்கப்போகும் துயரம் வந்து அமர்ந்துகொண்டது நெஞ்சில். அதை பழைய வீடுதானே என்று சாதாரணமாக கடந்துவிட முடியாது. நான் பிறக்கும்வரை அதாவது மூன்று அக்காக்களுக்கு பிறகு நான் பிறக்கும் வரை நாங்கள் பக்கத்து நகரத்தில்  இருந்தோம் அல்லது இருந்தார்கள். ஏனென்றால் அப்பாவின் வேலைக்குச் செல்லும் தொழிற்சாலைக்குப் பக்கமாக வேண்டும் என்பதால்.

நான் பிறந்ததும் நான்கு குழந்தைகளுக்கும் சேர்த்து பெரிய வீடு தேவைப்பட்டது. அப்படி ஒரு வீட்டில் வாடைக்கு இருக்க என் அப்பாவின் பொருளாதாரம் இடம்கொடுக்காமல் இந்த பழைய வீடு இருக்கும் கிராமத்திற்கு வந்தோம். இதற்காக அப்பா தினமும் போக பதினைந்து வர பதினைந்து ஆகா முப்பது கிலோமீட்டர் சைக்கிள் அழுத்த வேண்டியிருந்தது வேலைக்கு. ஆனாலும் அப்போது அது ஒன்றுதான் அவர்களுக்கு வழியாக இருந்திருக்கும். சரியாக நான் பிறந்து ஆறு மாதத்தில் இந்த வீட்டுக்கு வந்து விட்டோம். வீடு வீடு என்று சொல்கிறேனே தவிர நாங்கள் வரும்போது வீடாக இருக்கவில்லை. ஆடு மாடுகள் கட்டும் தொழுவமாகத்தான்  இருந்தது. ஆனால் வீடு அழகான முற்றம் வைத்த வீடு. பிறகு சில வருடங்கள் ஓடி ஓரளவிற்கு எனக்கு நினைவு தெரிந்த வயதில் வீடு என்று இருந்ததை ஒரு அழகான வீடாக மாற்றியிருந்தனர் என் அம்மாவும் மூன்று அக்காக்களும் சேர்ந்து.

வாசலில் இரு பக்கமும் திண்ணை. படியேறி உள்ளே போனதும் பெரிய பத்தி (வராண்டா அல்லது ஹால்) சாணம் போட்டு மெழுகி பளபளவென்று எப்பொழுதுமே குளிர்ச்சியாக இருக்கும். அதைத் தாண்டி உள்ளே போனால் நாட்டு ஓடு போர்த்திய சுத்துக்கட்டு வளவு நடுவில் வானம் பார்த்த முற்றம். மேற்குப் புறத்தில் இரண்டு அறைகள் ஒன்றில் சாமி கும்பிட மற்றும் இரண்டு மர அலமாரி(பீரோ) வைத்திருக்கும். இன்னொரு அறையில்  நெல்மூடைகள் அடுக்கி இருக்கும். விடிகாலையில் அப்பா படிக்க எழுப்பிவிடும்போது இந்த நெல்மூட்டைகளுக்கு நடுவில் அமர்ந்து படிப்போம். கத கதவென்று இருக்கும் சமயங்களில் அந்தக் கதகதப்பிலே தூங்கி விட்டு உதை வாங்குவதும் நடக்கும். தீபாவளி சமயங்களில் செய்த அதிரசமும் முறுக்கும் ஒரு பெரிய தூக்கு வாளியில் போட்டு இந்த அறைக்குள்தான் இருக்கும். அம்மாவுக்கு தெரியாமல் எடுத்து அவ்வப்போது டவுசர் பைகளில் போட்டுக்கொண்டு ஓடுவதெல்லாம் அந்த அறையில்தான்.

வடகிழக்கு மூலை எப்போதுமே முளைப்பாரி போடும் இடம் அதனால் அங்கே படுக்க மாட்டோம். பொங்கல் அன்று எங்கள் முற்றத்தை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். முற்றம் முழுவதும் அடைத்து மாக்கோலம் இட்டிருப்பார் அம்மா. இரண்டு பானை வைத்து பொங்கி அங்கேயே சாமி கும்பிட்டு அந்த அடுப்பை சுற்றியே அமர்ந்து சாப்பிடுவோம். அன்று மட்டும் அல்ல மழை அல்லாத ஒவ்வொரு இரவிலும் அங்கேதான் இரவு சாப்பாடு. முற்றத்தின் மேலே நடுவில் நிலா மற்றும் நட்ச்சத்திரங்களின் அழகோடு உணவருந்துவதே ஒரு தவம். மழை வந்தால் இன்னும் சந்தோசம், நான்கு மூலைகளிலும் கூரை வாய் தகரத்தில் இருந்து விழும் நீரை சேமிக்க இருக்கும் பாத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்து அந்த மழையில் ஆடுவோம். அம்மாவும் அக்காவும் துணிகளை எடுத்து அந்த மழையோடு துவைக்க ஆரம்பித்துவிடுவார்கள். காகிதத்தில் கப்பல் செய்து வீட்டுக்குள் விட்டு வெளியில் ஓடி யார் கப்பல் முதலில் வருகிறது என்று சண்டை போடுவோம். இப்படி ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு நினைவுகளை புதைத்து விட்டே அந்த வீட்டை பூட்டினோம் 15 வருடங்களுக்கு முன்பு.

ஞாபகங்களை அறுத்துவிட்டுத் திடீர் என்று எழுந்தேன். மணி பார்த்தேன் அதிகாலை இரண்டு மணி. நேசித்த உயிர், பிரியும் வேளையில் கடைசியாக முகத்தை பார்க்க ஒரு ஆசை அலல்து வெறி வருமே அதுபோலத்தான் அப்போது தோன்றியது. அப்பொழுதே இணையத்தில் தேடி பயணசீட்டை உறுதிசெய்துவிட்டு விடிவதற்காக காத்திருந்தேன். காலை ஒன்பது மணிக்கு விமானம்  ஐந்து மணிக்கு எல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பி இதோ விமானத்திலும் அமர்ந்து விட்டேன். மெதுவாக மணி பார்த்தேன் விமானம் கிளம்பி ஒருமணி நேரம் ஆகியிருந்தது. இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது திருச்சி செல்ல. அங்கிருந்து ஒரு இரண்டு மணி நேர பயணம் என் கிராமத்திற்கு. அதற்குள் இடித்துவிடாமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டேன். வருவதை வீட்டிற்கு போன் பண்ணி சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. படைப்பா படத்தில் சிவாஜி வீட்டை விட்டு கிளம்பும் போது கடைசியா நான் வாழ்ந்த வீட்ட கட்டிபுடிச்சிக்கிறேன்னு சொல்லும் அந்தக் காட்சியை  காமெடியாக பார்த்து காமெடியாகவே மெமேகளில் பழகி விட்ட அந்த உணர்வு இப்போது உயிரோடு சேர்த்து வைத்து அழுத்தியது. 

ஒரு செடியை வேரோடு புடிங்கி நட்டால் கூட கூடவே அதன் தாய் மண்ணையும் சேர்த்தே எடுத்து நடுவார்கள். இல்லையென்றால் செடி வளராது. ஒரு செடிக்கே அப்படி இருக்கும்போது உணர்ச்சிகளாலும் உணர்வுகளாலும் பின்னிப் பிணைந்த நானும் சாதாரண மனிதன்தானே. சாதாரண மாட்டுத் தொழுவமாக இருந்த அந்த வீடு நான் வளரும்போது என்கூடவே சேர்ந்தே வளர்ந்து வந்திருக்கிறது. முன்பக்கம் மூங்கில் சட்டங்களால் அடைக்கப்பட்டது செங்கல் சுவராக மாறியது. என் ஏழு  வயதில் மின் இணைப்பில் ஒளிரதுவங்கியது பிறகு சாணி மொழுகிய தரை சிமெண்ட் பூசிக் கொண்டது. காலப்போக்கில் அதுவே டைல்ஸ் கல்லாக மாறியது. குடும்பத்தில் வயதான மூத்தவர்களுக்கு செய்யும் பணிவிடை போல ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தோம்.

அக்கம் பக்கத்தில் யார் வீட்டில் குழந்தை பிறந்தாலும் அந்த வீட்டு பத்தியில்தான் தொட்டில் கட்டிப்  போடுவார்கள். என் ஆயாவின் தாலாட்டு அப்பிடி. மாலை நேரம் ஆனால் அந்த தெருவிற்கே எங்கள் வீட்டுத்  திண்ணைதான் மனமகிழ் மன்றம். தாயம், பல்லாங்குழி ஒருபக்கம் ஓடும். பெரியவர்கள் கதைப்பேச்சு ஒருபக்கம். விடுமுறை தினங்களில் எங்கள் வீடு முழுநேர மனமகிழ் மன்றமாகிவிடும். இதெல்லாம் 80களின் இறுதியில் அல்லது 90களின் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன். அப்பொழுதெல்லாம் ஒளியும் ஒலியும் மற்றும் ஞாயிறு படம் தவிர தொலைக்காட்சி பார்ப்பது பாவம் என்றிருந்த காலம். இப்போது யோசித்துப்பார்க்கிறேன் அந்த வீட்டில் எப்போது நான் கடைசியாக இருந்தேன் என்று. அனைத்தையும் காலி செய்து வீட்டைப்பூட்டி வெளியேறும் போது கொஞ்சம் இருங்கள் என்று கூறி  ட்ரவுசரை இறுக்கப் பிடித்தபடி உள்ளே ஓடி தாழ்வாரத்தில் ஒரு ஓட்டை போட்ட டப்பாவில் கொன்னை இலைகளைப் போட்டு அதில் விட்டிருந்த இரண்டு பொன்வண்டுகளைப் பார்த்தபடி எடுத்து வந்தேன். அதுதான் அந்த வீட்டுக்கும் எனக்குமான கடைசி நூல் அறுந்த தருணம் என்று அப்போது நினைக்கவில்லை. 

கிராமத்திலேயே வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்துகொண்டு அந்த வீடு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதை பார்த்துக்கொண்டே நானும் வளர்ந்தேன். வாசல் கதவுகளில் கரையான்கள் கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் தன் சாம்ராஜ்யத்தை அமைத்துக்கொண்டது. வருடங்கள் ஓடி நான் சிங்கை வந்து 6 வருடம் ஆகிவிட்டது. இடையில் அங்கேயே வேறு இடம் வாங்கி வீடும் கட்டியாகிவிட்டது. ஊருக்கே தொட்டில் கட்டிய அந்தப் பத்தியில் என் குழந்தைக்கும் தொட்டில் கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையோடு பெண் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள் அம்மா. ஆனால் காலம் எங்களுக்கான பதிலை இப்படி வைத்திருக்கும் என்று யாருமே யோசிக்கவில்லை. இப்பிடி கண்மூடியும் தூங்காமல் நினைவுகளோடு போராடிக்கொண்டிருக்கும்போதே விமானம் இறங்கி ஓடுபாதையில் ஓட ஆரம்பித்தது. குடிநுழைவு மற்றும் சுங்க சோதனைகளை விரைவாக முடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியில் வந்து என் ஊருக்கு செல்லும் பேருந்தில் அமர்ந்தேன். அப்போதுகூட வீட்டுக்கு பேச வேண்டும் என்று தோன்றவில்லை. 

சட்டப்போராட்டங்களுக்கு இடையில் கூட சமாதானத் தூது விட்டுப்  பணம் கூட கொடுக்கிறேன் அந்த வீட்டை தாருங்கள் என்று கூறியும் அதை தர மனமில்லாத என் சித்தப்பாவின் வீம்புக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று என்னால் யூகிக்க  முடியவில்லை. பணம் ஈகோ இப்படி எல்லாவற்றையும் கடந்தது அந்த வீட்டுக்கும் எனக்குமான பந்தம். சமீபத்தில் பல லட்சங்களில் சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கினேன். ஆனால் இன்று வரை ஒருமுறைதான் அதை பார்த்திருக்கிறேன். அது என்னுடைய வீடு என்று கூட என் மனதில் இன்னும் பதியவில்லை. ஆனால் பால்ய வயதில் பல வருடங்களுக்கு முன்னால் என் பழைய வீட்டை விட்டு வந்தாலும் அது மட்டுமே என்னுடைய வீடாக மனதில் பதிந்துவிட்டது. கண்ணெதிரே நீருக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் நண்பனைக் காப்பாற்ற முடியாத கையறு நிலையில் இருந்தேன். 

இப்படி அந்த வீட்டுக்கும் எனக்குமான ஞாபகங்களை என் மூளைச்  செல்களில் எங்கெங்கு ஒளித்து வைத்தேனோ அவையெல்லாம் வரிசை கட்டி வந்து நின்றது. என் கிராமம் வந்து விட்டதாக நடத்துனர் கதறுவது அசரீரி போல காதுக்குள் கேட்டது. அனிச்சையாக இறங்கி நடக்க ஆரம்பித்தேன். வரிசையான விசாரிப்புகளைக் கடந்து நேரே வீட்டுக்கு கூடப் போகாமல் என் பழைய வீட்டைத்தான் நோக்கி நடந்தேன். பதின்ம வயதுப் பிள்ளையின் அகால மரணத்திற்குப் போவது போல இருந்தது என் மனநிலை. என் வீடு இருக்கும் தெருவுக்குள் கால் வைத்ததுமே நெஞ்சுக்கூட்டுக்குள் ஏதோ நொறுங்கும் சத்தம் . வீதி நெடுக உரிமையோடு வந்தன உறவுகள். கைப்பையை யாரோ வாங்கிக்கொண்டனர். ஆறுதல் அளிக்காது என்று தெரிந்தும் ஆறுதல்கள் காதில் கேட்டது. வீட்டை நெருங்க நெருங்க தெரிந்துவிட்டது. எல்லாமே முடிந்துவிட்டதென. என் சாவில் கூட முழிக்காதே என்று சாபம் விட்ட முதியவர்களின் இறப்பு போல இருந்தது என் வீடு. ஆமாம்.. அப்போது வீட்டிற்கான எந்த அடையாளமும் இல்லாமல் என் நம்பிக்கையோடு சேர்ந்து நொறுங்கிபோய்க்கிடந்தது என் வீடு. இறுதிச்சடங்கில் சிதறிக்கிடக்கும் பூக்கள் போல வீதியெங்கும் சிதறிக்கிடந்தன செங்கல்கள்.

என்னைப் பார்த்ததும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டார் சித்தப்பா. அப்போது கூட வரவேற்க தவறாத வாசல்படியில் கால் வைத்து உள்ளே போனேன் காலடியில் இடறியது மர உத்திரம். எத்தனையோ குழந்தைகளை தொட்டில் கட்டி தூங்க வைத்த உத்திரம். தூரத்தில் நின்ற பங்காளியை கூப்பிட்டு இதை மட்டும் நான் எடுத்துக்கொள்கிறேன் என்று சித்தப்பாவிடம் கேட்க சொன்னேன் உத்திரத்தைக் காட்டி. அவரும் அவரிடம் பேசி சரி என்றதும் இரண்டுபேரை உதவிக்கு கூப்பிட்டு அதை எடுத்து என் வீட்டில் வைக்க சொன்னேன் என் அம்மாவின் ஆசைக்காக.  பத்தி தாண்டி வளவு போனேன் காலில் இடறியது ஒரு  சின்னச் சங்கு. எடுத்துப்பார்த்தேன் என் பெயர் பொறித்திருந்தது. ராமேஸ்வரத்தில் எப்போதோ பெயர் பொறித்து வாங்கியதை மராமத்து வேலையின் போது நிலையில் மேலே விளையாட்டாய்ப் பதித்தது. என் நண்பனின் இறுதிப்பரிசாக எண்ணிக்கொண்டேன். அதற்கு மேல் முடியவில்லை வெளியில் வந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிதேன். மெதுவாக திரும்பிப் பார்த்தேன். துரோகத்தின் வலியைத் தாங்கிக் கொண்டு என் அழகான முற்றம் மட்டும் அப்பிடியே இருந்தது.


1 comment:

  1. Great valliappan.... I think you are a very good story teller... Your writing reminds me the Tamil writer s.ramakrishnan.,. Good ... Keep it up...

    ReplyDelete