Friday, 19 October 2018

நாதஸ்வர ஓசையிலே!

கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி செந்திலை அடிக்கடி டேய் நாதஸ் என்று திட்டுவதை பார்த்த தொண்ணூறுகளுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு நாதஸ்வரம் என்பது ஒரு கிண்டல் விஷயமாகவே தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல. நாதஸ்வரம் என்பது கடவுளின் மொழி. இறையை உணர இறைவனுக்கும் நமக்கும் பாலம் அமைக்கும் வல்லமை கொண்டது. இதை தொடரும் முன் முடிந்தால் கீழே உள்ள இந்த தொடுப்பில் உள்ள இசையை கேட்டுவிட்டுத் தொடரவும்.


இது தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் ஒரு பகுதி. இதில் சிவாஜியின் நடிப்பையும் தாண்டி ஊடுருவிப் பார்த்தோம் என்றால் அங்கு MPN சகோதரர்கள் தெரிவார்கள். MPN சேதுராமன் மற்றும் MPN பொன்னுச்சாமி! இவர்கள்தான் இந்தப் படத்தில் வரும் நாதஸ்வர இசையின் நாதங்கள். ஆனால் வாயசைத்த சிவாஜியை கொண்டாடிய அளவு மக்கள் இவர்களைக் கொண்டாட வில்லை. இது மக்களின் சாபம் மட்டுமல்ல இந்த மண்ணின் சாபமும் கூட! மக்கள் அசலுக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது. இன்றைக்கும் கூட நாதஸ்வரம் என்று சொன்னால் மக்கள் மனதில் வருவது இவர்களின் இசைதான். ஆனால் இவர்கள் முகம் தெரியாமல். இவர்களின் இசைத்தொகுப்பை கேட்க வேண்டுமானால் கீழே உள்ளது.


நாதஸ்வரத்தின் பலமே அதை ரசிக்க இசையறிவு தேவையில்லை என்பதுதான். கேட்ட மாத்திரத்தில் மனதை உருக வைக்கும் திறமை கொண்டது. நாதஸ்வரம் என்பது நம் மண்ணின் இசை. இப்போது P.காரைக்குறிச்சி அருணாச்சலம் என்று சொன்னால் யார் என்று கேட்பவர்கள்தான் அதிகம். அதையே கொஞ்சும் சலங்கையில் வரும் "சிங்காரவேலனே" பாடலை வாசித்தவர் யார் என்றால் ஓ.. ஜெமினியா என்பார்கள்! சிங்காரவேலனே பாடலை உண்மையில் வாசித்தவர் இவர்தான். எத்தகைய ஜாம்பவானுக்கும் ஒரு திரைப்பட முகவரி தேவைப்படுகிறது. இதனாலேயே இந்த நாதஸ்வரத்தில் பல ஜாம்பவான்களை நமக்கு தெரியாமலே போய் விட்டது. காரைக்குறிச்சியின் இசை வெள்ளத்தில் நீந்த..


எவ்வளவு நாதஸ்வர வித்வான்கள் இருந்துருக்கிறார்கள் நமது மண்ணில். பத்மஸ்ரீ நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன். இவர் தந்தை பெரியாரால் "நாதஸ்வர சக்ரவர்த்தி" என்று பட்டம் அளித்து புகழப்பட்டவர்! திருப்பதி கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் இவர். இவரது இசைத்தொகுப்பு கீழே.


அப்பொழுதே சங்கீத கலாநிதி என்று புகழப்பட்ட TN.ராஜரத்தினம்பிள்ளை! 2008ல் முதல்வர் கருணாநிதியால் "ராஜரத்தினா" விருது கொடுத்து புகழப்பட்ட உமாபதி கந்தசாமி. "நாதஸ்வர ஆச்சார்யா" என்று புகழப்பட்ட ஷேக் சின்ன மௌலானா. இப்படி நமக்கு தெரிந்தும் தெரியாமலும் எண்ணிலடங்கா வித்வான்களை கொண்டதுதான் தமிழ்நாடு. மன்னர்கள் காலத்தில் உச்சத்தில் இருந்த இசை ஆங்கிலேயர் காலத்தில் கூட மதிப்பை இழக்கவில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக ஆங்கிலேயர் போனதுக்கு பிறகுதான் நமக்கு ஆங்கில மோகம் அதிகமானது.

திருமணங்களில் பேண்டு வாத்தியம் வைப்பது பேசனானது. திருவிழாக்களில் ஆர்கெஸ்டரா வைப்பது அவசியமானது. நம் மண்ணின் இசையை நம் மண்ணில் இருந்தே நாமே கொஞ்சம் கொஞ்சமாக அந்நியப்படுத்தினோம். ஆனாலும் இன்னும் அதன் வேர்களை காயவிடாமல் தண்ணீர் விட்டுக்கொண்டிருப்பது கிராமங்களும் திருவிழாக்களும்தான். அதற்கும் சோதனையாக இப்போது புதிதாக கேரளாவின் சென்டை மேளம் வைப்பது பேஷனாகி வருகிறது. நமக்கும் சென்டை மேளத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

சமீப காலமாய் இளைஞர்கள் கூட இணையத்தில் நாதஸ்வர இசையை தேடி பார்ப்பது ஒரு சின்ன ஆறுதல். அதற்கு முக்கிய காரணம் இணை பிரியா சகோதரர்களாக இருந்த நாதஸ்வரம் தவில் இடையே இப்போது வயலின் போன்றவைகளை இணைத்து ஒரு ஃபியூஷனாக கொடுக்கிறார்கள். காலத்திற்கு ஏற்ற முக்கிய மாற்றம் இது. இதில் முக்கியமாக குறிப்ப்பிடவேண்டியவர்கள் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த P.S.பாலமுருகன் மற்றும் K.P. குமரன். தமிழகத்திலும் இப்போது இதைப்பின்பற்றி இதுபோல தருகிறார்கள். கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்.


நம் கூடவே இருப்பதாலேயே சில நல்ல வித்வான்களை நாம் கொண்டாடாமலே போய்விடுகிறோம். கண்டனூர் வேதமூர்த்தி-பாலு சகோதரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிலும் சமீபத்திய கண்டனூர் பாலுவின் இழப்பு ஈடுசெய்ய இயலாதது. கண்டனூர் திருவிழா சாமி ஊர்வலங்களின் போது வேறு எதையுமே நினைக்காத வண்ணம் கட்டிப்போடவல்லது இவர்களின் நாதஸ்வர இசை. இவர்களுக்கு அடுத்து கண்டனூர் கணேசன்-ரெங்கநாதன் சகோதரர்களின் நாதஸ்வரம்-தவில் கூட.

இப்போது இருக்கும் கலைஞர்கள் தங்களின் திறமையை அடுத்த தலைமுறைக்கும் கடத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். வரப்பிரசாதமாய் இருக்கும் சமூக வலைத்தளங்களின் உதவியோடு இப்போது உள்ள இளைஞர்களையும் ஈர்க்க முயற்சி செய்ய வேண்டும். ஒரு தமிழனாய் நாம் செய்யவேண்டியது இவர்களைப்போல கலைஞர்களை ஊக்குவித்து எப்போதும் ஆதரிக்க வேண்டும் என்பதே!


Thursday, 27 September 2018

ஆனந்த ராகங்கள்! (1)

தனது எல்.எம்.எல்.வெஸ்பா ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு இசைஞானி இளையராஜாவின் பாடல் பதிவு அரங்கத்திற்குள் வருகிறார் உமா ரமணன். எப்போதும் போல் அல்லாமல் ஒரு வித்தியாசமான சூழலை உணர்கிறார். எப்போதும் துணைக்கு தன் தாயை அழைத்துவருபவர் அன்று தனியாக வந்திருக்கிறார். பாடல் பதிவு அரங்கத்திற்குள் உள்ளே போனதுமே அங்கு உள்ள வாத்தியக்காரர்களைப் பார்த்து ஒருகணம் திகைத்து நின்று விட்டார். இது நடக்கும் வருடம் 1981-ம் வருடம். 

அப்போது அவர் புதிய பாடகி கூட இல்லை. கணக்கில்லாத மேடை கச்சேரிகளை தன் கணவர் A.V. ரமணனனுடன் சேர்ந்து பண்ணியவர். அதுபோக 1977-ல் ஸ்ரீக்ருஷ்ணலீலை படத்தில் பாடகியாக தன் கணவர் கூடவே சேர்ந்து பாடி அறிமுகமானவர். அது கவனிக்கப்படாமல் போக மூன்று வருடம் கழித்து 1980-ல் ரமணனின் இசையில் நீரோட்டம் என்ற படத்தில் "ஆசை இருக்குதே நெஞ்சுக்குள்ளே" என்ற பாடல் பாடுகிறார். தமிழ் திரை இசையின் துரதிஷ்டம் அப்போதும் அது அதிக கவனம் ஈர்க்காமல் போகிறது. பிறகுதான் இசைஞானியின் கண்ணில் பட்டு நிழல்கள் என்ற படத்தில் "பூங்கதவே தாழ் திறவாய்" பாடலைப் பாடி தமிழ் திரை இசையின் பூங்கதவைத் திறந்துகொண்டு வருகிறார். படம் தோல்வி ஆனால் இன்றுவரை இசைக்காகப் பேசப்படும் படம். பின்னர் மூடுபனி படத்தில் "ஆசை ராஜா ஆரீரோ.. ' ஒரு சின்ன பிட் ஆனால் அதில் கூட அந்தக் குரலில் வெளிப்படும் தாய்மை, உருக்கம், ஆதரவு அனைத்தையும் குழைந்து கொடுத்திருப்பார்.
பிறகு 1981-ல் இசைஞானி தொடர்ந்து அவரைப் பாட வைக்கிறார். அதில் குறிப்பிட்டு சொல்லும்படி என்றால் கர்ஜனை படத்தில் "என்ன சுகமான உலகம்" மற்றும் நண்டு படத்தில் "மஞ்சள் வெயில் மாலை" பாடல்களை சொல்லலாம். ஆனாலும் அவருக்கு ஒரு பிரேக் த்ரூ பாடல் கிடைக்கவில்லை. இது இசைஞானிக்கும் தோன்றியதோ என்னவோ. அவருக்குக்காகவே ஒரு பாடலை தயார் செய்து அழைத்துவிட்டார். அந்தப் பாடலை உமா ரமணன் அவர்கள் பாட வந்த காட்சியைத்தான் நாம் முதல் பத்தியில் பார்த்தது. 

உள்ளே வந்து திகைத்து நின்றவர் மெதுவாக சூழலை உள்வாங்குகிறார். வயலின், செல்லோ, கிடார், புல்லாங்குழல் என இசைக்கலைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இசைக்கோர்வையை வாசிக்க பயிற்சியில் இருந்தனர். மெதுவாக உதவியாளர் வந்து பாடல் பதிவு இன்று மாலை வரை இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். அப்போதே பாடல் எவ்வளவு கடினமாக இருக்கும் என்று தெரிந்துவிடுகிறது அவருக்கு. ஆனால் அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை இந்தப்பாடல்தான் தனக்கு வாழ்நாள் அடையாளமாகவும் இளையராஜாவின் சரித்திரம் பேசும்வரை இந்தப் பாடலும் பேசப்படப்போகிறது என்று. அந்தப் பாடல்தான் பன்னீர்ப்புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற..

"ஆனந்த ராகம் கேட்கும் காலம்"  என்று எடுத்ததுமே பல்லவியில் நமது ஆன்மாவை ஊடுருவி உள்ளே இருந்து கொண்டே சின்ன ஜதியில் ஆடினால் எப்படி இருக்கும்! அப்படிதான் அதன் சரணம் வரும் 

"துள்ளி வரும் உள்ளங்களில்,
தூது வந்து தென்றல் சொல்ல தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்த தாளங்களே வெள்ளி மலைக் கோலங்களை, அள்ளி கொண்ட மேகங்களை காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்ததின் பாவங்களே கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ பற்றிக் கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ ராகங்கள் பாட, தாலங்கள் போட 
வானெங்கும் போகதோ " ..  

இதில் அவர் எங்கு மூச்சு எடுப்பார் என்று யோசிக்கும்போதே "ஆனந்த ராகம்.. என்று மீண்டும் பல்லவியைப் பிடிப்பார். நம்மை அங்கும் இங்கும் அசைய விடாமல் அந்த காதலர்களின் பின்னாலயே ஓடவைக்கும் அதிசயம் இந்தப் பாடலில் உண்டு. அது இசையாலா அல்லது உமா அவர்களின் குரலாலா என்பது பிரித்தறிய இயலாதது. பல்லவி முடிந்ததும் ஒரு வயலின் இசைக்கோர்வை வரும். எனக்குத்தெரிந்து இந்தப் பாடலுக்குப் பிறகு தளபதி படத்தில்தான் "ராக்கம்மா கையத்தட்டு' பாடலில் அதை உணரமுடியும். இடையிசையில் வரும் வயலின் இசைக்கோர்வை நம்மை குதிக்க வைக்கும் என்றால்  நடுவில் குழல் ஓசை நம்மை ஆரத்தழுவி அமைதிப்படுத்தும். இப்படி வயலின் இசைக்கும் குழல் ஓசைக்கும்  நடுவே நாம் மூச்சு முட்டும்போதே உமா ரமணன் ஆரம்பிப்பார்... 

"வண்ண வண்ண எண்ணங்களும்,
வந்து விழும் உள்ளங்களும் வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே சின்ன சின்ன மின்னல்களும் சிந்தனையின் பின்னல்களும் சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும் இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும் காவிய ராகம், காற்றினில் கேட்கும் காலங்கள் ஆரம்பம்… "

என்று மூச்சு எடுக்க நேரம் இல்லாத நீண்ட நெடிய மாரத்தான் ஓடியது போல மீண்டும் "ஆனந்த ராகம் என்று பாடி லாலலாலா லாலலாலா லாலாலாலா என்ற ஹம்மிங்கோடு நிறுத்துவார். அவர் நிறுத்தி விடுவார் ஆனால் நம்மால்தான் உடனே மீண்டுவர இயலாது. ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒரு ஞாபங்களை கிளறிவிடும் என்பார்கள். அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் இந்தப்பாடல் எல்லோருக்கும் ஒரே ஞாபகத்தைத்தான் கிளறும். அது முதல் காதல்! அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு.

உமா ரமணன் அவர்களின்திரையிசைப் பாடல்களை பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்தேன். ஆனால் இந்த ஒரு பாடலே ஒரு முழுக்கட்டுரையை நிரப்பிவிட்டது. இந்தப்பாடலுக்கு இந்த நியாயம் கூட போதாதுதான். முன்பே சொன்னதுபோல் இசைஞானி இளையராஜாவின் சரித்திரம் இருக்கும்வரை இந்தப்பாடல் குறிப்பிடப்படும். இந்தப்பாடல் குறிப்பிடப்படும்வரை உமா ரமணன் அவர்களில் இந்தக் குரலும் போற்றப்படும்!

பாடலை நீங்களும் கேளுங்கள்
உமா ரமணன் அவர்கள் பாடுவதே ஒரு தியானம் செய்வது போலத்தான் இருக்கும். சின்ன தலையசைப்பு கூட இருக்காது. நின்ற இடத்திலே நின்று கடவுளிடம் ஏதோ பிராத்தனை செய்வது போலத்தான் இருக்கும். ஆனால் இசை மட்டும் வெள்ளமாய் மடைதிறந்து வரும். வயது அறுபதுகளில் இருந்தாலும் அதே குரல் வளம் ! 2014-ல் கோலாலம்பூரில் ஒரு இசைநிகழ்ச்சியில் இதே பாடலை அவர் பாடியது! இந்தப் பாடல் உருவான விதம்பற்றி இளையராஜாவின் அனுபவத்தோடு நீங்களும் பாருங்கள் (8.20 - 20.00 நிமிடங்கள்)
Monday, 24 September 2018

"வைகைப்புயல்" வடிவேலு
"என் தங்கை கல்யாணி" படம். 1988-ல் டி.ராஜேந்தரின் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு... Etc.. இப்படி அவரின் பலமுகத் திறமையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த படம். அந்த படத்தில் ஒரு சிறுவன் தன் வீட்டு எதிரே ஒருவர் சைக்கிளை நிறுத்த அந்த சைக்கிளில் இருந்து பெல் திருடும் காட்சி வரும். கொஞ்ச நேரத்தில் அந்த ஆள் திரும்ப வந்து கத்தி ஊரைக்கூட்டி கொஞ்ச நேரத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு போய்விடுவார். இப்போது தேடிப்பிடித்து அந்தக் காட்சியை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க்கிறீர்களா? இருக்கிறது! ஏனென்றால் அப்போது அந்தக் காட்சியில் அந்த சைக்கிளை ஒட்டியவருக்கும் அதைப் பார்த்த மக்களுக்கும் தெரிந்திருக்கவில்லை இன்னும் சில வருடங்களில் அந்தப் புயல்தான் தமிழ்நாட்டை மையம் கொள்ளப் போகிறது என்று! ஆம்.. அந்தப் புயல்தான் "வைகைப்புயல்" வடிவேலு!

1960-ல் மதுரை மாவட்டம் ஐராவதநல்லூரில் சாதாரண கூலித் தொழிலாளி குடும்பத்தில் பிறந்து படிப்பு வாசனை இல்லாமல் புகைப்படங்களுக்கு பிரேம் பண்ணும் கடையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார் ஆரம்ப காலத்தில். நடிப்பு ஆர்வத்தில் அப்போதே உள்ளூர் மேடை நாடகங்களில் நகைச்சுவை வேடங்களை ஏற்று நடிக்க, நண்பர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் உற்சாகம் கொடுக்க மனைவி குழந்தைகளை விட்டு ஒரு நல்ல நாள் பார்த்து திறமையோடும் பை நிறைய கனவுகளோடும் கோடம்ப்பாகத்துக்கு பஸ் ஏறியிருக்கிறார். கோடம்பாக்கத்தின் மந்திரக்கதவு அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் திறந்துவிடுவது இல்லை. இவரும் முட்டி மோதி கடைசியில் கிடைத்த ஒரு சின்ன வாய்ப்புதான் நான் முதலில் சொன்ன "என் தங்கை கல்யாணி" படத்தில் ஒரு காட்சியில் வந்தது. 

அதன்பிறகு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் தோல்வியோடும் விரக்தியோடும் சொந்த ஊருக்கு போய் பழைய தொழிலை பார்த்து வந்ததாய் வடிவேலுவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். திறமையான குழந்தைகளை கலைத்தாய் அவ்வளவு சீக்கிரம் கைவிட்டுவிட மாட்டார் என்பதற்கிணங்க ராஜ்கிரண் மூலம் மீண்டும் தூது அனுப்புகிறார் கலைத்தாய் 1990-ல். மதுரை பக்கம் ஷூட்டிங் போன ராஜ்கிரணை சந்தித்து அங்கேயே நடித்து காண்பித்து அவரை சமாதானப்படுத்தி என் ராசாவின் மனசிலே படத்தில் ஒரு கேரக்டர் வாங்கி விடுகிறார் வடிவேலு. அதில் ஏற்கனவே கவுண்டமணி மற்றும் செந்தில் என்ற இரு ஜாம்பவான்கள் உண்டு. ஆனால் அவர்களையும் மீறி அறிமுக வடிவேலு கவனம் ஈர்த்தார். கவுண்டமணியிடம் வந்து "அண்ணே என் பொண்டாட்டி செத்து போய்ட்டாண்ணே' என்று சொல்லும் காமெடியும் பட்டாபட்டியோடு வெளியே வரும் கவுண்டமணியை பார்த்து சிரித்துவிட்டு "சிரிக்கலண்ணே.. கொட்டாவி விட்டேன்' என்று சொல்லும் மாடுலேஷன் எல்லாம் எவர்கிரீன்.

என் ராசாவின் மனசிலே படம் 1991 தமிழ் வருடப்பிறப்பிற்கு வந்தது. ஆனால் அதன்பிறகும் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கவில்லை. ஏனென்றால் அப்போது கவுண்டமணி-செந்தில் காம்போவின் பொற்காலம் அது. அவர்களை மீறி யாரும் அடுத்த காமெடியனை யோசிக்கவில்லை. ஆனாலும் வடிவேலு இந்தமுறை சோர்ந்துவிடாமல் அங்கேயே ராஜ்கிரண் அலுவலகத்திலே கிடைத்த வேலைகளை செய்துகொண்டு வாய்ப்புக்காக அலைந்திருக்கிறார். 1992-ம் வருடம் அவருக்கு ஒரு முக்கியமான வருடம். அவர் நடித்து ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் சின்னக்கவுண்டர் படமும் சிங்காரவேலன் படமும் ஒருவகையில் கவனம் ஈர்த்தது என்றால் தேவர் மகன் படம் காமெடியையும் தாண்டி வடிவேலுவின் குணச்சித்திர நடிப்பை ரசிக்க வைத்தது. அதிலும் கை வெட்டப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்பொழுது பார்க்கவரும் கமலிடம் "ஒத்தக் கையால காரு கூட ஓட்டிருவே அய்யா.. என்ன எழவு திங்கிற கைலே கழுவனும்..கழுவுற கைலே திங்கணும்' என்று தன் இயலாமையை சொல்லும்போது கமலுடன் சேர்ந்து பார்க்கிற ரசிகனுக்கும் கண்ணீர் வர வைக்கின்ற காட்சி அது. 

இதற்கு பிறகு வாய்ப்புக்காக அவர் காத்திருக்கவில்லை. அவருக்காக வாய்ப்புகள் காத்திருக்க ஆரம்பித்தன. ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போல கவுண்டமணி-செந்தில் ஆதிக்கத்தைத் தாண்டி அவரால் தனி காமெடி டிராக்கில் அவரை நிரூபிக்க இயலவில்லை. அதற்கு தீர்வாகத்தான் 1993 இறுதியில் "கிழக்கு சீமையிலே' படம் வந்தது. வடிவேலுவின் டைமிங் சென்ஸுக்கும் பாடி லேங்குவேஜ்க்கும் சரியான தீனி போட்ட படம் அது. அதுபோக காதலுக்கு துணையாக குணச்சித்திரத்திலும் வெளுத்து வாங்கியிருப்பார். 1994-ல் வந்த ராஜகுமாரன், கருத்தம்மா போன்ற படங்கள் இவரை இன்னும் உயர்த்தியது என்றால் காதலன் படம் உச்சத்தில் கொண்டுபோய் வைத்தது. பேட்டராப் பாடலில் நடனத்திலும் என்னால் இரசிக்கவைக்க முடியும் என்று காட்டினார்.

1995-ல் வந்த எல்லாமே என் ராசாதான் படத்தில் "எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டு பாடும்" என்று ஒரு பாடகனாகவும் தன்னை அடையாளப்படுத்தினார். வருடத்திற்கு 365 நாட்கள் போதாமல் நடித்துக்கொண்டிருந்தாலும் 1996-ல் வந்த "பாஞ்சாலங்குறிச்சி' படம் வடிவேலுவின் எவர்க்ரீன் க்ளாஸிக் காமெடியால் மக்களைக் கவர்ந்தது. அதுவும் சுருண்டுகொள்ளும் மூங்கில் பாயை விரிக்க அவர் படும் பாட்டை இன்று பார்த்தாலும் சிரிப்பு வரும். பிறகு 1997-ல் வந்த "பாரதிக்கண்ணம்மா" படம் வடிவேலுவின் காமெடியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது. பார்த்திபன்-வடிவேலு காமெடிக்கு ஒரு புதிய பாதையை வகுத்தது. அதே ஆண்டு வந்த பொற்காலம் படம் காமெடியையும் தாண்டி மீண்டும் அவருக்குள் உள்ள அற்புத நடிகனை அடையாளங் காட்டியது.

1998-ம் வருடம் டஜன் கணக்கில் படங்கள் நடித்தாலும் "கண்ணாத்தாள்" படத்தில் வந்த சு.ப -வை யாராலும் மறக்கமுடியாது. கிராமங்களில் நடைமுறையில் அன்றாடம் பார்க்கும் உதார் பார்ட்டிகளை நம் கண்முன்னே நிறுத்தியிருப்பார். அதிலும் விஷம் கலந்த சரக்கை மிரட்டி குடித்துவிட்டு "என்னடா தொண்டை கம்முது?" என்கிற மாடுலேஷன் வேறு யாராலும் முடியாதது. ஆடு திருடி விட்டு பஞ்சாயத்தில் அவர் செய்யும் அலப்பறை அல்ட்டிமேட் ரகம். 1999-ம் வருடமும் மாதக் கணக்கைவிட அதிக படங்களில் நடித்தாலும் நேசம்புதுசு படத்தில் வரும் "என்ன கைய புடிச்சு இழுத்தியாடா?' காமெடியும் பாட்டாளி படத்தில் வடிவுக்கரசியாக அவர் செய்யும் அலப்பறைகளும் இன்றும் ரசிக்க வைக்கும். பிறகு 2000-ம் வருடத்தில் வந்த வெற்றிக்கொடிகட்டு படத்தை பற்றி சொல்லவே வேண்டாம். அதே வருடத்தில் வந்த மனுநீதி படத்தின் "செவள.. தாவுடா தாவு' காமெடி நினைத்தாலும் சிரிப்பு வரும் ரகம். அதே வருடத்தில் வந்த "மாயி" படம் வடிவேலுவின் அளவில்லாத அலப்பறைகளை கண்முன் நிறுத்தியது.

2001-ம் வருடம் வடிவேலுக்கு மட்டும் அல்ல காமெடி ரசிகர்களுக்கும் பொற்காலம்தான். "பிரெண்ட்ஸ்" படத்தில் நேசமணியாக பட்டையைக் கிளப்பியவர் "என் புருஷன் குழந்தை மாதிரி' படத்தில் 'காதை தொட்டுட்டேனே' என்ற லூசிடம் மாட்டி சின்னாபின்னமானவர் "மனதை திருடிவிட்டாள்" படத்தில் ஸ்டீவ் வாக்காக வந்து "ஒய் பிளட்? சேம் பிளட்.. " என்று ரசிக்கவைத்தார். அடுத்த "தவசி" படத்திலே ஒசாமா பின் லேடன் அட்ரஸ் கேக்கும் பைத்தியத்திடம் மாட்டி சிக்கிச் சிதறினார். பிறகு 2003-ம் வருடம் வசீகரா படத்தில் கட்டப்பொம்முவாக வசீகரித்தவர் வின்னர் படத்தில் கைப்புள்ளையாக வந்து சிரிக்க தெரியாதவர்களையும் சிரிக்க வைத்திருப்பார். இதில் எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது படம் முழுவதும் சிரித்துக் கொண்டிருப்பதுதான் நமது வேலை என்று ஆக்கியிருப்பார். பிறகு "கிரி" வீரபாகு, "ஏய்" பழனி, "எங்கள் அண்ணா" மயில்சாமி, "சச்சின்" அய்யாசாமி, இங்கிலீஸ்காரன் "தீப்பொறி திருமுகம், "தலைநகரம்" நாய் சேகர், என நமக்கு ஓய்வே வழங்காமல் சிரிக்க வைத்தார்.

2006-ல் வந்த "இம்சை அரசன் 23-ம் புலிகேசி" வடிவேலு கேரியருக்கு மட்டும் அல்ல தமிழ் சினிமாவிற்கே ஒரு முக்கியமான படம். புலிகேசியாகவும், உக்கிரபுத்திரனாகவும் வடிவேலு கலக்கிய படம். இப்போது கூட சேனல் மாற்றுகையில் இதன் காட்சிகளை எந்த சேனலில் போட்டாலும் ஒரு நிமிடமாவது பார்த்துவிட்டுத்தான் அடுத்த சேனல் மாற்ற மனது வரும். இதில் இப்படியென்றால் அதே வருடம் வந்த "எம்டன் மகன்" படமும் ஒரு முக்கியமான படம். அக்காவை கட்டி மாமனிடம் மாட்டி முழிப்பவர் ஒரு தாய்மாமனாக அக்கா பையனிடம் ஆதரவாக இருக்கும் பாசப்பிணைப்பை கண்முன்னே காண்பிப்பார். அடுத்த "ஜில்லுன்னு ஒரு காதல்" படத்திலே வெள்ளைச்சாமியாக வந்து கிராமத்து வெத்துவேட்டை கண்முன் நிறுத்துவார். இவர் இப்படித்தான், எதையும் முன்முடிவோடு அணுக விடாத நடிப்புதான் இவர் வெற்றி. 

"போக்கிரி" சங்கி மங்கி, "கருப்பசாமி குத்தகைக்காரர்" படித்துறை பாண்டி, தொட்டால் பூமலரும்" கபாலிகான், "ஆர்யா" ஸ்னேக் பாபு, "மருதமலை" ஏட்டு ஏகாம்பரம், "ஆதவன்' பானர்ஜி, "கச்சேரி ஆரம்பம்" தீபாவளி, "சுறா" அம்பர்லா, "நகரம்" ஸ்டைல் பாண்டி, "காவலன்" அமாவாசை வரை இப்படி எண்ணற்ற தன் அவதாரங்களால் மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டவர் 2011 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்துடனான தனது சொந்தப் பிரச்சனைக்காக தவறான வழிகாட்டுதலில் தவறான முடிவெடுத்தார். பகுதி நேரமாக பிரச்சாரம் செய்ய வந்தவர் கூடிய கூட்டத்தைப் பார்த்து முழு நேரமாக பிரச்சாரத்தில் இறங்கினார். ஆனால் அவரது கணிப்பையும் மீறி அதிமுக - விஜயகாந்த் கூட்டணி வெற்றிபெற்றது. அதன்பிறகு அரசியல் சினிமா இரண்டிலும் இருந்து அறிவிக்கப்படாத ஓய்வில் இருந்தார். பிறகு 2014-ல் "தெனாலிராமன்" படத்தின் மூலம் கதாநாயகனாக ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பிறகு 2015-ல் "எலி" படத்தின் மூலம் வந்தார். ஆனால் அதுவும் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. கடைசியாக "கத்திச் சண்டை" மற்றும் "சிவலிங்கா" படங்களில் பழைய பாணியில் காமெடி ரோலில் தலை காட்டினார். நகைச்சுவையில் தன்னைத் தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைப்பது என்ற புதிய உத்தியைக் கையாண்டு மக்களை சிரிக்க வைத்தவர். எந்த நகைச்சுவை சானலை திருப்பினாலும் அதில் வடிவேலு காமெடி ஓடிக்கொண்டிருக்கும் என்பதே இவர் சாதனையை சொல்லும். காலங்கள் மாறி இன்று சோசியல் மீடியாவின் தாக்கத்தில் மீம்ஸ் என்ற வசனமில்லா நகைச்சுவை என்ற காலத்தில் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் தேவைப்படுவது வடிவேலுவின் ரியாக்சன்கள் என்பதிலே அவரது முக்கியத்துவம் நமக்கு புரிபடும். அரசியல்,சினிமா, பொது இப்படி எதைக் கலாய்க்க வேண்டுமென்றாலும் வடிவேலுவின் படங்கள்தான் அதற்கு அகராதி. 

ஐந்து முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதினை வாங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பது பாடல்களைப் பாடியிருக்கிறார். இன்று நாம் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போதே நமது உணர்வுகளைச் சொல்ல "வட போச்சே" இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டு இருக்கு?' "சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு" போன்ற அவரது ஒன்லைனர் காமெடிகள்தான் நமக்குத் தேவைப்படுகிறது! இதெல்லாம் சாகாவரம் பெற்ற வசனங்கள். வடிவேலுவுக்கு பிறகும் அவரது பெயரைச் சொல்லிக்கொண்டிருக்க போவது இதுபோன்ற வசனங்கள்தான்! ஏதாவது செய்து மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று பெட்டி கட்டி மதுரையில் இருந்து கோடம்பாக்கம் வந்தவரை மக்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றனர். நான் என்ன செய்தாலும் மக்கள் சிரிக்க வேண்டும் அவர் நினைத்த போது அவரை திரும்ப மதுரைக்கே அனுப்பிவிட்டார்கள் மக்கள். ஏதாவது செய்து சிரிக்க வைக்க வேண்டும் என்ற அதே பழைய வடிவேலுவாக அவர் திரும்ப வரவேண்டும். நாங்கள் காத்திருக்கிறோம்! 
 

Wednesday, 19 September 2018

நாட்டார் தெய்வங்கள்! (2) - பதினெட்டாம்படிக் கருப்பர்!

 

காலம் அறியாத அந்தக் காலத்தில்(புரிதலுக்காக கிபி ஆறாம் நூற்றாண்டு எனக்கொள்க) அடர்ந்த கானகத்தின் இரவு அது. மேற்கு தொடர்ச்சி மலையின் மலையாள நாட்டில் இருந்து நீண்ட அந்த நீண்ட கணவாயைத் தாண்டி சமவெளியை வந்தடைந்தன அந்த மூன்று புரவிகளும். தூரத்தில் ஒரு சிற்றோடை ஓடிய சலசலப்பும் காட்டு மிருககங்களின் கர்ஜனையையும் தவிர அங்கே வேறு சத்தம் இல்லை. நிலா மட்டும் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்லிச் சிரித்ததுக் கொண்டிருந்தது. நடுவில் உள்ள நல்ல உயரமான உயர்சாதிப் புரவியில் உள்ளவன்தான் முதலில் குதித்தான். குதித்ததும் புரவியின் பிடரியைத் தடவி அதன் காதில் ஏதோ சொன்னான். ஓய்வு கிடைத்த மகிழ்ச்சியில் குதிரை சிற்றோடையைப் பார்த்து குதித்து ஓடி நீர் அருந்திவிட்டு நிதானமாகப் புல் மேய ஆரம்பித்தது.

அதற்குள் முன் பின் வந்தவர்களும் குதித்து இறங்கி நடுவில் வந்தவனின் கட்டளைக்காக காத்து நின்றார்கள். முதலில் இறங்கியவன் யார் இவர்கள் இருவரும் யார் என்று இப்போது பார்த்துவிடுவோம். முதலில் இறங்கியவன் வளம் மிக்க வற்றாத பொருநை நதி பாயும் மலையாள நாட்டில் வஞ்சி நகரைத் தலைநகராய் கொண்டு(இன்றைய திருவாங்கூர்) ஆட்சி புரியும் மன்னன் ஏனாதி திருக்குட்டுவன். கூட வந்த இருவரும் அவரின் மெய்க்காப்பாளர்கள் பாஸ்கர மற்றும் ரவிவர்மா. ஆனால் இப்போது அவன் மன்னனாக வரவில்லை. ஒரு யாத்ரீகனாக பாண்டிய நாட்டு ராஜ்யத்துக்கு உட்பட்ட துவாரபதி நாட்டில் அடர்ந்த காடுகளை அரணாகக் கொண்ட இருக்கும் திருமாலிருஞ்சோலை(இப்போதைய அழகர்மலை) நோக்கி போய்க்கொண்டிருக்கிறான். 

ஒரு திங்களுக்கு முன்பு வரை திருக்குட்டுவன் நினைத்திருக்கவில்லை, இப்படி அடையாளம் மறைத்து மனிதத் தடம் இல்லா கானகம் ஊடறுத்து இப்படி ரதம் கூட இல்லாமல் நீண்ட புரவிப்பயணம் மேற்கொள்ளுவோம் என்று.அன்று அரசவையில் கொழு மண்டபத்தில் வீற்றிருக்கும்பொழுது, வஞ்சியில் இருந்து தென்னாடு திருமாலிருஞ்சோலை நோக்கி ஆன்மீகப் பயணம் போன அடியார்கள் பிரசாதத்துடன் காண விரும்புவதாக வந்து காவலர்கள் சொன்னார்கள். "உள்ளே வர சொல்" என்று கூறிவிட்டு சிம்மாசனம் விட்டு இறங்கி நின்றான் வரவேற்க. உள்ளே வந்த அடியார்கள் ஐவரும் மன்னனை ஆசிர்வதித்து திருமாலிருஞ்சோலை பெருமாளின் கருந்துளசியும் நூபுரகங்கை தீர்த்தமும் கொடுத்தார்கள். பயபக்தியுடன் வாங்கியவன் பின் அவர்களை அமரச்செய்து பயணம் பற்றியும் கோவிலைப் பற்றியும் விசாரிக்க துவங்கினான்.

அடியார்கள் பெருமாளின் அழகையும் அதனாலேயே சுந்தரராஜ பெருமாள் என்று வழங்குவதையும். அதுபோக "அபரஞ்சி" என்ற தேவலோக தங்கத்தால்செய்யப்பட்ட உற்சவரின் அழகையும் வர்ணிக்க வர்ணிக்க திருக்குட்டுவனுக்கும் அந்தப் பெருமாளை உடனே தரிசிக்க வேண்டும் என்ற அடக்கமுடியாத ஆவல் எழுந்தது. ஆனால் அப்போது மதுரையை தலைநகராக கொண்டு ஆண்டுவந்த பராங்குசப் பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது திருமாலிருஞ்சோலை. அனுமதி பெற்று பரிவாரங்களுடன் போக அப்போதிருந்த எல்லைப்பூசல் இடந்தரவில்லை. படையெடுத்து வென்று போவது அவ்வளவு சாதாரணம் அல்ல. ஆகவே உடனே ஒரு யாத்ரீகனாக போக முடிவு செய்தான். கூட இரண்டு மெய்க்காப்பாளர்களையும் அழைத்துக்கொண்டு இரவு பகல் பாராது பயணம் செய்து இதோ அதம்பநாடு(தற்போதைய திண்டுக்கல் பகுதி) வந்துவிட்டான். 

காடுகளையும் மேற்கே மலைகளையும் அரனாகக் கொண்ட அதம்பநாட்டு சமவெளியில் இரவைக் கழித்துவிட்டு விடிவதற்கு சில நாழிகை  இருக்கும் போதே திருமாலிஞ்சோலை நோக்கி புரவியைத் தட்டிவிட்டான். புரவியின் வேகத்தில் சூரியன் வந்து ஒரு நாழிகைக்குள்ளே கோவிலை வந்தடைந்தான். நேரே புரவியை நூபுரகங்கை நோக்கி விரட்டி நீராடிவிட்டு சாதாரண பக்தன் போல உள்ளே போனான். போனவன் சுந்தர்ராஜப் பெருமாளின் அழகில் மயங்கி அபரஞ்சி தங்கத்தில் ஜொலிக்கும் உற்சவரின் அழகில் தன்னை மறந்து கைகூப்பியபடியே பசி மறந்து உலகம் மறந்து தன்னை மறந்து உச்சிப் பொழுது நடை சாற்றும்வரை நின்றான். பிறகு வெளியில் வந்தவன் மெய்க்காப்பாளர்களைக் கூட கண்டுகொள்ளாமல் புரவியை விரட்டியவன் வஞ்சி நகர் வந்து கோட்டை வாயிலை அடைந்ததும்தான் சுயநினைவுக்கு வந்தான்.

அரண்மனையை அடைந்தவன் நிலைகொள்ளாமல் தவித்தான். பெருமாளின் அழகும் சக்தியும் அவனை தூங்கவிடாமல் செய்தது. எப்படியாவது பெருமாளை அதன் சக்தியோடு தனது வஞ்சியில் ஆவாகனம் செய்யத் துடித்தான். உடனே மந்திர தந்திரங்களிலும் வேதங்களிலும் தேர்ந்த பதினெட்டுப் பனிக்கர்களை வரவழைத்தான். அனைவரையும் அடியார்கள் போல வேடமிட்டு திருமாலிருஞ்சோலை சென்று சுந்தராஜப்பெருமானை அதன் சக்தியோடு கவர்ந்து வஞ்சியில் வந்து ஆவாகனம் செய்யக் கட்டளையிட்டான். உடனே பனிக்கர்களும் நாள் நட்ச்சத்திர பார்த்து காவலுக்கு மலையாளக் கருப்பனை பணித்து ஹோரை பார்த்து வஞ்சியில் இருந்து திருமாலிஞ்சோலை நோக்கிக் கிளம்பினர். 

அடியார்கள் போல வந்ததால் அதிக சிரமம் இல்லாமல் ஊர்களைக் கடந்து  ஒரு மாலைப்பொழுதில் திருமாலிஞ்சோலை வந்தடைந்தார்கள். ஊருக்குள் சற்று ஓய்வெடுத்துவிட்டு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நூபுர கங்கையில் நீராடி பெருமாளின் சன்னதி சென்றனர். உள்ளே போனதுமே பெருமாளின் அழகில் சொக்கி நின்றான் காவலுக்கு வந்த கருப்பு. தன்னை மறந்தான், தன் வேலை மறந்தான் கண்களில் கண்ணீர் மல்க கூப்பிய கரங்களுடன் பெருமாளை நோக்கி நின்றான். பதினெட்டு பனிக்கர்களும் வந்தவேலை மறக்காமல் கோவிலை மந்திரக்கட்டுக்குள் கொண்டுவந்து முதலில் அழகரின் சத்தியை கலசத்தில் ஆவாகனம் செய்ய ஆரம்பித்தனர். இதைப்பார்த்த பட்டர் ஒருவர் பதறி அடித்து ஊருக்குள் ஓடி ஊர்மக்களை திரட்டிவந்தார். ஆனால் அவர்களால் மாத்திரக்கட்டு இருப்பதால் சன்னதி வாயில் தாண்டி வரமுடியவில்லை. அழகரே, பெருமாளே என்ன இது சோதனை என்று கைகூப்பி கண்ணீர் விட்டுக் கதறினர் மக்கள்.

தன்னை மறந்து கைகூப்பி நின்ற கருப்புக்கு பெருமாள் உத்தரவிட திடீரென்று ஆவேசம் வந்தவராக பதினெட்டு பனிக்கர்களையும் ஒருவர் பின் ஒருவராக வெட்டி சன்னதி வாசல் தாண்டி வீசினான் கருப்பு. அப்படியும் ஆவேசம் அடங்காமல் பதினெட்டு பேர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி பதினெட்டுப் படிகளாகச் செய்து பதினெட்டாம் படியின்மீது ஏறி நின்றான் கருப்பு. பெருமாளின் உத்தரவின் பேரில் அன்றில் இருந்து பதினெட்டு படி மீது ஏறிநின்று பதினெட்டாம்படிக் கருப்பாக இன்றும் தன்னை நம்பி வந்தவர்களைக் காவல் காத்து வருகிறான் அந்த மலையாளக் கருப்பு! இதுதான் பதினெட்டாம்படிக் கருப்பு தமிழகத்தை அடைந்த கதை. அன்று முதல் அழகருக்கு படைக்கப்படும் அர்த்தஜாம பிரசாதங்கள்தான் கருப்புக்கும் படைக்கப்படும். கோவில் பாதுகாப்பை கருப்பு ஏற்ற நாளில் இருந்து அழகரின் நகைகளுக்கும் 
உடமைகளுக்கும் கருப்புதான் காவல். சித்திர திருவிழாவிற்கு அழகர் மதுரைக்கு புறப்படும்போதும், திரும்பி வந்த பிறகும் நகைகளின் பட்டியல் கருப்பு முன்பு படித்துக்காட்டப்பட்ட பிறகே பெட்டியில் இருந்து எடுக்கவும் பிறகு பூட்டவும்படும். இன்றுவரை இதுதான் நடைமுறை. கருப்புக்கு உருவம் இல்லை. பதினெட்டுப் படிகளும் அருவாளும்தான் அடையாளம். வரும் பக்தர்கள் பதினெட்டுப் படி மீது இருக்கும் கதவிற்குதான் சந்தனம், ஜவ்வாது பூசி, ரோஜாப்பூ சம்பங்கி மாலை அணிவித்து வழிபடுவார்கள். 

இவன் சன்னதியில் தீர்த்துக்கொண்ட பஞ்சாயத்துக்கள் ஏராளம். ஏனென்றால் இங்கு பொய் சொல்ல முடியாது. மீறி சொன்னால் கருப்பு தண்டித்துவிடும் என்ற பயம் இன்றளவும் மக்களிடம் உண்டு. ஒவ்வொரு ஆடிப் பவுர்ணமி போதும் மட்டுமே கருப்பின் நெடுங்கதவு திறக்கப்படும். ஆடித்தேருக்கு கள்ளழகரைக் காண ஒரு கூட்டம் போக கருப்புக்கு கிடாய் வெட்டி படையல் போடவும் இன்றும் மக்கள் வண்டி கட்டிப் போகும் வழக்கம் உள்ளது. அதில் நமது பாலைய நாடும் அடக்கம். ஆனால் ஆதியில் கொற்றவை வழிபாடு வழக்கத்தில் இருந்த சோழ நாட்டில் இருந்து குடிபெயர்ந்து பிற்பாடு பாண்டியர் வசம் வந்த பாலைய நாட்டில் குடியேறிய நமக்கும், நகரத்தார்களுக்கும் கருப்பனை எப்போது ஏற்றுக்கொண்டோம் என்பது தனி ஆராய்ச்சிக்கு உட்பட்டது. ஆனால் நம் ஊர்களில் உள்ள எல்லாக் கருப்பும் இந்த பதினெட்டாம்படி கருப்புக்கு அடங்கியதுதான். இங்கு இருந்து மண் எடுத்துதான் நம் வசதிக்கேற்ப பெயரிட்டு நம் குல முன்னோர்களையும் அவனுள் அடக்கி வணங்கி வருகிறோம். ஆனாலும் ஒருமுறையேனும் பதினெட்டாம்படி கருப்பரை தரிசிக்காமல் நம் பகுதி மக்களுக்கு வாழ்வு முழுமையடைவதில்லை. 

"எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

அக்கினியில் பிறந்தவராம் அரனாரியின் மைந்தனவன்
எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்
சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்
எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி"

பின்குறிப்பு: கருப்பு அழகர் கோவிலில் ஐக்கியமான காலம் குறித்து தெளிவான ஆதாரங்கள் இல்லை. மேலும் அப்போதைய மன்னர்கள் குறித்தும் தகவல்கள் இல்லை. ஏன்  அழகர் கோவில் எந்தக் காலத்தில் யாரால் கட்டப்பட்டது என்ற வரலாறு கூட இல்லை. பிறகு பிற்காலப் பாண்டியர்களாலும், நாயக்கர்களாலும் பல திருப்பணிகள் நடந்ததற்கு மட்டுமே ஆதாரங்கள் உள்ளது. ஆகவே இந்தக் கதை நடந்த காலம் மற்றும் பெயர்கள் கற்பனையாக நானே உருவாக்கிக்கொண்டது.

எவ்வாறு செல்வது? பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 843 LSS, 844 EXP, 844 LSS எண் நகரப் பேருந்துகள் உள்ளன. பயண நேரம் 0.40 நிமிஷம். ஆட்டோ மற்றும் டாக்சி வசதி உண்டு. அருகிலுள்ள இரயில் நிலையம் மதுரை ஜங்சன். அருகிலுள்ள விமானநிலையம் மதுரை. விமான நிலையம் .

சிவகங்கை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து செல்பவர்கள் நந்தம் திண்டுக்கல் சாலை போய் நத்தத்தில் பேருந்து எடுக்கலாம். அல்லது மதுரைக்கு முன்பே மேலூரில் இறங்கி அழகர் கோவிலுக்கு பேருந்து வசதி உண்டு. 

Monday, 17 September 2018

நாட்டார் தெய்வங்கள்(1) - பாண்டி முனீஸ்வரர்!
வானம் இருட்டிக்கொண்டு வந்தது. சூரியன் இன்றைக்கு இது போதுமென அவசர அவசரமாக தனது கரங்களை அடர்ந்த காடுகளுக்கு உள்ளே இழுத்துக்கொள்ள ஆரம்பித்த அந்தி நேரம். சூரியன் மூஞ்சியையே பார்ப்பதில்லை என்ற நிலாவின் சபதத்தின்படி அன்றும் வர மாட்டேன் என சூரியன் மறைய காத்துக்கொண்டிருந்தது நிலா. பறவைகள் மெதுவாகக் கூடு திரும்பி அன்றைய கதைகளை தன் துணையிடம் சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தது.

காட்டை ஊடறுத்து வந்த ஒற்றையடிப்பாதையில் கணவன் பெரியசாமியை பிடித்தபடி தள்ளாடி வந்துகொண்டிருந்தாள் வள்ளியம்மாள் அதற்கு மேல் முடியாமல் அப்படியே ஒரு பாறையை அணைவாகக்  கொண்டு அமர்ந்துவிட்டாள். அப்படி வள்ளியம்மாள் சோர்ந்து போய் அமர்ந்த இடம் காடுகளை அரணாகக்  கொண்ட நல்ல சமவெளி இடம். துணி மூட்டையை சுமந்து வந்த பெரியசாமி பசி மயக்கத்தில் சோர்ந்து போய்  அமர்ந்த மனைவியை இயலாமையுடன் பார்த்தான். கைகளை கண்களுக்கு அண்டக்கொடுத்து நாலாபக்கமும் பார்த்தான். சுற்றிவர ஊர்கள் இருக்கும் சுவடே தெரியவில்லை. 

வள்ளியம்மாளிடம் சென்று அங்கேயே ஓய்வெடுக்கும்படி கூறி விட்டு எப்படியாவது காடுதாண்டி இருக்கும் ஊரைக் கண்டு பசியாற ஏதாவது கொண்டு வருகிறேன் என்று கூறிச் சென்றான். வள்ளியம்மாளும் வயிற்றில் பசியோடும் கண்களில் மயக்கத்தோடும் கொண்டுவந்த துணி மூட்டையில் சாய்ந்தாள். வசதியாக இல்லாவிட்டாலும் வயித்துக்கு காயாத வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள்தான் வள்ளியம்மாளும்-பெரியசாமியும். கரூர் அருகே இருக்கும் சின்னக் குடியானவக்  கிராமம் நெரூர்தான் இவர்கள் ஊர். வஞ்சகமில்லாத காவிரித்தாய் பாய்ந்து இவர்கள் வயிற்றையும் நனைத்து வந்தது. 

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரியும் பொய்த்து இவர்கள் அடுக்களை பூஞ்சை பூத்தது. ஒருவேளைக் கஞ்சிக்கே வழியில்லாமல்தான் மதுரையை இலக்காக வைத்து தெற்கு நோக்கி புலம் பெயர்ந்தார்கள் வள்ளியம்மாளும் பெரியசாமியும். கூட கூட்டி வர ஆடு மாடுகள் கூட இல்லை. ஆடு கோழிகளை அடித்து சாப்பிட்டு ஆறு மாதம் ஓட்டியாகி விட்டது. மாடுகளை விற்று சாப்பிட்டு நான்கு மாதம் ஓட்டியாகிவிட்டது. இனி விற்பதற்கும் அடிப்பதற்கும் ஒன்றும் இல்லையென்ற நிலையில்தான் இந்த புலம்பெயர்வு.

இதையெல்லாம் நினைத்தபடி மயக்கத்தில் உறங்கிப்போனாள் வள்ளியம்மாள். வள்ளியம்மாவைச் சுற்றி பூமி திடீரென பிளந்து கண்கள் சிவந்து சடை திரிந்த ஜடா முடியுடன் வந்தவர் என் தவக்காலம் முடிந்தது. இங்கேயே பூமிக்குள் கல்லாகச் சமைகிறேன். என்னை வெளியில் எடுத்து இங்கேயே பிரதிஷ்டை செய். காவலாக நான் இருப்பேன் என்று கூறி மறைகிறார். திடுக்கிட்ட வள்ளியம்மை எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் வந்துபோன அடையாளம் இல்லை. பறவைகள் மட்டும் இன்னும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தது. லேசான பயம் எட்டிப்பார்த்தது வள்ளியம்மாளுக்கு. எத்தனை கள்வர்கள் வந்தாலும் ஒற்றை ஆளாய்ச் சமாளிக்கும் வல்லமை காவல் குடியில் இருந்து வந்த வள்ளியம்மாளுக்கு உண்டு. ஆனால் இந்தப் பயங்கர கனவு அவள் உயிர் வரை ஊடுருவிவிட்டது.

தூரத்தில் ஏதோ அரவம் கேட்டது. அந்தச் சோர்விலும் சுருட்டி எழுந்து சாய்ந்து கிடந்த வேல்கம்பை இறுக்கப்பிடித்தாள் வள்ளியம்மாள். அது கணவன் பெரியசாமிதான் என்றதும் வேல்கம்பையும் மனதையும் நெகிழவிட்டாள். கணவன் கொண்டுவந்த குதிரைவாலி கஞ்சியையும் சோளக்கூளையும் பச்சைமிளகாய் உதவியோடு அரக்க பறக்க சாப்பிட்டாள் வள்ளியம்மாள் எதுவும் பேசாமல். பெரியசாமி சொன்னான் "பக்கத்துலதாம்புள்ள உருக இருக்கு, இப்ப இருட்டிருச்சு இங்கயே ராப்பொழுத கழிப்போம், கருக்கல்ல ஊரப்பாத்து போய் பொழப்பு தளப்ப பார்ப்போம்' என்று கூறினான். வள்ளியம்மாவும் தனக்கு வந்த கனவை பற்றி கூறிக்கொண்டே அந்த பாறை ஓரத்தில் உறங்க ஆரம்பித்தார்கள்.

இரவு நடுநிசியைத் தாண்டி இருக்கும் வள்ளியம்மாள் திடுக்கிட்டு எழுந்தாள். மீண்டும் அதே கனவு. அதே ஜடாமுடி முனிவர் வந்து தன்னை வெளியில் எடுக்க சொன்னார். கணவனை எழுப்பிய வள்ளியம்மாள் கனவை சொன்னாள். அதை சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ளாத இருவரும் விடியும் முன்னரே காடு தாண்டி காட்டை ஒட்டி இருந்த மேலமடை கிராம மக்களிடம் விசயம்  சொல்லி ஆட்களை திரட்டிக்கொண்டு வள்ளியம்மாளுக்கு கனவு வந்த இடத்தை அடைந்தார்கள். மம்மட்டியை வாங்கி பெரியசாமி முதல் கொத்து கொத்தினான் அங்கே தூரத்தில் மீனாட்சிக்கு பூஜை மணி அடித்தது.

அதிகம் தோண்டாமலே சிலை கொஞ்சம் கொஞ்சமாக மேலே தெரிய ஆரம்பித்தது. சிலையின் ஜடாமுடியில் இருந்து மண்ணைக் கரைக்க கரைக்க பரந்த நெற்றியும், உருட்டிய விழிகளும், முறுக்கு மீசையும் தோள்களை தொட்ட சங்கிலி போன்ற முடிகளும் தவக்கோலத்தில் அமர்ந்த முனி வெளியில் வந்தார். வெளியில் எடுத்து ஆரத்தி எடுத்து அபிஷேகம் முடித்து வெண்ணிற துண்டு கட்டி அங்கேயே மண் நிரவி அவரை அங்கேயே அமர வைத்தார்கள். அவர்தான் இந்து தென்னாட்டு மக்களுக்கு குறை தீர்க்கும் பாண்டி முனி! ஆனால் அப்போது அவருடைய பெயர் ஜடாமுனீஸ்வரர்! இதுதான் பாண்டிமுஈஸ்வரர் மதுரைக்கு வந்த வரலாறு. ஆனால் அவர் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்தான் என்றும் அவரே தன் மக்களைக்காக்க பாண்டிமுனியாக அவதாரம் எடுத்து அமர்ந்திருக்கிறார் என்றும் செவிவழி வரலாறுகள் உண்டு. ஆனால் அதற்கெல்லாம் ஆதாரம் இல்லை. இப்படி ஜடா முனீஸ்வரரை அங்கே வைத்தபிறகு பாண்டியம்மாளே அங்கே பூசாரித்தனம் பார்க்க துவங்கினார். இன்றுவரை அவருடைய வம்சாவழிதான் பூசாரித்தனம் செய்கின்றனர். குறுகிய காலத்திலேயே ஜடாமுனீஸ்வரர் அந்த வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு தன அருள்வீச்சை புரியச்செய்து தன்னை சுற்றிலும் புதிய கிராமங்களை வளர செய்தார்.

கோவிலின் வளர்ச்சி ஆங்கிலேயர்களின் கண்ணை உறுத்தியது. கோவில் சட்டதிட்டங்களை கடுமை ஆக்கி அதன்கீழ் இந்த ஜடாமுனீஸ்வரர் கோவிலையும் கொண்டுவந்தனர். ஆனால் கடுமையான போராட்டங்களாலும் முனீஸ்வரரின் அருளாலும் 1930-ல் அரசு சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இன்றுவரை அந்த விலக்கு தொடர்கின்றது. ஜடா முனீஸ்வரர் பாண்டி முனீஸ்வரர் ஆன கதையும் கொஞ்சம் சுவாரஸ்யம்தான். பிற்பாடு வள்ளியம்மாளின் வம்சாவழியை பாண்டி என்பவர் பூசாரித்தனம் பார்க்க ஆரம்பித்த காலத்தில் ஜடாமுனீஸ்வரர் என்ற பெயர் காலப்போக்கில் மறைந்து பாண்டிமுனி, பாண்டிகோவில் என்று அழைக்கப்பட ஆரம்பித்தது. 

பக்தர்களின் கோரிக்கை நியாயமாக இருப்பின் உடனே நிறைவேற்றி வைப்பார். எல்லோரும் நினைப்பது போல் பக்தர்கள் வழங்கும் கிடாய் வெட்டும் காணிக்கை பாண்டி முனிக்கு அல்ல. பாண்டி முனி சுத்த சைவவிரும்பி! அவருக்கு பொங்கல், பால் பழங்கள் மட்டுமே படையல். அதுபோக பன்னீர் அபிஷேகம், வாசனைத் திரவியங்கள் பிரியர் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். பிறகு கிடாய் வெட்டுவது யாருக்கு என்கிறீர்களா? பாண்டிமுனிக்கு காவல் தெய்வம் சமயக்கருப்பு. பாண்டிமுனி நிறைவேற்றிய கோரிக்கைகளுக்காக இந்த சமயக்கருப்புக்குத்தான் கிடாய் வெட்டுகிறார்கள் பக்தர்கள். அதுபோக இந்தக் கருப்புக்கு சுருட்டு சாராயம் போன்றவையும் விருப்பத்துடன் படைக்கிறார்கள் பக்தர்கள்.

அதுபோக பாண்டிக்கு கட்டுப்பட்ட தெய்வமாக அங்கே இருப்பவர் ஆண்டி அய்யா. இவருக்கு இனிப்பு இல்லாத பொங்கல் மற்றும் மிகவும் விருப்பமான சுருட்டு வைத்து படைப்பார்கள் பக்தர்கள். அதுபோக மாம்பழ பூஜையும் இவருக்கு விருப்பமானதாம். கோவிலுக்கு சென்றவர்கள் பார்த்திருக்கலாம். சமயக் கருப்புக்கு ஒரு கையும் தலையும் இருக்காது. இதற்கு காரணம் ஒரு சுவையான கதையைச் சொல்கிறார்கள். 

ஒரு முறை அந்த வழியாக வேட்டைக்குச் சென்ற ஒரு ஆங்கிலேயன் அங்கு வந்து கேலியாக நான் இன்று எத்தனை விலங்குகளை வேட்டையாடுவேன் எனக் கேட்க சமயக் கருப்பு பேசாமல் இருந்ததாம். (சிலை என்பதினால்) .அன்று முழுதும் வேட்டையாடியும் எந்த மிருகத்தையும் வேட்டையாட முடியவில்லையாம் அவனுக்கு! அதனால் கோபத்துடன் திரும்பி வந்த அந்த ஆங்கிலேயன் அந்த சிலையின் கைகளையும் முகத்தையும் உடைத்துவிட்டுச் சென்றானாம். ஆனால் போகும் வழியிலயே அவன் கல்லாக மாறி விட்டானாம். அதனால்தான் இன்றும் சமயக் கருப்புக்கு தலையும் கைகளும் இல்லையாம். இது ஒரு செவி வழி வரலாறு!

பாண்டி அய்யாவின் ஆலயத்துக்கு சென்றால் பேய் பிசாசுகளின் தொந்தரவு மற்றும் பில்லி சூனியம் இவற்றின் கொடுமையில் இருந்து தப்பிக்கலாம் என்பது இன்றளவும் மக்களின் நம்பிக்கை. அதுபோக பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கொடுப்பார்! ஆனால் என்ன அவர் பெயரை வைக்க வேண்டும்! இல்லையென்றால் கேட்டு வாங்குவார் என்பது மக்களின் நம்பிக்கை. பல பஞ்சாயத்துகளில் முடியாத பிராதுகளும் பாண்டி முனியை சாட்சியாக வைத்து அங்கு சுமூகமாகத் தீர்த்துக்கொள்ளப்படும்.

பாண்டி கோவிலில் இருந்து  இரண்டு கிலோ தொலைவில் உள்ள கழுன்கட்டி என்ற இடத்தில் பல வேல்கள் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அந்த இடத்தை அடைந்ததும் பேய்பிசாசு பிடித்தவர்கள் துள்ளி குதிப்பார்கள். ஆகவே அந்த வழியாக செல்லும் வாகனங்களை பேய் , பூதங்களுக்கு பயந்து மரியாதை தரும் வகையில் வண்டிகளை நிறுத்தி விட்டுத்தான் செல்வார்கள். 

பாண்டி முனீஸ்வரருக்கு ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் ( ஆடி) தனி விழா நடைபெறுகின்றது. மக்கள் மாம்பழத்தை காணிக்கையாகத் தருகிறார்கள். பாண்டி அய்யாவுக்கு சர்க்கரை பொங்கல் படைகின்றார்கள். ஒரு தடுப்புத் திரை போடப்பட்டு அதற்கு அந்தப் பக்கத்தில் சமய கருப்புக்கு மிருக பலி தரப்படும். ஆண்டி அய்யாவின் படிகள் முழுவதும் மாம்பழத்தினால் அலங்கரிக்கப் படும். அவருக்கு வெண்பொங்கல் பிரசாதம் வைக்கப்படுகின்றது  

மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பாண்டி கோவில் படி ஏறாத குடுப்பங்கள் குறைவுதான். நமது மக்களின் தேடி வந்து குறை தீர்க்கும் தெய்வமும் அவர்தான்.இதுவரை போகாதவர்கள் ஒருமுறையேனும் சென்று அந்த ஜடாமுனீஸ்வரரை பார்த்து உங்கள் குறைகளை சொல்லிவிட்டு வாருங்கள்! 

எவ்வாறு செல்வது? 
மதுரைமாட்டுத்தாவணியில் இருந்து இராமேசுவரம்சிவகங்கைமானாமதுரைதூத்துக்குடிதிருநெல்வேலிஇராஜபாளையம் நோக்கி செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் புறநகர் பேருந்துகளும், பாண்டி கோயில் வாசலில் நின்று செல்லும்.

Friday, 31 August 2018

அம்மா!"நான் உங்கள் அன்புச் சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்" இந்த ஒரு வார்த்தைதான் செல்வி.ஜெயலலிதா அவர்கள் பேசி முதன்முதலாகக் கேட்டது. 1989-ம் வருடம் அது. இந்த வார்தைக்குப் பிறகு அப்போது அவர் பேசியது எதுவும் ஞாபகத்தில் இல்லை. அந்த வயதில் அது எனக்குத் தேவையும்படவில்லை. 1989-ம் வருடம் சட்டமன்றத் தேர்தலின் போது ஜானகி அணி ஜெயலலிதா அணி என்று பிரிந்து இருந்த வேளையில் ஆட்டோக்களில் மற்றும் ரிக்சாக்களில் குழாய் ஒலிபெருக்கி கட்டி நடக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் செல்வி.ஜெயலலிதாவின் பேச்சை ஒலி பரப்புவார்கள். அப்போது மனதில் பதிந்ததுதான் இந்த உங்கள் அன்புச் சகோதரி வார்த்தை. காலங்களின் ஓட்டத்தில் அவர் "அம்மா"வாகப் பரிணமித்தார். ஆனால் அந்த அன்புச் சகோதரி வார்த்தை தந்த நெருக்கமோ என்னவோ அப்போதே சேவல் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்.

இத்தனைக்கும் எங்கள் வீடு பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பம். 1984-ல் இந்திரா காந்தி இறந்த துக்கத்தை எங்கள் வீட்டு துக்கமாக அவர் படத்திற்கு மாலையிட்டு ஊதுபத்தி ஏற்றி என் அப்பா வணங்கிய பொழுது கூடவே வணங்கினேன். எனக்கு திரு.ப.சிதம்பரம் அவர்களின் சொந்த ஊர் என்பது கூடுதல் தகவல். அப்போதெல்லாம் தேர்தல்களுக்கு முன் ப.சிதம்பரம் அவர்கள் கைப்பட எழுதும் ஒரு போஸ்ட்கார்டு வீட்டுக்கு வரும். ஆனாலும் என் மனம் காங்கிரசில் லயிக்கவில்லை அப்போதே. அந்த அன்புச் சகோதரியைதான் தேடியது. 1989 சட்ட மன்றத்தில் செல்வி.ஜெயலலிதாவின்... இனி அம்மா என்றே எழுதலாம் என்று நினைக்கிறேன். அம்மாவின் முடியை இழுத்து சேலையை கிழித்து விட்டார்கள் என்று ஊரே பரபரப்பாக இருந்தது.அப்போது அதைச் செய்தவர் துரைமுருகன்தான் என்று எங்கள் ஊரில் அவர் புகைப்படத்தைப் போட்டு கண்டனப் சுவரொட்டிகள் ஓட்டினார்கள். அப்படி ஒரு ஒட்டிய சுவரொட்டியில் அவரின் புகைப்படத்திற்கு அப்போதே சாணி அள்ளி அடித்த வரலாறும் உண்டு.

பிறகு 1991-ல் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியோடு சேர்ந்தார். அப்போது திரு.ராஜீவ் காந்தி இறந்த துயரமான சம்பவத்திற்கு பிறகு தனி  அரிதிப்பெரும்பான்மையுடன் முதலமைச்சராக முதல் முறையாக ஆட்சியில் அமர்ந்தார். முதலமைச்சர் ஆனதும் முதன் முதலாக தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தப்போவதாக செய்தி வந்தது. அப்போது எனது பள்ளியில் ஆசிரியர் இதைப்பற்றி சொல்லி அந்த உரையை அவசியம் கேட்க வேண்டும் என்றும் அதைப்பற்றி மறுநாள் வகுப்பில் கட்டுரை எழுத வேண்டும்  என்று சொன்னார்கள். அப்போதெல்லாம் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருப்பதுதான் ஒரே வண்ண தொலைக்காட்சிப்பெட்டி. பள்ளியில் சொல்லியதால் வீட்டில் அனுமதி வாங்கிச் செல்ல எளிதாக இருந்தது. பஞ்சாயத்து அலுவலகமே நிரம்பி வழிந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நின்று அவர் பேசுவதைக் கேட்கக் காத்திருந்தேன்.

அப்போது அவர் பேசியது எதுவும் இப்போது ஞாபகம் இல்லை. ஆனால் முடிக்கும்போது அவர் சொன்ன "அண்ணா நாமம் வாழ்க! எம்ஜிஆர் நாமம் வாழ்க! " என்ற வார்த்தை இப்போதும் நினைவிருக்கிறது. திரு.கருணாநிதியும் பத்திரிக்கைகளும் ஊதிப் பெரிதாக்கி கட்டவிழ்த்துவிட்ட பொய் பிரச்சாரங்களுக்கு இடையேயும் இந்த காலகட்டத்தில் அவர் சாதித்தது ஏராளம். முக்கியமாக சொல்ல வேண்டியது தொட்டில்  குழந்தைத்  திட்டம். பெண் குழந்தைகள் என்றால் வெறுப்பையும் கருவிலே கலைப்பதையும் அதையும் மீறிப் பிறந்தால் குப்பையில் வீசும் காலம் அது நினைவில் கொள்க. அவ்வாறு வீச வேண்டாம் என்று கூறி ஆரம்பித்ததுதான் இந்த அரசாங்கமே அந்த குழந்தையைத் தத்தெடுக்கும் தொட்டில் குழந்தைத் திட்டம்! அந்தத் திட்டத்தில் மூலம் வளர்ந்து இன்று ஆளாகி நிற்கும் பெண் குழந்தைகளை பார்த்தால் கேட்டுப்பாருங்கள் ஜெயலலிதா யார் என்று!

நாட்டிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டு இயங்கும் 57 மகளிர் காவல் நிலையங்களை உருவாக்கினார்! அதன் நீட்சியாக அரசியலிலும் இதர துறைகளிலும் பெண்களுக்கு 30% ஒதுக்கீடை கொண்டுவந்தார். ஹூண்டாய் போர்ட் போன்ற மிகப்பெரிய தொழிற்சாலைகளை கொண்டுவந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார். 
பிறகு 96-ல் ஆட்சியை இழந்து ரஜினி மற்றும் மூப்பனார் தயவால் திரு.கருணாநிதி ஆட்சியில் அமர்ந்தது வரலாறு. 96 தேர்தலில் வெறும் நான்கு இடங்களை மட்டுமே ஜெயித்த அதிமுக அவ்வளவுதான் கட்சி காலி என்று கூறிவந்த பலருடைய கணிப்புகளையும் மீறி 98 நாடாளுமன்றத்  தேர்தலில் 18 இடங்களை வென்று பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நின்றார். இதற்கு இடையில் எவ்வளவு வழக்குகள் எவ்வளவு இடையூறுகளைக் கடந்து வந்தார் என்பது நமக்கெல்லாம் ஒரு பாடம். 

செல்வி.ஜெயலலிதாவை பழி வாங்கச் செய்யும் முயற்சிகளுக்கு நடுவில் அவ்வப்போது மக்கள்(தன்) பணிகளையும் செய்து வந்தார் கருணாநிதி.  பெரிதாக எந்த விமர்சனமும் இல்லை. சாட்சி வைக்காத ஊழல்கள். மேலும் மத்தியில் உள்ள ஆட்சி அதிகாரத்தை வைத்து ஜெயலலிதாவை எந்திரிக்கவிடாமல் செய்த அரசியல் சூழ்ச்சி இதையெல்லாம் பார்த்தவர்கள் 2001-லும்  திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்று கணித்தார்கள்.
ஆனால் அனைத்து கருத்து கந்தசாமிகளின் கருத்துக்களையும் பொய்யாக்கி பலமான கூட்டணி அமைத்து மீண்டும் தனி அரிதிப்பெரும்பான்மையுடன் அம்மா ஆட்சியில் அமர்ந்தார். 

இதற்க்கு இடையில் பல திருப்பங்களும் இருந்தன. வழக்குகளால் போட்டியிட முடியாமல் ஆறு மாதங்களுக்கு முதல்வராக இருக்கலாம் என்ற சிறப்பு சலுகையை பயன்படுத்தி முதல்வர் ஆனார். அந்த முதல் ஆறு மாதங்களும் கருணாநிதி கைது போன்ற சம்பவங்களுடன் பரபரப்பாகவே போனது. ஆறுமாதம் ஆனதும் முதலமைச்சராக யாரை அமர்த்துவார் என்று  நடந்த பல பட்டிமன்றங்களுக்கு இடையில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் தற்போதைய தர்மயுத்த புகழ் O.பன்னீர்செல்வத்தை 2001 செப்டம்பர் மாதம் முதல்வராக அமர்த்தினார்.

பிறகு வழக்குளில் இருந்து விடுதலை பெற்று ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயித்து மீண்டும் முதல்வர் ஆனார். அம்மாவின் 2001-2006 ஆட்சிக் காலம் அவரை ஒரு சிறந்த நிர்வாகியாகவும் தைரியசாலியாகவும் மக்களுக்கு அடையாளம் காட்டியது. தமிழக ஆட்சி வரலாற்றில் சில முக்கியமான முடிவுகளை இந்த ஆட்சிக் காலத்தில் எடுத்தார். தனியார் முதலாளிகளுக்கு வருமானத்தைக் குவித்த மதுபான விற்பனையையும், மணல் குவாரிகளையும் அரசுடமை ஆக்கியது அதில் முக்கியமானது. மேலும் அரசு ஊழியர்களை எஸ்மா சட்டத்தில் மிரள வைத்ததும், போனஸ் பிரச்சனையில் போக்குவரத்து ஊழியர்களை கைது செய்து தற்காலிக ஊழியர்களை வைத்து சமாளித்ததும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

நீண்ட காலமாக காவல் துறைக்கு தண்ணிகாட்டி வந்த வீரப்பனுக்கு முடிவு கட்டியதும் அப்போதுதான். லாட்டரியை ஒழித்தது மிக முக்கியமானது. பள்ளி கல்லூரிகளுக்கு பக்கத்தில் புகையிலை பொருட்கள் விற்க தடை, இந்தியாவிலே முதன் முதலாக முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட கமாண்டோ படை அமைத்தது, தமிழ்நாட்டின் நிலத்தடி நீரை உயர்த்தியதில் மிக முக்கிய பங்கு வகித்த கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம், கருணாநிதியால் ஊழல் செய்து முடியாது என்று கைவிடப்பட்ட சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்த வீராணம் திட்டத்தை செயல்படுத்தியது, 2004-ல் தமிழ்நாட்டையையே உலுக்கிய சுனாமியின் கோர தாண்டவத்தில் இருந்து மிக விரைவாக மக்களை மீட்டெடுத்தது இவையெல்லாம் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் அம்மாவின் அந்த ஆட்சி காலத்தில். 

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் பிற்படுத்தப்போட்டோர், மிகவும் பிற்படுத்தப்போட்டோர்களுக்கான 69% இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் மூலம் உறுதி செய்து மத்திய அரசின் சதி தமிழ்நாட்டில் காலாகாலத்துக்கும் எடுபடாமல் செய்தார். மண்டல் கமிஷன் என்று வாயாலே வடை சுட்டுக் கொண்டிருந்த கருணாநிதியே நம்ம லிஸ்ட்டுலே இது இல்லையே என்று வாயடைத்து நின்றார்! இதற்காகதான் இப்போதைய ஓசி சோறு புகழ் வீரமணி அம்மாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்று விழா நடத்தி பட்டமும் கொடுத்தார்! இவைகளுக்கு நடுவில் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமை, முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமை இப்படி எதையுமே விட்டுக்கொடுக்காமல் தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தார்! இன்று முல்லைப்பெரியாரிலும், காவிரி நீரிலும் தமிழகத்தின் உரிமையை நீதிமன்றம் நிலைநாட்டிவிட்டது! ஆனால் காரணகர்த்தா அம்மா இப்போது இல்லை!

ஆனாலும் ராமதாஸின் துரோகத்தாலும், மறுபுறம் விஜயகாந்தின் வளர்ச்சியால் சிதறிய ஓட்டுக்களாலும் யாருக்குமே அரிதிப்பெரும்பான்மை இல்லாமல் 2006 தேர்தல் முடிந்தது. அதிமுக 62 இடங்களும் திமுக 96 இடங்களும் பிடித்தன. ஆனால் கருணாநிதி காங்கிரஸ் தயவால் ஆட்சியில் அமர்ந்து காங்கிரஸ் காலடியில் கிடந்தது வரலாறு. ஆனாலும் 2011- தேர்தலுக்கு அம்மா உழைத்ததைவிட கருணாநிதியும் அவரின் வாரிசுகளும் அமைச்சர்களும் பாடுபட்டு உழைத்தார்கள்! எதிலும் கமிஷன் அடாவடி, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, ஊழல் இப்படி நடந்த எதையுமே கட்டுப்படுத்த வழி தெரியாமல் வாரிசுகளிடம் விழி பிதுங்கி பாராட்டு விழாக்களில் தஞ்சமடைந்து கிடந்தார் கருணாநிதி. அதிலும் தென் மாவட்டங்களில் அழகிரி பெயரைச்சொல்லி அடாவடிகள் அதிகமானது.

இவ்வளவு கொள்ளையிலும் வரலாற்றில் பெயர் வாழ ஆசைப்பட்டு அவசர அவசரமாக சட்டமன்றக் கட்டிடம் கட்டினார். அதை முழுவதும் வேலை முடியாமலே பல கோடி செலவு செய்து செட் போட்டு திறந்தும் வைத்தார். ஆனால் கட்டியது தவறில்லை. இதையே முந்தைய  ஆட்சியில் அம்மா சட்டமன்றக் கட்டிடம் கட்ட முடிவுசெய்த போது அவருக்கு பெயர் வந்துவிட கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியுடன் அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அ.ராசாவை வைத்து அனுமதி மறுத்தார். அந்த பாவத்திற்குத்தான் அவர் சாகும் வரை அவரால் மீண்டும் புதிய சட்டமன்றத்திற்கு முதலமைச்சராக போக முடியவில்லை. இப்படிப் பலவழிகளிலும் திமுக பாடுபட்டு உழைத்து அம்மாவை 2011-ல் மீண்டும் அரியணையில் ஏற்றியது.

இந்த நேரத்தில் ஒன்று சொல்லவேண்டும். 2008 இறுதி மற்றும் 2009-ல் ஈழப்போர் உச்சத்தை எட்டியது. அம்மா அவர்கள் தான் சாகும்வரை விடுதலைப்புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் எதிரியாகவே இருந்தார். ராஜீவ் கொலைக்காக பிரபாகரனை இந்தியா கொண்டுவந்து தூக்கிலிட வேண்டும் என்றார்! அந்த கருத்தில் இருந்து அவர் கடைசிவரை பின்வாங்கவே இல்லை. போரில் விடுதலைப்புலிகள் பொதுமக்களைக் கேடயமாக பயன்படுத்துவதை எதிர்த்தார். அப்படி பயன்படுத்தினால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் என்பதை போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்னதாக திரித்தார்கள். ஆனால் அம்மாதான் இலங்கையின் இனஒழிப்புக்கு ஐநா நீதிவிசாரணை வேண்டுமென்று தீர்மானம் போட்டார். 

அதற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று சொன்னார். ஈழ மக்களின் நல்வாழ்விற்கு மத்திய அரசை பல வழிகளிலும் நிர்பந்தித்தார். ராஜீவ் கொலைவழக்கில் கைதான மூன்று பேருக்கும் கருணை அடிப்படையில் விடுதலை அளிக்க முன்வந்தார். ஆனால் கருணாநிதி ஒரு துரோகி. நம்பிய விடுதலைப் புலிகளை நட்டாற்றில் விட்ட துரோகி. அவர் விடுதலைப்புலிகளுக்கும் நல்லது செய்யவில்லை ஈழ மக்களுக்கும் நல்லது செய்யவில்லை. அரைமணி நேரம் உண்ணாவிரதம் இருந்து மக்களை ஏமாற்றி கொன்றுவிட்டு பிறகு கூட்டத்தோடு கனிமொழியை இலங்கை அனுப்பி ராஜபக்சவிடம் பரிசு வாங்கி வந்ததுதான் அவர் செய்த சாதனை. வேறு யாரும் நல்லது செய்ய கிளம்பினாலும்  உடனே டெசோ என்று பழைய பாட்டை பாடி திருவோடு ஏந்துவார். 

2011 ஆட்சிக்கு வரும்போது அம்மாவுக்கு இருந்த மிகப்பெரிய சவால் மின்தடை. ஒருநாளைக்கு 10-12 மணி நேரம் மின்தடை இருந்தது. அதை இல்லாமல் செய்வேன் என்று கூறித்தான் அம்மா ஆட்சிக்கும் வந்தார். சொன்னதுபோலவே 2016-ல் ஐந்தாண்டு ஆட்சி காலம் முடியும்போது 11648 மில்லியன் யூனிட்ஸ் உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை பக்கத்துக்கு மாநிலங்களுக்குவிற்பனை செய்தது  தமிழ்நாடு! இந்த ஆட்சிக்காலத்தில்தான் 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ரூ .1000 மாதாந்த ஓய்வூதியத்தை பெரும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், அரசு உதவி பெறும் உறுப்பினர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெற முடியும். 2011 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் தனது அரசாங்கம் கிராமப்புற பகுதிகளில் டிஜிட்டல் கல்வியை வழங்குவதற்காக பத்தாம் மற்றும் பன்னிரண்டு வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்க உத்தரவிட்டார்.

மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள கிராமப்புறத்தவர்களுக்கு நான்கு வெள்ளாடுகள் மற்றும் ஒரு பசு மாட்டை இலவசமாக வழங்க ஆவண செய்தார். இது நகர்ப்புறத்தில் அல்லது வறுமை கோட்டிற்கு மேலே இருப்பவர்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக அனாவசியமாகத் தோணலாம் ஆனால் மூன்று வேலை சாப்பாட்டிற்கே உத்தரவாதமில்லாத இத்திட்டத்தால் பயனடைந்தவர்களைக் கேட்டுப்பாருங்கள்! அவர்களுக்கு அம்மாதான் தெய்வம். அதுபோக பத்தாம் வகுப்பு தாண்டிய மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி, இலவச சீருடை, பெண்களுக்கென ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கும் இலவச நேப்கின், தாலிக்கு தங்கம் திட்டத்தில் அரை பவுன் தங்கம், திருமண உதவித்தொகையாக ரூபாய் ஐம்பதாயிரம் வழங்க உத்தரவு. திமுக ஆட்சியில் அடாவடியாக பிடுங்கப்பட்ட நிலங்களை மீட்டுக்கொடுக்க நில அபகரிப்பு சட்டம் இப்படி முழுவீச்சில் திட்டங்களை செயல் படுத்தினார். சூரிய ஒளி மின்சார திட்டத்தை விரிவாக்கி மானியங்கள் கொடுத்து அதை மக்களிடமும் கொண்டு சேர்த்தார். ராமநாதபுரத்தில் மிகப்பெரிய சூரியஒளி மின்சார உற்பத்தி நிலையம் அமைத்தார்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தொடங்கப்பட்டதுதான் அம்மா உணவகம்! நாளெல்லாம் உழைத்து வாங்கும் அதிகபட்ச கூலி ஐநூறு ரூபாயில் நூறு ரூபாயை சாப்பாட்டுக்கு செலவு செய்தவர்களை கேட்டுப்பாருங்கள். இந்த திட்டம் எவ்வளவு பயனுள்ளது என்று. சென்னையை எடுத்துக்கொள்ளுங்கள் இன்றைய விலைவாசியில் ஒருநாளைய சாப்பாட்டை 30 ரூபாயில் முடித்துக்கொள்ளலாம் என்பது காசை கணக்குப்பண்ணி வந்து இறங்குபவர்களுக்கும் தினக்கூலிகளுக்கும் மட்டுமே தெரியும் அதன் அருமை. கம்பியூட்டரில் கருத்து சொல்லும் நமக்கு தெரியாது. கருணாநிதி இறந்த தினம் அன்று கூட அனைத்துக் கடைகளும் மூடியிருக்க அம்மா உணவகம்தான் திமுக தொண்டர்களுக்கும் உணவளித்து மகிழ்ந்தது!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவே மோடி அலையில் மூழ்கிக்கிடக்க இங்கே மோடியா? லேடியா? என்று மோடிக்கே சவால் விட்டு யாரையும் சேர்க்காமல் மக்களை மட்டுமே நம்பி தனித்துக் களம் இறங்கினார். சொல்லியது போலவே நாற்பதுக்கு 37 தொகுதிகளை வென்றெடுத்தார் ஒற்றை ஆளாய்!

2014 செப்டம்பர் மாதம்! அரசியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவருக்கு சோதனைகள் ஆரம்பித்த மாதம். சொத்து வழக்கில் தீர்ப்பாகி பெங்களூரு சிறையிலே இருக்க வைக்கப்பட்டார்! 2G-ல அடிச்ச காச வச்சு டிவி ஆரம்பிச்சு, காசு எங்க இருந்து வந்துச்சுன்னு கேட்டா டிவி ஆரம்பிக்க முன்னாடியே விளம்பரம் போட 200 கோடி கொடுத்தாங்கன்னு கூசாம சொன்னவர்கள் எல்லாம் வெளியில் இருக்கும்ப்போது கருணாநிதி அடமானம் வச்ச அவர் வீட்டையே படம் நடிச்சு திருப்பி மீட்டுக் கொடுத்த அம்மா சொத்து சேர்த்துட்டாங்கன்னு போட்ட வழக்கில் தீர்ப்பாகி உள்ளே இருந்தார். அப்பொழுதும் தர்மயுத்த புகழ் ஓபிஎஸ் தான் அம்மாவால் முதல்வர் ஆக்கப்பட்டார்!

பின்பு 2015 மே மாதம் நிரபராதி என்று தீர்ப்பாகி ஆர்கே நகர் தொகுதியில் ஜெயித்து மீண்டும் முதல்வர் ஆனார். ஆனால் உடல்ரீதியாக மிகவும் பலவீனப்பட்டுப் போயிருந்தார். 2015 சென்னை வெள்ளம் ஆட்சிக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்தது. 2004-ல் தமிழகத்தையே புரட்டிப்போட்ட சுனாமியையே ஜஸ்ட் லைக் தட் சமாளித்த அம்மாவால் சுற்றியுள்ள தத்திகளை வைத்து அந்த வெள்ளத்தை சமாளிக்க முடியவில்லை. தொண்டர்களே விமர்சனங்களை வெளிப்படையாக வைத்த சோதனையான காலம் அது.

ஆனாலும் அதிலும் மீண்டு வந்தார். 2015-ல் அவர் கொண்டு வந்ததுதான் "அம்மா ஆரோக்யா" திட்டம். அதுவரை தனியார் மருத்துவ மனைகளில் மட்டுமே இருந்த மாஸ்டர் ஹெல்த் செக்கப் முறையை ஒவ்வொரு மாவட்ட தலைமை மருத்துவ மனைகளிலும் கொண்டுவந்தார். இதனால் பல லட்சம் பேர் இன்றும் பயன்பெற்று வருகின்றனர்! பிறகு அறுவது வயதுக்கு மேல் ஆன முதியவர்களுக்கு மாதம் பத்து முறை இலவச பேருந்து பயணம் திட்டத்தை கொண்டுவந்தார். 2016 தேர்தல் அறிவிக்கப்பட்டது. பலரும் பலவித கூட்டணிக் கணக்குகள் போட்டுக்கொண்டிருக்க அதிமுக தனியாக தேர்தலை சந்திக்கும் என்று சிங்கம் போல அறிவித்தார்.

திமுக அடிமைகள் ஏதோ அப்பொழுதே கருணாநிதி முதல்வர் ஆனதுபோல் குதித்து திரிந்தார்கள். ஸ்டாலின் வேறு நமக்கு நாமே என்று கரும்புக் கொள்ளையில் சிமெண்ட் போட்டு நடந்து காமெடி பண்ணிக்கொண்டிருந்தார்! ஆனால் அம்மா அசரவில்லை. உடல்நிலையை மனதில் வைத்து மாவட்டத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார்கள். அப்போது அவருக்கு இருந்த கல்லீரல் தொற்று பிரச்சனையால் மேடையில் அவர் மட்டும் இருக்க அதற்கு கீழ் வேட்பாளர்கள் இருந்தார்கள். ஆனால் அப்போது ஸ்டாலின் அதைக்கூட காரணம் தெரிந்தும் தெரியாதது போல ஆபாசமாக கிண்டல் செய்தார். ஆனால் அவர் ஏன் லண்டன் செல்கிறார் என்ற காரணம் தெரிந்த அம்மா கடைசிவரை அதைப்பற்றி பேசவில்லை! மேன்மக்கள்!

எதிரிகள் அனைவரது கணக்குகள், கனவுகள் அனைத்தையும் பொய்யாக்கி தனி அரிதிப்பெரும்பான்மையுடன் அம்மா மீண்டும் முதல்வராக அமர்ந்தார். அம்மா அவர்கள் ஆட்சியில் அமர்ந்து 100 நாட்களுக்குள்ளாக அதாவது அவர் பதவியேற்ற மே மாதத்தில் இருந்து உடல்நிலை மோசமான செப்டம்பர் வரையான நூறு நாட்களுக்குள் பல சாதனைகளை செய்துவிட்டே அமைதியானார். அதில் முக்கியமானது. வீடுகளுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம். அதுவே கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மற்றும் இயந்திர நெசவாளர்களுக்கு 750 யூனிட் வரை இலவசம் என்று அறிவித்தார். அதுபோக கிட்டத்தட்ட 17 லட்சம் விவசாயிகளின் கூட்டுறவு சங்கக் கடன்களை ரத்து செய்தார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உதவித் தொகையை 12000 மாக உயர்த்தினார்.

எல்லாவற்றையும் செய்தவர் செப்டம்பர் 21-ல் மெட்ரோ ரயிலை மக்களுக்கு அர்ப்பணித்துத் தொடங்கி வைத்துவிட்டு 22.ம் தேதி மருத்துவமனைக்குள் போனவர்தான். டிசம்பர் 5-ம் தேதி அமரர் ஆகித்தான் வந்தார். இடையில் நீங்கள் முகம் காட்டாததை உங்களை உணர்ந்தவர்கள் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. அதுவரை தொண்டர்களிடம் தலைமுடி கூட கலையாத சிங்கத்தை காண்பித்துவிட்டு நோயினால் களைத்த உங்கள் முகத்தை காண்பிக்க விருப்பம் இல்லை என்பதை அறிவோம். வாரிசுகளை அடையாளம் காட்டிவிட்டுப்போக இது ஒன்றும் திமுக இல்லை என்றும் அறிவோம். நீங்கள் போனதும் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே வாழ்நாளெல்லாம் நீங்கள் முழு மூச்சாய் எதிர்த்த நீட் தேர்வு, உதய் மின்திட்டம், நியூட்ரினோ ஆய்வு திட்டம் இவற்றில் எல்லாம் கையெழுத்து போட்டதில் இருந்தே தெரிந்துவிட்டது இந்த அடிமைகள் உங்கள் வாரிசு இல்லையென. உங்களின் ஆசி யாருக்கென காலம் விரைவில் பதில் சொல்லும் நாங்களும் காத்திருக்கிறோம் இன்னொரு சிங்கத்திற்கு.


Thursday, 26 July 2018

முற்றம் வைத்த வீடு.


சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். தானியங்கி இமிக்ரேசன் முடிந்ததும் என் கடவுச்சீட்டை வாங்கிச் சரி பார்த்த  பாதுகாவலரிடம்  "தேங்க்ஸ்" என்று ஒற்றை வரியில் கடமைக்கு சொல்லிவிட்டு விலகி நடக்க ஆரம்பித்தேன். விமான நிலையைம் ஏராளமான யூனிட் மின்சாரத்தை விழுங்கிக்கொண்டு பளிச்சென இருந்தது. பூச்செடிகளின் முன்பு ஒரு காதல் ஜோடி கட்டிப்பிடித்தபடி செல்பி எடுத்துகொண்டிருன்தனர். ஆனால் அதை ரசித்துப்பார்க்கும் மனநிலையில்தான் நான் இல்லை. கொஞ்ச தூரம் நடந்ததும் டூட்டி ப்ரீ ஷாப் வித விதமான பாட்டில்களோடு தன்னை அலங்கரித்துக்கொண்டு பயணிகளை உள்ளே இழுத்துக்கொண்டிருந்தது. வழக்கமான பயணம் என்றால் இமிக்ரேசன் தாண்டி அந்தக் கடைக்கு அருகே போவதற்குள் பிராந்தியா விஸ்கியா? ஒண்ணா ரெண்டா என்று ஒரு பட்டிமன்றமே நடத்திக்கொண்டு செல்வேன். ஆனால் இப்போது உள்ள மனநிலையில் அங்கு நின்று கூட பார்க்காமல் எனக்கான கேட் நம்பரை பார்த்து நடக்க ஆரம்பித்தேன்.

சுமார் அரை கிலோ மீட்டர் நடந்திருப்பேன்! இருப்பதுலே ஆகக்கடைசி வாயில்(கேட்) எனக்கு. கூட்டம் அனைத்தும் ஏற்கனவே உள்ளே சென்று காத்திருக்கும் வராந்தாவில்(வெயிடிங் லாஞ்ச்) குவிந்திருந்தது. பேருக்கு இரண்டு மாற்று துணிகள் வைத்திருந்த கைபையை ஸ்கேனுக்கு அனுப்பிவிட்டு உள்ளே சென்றேன். வழக்கமாக பயணங்களோடு எடுத்து செல்லும் ஐபேட் கூட எடுக்க வில்லை. நான் உள்ளே செல்வதற்கும் விமானத்திற்கு அழைப்பதற்கும் சரியாக இருந்தது. அழைத்து முடிப்பதற்குள் அருகே சென்று குமிந்தனர் நம்மவர்கள். விமானப் பயணங்களில் நம்மவர்கள் என்னை ஆச்சர்யப்படுத்தும் அல்லது சிரிப்பை வரவைக்கும் பல விசயங்கள் உண்டு. அதில் ஒன்று அழைத்தவுடன் கும்பலாக போய் நிற்பது. இங்கு 90காசு கொடுத்து காப்பி வாங்கும் கடையில் கால்மணி நேரம் வரிசையில் நிற்பவர்கள் 900டாலர் கொடுத்து வாங்கும் விமான பயணத்திற்கு 10நிமிடம் பொறுமையாக  இருப்பதில்லை.

ஒருவழியாக உள்ளே சென்று இருக்கையை தேடி அமர்ந்து கண்களை கைகுட்டையால் மறைத்துக்கொண்டு இருக்கை பட்டையை அணிந்துகொண்டு சாய்ந்துவிட்டேன். வழக்கமாக அருகில் இருப்பவரிடம் மெதுவாக பேச்சு கொடுத்து அப்பிடியே பீரோடு ஒயின் கலந்து அடிக்கும் என்  அனுபவத்தையும் ரம்மோடு வெந்நீர் ஊற்றி அதில் மிளகுதூள் போட்டு அடித்தால் சளிக்கு நல்லது என்ற அவர்களின் அனுபவங்கள் வரை பரிமாறிக்கொள்வது வழக்கம். ஆனால் இப்போது யாரோடும் பேசும் மனநிலையில் இல்லை. கேப்டன் இனிய காலை வணக்கம் சொல்வது மங்கலாக கேட்டது. விமானப் பணிப்பெண்கள் அவசரகால யுத்திகளை ஊமை பாஷையில் 80 களின் தூர்தர்சனின் மதிய செய்தியை போல சொல்லி சிறுவயதை  ஞாபப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

முன்சீட்டில் ஒரு குழந்தை வீறிட்டு அமைதியைக் குலைத்து அழுதது. பக்கத்து சீட் ஆசாமி தான் விமானத்தில் வந்து அமர்ந்துவிட்டதாக நூறாவது முறை தொலைபேசியில் யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தார். பின்சீட்டில் ஒருவர் பிளாக் லேபிள் தீர்ந்துருச்சு மாப்ள அதான் ரெட்லேபில் வாங்கியிருக்கேன் என்று தொலைபேசியில் சொல்லிக்கொண்டிருந்தார் பணத்தை மிச்சம் பண்ணிய திருப்தியுடன். ரயில், பஸ் அல்லது விமானம் இப்படி எந்தப் பயணமாக இருந்தாலும் கடைசி நேர உரையாடல் நம்மவர்களுக்கு எப்பொழுதுமே சுவாரஸ்யம்தான். இதன் உளவியலை தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நினைவுச் செல்கள் என்னை இது எதிலும் நிலைக்கவிடவில்லை. நேற்று இரவு நடந்தது மெதுவாக மனதில் ஓடியது. 

இரவு சாப்பாடு சம்பிரதாயங்களை முடித்து விட்டு படுக்கைக்கு வர 11 மணி ஆகிவிட்டது. வெளிநாட்டு வாழ்க்கையில் சாப்பாடு கூட சம்ப்ரதாயம்தான். எப்போதும் போல வீட்டுக்கு போன் செய்ய ஆயத்தமானேன். அதற்கு முன்னதாகவே என் கைபேசி என் அம்மா நம்பரை தாங்கி அழைத்தது. எனக்கு ஆச்சர்யம் கொஞ்சம் பயம் வேறு. ஏதேனும் அவசரம் இல்லையென்றால் எனக்கு அழைக்க மாட்டார்கள். ஏதேனும் தேவை என்றால் கூட நானாக பேசும்போதுதான் சொல்வார்களே தவிர அழைத்து கேட்க மாட்டார்கள். என்னவாக இருக்கும் என்ற யோசனையோடே திரும்ப அழைத்தேன். தம்பி.. என்று கூறிவிட்டு அழுகையை அடக்க முடியாமல் அழுதார்கள். எனக்கு பதறிவிட்டது, அப்பாவில் ஆரம்பித்து மனதிற்கு நெருக்கமான அனைவர் பெயரையும் சொல்லி நலம்தானே என்றேன். எல்லோரும் நல்லா இருக்கோம்.. ஆனா நம்ம பழைய வீடு...என்று இழுத்தார்கள். 

கொஞ்சம் புரிந்துவிட்டது. அப்பாவின் தவறு இப்பொழுது துரத்தி அடிக்கிறது. எங்கள் பரம்பரை பழைய வீட்டை அப்பா அவரது தம்பியின் பேரில் உள்ள நம்பிக்கையில் அவரின் தொழில் தேவைக்கு லோன் வாங்க அவர் பெயருக்கு எப்பவோ எழுதிக்கொடுத்துவிட்டார். வசதி வாய்ப்பு இல்லாத போது பாசம் மட்டுமே போதும் என்று இருந்தவருக்கு வசதி வாய்ப்புகள் வந்ததும் இந்த வீடே என்னுடையது என்று எங்களை வீதியில் துரத்தினார். பின்னர் நான் சம்பாதித்து வீடு கட்டியது எல்லாம் படையப்பா பார்ட் 2 கதை. ஆனால் ஒரே பாட்டில் முடியாமல் இடையில் 15 நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. கூடவே நீண்ண்ண்ண்ட சட்டப் போராட்டமும். 

"தம்பி.. என்னாச்சு?" என்றார்கள் அம்மா மறுமுனையில். ம்ம்.. சொல்லும்மா இருக்கேன் என்றேன் என் நினைவுகளை மீட்டுக்கொண்டு. "இன்னைக்கு சாயங்காலம் வீடு அவங்களுக்குன்னு தீர்ப்பாயிருச்சு தம்பி, நாளைக்கே வந்து இடிக்க போறாங்களாம்"  என்று அழுகையினூடே சொன்னார்கள் அம்மா. "சரிம்மா போன வை" என்று அலைபேசியை துண்டித்துவிட்டு படுத்துவிட்டேன். பிறந்ததில் இருந்து கூடவே இருந்த நண்பனை இழக்கப்போகும் துயரம் வந்து அமர்ந்துகொண்டது நெஞ்சில். அதை பழைய வீடுதானே என்று சாதாரணமாக கடந்துவிட முடியாது. நான் பிறக்கும்வரை அதாவது மூன்று அக்காக்களுக்கு பிறகு நான் பிறக்கும் வரை நாங்கள் பக்கத்து நகரத்தில்  இருந்தோம் அல்லது இருந்தார்கள். ஏனென்றால் அப்பாவின் வேலைக்குச் செல்லும் தொழிற்சாலைக்குப் பக்கமாக வேண்டும் என்பதால்.

நான் பிறந்ததும் நான்கு குழந்தைகளுக்கும் சேர்த்து பெரிய வீடு தேவைப்பட்டது. அப்படி ஒரு வீட்டில் வாடைக்கு இருக்க என் அப்பாவின் பொருளாதாரம் இடம்கொடுக்காமல் இந்த பழைய வீடு இருக்கும் கிராமத்திற்கு வந்தோம். இதற்காக அப்பா தினமும் போக பதினைந்து வர பதினைந்து ஆகா முப்பது கிலோமீட்டர் சைக்கிள் அழுத்த வேண்டியிருந்தது வேலைக்கு. ஆனாலும் அப்போது அது ஒன்றுதான் அவர்களுக்கு வழியாக இருந்திருக்கும். சரியாக நான் பிறந்து ஆறு மாதத்தில் இந்த வீட்டுக்கு வந்து விட்டோம். வீடு வீடு என்று சொல்கிறேனே தவிர நாங்கள் வரும்போது வீடாக இருக்கவில்லை. ஆடு மாடுகள் கட்டும் தொழுவமாகத்தான்  இருந்தது. ஆனால் வீடு அழகான முற்றம் வைத்த வீடு. பிறகு சில வருடங்கள் ஓடி ஓரளவிற்கு எனக்கு நினைவு தெரிந்த வயதில் வீடு என்று இருந்ததை ஒரு அழகான வீடாக மாற்றியிருந்தனர் என் அம்மாவும் மூன்று அக்காக்களும் சேர்ந்து.

வாசலில் இரு பக்கமும் திண்ணை. படியேறி உள்ளே போனதும் பெரிய பத்தி (வராண்டா அல்லது ஹால்) சாணம் போட்டு மெழுகி பளபளவென்று எப்பொழுதுமே குளிர்ச்சியாக இருக்கும். அதைத் தாண்டி உள்ளே போனால் நாட்டு ஓடு போர்த்திய சுத்துக்கட்டு வளவு நடுவில் வானம் பார்த்த முற்றம். மேற்குப் புறத்தில் இரண்டு அறைகள் ஒன்றில் சாமி கும்பிட மற்றும் இரண்டு மர அலமாரி(பீரோ) வைத்திருக்கும். இன்னொரு அறையில்  நெல்மூடைகள் அடுக்கி இருக்கும். விடிகாலையில் அப்பா படிக்க எழுப்பிவிடும்போது இந்த நெல்மூட்டைகளுக்கு நடுவில் அமர்ந்து படிப்போம். கத கதவென்று இருக்கும் சமயங்களில் அந்தக் கதகதப்பிலே தூங்கி விட்டு உதை வாங்குவதும் நடக்கும். தீபாவளி சமயங்களில் செய்த அதிரசமும் முறுக்கும் ஒரு பெரிய தூக்கு வாளியில் போட்டு இந்த அறைக்குள்தான் இருக்கும். அம்மாவுக்கு தெரியாமல் எடுத்து அவ்வப்போது டவுசர் பைகளில் போட்டுக்கொண்டு ஓடுவதெல்லாம் அந்த அறையில்தான்.

வடகிழக்கு மூலை எப்போதுமே முளைப்பாரி போடும் இடம் அதனால் அங்கே படுக்க மாட்டோம். பொங்கல் அன்று எங்கள் முற்றத்தை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். முற்றம் முழுவதும் அடைத்து மாக்கோலம் இட்டிருப்பார் அம்மா. இரண்டு பானை வைத்து பொங்கி அங்கேயே சாமி கும்பிட்டு அந்த அடுப்பை சுற்றியே அமர்ந்து சாப்பிடுவோம். அன்று மட்டும் அல்ல மழை அல்லாத ஒவ்வொரு இரவிலும் அங்கேதான் இரவு சாப்பாடு. முற்றத்தின் மேலே நடுவில் நிலா மற்றும் நட்ச்சத்திரங்களின் அழகோடு உணவருந்துவதே ஒரு தவம். மழை வந்தால் இன்னும் சந்தோசம், நான்கு மூலைகளிலும் கூரை வாய் தகரத்தில் இருந்து விழும் நீரை சேமிக்க இருக்கும் பாத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்து அந்த மழையில் ஆடுவோம். அம்மாவும் அக்காவும் துணிகளை எடுத்து அந்த மழையோடு துவைக்க ஆரம்பித்துவிடுவார்கள். காகிதத்தில் கப்பல் செய்து வீட்டுக்குள் விட்டு வெளியில் ஓடி யார் கப்பல் முதலில் வருகிறது என்று சண்டை போடுவோம். இப்படி ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு நினைவுகளை புதைத்து விட்டே அந்த வீட்டை பூட்டினோம் 15 வருடங்களுக்கு முன்பு.

ஞாபகங்களை அறுத்துவிட்டுத் திடீர் என்று எழுந்தேன். மணி பார்த்தேன் அதிகாலை இரண்டு மணி. நேசித்த உயிர், பிரியும் வேளையில் கடைசியாக முகத்தை பார்க்க ஒரு ஆசை அலல்து வெறி வருமே அதுபோலத்தான் அப்போது தோன்றியது. அப்பொழுதே இணையத்தில் தேடி பயணசீட்டை உறுதிசெய்துவிட்டு விடிவதற்காக காத்திருந்தேன். காலை ஒன்பது மணிக்கு விமானம்  ஐந்து மணிக்கு எல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பி இதோ விமானத்திலும் அமர்ந்து விட்டேன். மெதுவாக மணி பார்த்தேன் விமானம் கிளம்பி ஒருமணி நேரம் ஆகியிருந்தது. இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது திருச்சி செல்ல. அங்கிருந்து ஒரு இரண்டு மணி நேர பயணம் என் கிராமத்திற்கு. அதற்குள் இடித்துவிடாமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டேன். வருவதை வீட்டிற்கு போன் பண்ணி சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. படைப்பா படத்தில் சிவாஜி வீட்டை விட்டு கிளம்பும் போது கடைசியா நான் வாழ்ந்த வீட்ட கட்டிபுடிச்சிக்கிறேன்னு சொல்லும் அந்தக் காட்சியை  காமெடியாக பார்த்து காமெடியாகவே மெமேகளில் பழகி விட்ட அந்த உணர்வு இப்போது உயிரோடு சேர்த்து வைத்து அழுத்தியது. 

ஒரு செடியை வேரோடு புடிங்கி நட்டால் கூட கூடவே அதன் தாய் மண்ணையும் சேர்த்தே எடுத்து நடுவார்கள். இல்லையென்றால் செடி வளராது. ஒரு செடிக்கே அப்படி இருக்கும்போது உணர்ச்சிகளாலும் உணர்வுகளாலும் பின்னிப் பிணைந்த நானும் சாதாரண மனிதன்தானே. சாதாரண மாட்டுத் தொழுவமாக இருந்த அந்த வீடு நான் வளரும்போது என்கூடவே சேர்ந்தே வளர்ந்து வந்திருக்கிறது. முன்பக்கம் மூங்கில் சட்டங்களால் அடைக்கப்பட்டது செங்கல் சுவராக மாறியது. என் ஏழு  வயதில் மின் இணைப்பில் ஒளிரதுவங்கியது பிறகு சாணி மொழுகிய தரை சிமெண்ட் பூசிக் கொண்டது. காலப்போக்கில் அதுவே டைல்ஸ் கல்லாக மாறியது. குடும்பத்தில் வயதான மூத்தவர்களுக்கு செய்யும் பணிவிடை போல ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தோம்.

அக்கம் பக்கத்தில் யார் வீட்டில் குழந்தை பிறந்தாலும் அந்த வீட்டு பத்தியில்தான் தொட்டில் கட்டிப்  போடுவார்கள். என் ஆயாவின் தாலாட்டு அப்பிடி. மாலை நேரம் ஆனால் அந்த தெருவிற்கே எங்கள் வீட்டுத்  திண்ணைதான் மனமகிழ் மன்றம். தாயம், பல்லாங்குழி ஒருபக்கம் ஓடும். பெரியவர்கள் கதைப்பேச்சு ஒருபக்கம். விடுமுறை தினங்களில் எங்கள் வீடு முழுநேர மனமகிழ் மன்றமாகிவிடும். இதெல்லாம் 80களின் இறுதியில் அல்லது 90களின் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன். அப்பொழுதெல்லாம் ஒளியும் ஒலியும் மற்றும் ஞாயிறு படம் தவிர தொலைக்காட்சி பார்ப்பது பாவம் என்றிருந்த காலம். இப்போது யோசித்துப்பார்க்கிறேன் அந்த வீட்டில் எப்போது நான் கடைசியாக இருந்தேன் என்று. அனைத்தையும் காலி செய்து வீட்டைப்பூட்டி வெளியேறும் போது கொஞ்சம் இருங்கள் என்று கூறி  ட்ரவுசரை இறுக்கப் பிடித்தபடி உள்ளே ஓடி தாழ்வாரத்தில் ஒரு ஓட்டை போட்ட டப்பாவில் கொன்னை இலைகளைப் போட்டு அதில் விட்டிருந்த இரண்டு பொன்வண்டுகளைப் பார்த்தபடி எடுத்து வந்தேன். அதுதான் அந்த வீட்டுக்கும் எனக்குமான கடைசி நூல் அறுந்த தருணம் என்று அப்போது நினைக்கவில்லை. 

கிராமத்திலேயே வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்துகொண்டு அந்த வீடு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதை பார்த்துக்கொண்டே நானும் வளர்ந்தேன். வாசல் கதவுகளில் கரையான்கள் கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் தன் சாம்ராஜ்யத்தை அமைத்துக்கொண்டது. வருடங்கள் ஓடி நான் சிங்கை வந்து 6 வருடம் ஆகிவிட்டது. இடையில் அங்கேயே வேறு இடம் வாங்கி வீடும் கட்டியாகிவிட்டது. ஊருக்கே தொட்டில் கட்டிய அந்தப் பத்தியில் என் குழந்தைக்கும் தொட்டில் கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையோடு பெண் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள் அம்மா. ஆனால் காலம் எங்களுக்கான பதிலை இப்படி வைத்திருக்கும் என்று யாருமே யோசிக்கவில்லை. இப்பிடி கண்மூடியும் தூங்காமல் நினைவுகளோடு போராடிக்கொண்டிருக்கும்போதே விமானம் இறங்கி ஓடுபாதையில் ஓட ஆரம்பித்தது. குடிநுழைவு மற்றும் சுங்க சோதனைகளை விரைவாக முடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியில் வந்து என் ஊருக்கு செல்லும் பேருந்தில் அமர்ந்தேன். அப்போதுகூட வீட்டுக்கு பேச வேண்டும் என்று தோன்றவில்லை. 

சட்டப்போராட்டங்களுக்கு இடையில் கூட சமாதானத் தூது விட்டுப்  பணம் கூட கொடுக்கிறேன் அந்த வீட்டை தாருங்கள் என்று கூறியும் அதை தர மனமில்லாத என் சித்தப்பாவின் வீம்புக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று என்னால் யூகிக்க  முடியவில்லை. பணம் ஈகோ இப்படி எல்லாவற்றையும் கடந்தது அந்த வீட்டுக்கும் எனக்குமான பந்தம். சமீபத்தில் பல லட்சங்களில் சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கினேன். ஆனால் இன்று வரை ஒருமுறைதான் அதை பார்த்திருக்கிறேன். அது என்னுடைய வீடு என்று கூட என் மனதில் இன்னும் பதியவில்லை. ஆனால் பால்ய வயதில் பல வருடங்களுக்கு முன்னால் என் பழைய வீட்டை விட்டு வந்தாலும் அது மட்டுமே என்னுடைய வீடாக மனதில் பதிந்துவிட்டது. கண்ணெதிரே நீருக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் நண்பனைக் காப்பாற்ற முடியாத கையறு நிலையில் இருந்தேன். 

இப்படி அந்த வீட்டுக்கும் எனக்குமான ஞாபகங்களை என் மூளைச்  செல்களில் எங்கெங்கு ஒளித்து வைத்தேனோ அவையெல்லாம் வரிசை கட்டி வந்து நின்றது. என் கிராமம் வந்து விட்டதாக நடத்துனர் கதறுவது அசரீரி போல காதுக்குள் கேட்டது. அனிச்சையாக இறங்கி நடக்க ஆரம்பித்தேன். வரிசையான விசாரிப்புகளைக் கடந்து நேரே வீட்டுக்கு கூடப் போகாமல் என் பழைய வீட்டைத்தான் நோக்கி நடந்தேன். பதின்ம வயதுப் பிள்ளையின் அகால மரணத்திற்குப் போவது போல இருந்தது என் மனநிலை. என் வீடு இருக்கும் தெருவுக்குள் கால் வைத்ததுமே நெஞ்சுக்கூட்டுக்குள் ஏதோ நொறுங்கும் சத்தம் . வீதி நெடுக உரிமையோடு வந்தன உறவுகள். கைப்பையை யாரோ வாங்கிக்கொண்டனர். ஆறுதல் அளிக்காது என்று தெரிந்தும் ஆறுதல்கள் காதில் கேட்டது. வீட்டை நெருங்க நெருங்க தெரிந்துவிட்டது. எல்லாமே முடிந்துவிட்டதென. என் சாவில் கூட முழிக்காதே என்று சாபம் விட்ட முதியவர்களின் இறப்பு போல இருந்தது என் வீடு. ஆமாம்.. அப்போது வீட்டிற்கான எந்த அடையாளமும் இல்லாமல் என் நம்பிக்கையோடு சேர்ந்து நொறுங்கிபோய்க்கிடந்தது என் வீடு. இறுதிச்சடங்கில் சிதறிக்கிடக்கும் பூக்கள் போல வீதியெங்கும் சிதறிக்கிடந்தன செங்கல்கள்.

என்னைப் பார்த்ததும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டார் சித்தப்பா. அப்போது கூட வரவேற்க தவறாத வாசல்படியில் கால் வைத்து உள்ளே போனேன் காலடியில் இடறியது மர உத்திரம். எத்தனையோ குழந்தைகளை தொட்டில் கட்டி தூங்க வைத்த உத்திரம். தூரத்தில் நின்ற பங்காளியை கூப்பிட்டு இதை மட்டும் நான் எடுத்துக்கொள்கிறேன் என்று சித்தப்பாவிடம் கேட்க சொன்னேன் உத்திரத்தைக் காட்டி. அவரும் அவரிடம் பேசி சரி என்றதும் இரண்டுபேரை உதவிக்கு கூப்பிட்டு அதை எடுத்து என் வீட்டில் வைக்க சொன்னேன் என் அம்மாவின் ஆசைக்காக.  பத்தி தாண்டி வளவு போனேன் காலில் இடறியது ஒரு  சின்னச் சங்கு. எடுத்துப்பார்த்தேன் என் பெயர் பொறித்திருந்தது. ராமேஸ்வரத்தில் எப்போதோ பெயர் பொறித்து வாங்கியதை மராமத்து வேலையின் போது நிலையில் மேலே விளையாட்டாய்ப் பதித்தது. என் நண்பனின் இறுதிப்பரிசாக எண்ணிக்கொண்டேன். அதற்கு மேல் முடியவில்லை வெளியில் வந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிதேன். மெதுவாக திரும்பிப் பார்த்தேன். துரோகத்தின் வலியைத் தாங்கிக் கொண்டு என் அழகான முற்றம் மட்டும் அப்பிடியே இருந்தது.