Friday, 24 April 2015

கூவம்!
கூவம்.... இந்த வார்த்தையை கேட்டதுமே மூக்கைப்பிடிக்கும் மக்கள்தான் அதிகம் நம் தமிழ்நாட்டில்! சென்னையைப்பற்றி தெரிந்தவர்களுக்கு கூவத்தைப்பற்றி தெரியாமல் இருக்காது. ஆனால் கூவத்தின் மூலம் எத்தனைபேருக்கு தெரியும்? கூவம் ஆறு சென்னையின் மேற்கு பகுதியில் 65 கி.மீ. தூரத்தில் கேசவரம் அணையில் இருந்து தொடங்குகிறது. இந்த ஆறு கடம்பத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் கூவம் கிராமத்தில் தொடங்கி மணவாள நகர், அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு, கண்ணார்பாளையம், பருத்திப்பட்டு, பூவிருந்தவல்லி, மதுரவாயல், அமைந்தக்கரை வழியாக ஓடி சென்னைக்குள் வருகிறது. சென்னையில் அடையாறு, பக்கிங்காம், ஓட்டேரி ஆகிய கால்வாய்களின் மூலமாகவும் மேலும் நந்தனம், மாம்பலம், அரும்பாக்கம், விருகம்பாக்கம், கொடுங்கையூர் ஆகிய ஓடைகளின் மூலமாக சாக்கடைகளோடு சங்கமித்து சென்னைக்குள் மட்டும் 18 கி.மீ. பயணம் செய்து கடலில் கலக்கின்றது!
 
கூவத்தின் வரலாறு இப்படி என்றால் அதன் பெருமைகளும் குறைந்ததல்ல, இன்று எல்லோரும் விடுமுறையோ, ஓய்வோ.. எதுவாக இருந்தாலும் குடும்பத்தோடு பீச்.. மாயாஜால் என்று போவதைப்போல் 1820 - களில் கூவம் கரைதான் மக்களுக்கு குடும்பத்தோடு பொழுதுபோக்க சிறந்த இடம்! அதுமட்டும் அல்ல.. இது ஒரு புனிதமான ஆறாகவும் கருதப்பட்டது! புதுப்பேட்டை கோமலீஷ்வரன் பெட்டியில் உள்ள கூவம் ஆற்றில் வந்து குளித்துவிட்டுத்தான் கந்தக்கோட்டம் முருகனை தரிசிக்கச்செல்வாராம் வள்ளல் பச்சையப்பர்! அன்றைய சென்னை ஆளுநர் கிராண்ட் டஃப் கோவம் கரையோரத்தில் உள்ள மஞ்சள் அரளி மரங்களில் இருந்து நீரில் விழும் அரளி மலர்களை பார்க்க ஆனந்தமாக உள்ளது என்று கூறி மகிழ்ந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன! இத்தனை பெருமைகளை கொண்ட கூவம் ஆறு சாக்கடையாக மாறியதன் பரிணாம வளர்ச்சி என்ன? அதையும் கொஞ்சம் பார்ப்போம்...
 
கூவம் ஆறு சீரழிந்ததின் முதல் படி என்று பார்த்தால்... 1934 - இல் இந்தியாவில் விளையும் பருத்தியும் மூலம் துணிகளை உற்பத்தி செய்து பிரிட்டனுக்கு அனுப்பவேண்டும் என்று பிரிட்டனில் இருந்து அன்றைய கவர்னர் மார்ட்டின் பிட் - க்கு ஒரு உத்தரவு வந்தது! உடனே அவர் பல பகுதிகளில் இருந்து நெசவாளர்களை அழைத்து வந்து சிந்தாகிரிப்பேட்டையில் குடி அமர்த்தினார். ஒரு நல்ல நாளாக பார்த்து நெசவுத்தொழில் சாயங்கள் மூலம் கழிவு நீர் கூவத்தில் பாய ஆரம்பித்தது! இதுதான் பிள்ளையார் சுழி! இதன் தொடர்ச்சியாக இன்றைய கூவத்தின் நிலைமை என்ன? சுமார் 700 துணைக்கால்வாய்களின் மூலமாக சென்னையின் கழிவுநீர் கூவத்தில் சங்கமம் ஆகிறது. அதுபோக சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளின் மூலமாக சுமார் 40 டன் மருத்துவ கழிவுகள் கூவத்தில் கொட்டப்படுகின்றது! மேலும் சென்னையில் உள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிற்ச்சாலைகளின் மூலமாக எந்த வித கட்டுப்பாடும் இன்றி அல்லது கட்டுப்பாடு இருந்தாலும் சட்டத்துக்கு புறம்பாக கழிவுகள் கூவத்தில் கலக்கின்றன! கூவம் ஆற்றின் கரைகளில் மட்டும் சுமாராக 5000 குடும்பங்களுக்கு மேல் குடிசை போட்டு  வசித்து வருகின்றனர்! இவர்களின் அனைத்து கழிவுகளும் நேரடியாக கூவதில்தான் சங்கமம்! இப்படி போட்டி போட்டு கூவத்தை ஒரு சாக்கடையாக மாற்றியதில் அனைவருக்குமே சமமான பங்கு உண்டு!

 


கூவம் சாக்கடையாக மாறியதன் பரிணாம வளர்ச்சியை பார்த்தோம்! அதனை தூய்மை படுத்த நமது அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்னனென்ன? கொஞ்சம் சுருக்கமாக பார்த்துவிடுவோம்... 1960 - இல் சென்னை மாகாண அரசு திட்ட மதிப்பீட்டில் அறிக்கை தயார் செய்தது. அதன்படி சேத்துப்பட்டு அருகே அடையாறை கூவத்துடன் இணைக்கலாம் என்று அதில் பரிந்துரை செய்தது. திட்டம் முடிந்ததோ இல்லையோ ஆனால் அதற்குள் காங்கிரஸ் முடிந்தது! அடுத்து அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது, 1967 - இல் ரூ. 118 லட்ச ரூபாய் மதிப்பில் கூவத்தை சுத்தப்படுத்த திட்டத்தை தொடங்கி வைத்த அண்ணா பேசும்போது லண்டனுக்கு தேம்ஸ் நதிபோல சென்னைக்கு கூவம் என்று மாறும் நிலை வர வேண்டும் என்று தன் ஆசையை சொன்னார்! அதன்படியே 1973 - இல் படகுகள் விடப்பட்டன! ஒவ்வொரு படித்துறையிலும் பாரி..ஓரி என தமிழக கடையேழு வள்ளல்களின் பெயரில் மண்டபங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இன்று? இவையெல்லாம் வெறும் ஆவணமாகத்தான் காட்சியளிக்கின்றன!


1973 ல் படகு திட்டத்தை தொடங்கி வைத்த அப்போதைய முதல்வர் கருணாநிதி!

மேலும்.. 1976 - இல் ம.பொ.சி. தலைமையில் அமைந்த ஒரு குழு ரூ.22 கோடியில் திட்டம் தீட்டி செயல்படுத்தியது. அதுபோக 1941 - இல் செவன்  டிரென்ட்  என்ற ஆலோசனை குழுமமும், மேக் டொனால்ட் குழுமமும் ரூ.34.8 கோடியில் திட்டம் தீட்டியது! 1998 - இல் அரசு பொதுப்பணித்துறை மூலம் 19 கோடி ரூபாய்க்கு திட்டம்.. 2000 - இல் தமிழக அரசு சார்பில் ரூபாய் 700 கோடியில் திட்ட மதிப்பீடு என ஒவ்வொரு முறையும் திட்டத்தின் மதிப்பீடு கூடியதே தவிர கூவத்தில் கழிவுநீர் குறையவே இல்லை!


1970ல் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் S.J.சாதிக் பாட்ஷா பார்வையிட்டபோது!
இவ்வாறு தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கடைசிக்கட்டமாக 2009 - இல் கருணாநிதி தலைமையில் ஆன அரசு கூவத்தை சுத்தப்படுத்த ரூபாய் 1200 கோடி செலவில் திட்டம் தயார் செய்து சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி இரண்டு ஆண்டுகளில் திட்ட வரையறை இறுதி செய்து அடுத்த ஆறு ஆண்டுகளில் இதனை செய்து முடிப்பதாக ஒப்பந்தம் போட்டு முதல்கட்டமாக ரூ.23 கோடி மதிப்பில் முதற்கட்ட பணியை துவக்கினர். மேலும் நிதி உதவிக்காக ஆந்திராவில் இருந்த சாய்பாபாவை அப்போதைய துணைமுதல்வர் ஸ்டாலினும் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் சந்தித்தனர். சாய்பாபாவும் 15 கி.மீ. தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் ஆகும் செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தாக செய்திகள் வெளியாயின. துரதிஷ்டவசமாக அவர் இன்று உயிரோடு இல்லை மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் நடந்துவிட்டது! பதவியேற்ற புதிதில் ஜெயலலிதா தலைமைலான அரசு இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி  வைத்துள்ளதாக அறிவித்தது.  இதைப்பற்றி அப்போது பதவியேற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் கூறுகையில் முந்தைய அரசு இதற்க்கான அடிப்படை ஆய்வுகளை செய்யவில்லை என்றும் அதனால்தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் விரைவில் மாற்று திட்டத்தை முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறியிருந்தார்! ஆனால் இதோ ஆட்சியே முடியபோகிறது இன்னும் மாற்றுத் திட்டம் வந்தபாடில்லை. அதுசரி பாவம் தமிழக அமைச்சர்களுக்கு மண் சோறு சாப்பிடவும் காவடி தூக்கி அங்கப்பிரதட்சணம் செய்யவே நேரம் போதவில்லை! இதை கவனிக்கவா நேரம் இருக்க போகிறது!

அவர்கள் என்னவேனாலும் செய்துவிட்டுப்போகட்டும். அடுத்த ஆட்சியிலாவது இதற்கான நடவடிக்கை உண்டா என்று பார்ப்போம். ஆட்சி மாறுவதற்குள் கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டம் சாத்தியமா? அதற்க்கு அடிப்படையாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்! இதேபோல சிங்கப்பூரில் என்ன வழிமுறைகளை கையாண்டார்கள் என்பதைப்பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடுவோம்! நீங்களே பார்த்தீர்கள்.. இதுவரை தவணை முறைகளில் பல ஆயிரம் கோடிகளை விழுங்கி விட்டு நான் இப்படித்தான் என்று அடம்பிடித்து ஓடிக்கொண்டிருகிறது கூவம்! கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட 1200 கோடி ரூபாய்  திட்டம் தவணை முறைகளில் கொட்டிய பணத்தை மொத்தமாக கொட்டப் போகிறார்கள் என்பதே கசப்பான உண்மை! கரைகளை அகலப்படுத்தி அங்கு உள்ள கழிவுகளை அகற்றினால் மட்டும் கூவம் தூய்மை ஆகிவிடாது! இந்த வேலையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.. முதலில் கூவத்தில் கலக்கும் கழிவுகளின் மூலத்தை அறிந்து அவற்றை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.. இன்னும் புரியும்படி சொன்னால் பாம்பு கடித்தவனுக்கு கடிவாய்க்கு முன்னாள் கட்டுபோடுவதுபோல! விஷம் ஏறிவிட்டது..சிகிச்சை எடுத்துதான் ஆகவேண்டும்.இருந்தாலும் மேலும் விஷம் ஏறாமல் கட்டுபோடுவோம் அல்லவா? அதுபோலதான்! கூவம் கெட்டுவிட்டது... சுத்தப்படுத்திதான் ஆகவேண்டும்.. அதற்குமுன் மேலும் கழிவுகள் சேரும் பாதையை அடைக்க வேண்டும்! ஆனால் இதுவரை அதற்க்கான முயற்சிகள் எடுக்கப்படவே இல்லை.. சரி..சிங்கப்பூரில் இது எப்படி சாத்தியமாயிற்று? கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்...
 
சிங்கப்பூரிலும் ஆறுகள் ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னாள் நம் கூவத்தை விட மோசமாக இருந்தது! அதனை தூமைப்படுத்தியது என்பது ஏதோ ஒரே இரவில் மேஜிக் செய்வது போல நடக்கவில்லை! அவர்களும் இன்றைய நிலையை அடைய பத்து வருடங்கள் போராட வேண்டி இருந்தது! அப்போதைய சிங்கபூர் அரசாங்கம் நீண்ட தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தீட்டி அதே நேரம் மக்களுக்கும் பாதிப்பில்லாமல்.. கம்பி மேல் நடப்பதைப்போல் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து இன்றைய நிலையை அடைந்தது!
 
It should be a way of life to keep the water clean,
to keep every stream, every culvert, every rivulet,
free from unnecessary pollution. In ten years let us
have fishing in the Singapore River and fishing in
the Kallang River. It can be done.
 
இது என்ன வரிகள்...யார் சொன்னது தெரியுமா? சிங்கபூர் அரசாங்கம் ஆறுகளை தூய்மைபடுத்த ஆரம்பிக்கும்போது அதாவது 1977 - இல் அப்போதைய பிரதமர் லீ க்வான் யூ சொன்ன வார்த்தைகள் இது! எவ்வளவு தன்னம்பிக்கை தெறிக்கிறது பாருங்கள்.. வார்த்தை அலங்காரம் இல்லை.. வெட்டி சபதம் இல்லை... ஆனால் பத்து வருடங்களில் செய்துமுடித்தார்! அதாவது 1987 - களில் அவரது கனவு நிறைவேறியது! எப்படி சாத்தியமாயிற்று?
 
1 . முதலில் குடியிருப்புகள்.. முறையான கழிவுநீர் செல்ல வழியில்லாமல் முறையான கழிப்பிட வசதியில்லாமல் அங்கு குடியிருந்த சுமார் 27000 குடும்பங்கள்தான் அவர்களது முதல் பார்வை. அதற்காக அவர்களை அப்படியே காலி செய்து தவிக்கவிடாமல் அவர்களுக்கு முறையான மாற்று இருப்பிடம் ஏற்ப்பாடு செய்து கொடுப்பது.
 
2 . உணவுப்பொருட்கள் உற்பத்தி நிலையம், வாகன பழுதுபார்க்கும் கடைகள் போன்றவற்றிற்கு தனித்தனி தொழிற்பேட்டைகளை அமைத்துகொடுப்பது. அவற்றின் கழிவுகள் முறையான சுத்திகரிப்பிற்கு பிறகே கால்வாயில் கலப்பதை உறுதிசெய்வது.
 
3 . அனைத்து பன்றி, மீன்  பண்ணைகளையும் மற்றும் வாத்துப் பண்ணைகளையும் ஒதுக்குபுறமாக அமைத்து அவற்றை இன்றுவரை முறையாக கண்காணித்து வருவது.
 
4 . அடுத்து நடைபாதைக்கடைகள்.. இவற்றால் சாலை போக்குவரத்து பாதிக்கபடுவது மட்டுமன்றி.. முறையான பாதைகள் இல்லாமல் கழிவுகள் அப்படியே கலப்பதை தடை செய்வதற்காக இவர்களை ஒருங்கிணைத்து ஒரு கடை தொகுதியை ( Hawkers Centre ) அரசாங்கமே அமைத்து கொடுத்தது.. இதில் முறையான குடிநீர், கழிவுநீர் பாதைகளோடு  வடிவமைத்து கொடுத்தது. இவ்வாறு அப்போதே சுமார் 5000 பேருக்கு அமைத்து கொடுத்தது.
 
5 . அடுத்து காய்கறி மற்றும் பழக்கடைகள்.. இவற்றிற்கு முறையான இடங்களை ஏற்படுத்திக்கொடுத்து அவற்றின் கழிவுகளை சுத்தப்படுத்த வசதிகளையும் ஏற்படுத்திகொடுத்து அவற்றை இன்றளவும் கண்காணிப்பது.
 
6 . ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் குப்பைகளும் அகற்றப்பட்டு அதன் கரைகளை அகலப்படுத்தியது.
 
7 . கரையோரங்களில் உள்ள குப்பையான கழிவுகள் அகற்றப்பட்டு அவற்றை ஆற்று மணல் கொண்டு நிரப்பியது.
 
8 . கழிப்பிட வசதியில்லாத மக்கள் கழிவுகளை ஆற்றில் கலப்பதை தவிர்க்க குடியுருப்புகளை அரசாங்கமே ஏற்படுத்தி கொடுத்தது.
 
இப்படி பல வழிகளை சிங்கபூர் அரசாங்கம் கையாண்டது..அதுமட்டும் அல்லாமல் இவற்றையெல்லாம் கண்காணிக்க முறையான அரசாங்க அமைப்புகளை உருவாக்கி அவற்றை திறம்பட நிர்வகித்து வருகின்றது. இப்படி முழு உள் கட்டமைப்பையே மாற்றுவது சென்னையில் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. உண்மைலே கூவத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தால் ஆட்சியாளர்கள் முதலில் பாதாள சாக்கடை திட்டத்தை முறையான திட்டங்களுடன் விரிவு படுத்த வேண்டும். என்னதான் சிங்கபூர் நிறுவனமாக இருந்தாலும் நமது அடிப்படை கொஞ்சம்.. இல்லை நிறையவே மாறவேண்டும்.
 
சென்னையில் கழிவறை வசதி இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலையை கொண்டுவரவேண்டும். மேலும் அனைத்து வீடுகளிலும் குளிக்கும் நீரும் பாதாள சாக்கடையில் கலப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை குழாய்களை முறையாக பராமரிக்கவும் பழுது பார்க்கவும் வேண்டும். இதற்க்கு சிங்கப்பூரில் உள்ளதைப்போல் அவற்றை 30 வருடங்களுக்கு மேல், 10 லிருந்து 29 வருடங்கள், 10 வருடங்களுக்கு குறைவானது என்று வகைப்படுத்தினால் பராமரிக்கவும் பழுது பார்க்கவும் எளிதாக இருக்கும்.. மேலும் பாதாள சாக்கடைகளை பழுது பார்க்க மனித உழைப்பை முழுவதும்  பயன்படுத்தாமல் நவீன தொழில்நுட்ப்பத்தை பயன்படுத்தலாம். இந்த நவீன தொழில்நுட்பம்(Sewer Rehabilitation) என்பதைப்பற்றி  தனி கட்டுரையே எழுதலாம். அது ஒரு கடல். அது இந்த கட்டுரைக்கு அவசியமில்லை. ஆட்சி அமைக்கும் அரசியல் கட்சிகள் வோட்டு அரசியலுக்காக ஆக்கிரமிப்புகளையும், தொழிற்சாலை கழிவுகளையும் கண்டுகொள்ளாமல் விடாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.


 
புறநகர்களில் மண் அள்ளுவதை தடுத்து பள்ளமாகாமல் தடுக்க வேண்டும். அப்போதுதான் நீரோட்டத்தில் கழிவுகள் அடித்து செல்ல வாய்ப்பு உண்டு. மேலும் ஆற்றின் கரைகளில் வணிக வளாகங்களையும் விடுதிகளையும் அரசாங்கமே ஏற்படுத்தி அதன்மூலம்  வரும்  வருமானத்தை  இதன் பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்! இப்படி சென்னையின் உட்க்கட்டமைப்பையே முழுதாக மாற்றுவது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை? ஆனால் கண்டிப்பாக இதெல்லாம் சாத்தியமானால் மட்டுமே கூவம் உண்மைலேயே மணக்கும். இல்லையென்றால் அரசியல்வாதிகளின் வார்த்தைகளும் இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்படும் பணத்தால் அவர்கள் வாழ்க்கையும் மட்டும்தான் மணக்கும்! அவர்கள் கூவத்தை கடக்கும்போது காரின் கண்ணாடியை ஏற்றிக்கொண்டு செல்லட்டும் நாம் வழக்கம் போல் மூக்கை பிடிக்க பழகிக்கொண்டு நம் வாரிசுகளுக்கும் பழகிக்கொடுப்போம்!