Friday, 15 August 2014

"ப்ரியா" ​- க்ரஸ் (வெர்சன் 1.0)
அன்றும் வழக்கம் போல நான் வகுப்பறையில் இருந்தேன். திடீர் என்று வகுப்பறையில் சின்னச் சல சலப்பு ஓடியது. பக்கத்து பெஞ்ச் ஜெயராமன் சொன்னான் நம்ம கிளாஸ்க்கு ஒரு புது பொண்ணு வர போகுதாம். இப்பதான் நம்ம ஊருக்கே வந்துருக்காங்களாம். அவ அப்பா போஸ்ட் மாஸ்டராம். போஸ்ட் ஆபிஸ் பக்கத்துல இருக்குல்ல ஒரு வீடு? அங்கதான் இருக்காங்களாம் என்று நான் கேக்காமலே நாக்கைத் தட்டித்  தட்டி சொல்லிக்கொண்டிருந்தான். அவனுக்கு மட்டும் இதெல்லாம் எப்பிடிதான் தெரியுமோ தெரியவில்லை! அவன் அப்பாவும் இங்கே டீச்சராக இருப்பதால் தெரிந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்! சொல்ல மறந்துட்டேனே! நான் அப்போது மூன்றாவது படித்துக்கொண்டிருந்தேன். எங்க கிளாஸ்ல ஏற்கனவே பொண்ணுங்க இருந்தாலும் ஊருக்கே புதுசா வந்த பொண்ணுங்றதால எல்லா பயலுகளும் வாசலையே பார்த்துகிட்டு இருந்தானுங்க.

அவளும் வந்தாள் அவள் அப்பாவின் கையை பிடித்தபடி இப்போதெல்லாம் "அம்மாவை" பார்க்கும் மந்திரியைப் போல பதுங்கியபடி! எங்க வாத்யார் அவளைப் பார்த்து "உன் பேர் என்னமா? எல்லோருக்கும் சொல்லு" என்றார். அவளும் தலைய குனிந்தபடியே "ப்ரியா" என்றாள். அப்போதுதான் எனக்கு பகீர் என்று மின்னல் வெட்டியது! நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க! நானே முக்கித்தக்கி ரெண்டாவது ரேங் எடுத்துகிட்டு இருந்தேன் அப்போ, முதல் ரேங் எடுப்பதுதான் லட்சியம்! இந்த பாழாப்போன ப்ரியா வேற நல்லா படிக்கிறவளா இருந்தா எங்க நம்ம லட்சியப்பாதைல குறுக்க வந்துருவாளோன்னு ஒரு பயம்தான். அவ நல்லா படிக்கிற புள்ளையா இல்லையான்னு தெரிஞ்சுக்காம அடுத்த வேலை செய்வதில்லை என்று மனதுக்குள் சத்தியம் செய்து கொண்டேன். அப்பிடி எதுவும் நேர்ந்துவிட கூடாதென்று பள்ளிக்கு எதிரில் இருக்கும் முத்திரிச்சந்தி(பேரே அதாங்க... பெயர் காரணமெல்லாம் தெரியாது!) கருப்பருக்கு பத்து பைசாவுக்கு சூடம் ஏற்றுவதாக வேண்டிக்கொண்டேன்!

மனதுக்குள்..  "கடலெண்ணெய் வாங்க கொடுத்த காசில் கமிசன் அடிச்சது இப்பிடியா போகணும்" என்று அடித்துக்கொண்டேன். இது அம்மாவின் சாபம் போல. அதையும் மீறி அவள் நல்லா படிக்கும் புள்ளையாய் இருந்துவிட்டால் அவள் பேரை சொல்லி அதே கருப்பருக்கு காசு வெட்டி போடுவதாகவும் தீர்மானம் எடுத்தேன். காசு வெட்டி போடுவதற்கு ஏதாவது செல்லாத காசு தேடும் படலத்தை இன்றே ஆரம்பிக்கவேண்டும் என்றும் முடிவு செய்தேன். இத்தனை தீர்மானங்களையும் அந்த ப்ரியா போய் பெஞ்சில் உக்காருவதற்குள் எடுத்தேன் என்றால் என்னுடைய வேகத்தைப் பாருங்கள். நியாயமா மன்மோகனுக்கு பதிலா நான் பிரதமர் ஆயிருக்கனும்!

அவ நல்லா படிப்பாளா இல்லையான்னு தெரிஞ்சுக்க ஒரே வழி ஓட்ட வாய் சுமதி! அந்த ப்ரியாவும் போய் அவபக்கதுலதான் உக்காந்தா. ஆனா கிளாஸ் நடக்கும்போது பேச முடியாது. அப்பிடி பேசினா இந்த பாழாப்போன கனபதிபிச்சை வாத்தியாரு அடிக்க மாட்டாரு, ஆனா கூப்புட்டு முன்னாடி நிக்க வச்சு அப்பிடியே குமிஞ்சு கால் கட்ட வெரல தொட சொல்லுவாரு முக்கியமா முட்டி மடங்க கூடாது! மடங்குனா முட்டிலே போடுவாரு! கால் நரம்பெல்லாம் விர்ர்ருன்னு இழுத்துகிட்டு மூளைல வந்து அடிக்கும். அது அவரு அடிக்கிறத விட கொடுமையா இருக்கும். ஆனா ஓட்ட வாய் சுமதிக்கு வாய் கொஞ்ச நேரம் மூடியிருந்தாதான் நரம்பெல்லாம் இழுத்துகிட்டு மூளைல அடிக்கும்போல! அவபாட்டுக்கு புத்தகத்த மூஞ்சிக்கு நேர வச்சுக்கிட்டு அந்த புது புள்ள கூட பேச ஆரம்பிச்சா! நானும் ரீசஸ் பிரியெட் ( இண்டர்வெல்தான்! இதுக்கு ஏன் அப்பிடி பேர் வந்துச்சுன்னு சத்தியாமா இப்பவரைக்கும் தெரியாது) வர்ற வரை வெயிட் பண்ணினேன்.

பெல் அடிச்சதுமே ஓடிப்போய் அந்த சுமதிகிட்டதான் போய் நின்னேன். "ஏய் நில்லுப்பா" என்றேன்! "என்னடா?" என்றாள். வழக்கமா அவ அப்பிடி "டா" போட்டா போடி அப்பிடின்னு சொல்லும் என் சினம் கொண்ட சிங்கத்த அடக்கி தூங்க வச்சேன். "அந்த புதுப்புள்ள நல்லா படிக்குமாப்பா? அவங்க சூழுல(ஸ்கூல்தான்) எத்தனாவது ரேங்கு எடுக்குமாம்?" என்றேன். அந்த சுமதியும் தன்னிடம் உள்ள தகவலுக்கு டிமாண்ட் இருப்பதைத் தெரிந்துகொண்டு "நான் சொல்லுவேன் ஆனா நாஞ் சொல்லனும்னா எனக்கு நீ ஒன்னு தரணும்" என்றாள். இப்போது போல அப்போதும் வெள்ளந்தியாகவே இருந்ததால் நீங்க நினைப்பது போல விவகாரமாக எல்லாம் நினைக்கவில்லை! "சரிஞ்சே..என்ன வேணும்?" என்றேன் பையில் உள்ள பத்து பைசாவை கெட்டியாக பிடித்துக்கொண்டு. 

அத கேட்டுருந்தா கூட அடுத்த கமிஷன்ல சேர்த்து அடிக்கலாம்னு கொடுத்துருப்பேன். அந்தச் சிரிக்கி ஒரு பொன்வண்டு வேணும்னு சொல்லிட்டா! ஒத்த பொன்வண்டுக்காக படிக்கிற புக்கையே தூக்கி கொடுத்துட்டு வீட்ல அடிவாங்கிக்கிற காலத்துல இருந்தோம். இருந்தாலும் என் லட்சியப்பாதைல தடை இருக்குமான்னு தெரிஞ்சிக்கிற ஆர்வத்துல அதுக்கும் சரின்னு சொல்லிட்டேன். அந்தச் சிரிக்கி மக சிரிக்கி எங்க ஊர்ல உள்ள அத்தன சாமி பேர்லயும் சத்தியம் வாங்கிகிட்டு பத்தாததுக்கு பக்கத்துக்கு ஊர் சாமி பேர்லயும் சத்தியம் வாங்கிக்கிட்டுதான் சொன்னா அந்த சேதிய. "அந்தப்புள்ளைக்கு அவங்க பழைய சூழுல படிப்பே வரலியாம்.. அதான் அவுக அப்பா இங்க சேர்த்துவிட்டாராம்" என்று சொன்னதுதாம்தான் என் லட்சியப்பாதையின் அமந்து போன லைட்டெல்லாம் எரிய ஆரம்பிச்சுச்சு. பத்து பைசா சூடதுக்கு ஆசப்பட்ட கருப்பருக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்.

என் அக்கா கூடவே பள்ளிக்கூடம் வர்ற எனக்கு அடுத்தநாள் ஆச்சர்யம் காத்திருந்தது! ப்ரியாவின் அக்கா என் அக்காவின் கிளாஸ்மேட். ஸ்கூல் போற வழிதான் போஸ்டாபிஸ். அத ஒட்டி அவுக வீடு. அக்கா அவங்க வீட்டுக்கு போய் ப்ரியாவோட அக்காவுக்கு வெயிட் பண்ணி கூட்டிக்கிட்டு போகும் நானும் ப்ரியா கூட பேசிகிட்டே போவேன். சொல்ல மறந்துட்டேனே, அவுக ஐயர் வீட்டு ஆளுக! அந்த ப்ரியாவ பார்த்து நான் ஆச்சர்யப் படுற விஷயம் அதோட கலரு! ஃபேர் அண்ட் லவ்லி இல்லாத காலத்துலே அப்பிடி ஒரு கலரு! நம்ம சொல்லவே வேணாம்! யானைக்கு பக்கத்துல நாம நடந்து போனா யான பெருமையா நினைச்சுக்கும் "நம்மளவிட கருப்பாவும் ஒருத்தன் இருக்காண்டான்னு!"

ஆனாலும் எங்களுக்கு அப்போது எந்த வித்தியாசமும் தோண வில்லை. வீட்டில் ஏதாவது பலகாரம் செய்தால் கூட காலையில் நடக்கும்போது எனக்கு மறக்காமல் தருவா! புரட்டாசி மாதம் நவராத்திரி வந்தா மறுநாள் நிறைய கிடைக்கும்! இப்படியேதான் போனது இரண்டு வருடம். இந்த இரண்டு வருடத்தில் அவுக வீட்டில் உனக்கு பிடிச்ச ப்ரெண்ட் யாருன்னு கேட்டா அவ என் பெயரை சொல்லவும் என் வீட்டில் கேட்டால் நான் அவ பெயரை சொல்லும் அளவுக்கு வந்தது! 

நாலாவது பரீட்சை முடிஞ்சு நான் எங்க ஊர் திருவிழா அத்த வீடு மாமா வீடுன்னு ஒரு ரவுண்டு அடிச்சு ஸ்கூல் திறக்க முதல் நாள்தான் ஊருக்கு வந்தேன். அடுத்த நாள் அக்காவோடு ஆர்வமாக ப்ரியா வீட்டுக்கு போனேன்! போனதும்தான் அந்த அதிர்ச்சி! இடைப்பட்ட இந்த இரண்டு மாதத்தில் ப்ரியா அப்பாவுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி குடும்பத்தோட வேற ஊருக்கு போயிட்டாராம்! ஏமாற்றத்துடன் திரும்போது பார்த்தேன், அவுக வீட்டு கதவில் காம்பஸ் கொண்டு விளையாட்டாக நான் அவள் பெயரையும் அவள் என் பெயரையும் எழுதிய எச்சங்களை சுமந்து கொண்டு எனக்கு இதில்சம்பந்தமே இல்லை என்பதுபோல கதவு அமைதியாக பூட்டிக்கொண்டு நின்றது!