Tuesday, 17 June 2014

இளையராஜாவின் இசைமேடையும் இன்பவேளையும்! -1

இசை... இது இல்லாத உலகத்தை நினைக்ககூட முடியாது.. கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இப்படி பல பரிணாமங்களில் இருந்தாலும் அவற்றையெல்லாம் என்னவென்றே தெரியாத என்னைப்போன்ற கிராமத்தான்களையும்  இசையை ரசிக்கவைத்த பெருமை இளையராஜாவையே சேரும்... இசை என்று எழுதும்போது அடுத்தவரி இளையராஜா என்று விரல்கள் செல்வதைத்  தடுக்கமுடியவில்லை... பிறந்ததில் இருந்து இசையை கேட்டுத்தான் வளருகின்றோம், இன்று தடுக்கி விழுந்தால் பாடல் கேட்க எத்தனையோ தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது! ஆனால் அப்போதெல்லாம் வானொலி மட்டுமே.. அதிலும் தென்கடற்கரை பகுதியாகிய எங்கள் பக்கம்  இசையை அதிகம் கொண்டு வந்து சேர்த்த பெருமை ஸ்ரீலங்காதான்...  வரிகள் புரியாமல் தாளம் போட்டு ஆட துவங்கியது இளையராஜா பாடல்களை கேட்டுதான்.

இன்றும் ஞாபகம் உள்ளது அலைகள் ஓய்வதில்லை படத்தில் "ஆயிரம் தாமரை மொட்டுகளே... " பாடல்.. இப்போது வேண்டுமானால் அது ஒரு காதலின் தவிப்பைச்  சொல்லுவது புரிகிறது... ஆனால்  வரிகளுக்கு  அர்த்தம் தெரியாமலே தலையை ஆட்ட வைத்த பெருமை அந்த துள்ளலான இசைக்கு உண்டு! இன்றைக்கு கூட தூக்கம் வராத இரவுகளில் என் காதுகளில் கசியவிடும் பாடல் சிப்பிக்குள் முத்து படத்தில் வரும்....

 " வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி..."

                                        

என்னைப்போல அம்மாவின் அருகில் இல்லாத எத்தனையோ பேருக்கு அன்னையாக இருந்து தாலாட்டு பாடும் தகுதி இளையராஜா இசையால் மட்டுமே முடியும்!அப்பிடியே அம்மாவின் மடியை விட்டு இறங்கி பள்ளியில் நண்பர்களோடு கலந்தபோது கொஞ்சம் துள்ளலான இசையை தேடி கேட்க துவங்கியது அப்போதுதான்.. இன்று என்னதான் ஐபாட், ஐபோன் அல்லது போஸ் ஹோம் தியேட்டரில் பாடல்கள்  கேட்டாலும் அன்று காலில் செருப்பில்லாமல் செம்மண் புழுதியில் திருவிழாவில் கேட்டு ஆடிய.. " பொதுவாக எம்மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்னு ஆடிய சந்தோசமான தருணங்களை இந்த தொழில் நுட்பம் தரவில்லை.. காதலின் சோகம் என்று தெரியாமலே சோகத்தோடு ஒன்றிப்போய் கேட்ட பாடல்... "அன்னக்கிளியே உன்னைத்தேடுதே... பாடல்தான்... இப்படி என்பதுகளில்  என்னவென்றே தெரியாமல் ராஜாவின் இசைக்குள் மூழ்கிய காலம் போய் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த " மாங்குயிலே பூங்குயிலே...பாடல் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ராஜாவின் இசைகளை தேடித்தேடி கேட்க ஆரம்பித்தது மனது.

அப்போதெல்லாம் இப்போதுபோல் எந்த வசதியும் இல்லை, என் மாமாவிடம் அடம்பிடித்து ஒரு பழைய டேப்ரெக்கார்டர் வாங்கி, அப்பப்ப உறவினர்கள் தரும் காசுகளை சேர்த்துவைத்து கேசட் வாங்கி பாடல்கள் கேட்ப்பேன். இப்போதுகூட அந்த பழைய டேப்ரெக்கார்டில் கேட்ட கரகாட்டக்காரன், ஈரமான ரோஜாவே போன்ற படங்களின் பாடல்களை கேட்டால் இளையராஜாவின் இசையோடு சேர்த்து அந்த பழைய நினைவுகளும் தாலாட்டி விட்டுச்செல்கிறது.இப்படி வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும், நமது ஒவ்வொரு உணர்ச்சிகளிலும் இளையராஜாவின் ஏதோ ஒரு பாடல் அந்த தருணங்களையும் உணர்ச்சிகளையும் தழுவிவிட்டே செல்கிறது. கடந்த இருபதாம் நூற்றாண்டில் இருந்து அடுத்த நூற்றாண்டுக்கு வந்துவிட்டாலும் ஏனோ..  இளையராஜாவின் அந்த கவுன்ட்டவுன் BGM- ம் SPB- யின் அந்த உச்சஸ்தாயி குரலும்தான் இன்றுவரை இளைஞர்களின் புத்தாண்டுகளை வரவேற்றுக்கொண்டிருக்கிறது.

பள்ளி படிப்பை முடித்து முதன்முதலில் கல்லூரிக்குள் கால்வைத்த போது லேசாக அரும்புமீசை அருவிய காலம், காதலைப்பற்றி தெரியாமல் அந்த ஆசையே இல்லாமல் இருந்தாலும் இளையராஜாவின் காதல் பாடல்களை கேட்டு அதை ரசிக்கவாது ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று கண்ம்மூடித்தனமாக முடிவு செய்த காலம் அது. எப்படியோ அந்த பெண் பக்கத்துவீட்டு பெண்தான் என்று முடிவுசெய்துவிட்டேன்! இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை, ஏனென்றால் அவளும் ஒரு பாடல் விரும்பி. அப்போதெல்லாம் இப்போது உள்ளதுபோல் SMS இல்லை, போன் இல்லை,மெயில் இல்லை எங்களுக்கு உள்ள ஒரே தூது பாடல்கள்தான். நாங்கள் நினைப்பதை சொல்லத்தான் ராஜாவின் இசை இருக்கிறதே? பிறகென்ன கவலை? இப்படி ராஜாவின் இசை திரைப்படங்களில் இசையை வளர்த்ததோ இல்லையோ.. எங்கள் காதலை நன்றாகவே வளர்த்தது.

ஆனால் அந்த காதலை சொல்லாமல் காத்திருக்கும் பலபேர்களுடைய தவிப்பை, அதைச்சொல்லிவிட்டு குறுகுறுப்போடு பதிலுக்கு காத்திருக்கும் குதூகலத்தை, அந்தக்காதலை ஒத்துக்கொண்டபிறகு கொண்டாடும் காதலின் துள்ளலை, அதே காதல் சூழ்நிலையால் குத்தி கிழிக்கப்பட்டு வாடும் காதலின் சோகத்தை.. இப்படி காதலின் எந்த பரிணாமத்தை எடுத்தாலும் இளையராஜாவின் இசை அங்கு அருவியாய் பாய்ந்துகொண்டிருக்கும். அனைவருமே ஏதோ ஒரு வகையில் இவற்றையெல்லாம் கடந்துதான் வந்திருக்கவேண்டும். எனக்குகூட இன்றும் ஞாபகம் இருக்கின்றது, முதன்முதலில் காதலிக்க முடிவுசெய்து அந்த பக்கத்துவீட்டு பெண்ணுக்கு கடிதம் கொடுத்துவிட்டு காத்திருக்கையில்..வானொலியில் இந்த பாடலைக்கேட்டு என்னை அறியாமல் கண்ணீர் துளிர்த்தது, இதுவரை கடந்து வந்த வாழ்க்கையில் எத்தனையோமுறை அழுதிருந்தாலும் அன்று சிந்திய அந்த இரண்டுதுளிக்கண்ணீர் இன்றும் ஞாபகம் இருக்காக்காரணம்  இந்தப்பாடல்தான்...

" மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே..
 தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத்தவிக்குதே மனமே...

                                        

என் தவிப்பையெல்லாம் தகர்த்து என் காதலை அவள் ஏற்றுக்கொண்ட பிறகு ஏதோ இந்த உலகத்தில் நானும் அவளும் மட்டுமே இருப்பதாய் கற்பனை செய்துகொண்டு திரிந்தபோது  அப்போதும் ராஜாவின் இசை மட்டுமே எங்களோடு துணைக்கு வந்தது. எந்த எதிர்காலப்பயமும் இல்லாமல் இந்த பாடலை நாங்கள் எத்தனைமுறை கேட்டிருப்போம் என்று எங்களுக்கே தெரியாது. இருந்தாலும் ஒவ்வொரு முறை கேட்க்கும்போதும் என் மனதில் உள்ள உணர்சிகளை இசையாய்.. வார்த்தைகளாய் வடித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது இந்த பாடலை கேட்க்கும்போது.. எனக்கு மட்டும் அல்ல காதலித்த/காதலிக்கும்  அனைவருக்குமே இந்த பாடலைக்கேட்க்கும்போது அந்த உணர்ச்சிதான் வரும்.. எதற்கும் நீங்களே கேளுங்கள் அந்தப்பாடலை.

" நீ பாதி நான் பாதி கண்ணே..
அருகில் நீ இன்றி தூங்காது என் கண்ணே..

                                                                                               

இளையராஜாவின் இசைக்கடலுக்கு என் வார்த்தைகள் எல்லாமே சின்ன மழைத்துளிகள்தான், அந்த மழைத்துளிகள் கூட கடலில் இருந்தே எடுத்த நன்றிக்காக இந்த மேகத்துளிகளின் வார்த்தைத்துளிகள் இன்னும் தொடரும்.


2 comments:

  1. //லேசாக அரும்புமீசை அருவிய காலம், காதலைப்பற்றி தெரியாமல் அந்த ஆசையே இல்லாமல் இருந்தாலும் //

    யாரு நீ??? ROFL.. :)))

    ReplyDelete
  2. யாரு நீ??? ROFL.. :)))///

    ச்சே... ஒரு நல்லவன இந்த உலகம் எப்பிடியெல்லாம் எள்ளி நகையாடுது :-)

    ReplyDelete