Wednesday, 2 April 2014

சிவகங்கைத் தொகுதி யாருக்கு? - ஒரு பார்வை!


எங்கு பார்த்தாலும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் களைகட்டி உள்ளது. எங்கள் அணிதான் ஜெயிக்கும் தோற்கும் என்று ஏராளமான கருத்துக் கணிப்புகள் போய்க்கொண்டிருக்கின்றன. ஏனென்றால் எப்போதும் இல்லாத வகையில் நான்கு முனைப்போட்டி தமிழகத்தில் நிலவுகின்றது. அதனால் இந்தக் கட்சிதான் அதிக இடங்களை கைப்பற்றும் என்று கணிப்பது கடினமான காரியம். அதனால் தமிழகம் முழுமைக்கும் கணிக்காமல் என்னுடைய சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு அதிகமான புள்ளி விபரங்களுக்குள் போகாமல் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் பலம் மற்றும் பலவீனத்தை மட்டும் கணக்கில் எடுத்து கணிக்க முயற்சிக்கிறேன்.இந்தியா முழுவது கவனிக்ககூடிய தொகுதியாக சிவகங்கை மாறியதற்கு காரணம் திரு.சிதம்பரம்தான். ஆனால் மாநில அரசுகளால் கண்டுகொள்ளப்படாமல் போவதற்கும் அவரே காரணமாகிவிட்டார். எப்போதுமே ஸ்டார் அந்தஸ்துடன் இந்த தொகுதி பார்க்கப்படும் ஆனால் சிவகங்கை தொகுதி மக்களுக்கு இன்னும் எட்டாத ஸ்டாராகவே இருக்கின்றது அடிப்படை தேவைகள். வர்த்தகத் துறை இணை அமைச்சர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் தற்போது நிதி அமைச்சர் என இந்தியாவின் உயர்ந்த பதவிகளை பலமுறை அலங்கரித்திருந்தாலும் அதனால் தொகுதிக்கு என்ன நன்மை என்றால் ஒன்றுமே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை! 

இன்னும் கல்விக் கடன் கொடுத்ததையே தனது சாதனையாக சொல்லிக் கொள்பவர், இன்னும் கல்விக்கு கூட கடன் வாங்கும் நிலையில்தான் தொகுதி மக்களை வைத்திருக்கிறோம் என்ற சோகத்தை அறியவில்லை போலும்! வானம் பார்த்த பூமியாக சிவங்கை தொகுதி மழையும் பொய்த்து விவசாயமும் பொய்த்து, மின்வெட்டால் சிறு தொழில்களும் நலிந்து, படித்தவர்களுக்கு வேலை இல்லாமல் அனைவரையும் வெளிநாட்டிற்கும் வெளி ஊர்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறது வறுமை! இந்தச் சூழ்நிலையில் வரும் தேர்தல் இந்தமுறை இன்னும் கூடுதல் கவனத்திற்கு வந்துவிட்டது. காரணம் சிதம்பரம் வயதைக் காரணம் காட்டி தன் மகனிற்கு வாய்ப்பை கொடுத்துவிட்டார். 

பாரதியஜனதா சார்பில் நிற்கும் ஹெச்.ராஜாவும் பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர்களில் முக்கியமானவர். அடுத்து திமுக நீண்ட காலத்திற்குப் பிறகு சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் களம் இறங்குகின்றது. ஒவ்வொரு முறையும் சிதம்பரத்திற்காக இந்த தொகுதியை தியாகம் செய்த திமுக இந்த முறை நேரடியாக களம் இருங்குவதால் கூடுதல் கவனம் பெறுகின்றது. அடுத்து அதிமுக. 1977-இல் இருந்து 80 வரை இந்த கட்சியின் சார்பில் பெரியசாமி தியாகராஜன் என்பவர் MP யாக இருந்துள்ளார், அதன்பிறகு பலதடவை போட்டியிட்டுருந்தாலும் வெற்றி பெற்றதில்லை.ஆகவே இந்தமுறை அதிக கவனம் பெறுகின்றது.

சிவகங்கைதொகுதியில் திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, ஆலங்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடக்கம். கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த ஆறு தொகுதிகளில் காரைக்குடி, திருமயம், ஆலங்குடி, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் அதிமுகவும் சிவகங்கையில் இந்தன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டும் வெற்றி பெற்றன. திருப்பத்தூர் தொகுதியில் மட்டும் திமுகவின் பெரியகருப்பன் வென்றார்.

செந்தில்நாதன் (அதிமுக)

அதிமுகவின் சார்பில் இந்தமுறை வேட்பாளராக நிறுதப்பட்டுருப்பவர் அதன் தற்போதைய சிவகங்கை மாவட்டச் செயலாளரான செந்தில்நாதன் என்பவர். நாகாடி செந்தில் என்றால் ஓரளவிற்கு பரிச்சயம் ஆனவர்.கடந்த சட்டமன்ற தேர்தலிலே இவருக்கு சீட் கிடைக்கும் என்று பேசப்பட்டது, ஆனால் சோழன் பழனிச்சாமிக்கு கிடைத்து எம்எல்ஏவும் ஆகிவிட்டார், அதனால் அப்போதே அம்மா இவருக்கு வாரியத்தலைவர் பதவியும் கொஞ்சநாளில் மாவட்டசெயலாளர் முருகானந்தை தூக்கிவிட்டு இவரை நியமித்தார். இப்போது நாடாளுமன்ற வேட்பாளர். 

பலம் :

சில உள்குத்துகள் இருந்தாலும் கவலை கொள்ளும் அளவிற்கு இல்லாதது இவரது பலம். மேலும் ஆளும்கட்சி என்பதால் பணத்திற்கு பஞ்சம் இல்லாமல் பிரச்சாரம் ஓடுகின்றது. தொகுதில் பெரும்பான்மையான தேவர்(கள்ளர்)இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கூடுதல் பலமுடன் வலம் வருகின்றார். அம்மாவின் காரைக்குடி பிரச்சாரம் கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது. மேலும் தற்போதைய எம்பியான சிதம்பரம் மீதான மக்களின் அதிருப்தி இவரை தெம்பாக வாக்கு கேட்க வைத்துள்ளது.

பலவீனம்: 

ஆளும்கட்சியாக இருப்பது முதல் பலவீனமும் கூட. கூட்டணி பலமும் இல்லை. அனைத்து சட்டமன்ற தொகுதிகளும் ஜெயித்தவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை. மேலும் மின்சாரப்பிரச்சனையை இந்த அரசு முழுவதுமாக தீர்க்கவில்லை. ஏற்கனவே வறட்சி பகுதியான சிவகங்கை மாவட்டம் கடந்த வருடம் மழையும் பொய்த்ததால் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவுகிறது. இதனால் மக்களின் அதிருப்தி பலமடங்கு கூடியுள்ளது. மேலும் எதிர்த்து போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் இவருக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. 

ஆகவே இவர் வெற்றிக்கனியை தொட கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

சுப.துரைராஜ் (திமுக)

திமுகவின் சார்பாக சுப.துரைராஜ் நிறுத்தப்பட்டு இருக்கின்றார். இவர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலேயே காரைக்குடி தொகுதி MLA ஆக இருந்தவர் (1984-89), எம்ஜிஆரின் இறப்பிற்கு பிறகு ஜெ அணி ஜானகி அணி என்று வந்தபிறகு அதே காரைக்குடி தொகுதியில் ஜானகி அணியின் சார்பாக நின்று தோற்றுப்போனார். அதன்பிறகு ஆர்எம் வீரப்பன் அணிமாறிய போது மாறி பின் வீரப்பன் எம்ஜிஆர் மன்றம் ஆரம்பித்தவுடன் அவருடன் இருந்தார் பின் திமுகவில் இணைந்து இப்போது வேட்பாளர் ஆயிருக்கின்றார். வசதிக்கு குறைவில்லாதவர். தொழில் அதிபர் படிக்காசு அவர்களுக்கு நெருக்கமானவர் மேலும் ஒரே சமுதாயத்தை சேர்த்தவர், ஆகவே எந்த சிரமமும் இல்லாமல் இவருக்கு சீட் கிடைத்து விட்டது.
ஏனென்றால் கடந்தமுறை எங்கும் இருந்த திமுக எதிர்ப்பு அலையையும் மீறி திமுகவின் பெரியகருப்பன் வெற்றிபெற படிக்காசும் அவர் சார்ந்த சமுதாயமும்தான்(வல்லம்பர்) காரணம் என்ற பேச்சு உண்டு.

பலம் 

சமுதாய பலம் மற்றும் பண பலம். ஆளும் கட்சியின் மீதான மக்களின் அதிருப்தி. மின்வெட்டு மற்றும் தண்ணீர்ப்பிரச்னை. பல கிராமங்களில் ஏற்கனவே அறிமுகம் ஆனவர் மற்றும் அனுபவம் வாய்ந்தவர். பல வருடங்களுக்குப் பிறகு திமுக நேரடியாக களம் இறங்குவதால் கட்சியினரின் உற்சாகம். சிதம்பரம் மீதான மக்களின் அதிருப்தி. இப்படி பல வகையில் இவருக்கு சாதகமான அம்சங்கள் இருக்கின்றன.

பலவீனம் 

திமுக மீதான ஸ்பெக்ட்ரம் ஊழல் கறை இன்னும் மக்கள் மறக்கவில்லை. சமீபத்திய அழகிரி பிரச்சனையில் ஏற்படும் உள்குத்துகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பலமான கூட்டணி இல்லாதது. இந்தனை முறை மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்தாலும் திமுகவின் சாதனையாக தொகுதிக்குள் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லாதது. 

இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் பிரசாரத்திலும், மக்களைக் கவர்வதிலும் கடைசிநேர கவனிப்பிலும் கவனம் செலுத்தினால் இவர் ஜெயிப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. 

ஹெச்.ராஜா (பிஜேபி)

பிஜேபி, தேமுதிக, மதிமுக, பாமக கூட்டணியின் சார்பாக பிஜேபியின் ஹெச் ராஜா களம் இறங்கியிருக்கின்றார். நன்கு படித்தவர், தொகுதிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆனவர்தான். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் சுதர்சன நாசியப்பனிடம் தோற்று இரண்டாம் இடம் வந்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தனியாக நின்ற சிதம்பரத்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளியவர். அடுத்து 2001ல் வந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணில் பிஜேபி சார்பாக நின்று காரைக்குடி தொகுதியில் ஜெயித்தவர். ஆகவே தேர்தல் அனுபவம் இவருக்கு நிறையவே உண்டு. 

பலம் 

நன்கு படித்தவர் என்ற பிம்பம். எம்எல்ஏவாக இருக்கும்போது ஆளும்கட்சியை எதிர்த்து போராட்டங்கள் செய்த அனுபவம். தொகுதியில் கணிசமாக இருக்கும் தேமுதிக மற்றும் மதிமுகவின் வாக்கு. கொஞ்ச நாட்களாக மோடிதான் பிரதமர் என்று ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம். திமுக மீதான ஊழல் கறை, ஆளும்கட்சி மற்றும் சிதம்பரம் மீதான மக்களின் அதிருப்தி. 

பலவீனம் 

கொஞ்சம் வாய்த் துடுக்கானவர். சமீபத்தில் பெரியாரை செருப்பால் அடிக்கவேண்டும் என்று பேசி எழுந்த சர்ச்சை. பிஜேபிக்கு என்று பெரிய வாக்கு வங்கி இல்லாதது. கூட்டணியில் உள்ள பாமக இந்தப்பகுதியில் அறவே இல்லாதது. மற்ற வேட்பாளர்களுடன் போட்டி போட்டு செலவழிக்க முடியாதது. கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து பிரச்சாரம் செய்வதில் இருக்கும் சிக்கல். 

இப்படி பலமும் பலவீனமும் மாறி மாறி இருந்தாலும் ஏதாவது ஆச்சர்யம் நிகழ்ந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் அல்லது மூன்றாவது இடத்திற்கு காங்கிரசுடன் போட்டி போடலாம்.
கார்த்திக் சிதம்பரம் (காங்கிரஸ்)

ஏழு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தனது தொகுதியில் இந்த தனது மகனைக் களம் இறக்கியிருக்கின்றார் ப.சி! வெற்றிபெற்ற ஏழு முறையும் கூட்டணி பலம் இருக்கும்போது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தனியாக நின்றபோது தோற்றுவிட்டார். இப்பொழுது வேட்பாளராக இருக்கும் கார்த்திக் சிதம்பரம் நன்கு படித்தவர். அதிரடியாக பேசக்கூடியவர். பசி இடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட அரசியலை செய்பவர். பசி யின் சார்பாக இதுவரை தொகுதி நிலவரங்களைக் கவனித்துக்கொண்டவர்.

பலம் 

ஜெயிக்க முடியாது என்றாலும் கவுரமான வாக்குகளை வாங்கி தங்கள் பலத்தை நிரூபிக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்க தயாராய் இருப்பது. தொகுதியில் பரவலாய் வங்கிகளை திறந்து மக்களுக்கு விவசாயக் கடனையும் கல்விக் கடனையும் எளிதில் கிடைக்கப்பெற செய்தது. போன்றவை இவருக்கு சாதகமாக இருக்கும். சமீபத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் ஃபெல் நிறுவனத்தை தொகுதிக்கு கொண்டுவந்தது.

பலவீனம் 

இவரது தந்தை சிதம்பரம்தான் இவரது பலவீனமும்! இத்தனைமுறை உயர்வான பதவிகளில் இருந்தும் தொகுதிக்கு சிறப்பாக ஒன்றும் செய்யாதது. சமீபத்தில் 2G வழக்கில் அடிப்பட்ட இவரது பெயர். ஈழத் தமிழர் விவகாரம். ஃபெல் நிறுவனம் கொண்டு வந்தாலும் மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுக்காதது. சரியான ரயில் வசதி இல்லாதது போன்றவை இவரை அதிகமாகப் பாதிக்கும். ஆனாலும் கவுரமான வாக்குகளைப் பெறுவார் என்றே தோன்றுகிறது.1 comment:

  1. CASINOS LIVE TO POKER GAMING LIVE in Pennsylvania
    › casinos › 대구광역 출장안마 details › k_tah › casinos › details › k_tah › casinos › details › k_tah › casinos › details › k_tah › casinos › details › k_tah › casinos › details › k_tah › casinos › details › k_tah › casinos › details › k_tah › casinos › details › k_tah › casinos › details › k_tah › casinos › details › k_tah › casinos › details › k_tah › casinos 익산 출장샵 › details › k_tah › casinos › details › k_tah › casinos › details › k_tah › casinos › details › k_tah › casinos › details › k_tah › casinos › details 보령 출장마사지 › k_tah › 용인 출장안마 casinos › details › k_tah › 충청남도 출장안마 casinos

    ReplyDelete