Thursday, 18 September 2014

பேச்சுலர்ஸ் சமையல்! - திருக்கை மீன் குழம்பு!

என்னைய மாதிரி பேச்சுலர்களுக்கு... வெயிட்.. என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியும்! கழுதை வயசு ஆகியும் இன்னும் என்ன பேச்சுலர்ன்னுதானே? அட தங்ஸ் ஊருக்கு போய்ட்டாங்கப்பா.. இங்க இருந்தா மட்டும்? அப்பவும் சமையல் நாமதேன்! (வேற வழி?) என்னதான் கடைல நான்வெஜ் சாப்ட்டாலும் நம்ம வீட்டுல வாங்கி அத சுத்தமா கிளீன் பண்ணி சமைச்சு சாப்டரதுலதான் தனிருசியே இருக்கும்னு நீங்க நினைச்சா நீங்களும் என் நண்பனே! வாங்க உங்களுக்காகத்தான் இந்த பதிவே! புருஷன் மேல பாவப்பட்டு இனியாவது நல்ல சாப்பாடு சமைச்சு போடுவோம்னு நினைக்கிற அம்மணிகளும் இந்தப் பதிவ கண்டுக்கலாம்!

திருக்கை மீன் கேள்விப்பட்டுருப்பீங்க, நிறைய பேருக்கு அதை முறையா எப்பிடி சமைக்கணும்னு தெரியல. அந்த குறை இனி இருக்காது. . விளக்கம் குறைவாகவே கொடுக்குறேன், அடுத்தடுத்த ஸ்டெப்களை புகைப்படமாகவே தர முயற்சி பண்ணியிருக்கேன் பார்த்துக்கங்க. சரி.. முதலில் தேவையான பொருட்கள பார்த்துருவோம். 

திருக்கை மீன்       -      ஒரு கிலோ

சின்ன வெங்காயம் - தேவையான அளவு

பூண்டு -                           ஒரு முழு பூண்டை உரிக்காமல் நச்சு வைத்துக்கொள்ளவும்

பச்சை மிளகாய் -        தேவையான அளவு

மிளகுதூள்            -        கொஞ்சம் மிளகு எடுத்து மிக்சியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்

புளி                        -         தேவையான அளவு ஊற வைத்துக்கொள்ளவும்.

வெந்தயம் -                  தேவையான அளவு 

( கீழே உள்ள போட்டோவைப் பார்த்துக்கொள்ளவும் )அடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் காயந்ததும் (நல்லெண்ணெய்யாக இருந்தால் டேஸ்ட் நல்லா இருக்கும் ) வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் வெட்டி வைத்த பச்சை மிளகாய் பூண்டு எடுத்து போட்டுருங்க.சிறிது நேரத்தில் அதில் வெட்டி வச்ச வெங்காயம் எடுத்து போட்டு லேசா உப்பு சேர்த்து கொஞ்சம்  வதங்கும் வரை நல்லா கிண்டி விடுங்க. கீழ போட்டோ பாருங்க.

வெங்காயம் வதந்கிருச்சுன்னா இப்ப தக்காளிய போடலாம். தக்காளி போட்டு நல்லா வதங்க விடுங்க.தக்காளி வெங்காயம் நல்லா வதங்கி மிக்ஸ் ஆனதும் அதுல லேசா மஞ்சள் தூள் போட்டு கிண்டுங்க, கொஞ்சம் கிண்டுனதும் அதுல பொடி பண்ணி வச்ச மிளகுத் தூள போட்டு நல்லா கிண்டி விட்டு அடுப்ப சிம்ல வச்சு நல்லா வதங்க விடுங்க.கொஞ்ச நேரம் கழிச்சி அதுல மிளகாய் மல்லித் தூள் போட்டு நல்லா வதக்குங்க. ( நான் செட்டிநாட்டு ஆளு, காரம் கொஞ்சம் கூட போட்டுருப்பேன் போட்டோல! நீங்கவேணா கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாம்!) 
பொடி போட்டு நல்லா வதங்குனதும் அதுல கரைச்சு வச்ச புளித் தண்ணிய ஊத்தி நல்லா கிண்டி விடுங்க. உப்பும் சரி பார்த்துக்கங்க. இப்ப கொஞ்ச நேரம் அடுப்ப கொஞ்சம் கூட்டி வச்சு பாதிரத்த மூடி வச்சுருங்க. அது நல்லா கொதிச்சு கொஞ்சம் வத்தி வரும் நேரத்துல கிளீன் பண்ணி வச்சுருக்க மீன எடுத்து அதுல போட்டுருங்க. கீழ உள்ள போட்டோஸ் பாருங்க.

மீன் போட்டதும் அடுப்ப சிம்ல வச்சு மூடி வச்சுருங்க. கொஞ்ச நேரத்துல வெந்துரும். மீன் வெந்ததும் ஒரு நாலு பல்லு பூண்ட நச்சு அதுல போட்டு (கொஞ்சம் கொத்தமல்லி இருந்தாலும் சேர்த்து போடலாம்) மூடிட்டு அடுப்ப அமத்திருங்க. உடனே சாப்பிடாம ஒரு அரை மணி நேரமாவது வெயிட் பண்ணுங்க. இப்ப திருக்கை மீன் குழம்பு தயார்!மத்த மீன்களுக்கும் இதே பார்முலாதான். அந்த மிளகுதூள் மட்டும் தேவை இல்ல, மத்தபடி இதே மெதட்தான். ட்ரை பண்ணி பாருங்க. முக்கியமா கல்யாணம் ஆன ஆண்கள் சமைக்கும்போது உங்க தாங்க்ஸயும் பெண்கள் தங்கள் மாமியாரையும் நினைக்காமல் சமைப்பது நலம்! அப்பறம் மிளகாதூள கூட போட்டுட்டு காரம் அதிகமாயிருச்சுன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பு இல்ல!

அடுத்து உங்கள செட்டிநாட் சிக்கென் மாசாலாவோட சந்திக்கிறேன்!


Friday, 15 August 2014

"ப்ரியா" ​- க்ரஸ் (வெர்சன் 1.0)
அன்றும் வழக்கம் போல நான் வகுப்பறையில் இருந்தேன். திடீர் என்று வகுப்பறையில் சின்னச் சல சலப்பு ஓடியது. பக்கத்து பெஞ்ச் ஜெயராமன் சொன்னான் நம்ம கிளாஸ்க்கு ஒரு புது பொண்ணு வர போகுதாம். இப்பதான் நம்ம ஊருக்கே வந்துருக்காங்களாம். அவ அப்பா போஸ்ட் மாஸ்டராம். போஸ்ட் ஆபிஸ் பக்கத்துல இருக்குல்ல ஒரு வீடு? அங்கதான் இருக்காங்களாம் என்று நான் கேக்காமலே நாக்கைத் தட்டித்  தட்டி சொல்லிக்கொண்டிருந்தான். அவனுக்கு மட்டும் இதெல்லாம் எப்பிடிதான் தெரியுமோ தெரியவில்லை! அவன் அப்பாவும் இங்கே டீச்சராக இருப்பதால் தெரிந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்! சொல்ல மறந்துட்டேனே! நான் அப்போது மூன்றாவது படித்துக்கொண்டிருந்தேன். எங்க கிளாஸ்ல ஏற்கனவே பொண்ணுங்க இருந்தாலும் ஊருக்கே புதுசா வந்த பொண்ணுங்றதால எல்லா பயலுகளும் வாசலையே பார்த்துகிட்டு இருந்தானுங்க.

அவளும் வந்தாள் அவள் அப்பாவின் கையை பிடித்தபடி இப்போதெல்லாம் "அம்மாவை" பார்க்கும் மந்திரியைப் போல பதுங்கியபடி! எங்க வாத்யார் அவளைப் பார்த்து "உன் பேர் என்னமா? எல்லோருக்கும் சொல்லு" என்றார். அவளும் தலைய குனிந்தபடியே "ப்ரியா" என்றாள். அப்போதுதான் எனக்கு பகீர் என்று மின்னல் வெட்டியது! நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க! நானே முக்கித்தக்கி ரெண்டாவது ரேங் எடுத்துகிட்டு இருந்தேன் அப்போ, முதல் ரேங் எடுப்பதுதான் லட்சியம்! இந்த பாழாப்போன ப்ரியா வேற நல்லா படிக்கிறவளா இருந்தா எங்க நம்ம லட்சியப்பாதைல குறுக்க வந்துருவாளோன்னு ஒரு பயம்தான். அவ நல்லா படிக்கிற புள்ளையா இல்லையான்னு தெரிஞ்சுக்காம அடுத்த வேலை செய்வதில்லை என்று மனதுக்குள் சத்தியம் செய்து கொண்டேன். அப்பிடி எதுவும் நேர்ந்துவிட கூடாதென்று பள்ளிக்கு எதிரில் இருக்கும் முத்திரிச்சந்தி(பேரே அதாங்க... பெயர் காரணமெல்லாம் தெரியாது!) கருப்பருக்கு பத்து பைசாவுக்கு சூடம் ஏற்றுவதாக வேண்டிக்கொண்டேன்!

மனதுக்குள்..  "கடலெண்ணெய் வாங்க கொடுத்த காசில் கமிசன் அடிச்சது இப்பிடியா போகணும்" என்று அடித்துக்கொண்டேன். இது அம்மாவின் சாபம் போல. அதையும் மீறி அவள் நல்லா படிக்கும் புள்ளையாய் இருந்துவிட்டால் அவள் பேரை சொல்லி அதே கருப்பருக்கு காசு வெட்டி போடுவதாகவும் தீர்மானம் எடுத்தேன். காசு வெட்டி போடுவதற்கு ஏதாவது செல்லாத காசு தேடும் படலத்தை இன்றே ஆரம்பிக்கவேண்டும் என்றும் முடிவு செய்தேன். இத்தனை தீர்மானங்களையும் அந்த ப்ரியா போய் பெஞ்சில் உக்காருவதற்குள் எடுத்தேன் என்றால் என்னுடைய வேகத்தைப் பாருங்கள். நியாயமா மன்மோகனுக்கு பதிலா நான் பிரதமர் ஆயிருக்கனும்!

அவ நல்லா படிப்பாளா இல்லையான்னு தெரிஞ்சுக்க ஒரே வழி ஓட்ட வாய் சுமதி! அந்த ப்ரியாவும் போய் அவபக்கதுலதான் உக்காந்தா. ஆனா கிளாஸ் நடக்கும்போது பேச முடியாது. அப்பிடி பேசினா இந்த பாழாப்போன கனபதிபிச்சை வாத்தியாரு அடிக்க மாட்டாரு, ஆனா கூப்புட்டு முன்னாடி நிக்க வச்சு அப்பிடியே குமிஞ்சு கால் கட்ட வெரல தொட சொல்லுவாரு முக்கியமா முட்டி மடங்க கூடாது! மடங்குனா முட்டிலே போடுவாரு! கால் நரம்பெல்லாம் விர்ர்ருன்னு இழுத்துகிட்டு மூளைல வந்து அடிக்கும். அது அவரு அடிக்கிறத விட கொடுமையா இருக்கும். ஆனா ஓட்ட வாய் சுமதிக்கு வாய் கொஞ்ச நேரம் மூடியிருந்தாதான் நரம்பெல்லாம் இழுத்துகிட்டு மூளைல அடிக்கும்போல! அவபாட்டுக்கு புத்தகத்த மூஞ்சிக்கு நேர வச்சுக்கிட்டு அந்த புது புள்ள கூட பேச ஆரம்பிச்சா! நானும் ரீசஸ் பிரியெட் ( இண்டர்வெல்தான்! இதுக்கு ஏன் அப்பிடி பேர் வந்துச்சுன்னு சத்தியாமா இப்பவரைக்கும் தெரியாது) வர்ற வரை வெயிட் பண்ணினேன்.

பெல் அடிச்சதுமே ஓடிப்போய் அந்த சுமதிகிட்டதான் போய் நின்னேன். "ஏய் நில்லுப்பா" என்றேன்! "என்னடா?" என்றாள். வழக்கமா அவ அப்பிடி "டா" போட்டா போடி அப்பிடின்னு சொல்லும் என் சினம் கொண்ட சிங்கத்த அடக்கி தூங்க வச்சேன். "அந்த புதுப்புள்ள நல்லா படிக்குமாப்பா? அவங்க சூழுல(ஸ்கூல்தான்) எத்தனாவது ரேங்கு எடுக்குமாம்?" என்றேன். அந்த சுமதியும் தன்னிடம் உள்ள தகவலுக்கு டிமாண்ட் இருப்பதைத் தெரிந்துகொண்டு "நான் சொல்லுவேன் ஆனா நாஞ் சொல்லனும்னா எனக்கு நீ ஒன்னு தரணும்" என்றாள். இப்போது போல அப்போதும் வெள்ளந்தியாகவே இருந்ததால் நீங்க நினைப்பது போல விவகாரமாக எல்லாம் நினைக்கவில்லை! "சரிஞ்சே..என்ன வேணும்?" என்றேன் பையில் உள்ள பத்து பைசாவை கெட்டியாக பிடித்துக்கொண்டு. 

அத கேட்டுருந்தா கூட அடுத்த கமிஷன்ல சேர்த்து அடிக்கலாம்னு கொடுத்துருப்பேன். அந்தச் சிரிக்கி ஒரு பொன்வண்டு வேணும்னு சொல்லிட்டா! ஒத்த பொன்வண்டுக்காக படிக்கிற புக்கையே தூக்கி கொடுத்துட்டு வீட்ல அடிவாங்கிக்கிற காலத்துல இருந்தோம். இருந்தாலும் என் லட்சியப்பாதைல தடை இருக்குமான்னு தெரிஞ்சிக்கிற ஆர்வத்துல அதுக்கும் சரின்னு சொல்லிட்டேன். அந்தச் சிரிக்கி மக சிரிக்கி எங்க ஊர்ல உள்ள அத்தன சாமி பேர்லயும் சத்தியம் வாங்கிகிட்டு பத்தாததுக்கு பக்கத்துக்கு ஊர் சாமி பேர்லயும் சத்தியம் வாங்கிக்கிட்டுதான் சொன்னா அந்த சேதிய. "அந்தப்புள்ளைக்கு அவங்க பழைய சூழுல படிப்பே வரலியாம்.. அதான் அவுக அப்பா இங்க சேர்த்துவிட்டாராம்" என்று சொன்னதுதாம்தான் என் லட்சியப்பாதையின் அமந்து போன லைட்டெல்லாம் எரிய ஆரம்பிச்சுச்சு. பத்து பைசா சூடதுக்கு ஆசப்பட்ட கருப்பருக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்.

என் அக்கா கூடவே பள்ளிக்கூடம் வர்ற எனக்கு அடுத்தநாள் ஆச்சர்யம் காத்திருந்தது! ப்ரியாவின் அக்கா என் அக்காவின் கிளாஸ்மேட். ஸ்கூல் போற வழிதான் போஸ்டாபிஸ். அத ஒட்டி அவுக வீடு. அக்கா அவங்க வீட்டுக்கு போய் ப்ரியாவோட அக்காவுக்கு வெயிட் பண்ணி கூட்டிக்கிட்டு போகும் நானும் ப்ரியா கூட பேசிகிட்டே போவேன். சொல்ல மறந்துட்டேனே, அவுக ஐயர் வீட்டு ஆளுக! அந்த ப்ரியாவ பார்த்து நான் ஆச்சர்யப் படுற விஷயம் அதோட கலரு! ஃபேர் அண்ட் லவ்லி இல்லாத காலத்துலே அப்பிடி ஒரு கலரு! நம்ம சொல்லவே வேணாம்! யானைக்கு பக்கத்துல நாம நடந்து போனா யான பெருமையா நினைச்சுக்கும் "நம்மளவிட கருப்பாவும் ஒருத்தன் இருக்காண்டான்னு!"

ஆனாலும் எங்களுக்கு அப்போது எந்த வித்தியாசமும் தோண வில்லை. வீட்டில் ஏதாவது பலகாரம் செய்தால் கூட காலையில் நடக்கும்போது எனக்கு மறக்காமல் தருவா! புரட்டாசி மாதம் நவராத்திரி வந்தா மறுநாள் நிறைய கிடைக்கும்! இப்படியேதான் போனது இரண்டு வருடம். இந்த இரண்டு வருடத்தில் அவுக வீட்டில் உனக்கு பிடிச்ச ப்ரெண்ட் யாருன்னு கேட்டா அவ என் பெயரை சொல்லவும் என் வீட்டில் கேட்டால் நான் அவ பெயரை சொல்லும் அளவுக்கு வந்தது! 

நாலாவது பரீட்சை முடிஞ்சு நான் எங்க ஊர் திருவிழா அத்த வீடு மாமா வீடுன்னு ஒரு ரவுண்டு அடிச்சு ஸ்கூல் திறக்க முதல் நாள்தான் ஊருக்கு வந்தேன். அடுத்த நாள் அக்காவோடு ஆர்வமாக ப்ரியா வீட்டுக்கு போனேன்! போனதும்தான் அந்த அதிர்ச்சி! இடைப்பட்ட இந்த இரண்டு மாதத்தில் ப்ரியா அப்பாவுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி குடும்பத்தோட வேற ஊருக்கு போயிட்டாராம்! ஏமாற்றத்துடன் திரும்போது பார்த்தேன், அவுக வீட்டு கதவில் காம்பஸ் கொண்டு விளையாட்டாக நான் அவள் பெயரையும் அவள் என் பெயரையும் எழுதிய எச்சங்களை சுமந்து கொண்டு எனக்கு இதில்சம்பந்தமே இல்லை என்பதுபோல கதவு அமைதியாக பூட்டிக்கொண்டு நின்றது!

Friday, 20 June 2014

இளையராஜாவி​ன் இசைமேடையும் இன்பவேளையு​ம்! - 3

இளையராஜாவி​ன் இசைமேடையும் இன்பவேளையு​ம்! - 2

ஒவ்வொரு முறையும் இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் இந்தப் பகுதியோடு முடித்துவிடலாம் என்றுதான் ஆரம்பிப்பேன்! ஆனால் நிறைவு செய்யும் போது, ஆஹா.. அந்தப்பாடலை சொல்லாமல் விட்டோமே? இந்தப்பாடலை சொல்லாமல் விட்டோமே என்று மனதிலே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் பல பாடல்கள் வரிசையாய் வந்துபோகும்! அதனால்தான் நிறைவு செய்யும் போது இசைப்பயணம் தொடரும் என்று என்னையறியாமல் போடுவேன்! இப்போது கூட இதை ஆரம்பிக்கும்போது எந்த வித திட்டமிடலும் இல்லாமல்தான் ஆரம்பிக்கிறேன்!

ஆனாலும் இன்பமோ.. துன்பமோ, எதுவாக இருந்தாலும் இளையராஜாவின் இசையாலே அவைகளை கடந்து வந்ததாலோ என்னவோ, ஒவ்வொரு செல்களின் அவரது இசை சாம்ராஜ்யம் விரவிக் கிடக்கிறது! எண்பதுகளிலும் சரி தொண்ணூறுகளிலும் சரி.. அவர் உச்சத்தில் இருக்கும் போது அவரைப்பற்றிய வதந்திகள் கொடி கட்டிப் பறக்கும்! ஆனால் அவற்றுக்கெல்லாம் வார்த்தைகளால் பதில் சொல்லாமல் தன் இசையாலே பதில் சொல்லிக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம்! இப்போதும் கூட இது இளையராஜா என்ற தனி மனிதனை பற்றிய பதிவு அல்ல! இது இளையராஜா என்ற இசை மனிதனைப் பற்றிய பதிவு! 

காதலையும் தாண்டி.... அவரது இசை புகுந்து செல்லாத இடமே என்று கூடச் சொல்லலாம்! ஒவ்வொருத்தருக்குமே தன் அம்மா மீது பாசம் இருக்கும், ஆனால் எல்லோருமே போய் தன் அம்மாவிடம் அதை வார்த்தைகளால் வர்ணித்துக் கொண்டு இருக்க முடியாது! ஆனால் இளையராஜா அம்மாவை வைத்து பல பாடல்களை படைத்திருக்கிறார்! அம்மாவின் பாசத்துக்கு அர்த்தம் சொன்னது அவரது இசை மட்டுமே! ஏனோ.. அவரது அம்மா பற்றிய பாடல்களை கேட்க்கும் போது இனி அம்மாவின் கண்களில் இருந்து கண்ணீரே வர விட கூடாது என்று ஒருமுறையேனும் நாம் நினைக்கத்தூண்டும்! 

அதுதான் அவரது இசை! அதிலும் " அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்று ஜேசுதாஸ் ராஜாவின் இசையில் உருகும்போது நம் கண்களில் வரும் கண்ணீரை நம்மால் தடுக்க முடியாது! இந்த பாடலின் ஜீவன் என்று பார்த்தால் அது வாலியின் வரிகளா? ஜேசுதாசின் குரலா? ராஜாவின் இசையா என்று பார்த்தால் இப்போது கூட விடை கிடைக்காது... ஆனால் அம்மாவை தூக்கி எறிந்தவனாக இருந்தாலும் மனதுக்குள் கண்ணீர் வருவதை அவனாலே தவிர்க்க முடியாத பாடல் இது!

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே...மனதை உருக வைப்பதிலும் சரி.. அதே மனதை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்வதிலும் சரி இசைக்கு நிகர் எதுவுமே இல்லை! அதிலும் ராஜாவின் ராகமாக இருந்துவிட்டால் கேள்வியே இல்லை! ஏனென்றால்.. எந்த சூழலை மனதில் வைத்து அவர் மெட்டு அமைக்கிறாரோ அதே சூழலில் நம் நம் மனதையும் ரெக்கை கட்டி பறக்க வைப்பார்! இப்போது உள்ள குத்துப்பாட்டு, கானா பாட்டு போன்ற எந்த வரையறைக்கும் அடங்காமல் நம்மை கொண்டாட்டம் போட வைக்கும் துள்ளலான எத்தனையோ பாடல்களை அவர் படைத்திருக்கிறார்! 

அதிலும் அந்தப்பாடல்  ரஜினிக்கு என்றால் அவரது ஆர்மோனியம் அவருக்கே அடங்காமல் கொண்டாட்டம் போடும்போல? நீங்கள் கவனித்துப்பார்த்தால் தெரியும், ஒவ்வொரு ரஜினி படத்திலும் ராஜா தனி ஆவர்த்தனமே படைத்திருப்பார்! இந்தப்பாடலை கம்போஸ் செய்யும்போது ராஜா என்னை போல ரஜினி ரசிகர்களை பார்த்து அவர் அப்போது இப்பிடித்தான் கேட்டிருப்பார்? " கண்ணா..ரெண்டாவது லட்டு திங்க ஆசையா?" என்று! என்ன பாடலா? நீங்களே கேட்டுப்பாருங்கள், மனதின் பல புதிய வாசல்களை திறக்கும் வித்தைகள் அறிந்த வித்தகனின் இந்தப் பாடலை! 

"அடி ராக்கம்மா கையத் தட்டு.......
எத்தனையோ வருடங்கள் கழித்துச் சில பாடல்களைக்  கேட்டாலும், அந்தப்பாடலோடு நாம் நெருக்கமாக உணர்ந்த பல ஞாபகங்களை கிளறி விட்டுச்  செல்லும்! அது அந்த பாடலின் தாக்கமா அல்லது நாம் கடந்து வந்த அந்த சம்பவத்தின் தாக்கமா என்று தெரியாது! ஆனாலும் அந்தப்பாடலை எப்போது கேட்டாலும் பழைய ஞாபங்களை சளைக்காமல் நமக்கு கொண்டு வந்து கொடுத்துக்கொண்டே இருக்கும்! இப்போது போல்  நினைத்தவுடன் வீடியோ அல்லது போட்டோ எடுக்கும் வசதி அப்போது இல்லை.
ஆனாலும் இன்றும் கிராமத்தின் வேர்களாய் கலாசாரத்தின் எச்சங்களாய் விரவி இருக்கும் எங்கள் ஊர்  திருவிழாக்களை கடல் கடந்து இருக்கும் நாங்கள்,  சில பாடல்களை கேட்ட மாத்திரத்தில் இணையத்தை விட வேகமாக தேடி எடுத்து நாங்கள் கடந்து வந்து திருவிழா காட்சிகளை கண் முன்னே கொண்டுவந்து தருவதில் இளையராஜாவின் இசையை தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்! அதிலும் இந்தப்பாடலை கொஞ்சம் கண் மூடி கேட்டால் போதும், டவுசரை இறுக்கி பிடித்தபடி அருள் வந்து சாமி ஆடுபவருக்கு பயந்த காலம் கண் முன்னால் விரியும்!

"அம்மன் கோவில் கும்பம் வருது...
                                                             சோகப்பாடல் என்றாலே அது காதலை நினைத்துதான் என்றில்லை! சோகம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான்! சோகத்தைக் கடக்கும் வலிமை எல்லோருக்கும் இருப்பதில்லை! ஏன்.. அதை சொல்லக்கூட பலரும் விரும்புவதில்லை! ஆனாலும் அது ஒரு பாறைக்குள் அமர்ந்த தேரை போலதான்! உள்ளுக்குள்ளே இருக்கும், தகுந்த உளி வந்து உடைக்கும் வரை! இந்த பாடல் வந்த புதிதில் இதன் சோகம் புரியவில்லை! ஆனாலும் ஏதோ ஒன்று இந்தப்பாடலை கேட்க்கத்தூண்டும்! இன்று.. இதயமே பிதுங்கி வழியும் அளவிற்கு சோகங்களை சுமந்து கொண்டு திரிகிறோம்! அதை வெளிக்காட்ட கூட நேரம் இருப்பதில்லை! ஆனாலும் பயணங்களின் போது ஆழ்ந்த அமைதியில் இந்த பாடலை கேட்க்கும்போது இறங்க வேண்டிய இடம் வந்தும் இந்த பாடல் முடியும் தருணம் வரை பயணம் செய்ய வைக்கிறது ராஜாவின் இசை! நீங்களும் கேட்டுப் பாருங்கள்!

"பூங்காற்று திரும்புமா...
நான் முன்பே சொன்னதுபோல ரஜினி படம் என்றாலே ராஜாவின் ராஜ்ஜியம் அங்கு குதியாட்டம் போடும்! சாதாரண டூயட் பாடலைக்கூட தனது இசைக் கோர்வைகளால் மாலைகளாய்க் கொண்டு வந்து நம் மனதுக்குள் சத்தம் இல்லாமல் சூடி விட்டுச் சென்று விடுவார்! காதலிக்கிற பெண்ணுக்கு மானின் விழியா இருந்தாலும் சரி.. மாலைக்கண் விழியா இருந்தாலும் சரி.. இந்தப்பாடலை கேட்க்கும்போது மனக்கண்ணில் நம் காதலி வந்துபோவதை உணரமுடியும்! 

இந்த மாதிரியான பாடல்களை கேட்கும்போது, ஏதோ.. நாம் இந்தப் பூமியில் பிறந்திருப்பதே காதலிக்கத்தானோ என்றுதான் தோன்றும்! இந்தப்பாடலின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை தாளத்தில் ஒரு துள்ளல் இருந்துகொண்டே இருக்கும்! இப்போது இந்தப்பாடலை கேட்டால் கூட ஒரு ஐந்து நிமிடமாவது நம் பழைய வயதிற்குள் சென்று வந்த திருப்தி இருக்கும்! எதற்கும் நீங்களே ஒருமுறை கேட்டுப்பாருங்கள்!

"மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே...
                                                             நான் ஆரம்பத்திலே சொன்னதுபோல நான் சொல்லாமல் விட்ட பாடல்கள் என்னைக் கேட்காமலே என் வரிகளில் வந்து விழுந்துகொண்டு இருக்கிறது! இதை இன்னொருமுறையும் தொடர்ந்து விட்டுத்தான் போகிறேனே? 

Thursday, 19 June 2014

இளையராஜாவி​ன் இசைமேடையும் இன்பவேளையு​ம்! - 2
ராஜாவின் ராகத்தாலாட்டைப்  பற்றி எழுத நினைக்கையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவங்களும் போட்டி போட்டு என்   முன்னாள்  வந்து  விழுகின்றன.                                               அனேகமாக என்பதுகளின் ஆரம்பத்தில்  இருந்து  தொன்னூறுகளின் இறுதிவரை... இந்த இடைப்பட்ட காலத்தில் பிறந்து வளர்ந்த தலைமுறை கொடுத்துவைத்த தலைமுறை என்றே சொல்லவேண்டும். அந்த கொடுத்துவைத்த தலைமுறையில் நானும் ஒருவன் என்று நினைக்கும்போது பின்னணியில் ராகதேவன் வயலின் வாசிப்பதுபோல ஒரு ஃபீலிங்.

நான் காதலிக்கிறேன் என்ற உணர்வையும் தாண்டி அந்தக்காதலை ராஜாவின் ராகத்தோடு என் காதலை  குழைத்துப்பார்க்கும்போது காதலின் ஒவ்வொரு மணித்துளியையும் சொர்க்கமாக மாற்றிய தருணங்கள் அவை. எதோ ஒரு திருவிழா காலத்தில் எங்கள் வீட்டில் கோவிலுக்கு மாவிளக்கு வைக்க மாவிடிக்கும் பின்னணி ஓசையில் வாசலில் நின்று அவளை ரசித்துக்கொண்டிருக்கையில் கோவில் குழாயில்  பாடிய இந்தப்பாடல் இதோ இன்றுவரை நெஞ்சுக்கூட்டுக்குள் அவள் நினைவுகளையும் சேர்த்தே  இடித்துக்கொண்டிருக்கிறது. நீங்களே கேட்டுப்ப்பாருங்கள்....

"மதுர மரிக்கொழுந்து வாசம்... என் ராசாத்தி உன்னுடைய நேசம்......
                                                             


காதலிப்பது சுகம்தான் அதிலும் அந்த காதலி பக்கத்துக்கு வீட்டில் இருந்து விட்டால் சொல்லவே வேணாம்... எங்களின் ஒவ்வொரு வார்த்தைப் பரிமாற்றமும்  ராஜாவின் இசையோடுதான் பரிமாறிக்கொள்வோம். என்  ஒவ்வொரு  காலையுமே அவளின் திருக்கோலத்தோடும் அவள் வாசலில் போடும் வண்ணக்கோலத்தோடும்தான் விடியும். அதுவும் மார்கழி வந்துவிட்டால் போதும்.

அந்த அதிகாலை பனியோடும்  ஈரம்  சொட்டும் கூந்தலோடும் அவள் வந்து நிற்கும்போது என்னை அறியாமல் என் வாய் முனுமுனுக்கும் பாடல் " பனிவிழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்.." இப்படி ஒவ்வொரு அதிகாலையுமே ராஜாவின் இசையோடு கலந்தே அவளை சுவாசித்துக்  கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் கோலத்தின் நடுவில் சாணிப் பிள்ளையாரில்  அவள் வைக்கும் பூசணிப்பூவோடு சேர்த்து என் நினைவுகளையும் அவளோடு சேர்த்து சொருகி விட்டே சென்றாள். இதை தெரிந்த ராஜாவும் எனக்காகவே போட்டு தந்த பாட்டுத்தான் இது..

" வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா..வச்சிப்புட்டா.... 

    


இசை என்பதும் ஒரு கடவுள்தான். அதற்க்குத் தகுந்த கருவறை கிடைத்துவிட்டால் போதும் அதன் அருள்வீச்சு அனைவருக்கும் பரவும். அப்படிப் பார்த்தால் ராக தேவனும் ஒரு இசையின் கருவறைதான். இசைக்கடவுளை உள்வைத்து அதன் அருளை அனைவருக்கும் அள்ளி அள்ளி வழங்கும் ஒரு இசைக்கோவில். இசை என்பது ஒரு கலை அல்ல.. அது ஒரு தவம். எல்லாமே இசையின்  வடிவம்தான்  என்றாலும் கேட்டவுடன்  உயிரை உருக வைக்கும் இசை என்பது  அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

இசையினால் மழை பொழியும்.. இரும்பும் உருகும்  இவையெல்லாம் பெரிதல்ல.. மனிதனின் மனம் உருகவேண்டும்.. ஏனென்றால் மனித மனம் நினைத்த மாத்திரத்தில் வேற்று கிரகம்கூட சென்று வரும் ஒரு அதிவேக ராக்கெட். அந்த வேகத்தையே நிறுத்தி ஒரு இடத்தில நிறுத்தி வைக்கும் இசைதான் தெய்வீக இசை. அது ராஜாவுக்கு மட்டுமே வாய்த்தது.  ஆன்மீக உணர்வு அதிகம் இல்லையென்றாலும் ஏதோ ஒரு காலையில் முதன் முதலில் இந்த பாடலை கேட்ட போது தேகம் சிலிர்த்து நானும் சொல்ல ஆரம்பித்தேன்...

"ஜனனி..ஜனனி... ஜகம் நீ அகம் நீ...எந்த ஒரு ஆன்மீகத்தேடலிலும் மனதில் குருவாக ஒருவரை நினைத்திருப்போம். எனக்கு அப்போதெல்லாம் ரமணரை பற்றி அதிகம் தெரியாது. 96- களின்  இறுதி என்று நினைக்கிறேன். ராஜாவின் ரமணர் பாமாலை ஒலி வடிவம் வந்தது. அதை கேட்டபோது ரமணர் யாரென்று தெரியாமலே அவரை நினைத்து உருக வைத்த இசை அது. இப்போது நான்கடவுள் படத்தில் வந்த "பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்" பாடல் அந்த இசை தொகுப்பில் உள்ளதுதான். அதே தொகுப்பில் பவதாரிணி பாடிய இந்த "ஆராவமுதே அன்பே ரமணா.... பாடலை கேளுங்கள்... உங்கள் புதிய ஆன்மீக உலகம் கண்ணில் தெரியும்.
எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் இருந்தே ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் மீதி ஒரு பக்தி உண்டு. என்ன காரணம் என்றெல்லாம் தெரியாது. சிறு வயதில் பள்ளிக் காலத்தில் ஜெயந்தி டீச்சர் என்று ஒருவர். தீவிரமான ராகவேந்திரர் பக்தை. அவர்கள் அடிக்கடி சொல்லிய ராகவேந்திரர் கதைகள் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.  அதன்பிறகு அவரின் வரலாற்றை தேடிப்படித்தேன். அதன் காரணமாகவே ரஜினி மீது ஒரு ஈர்ப்பு வந்தது தனிக்கதை. ஆனால் இன்று வரை என் ஆன்மீகத்தின் குரு என்றால் அது ஸ்ரீராகவேந்திரர்தான்.

சில சமயம் நினைத்துப்பார்ப்பேன். அவர் ஜீவ சமாதி ஆன அந்த நேரத்தில் நான் அங்கு இருந்து அதை பார்த்திருந்தால் என் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்று. அதே காட்சி  ஸ்ரீராகவேந்திரர் படத்தில் வரும். காட்சி என்று பார்த்தால் அது ஒரு படத்தில் வரும் காட்சி அவ்வளவுதான். ஆனால் அதற்கு இளையராஜா கொடுத்திருப்பார் பாருங்கள்... ஒரு உணர்வுப்பூர்வமான இசை.. நான் அந்த நேரத்தில் அங்கு இல்லையே என்ற குறையை இந்த இசை பிரவாகத்தின் மூலம் தீர்த்து வைத்தார் ராஜா. அந்த பாடலில் வரும் " குருவே சரணம்... குருவே சரணம்...." என்ற வரிகளை உச்சரிக்கும்போது ஸ்ரீராகவேந்திரரின் பாதத்தில் வீழ்ந்து கிடப்பதுபோல் ஒரு உணர்வு வரும். இதோ...இதை எழுதும்போதே என் உடம்பில் வரும் அதிர்வையும்  புல்லரிப்பையும் என்னால் உணரமுடிகின்றது. இந்த பாடலைக்கேட்டு  நீங்களும் ஒரு முறை சொல்லிப்பாருங்கள்

 " குருவே சரணம்... குருவே சரணம்..

       
                                                        


ராஜாவின் இசையோடு கலந்த எனது பயணமும் தொடர்ந்து  கொண்டே இருக்கும்.....


Tuesday, 17 June 2014

இளையராஜாவின் இசைமேடையும் இன்பவேளையும்! -1

இசை... இது இல்லாத உலகத்தை நினைக்ககூட முடியாது.. கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இப்படி பல பரிணாமங்களில் இருந்தாலும் அவற்றையெல்லாம் என்னவென்றே தெரியாத என்னைப்போன்ற கிராமத்தான்களையும்  இசையை ரசிக்கவைத்த பெருமை இளையராஜாவையே சேரும்... இசை என்று எழுதும்போது அடுத்தவரி இளையராஜா என்று விரல்கள் செல்வதைத்  தடுக்கமுடியவில்லை... பிறந்ததில் இருந்து இசையை கேட்டுத்தான் வளருகின்றோம், இன்று தடுக்கி விழுந்தால் பாடல் கேட்க எத்தனையோ தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது! ஆனால் அப்போதெல்லாம் வானொலி மட்டுமே.. அதிலும் தென்கடற்கரை பகுதியாகிய எங்கள் பக்கம்  இசையை அதிகம் கொண்டு வந்து சேர்த்த பெருமை ஸ்ரீலங்காதான்...  வரிகள் புரியாமல் தாளம் போட்டு ஆட துவங்கியது இளையராஜா பாடல்களை கேட்டுதான்.

இன்றும் ஞாபகம் உள்ளது அலைகள் ஓய்வதில்லை படத்தில் "ஆயிரம் தாமரை மொட்டுகளே... " பாடல்.. இப்போது வேண்டுமானால் அது ஒரு காதலின் தவிப்பைச்  சொல்லுவது புரிகிறது... ஆனால்  வரிகளுக்கு  அர்த்தம் தெரியாமலே தலையை ஆட்ட வைத்த பெருமை அந்த துள்ளலான இசைக்கு உண்டு! இன்றைக்கு கூட தூக்கம் வராத இரவுகளில் என் காதுகளில் கசியவிடும் பாடல் சிப்பிக்குள் முத்து படத்தில் வரும்....

 " வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி..."

                                        

என்னைப்போல அம்மாவின் அருகில் இல்லாத எத்தனையோ பேருக்கு அன்னையாக இருந்து தாலாட்டு பாடும் தகுதி இளையராஜா இசையால் மட்டுமே முடியும்!அப்பிடியே அம்மாவின் மடியை விட்டு இறங்கி பள்ளியில் நண்பர்களோடு கலந்தபோது கொஞ்சம் துள்ளலான இசையை தேடி கேட்க துவங்கியது அப்போதுதான்.. இன்று என்னதான் ஐபாட், ஐபோன் அல்லது போஸ் ஹோம் தியேட்டரில் பாடல்கள்  கேட்டாலும் அன்று காலில் செருப்பில்லாமல் செம்மண் புழுதியில் திருவிழாவில் கேட்டு ஆடிய.. " பொதுவாக எம்மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்னு ஆடிய சந்தோசமான தருணங்களை இந்த தொழில் நுட்பம் தரவில்லை.. காதலின் சோகம் என்று தெரியாமலே சோகத்தோடு ஒன்றிப்போய் கேட்ட பாடல்... "அன்னக்கிளியே உன்னைத்தேடுதே... பாடல்தான்... இப்படி என்பதுகளில்  என்னவென்றே தெரியாமல் ராஜாவின் இசைக்குள் மூழ்கிய காலம் போய் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த " மாங்குயிலே பூங்குயிலே...பாடல் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ராஜாவின் இசைகளை தேடித்தேடி கேட்க ஆரம்பித்தது மனது.

அப்போதெல்லாம் இப்போதுபோல் எந்த வசதியும் இல்லை, என் மாமாவிடம் அடம்பிடித்து ஒரு பழைய டேப்ரெக்கார்டர் வாங்கி, அப்பப்ப உறவினர்கள் தரும் காசுகளை சேர்த்துவைத்து கேசட் வாங்கி பாடல்கள் கேட்ப்பேன். இப்போதுகூட அந்த பழைய டேப்ரெக்கார்டில் கேட்ட கரகாட்டக்காரன், ஈரமான ரோஜாவே போன்ற படங்களின் பாடல்களை கேட்டால் இளையராஜாவின் இசையோடு சேர்த்து அந்த பழைய நினைவுகளும் தாலாட்டி விட்டுச்செல்கிறது.இப்படி வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும், நமது ஒவ்வொரு உணர்ச்சிகளிலும் இளையராஜாவின் ஏதோ ஒரு பாடல் அந்த தருணங்களையும் உணர்ச்சிகளையும் தழுவிவிட்டே செல்கிறது. கடந்த இருபதாம் நூற்றாண்டில் இருந்து அடுத்த நூற்றாண்டுக்கு வந்துவிட்டாலும் ஏனோ..  இளையராஜாவின் அந்த கவுன்ட்டவுன் BGM- ம் SPB- யின் அந்த உச்சஸ்தாயி குரலும்தான் இன்றுவரை இளைஞர்களின் புத்தாண்டுகளை வரவேற்றுக்கொண்டிருக்கிறது.

பள்ளி படிப்பை முடித்து முதன்முதலில் கல்லூரிக்குள் கால்வைத்த போது லேசாக அரும்புமீசை அருவிய காலம், காதலைப்பற்றி தெரியாமல் அந்த ஆசையே இல்லாமல் இருந்தாலும் இளையராஜாவின் காதல் பாடல்களை கேட்டு அதை ரசிக்கவாது ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று கண்ம்மூடித்தனமாக முடிவு செய்த காலம் அது. எப்படியோ அந்த பெண் பக்கத்துவீட்டு பெண்தான் என்று முடிவுசெய்துவிட்டேன்! இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை, ஏனென்றால் அவளும் ஒரு பாடல் விரும்பி. அப்போதெல்லாம் இப்போது உள்ளதுபோல் SMS இல்லை, போன் இல்லை,மெயில் இல்லை எங்களுக்கு உள்ள ஒரே தூது பாடல்கள்தான். நாங்கள் நினைப்பதை சொல்லத்தான் ராஜாவின் இசை இருக்கிறதே? பிறகென்ன கவலை? இப்படி ராஜாவின் இசை திரைப்படங்களில் இசையை வளர்த்ததோ இல்லையோ.. எங்கள் காதலை நன்றாகவே வளர்த்தது.

ஆனால் அந்த காதலை சொல்லாமல் காத்திருக்கும் பலபேர்களுடைய தவிப்பை, அதைச்சொல்லிவிட்டு குறுகுறுப்போடு பதிலுக்கு காத்திருக்கும் குதூகலத்தை, அந்தக்காதலை ஒத்துக்கொண்டபிறகு கொண்டாடும் காதலின் துள்ளலை, அதே காதல் சூழ்நிலையால் குத்தி கிழிக்கப்பட்டு வாடும் காதலின் சோகத்தை.. இப்படி காதலின் எந்த பரிணாமத்தை எடுத்தாலும் இளையராஜாவின் இசை அங்கு அருவியாய் பாய்ந்துகொண்டிருக்கும். அனைவருமே ஏதோ ஒரு வகையில் இவற்றையெல்லாம் கடந்துதான் வந்திருக்கவேண்டும். எனக்குகூட இன்றும் ஞாபகம் இருக்கின்றது, முதன்முதலில் காதலிக்க முடிவுசெய்து அந்த பக்கத்துவீட்டு பெண்ணுக்கு கடிதம் கொடுத்துவிட்டு காத்திருக்கையில்..வானொலியில் இந்த பாடலைக்கேட்டு என்னை அறியாமல் கண்ணீர் துளிர்த்தது, இதுவரை கடந்து வந்த வாழ்க்கையில் எத்தனையோமுறை அழுதிருந்தாலும் அன்று சிந்திய அந்த இரண்டுதுளிக்கண்ணீர் இன்றும் ஞாபகம் இருக்காக்காரணம்  இந்தப்பாடல்தான்...

" மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே..
 தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத்தவிக்குதே மனமே...

                                        

என் தவிப்பையெல்லாம் தகர்த்து என் காதலை அவள் ஏற்றுக்கொண்ட பிறகு ஏதோ இந்த உலகத்தில் நானும் அவளும் மட்டுமே இருப்பதாய் கற்பனை செய்துகொண்டு திரிந்தபோது  அப்போதும் ராஜாவின் இசை மட்டுமே எங்களோடு துணைக்கு வந்தது. எந்த எதிர்காலப்பயமும் இல்லாமல் இந்த பாடலை நாங்கள் எத்தனைமுறை கேட்டிருப்போம் என்று எங்களுக்கே தெரியாது. இருந்தாலும் ஒவ்வொரு முறை கேட்க்கும்போதும் என் மனதில் உள்ள உணர்சிகளை இசையாய்.. வார்த்தைகளாய் வடித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது இந்த பாடலை கேட்க்கும்போது.. எனக்கு மட்டும் அல்ல காதலித்த/காதலிக்கும்  அனைவருக்குமே இந்த பாடலைக்கேட்க்கும்போது அந்த உணர்ச்சிதான் வரும்.. எதற்கும் நீங்களே கேளுங்கள் அந்தப்பாடலை.

" நீ பாதி நான் பாதி கண்ணே..
அருகில் நீ இன்றி தூங்காது என் கண்ணே..

                                                                                               

இளையராஜாவின் இசைக்கடலுக்கு என் வார்த்தைகள் எல்லாமே சின்ன மழைத்துளிகள்தான், அந்த மழைத்துளிகள் கூட கடலில் இருந்தே எடுத்த நன்றிக்காக இந்த மேகத்துளிகளின் வார்த்தைத்துளிகள் இன்னும் தொடரும்.


Wednesday, 2 April 2014

சிவகங்கைத் தொகுதி யாருக்கு? - ஒரு பார்வை!


எங்கு பார்த்தாலும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் களைகட்டி உள்ளது. எங்கள் அணிதான் ஜெயிக்கும் தோற்கும் என்று ஏராளமான கருத்துக் கணிப்புகள் போய்க்கொண்டிருக்கின்றன. ஏனென்றால் எப்போதும் இல்லாத வகையில் நான்கு முனைப்போட்டி தமிழகத்தில் நிலவுகின்றது. அதனால் இந்தக் கட்சிதான் அதிக இடங்களை கைப்பற்றும் என்று கணிப்பது கடினமான காரியம். அதனால் தமிழகம் முழுமைக்கும் கணிக்காமல் என்னுடைய சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு அதிகமான புள்ளி விபரங்களுக்குள் போகாமல் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சியின் பலம் மற்றும் பலவீனத்தை மட்டும் கணக்கில் எடுத்து கணிக்க முயற்சிக்கிறேன்.இந்தியா முழுவது கவனிக்ககூடிய தொகுதியாக சிவகங்கை மாறியதற்கு காரணம் திரு.சிதம்பரம்தான். ஆனால் மாநில அரசுகளால் கண்டுகொள்ளப்படாமல் போவதற்கும் அவரே காரணமாகிவிட்டார். எப்போதுமே ஸ்டார் அந்தஸ்துடன் இந்த தொகுதி பார்க்கப்படும் ஆனால் சிவகங்கை தொகுதி மக்களுக்கு இன்னும் எட்டாத ஸ்டாராகவே இருக்கின்றது அடிப்படை தேவைகள். வர்த்தகத் துறை இணை அமைச்சர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் தற்போது நிதி அமைச்சர் என இந்தியாவின் உயர்ந்த பதவிகளை பலமுறை அலங்கரித்திருந்தாலும் அதனால் தொகுதிக்கு என்ன நன்மை என்றால் ஒன்றுமே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை! 

இன்னும் கல்விக் கடன் கொடுத்ததையே தனது சாதனையாக சொல்லிக் கொள்பவர், இன்னும் கல்விக்கு கூட கடன் வாங்கும் நிலையில்தான் தொகுதி மக்களை வைத்திருக்கிறோம் என்ற சோகத்தை அறியவில்லை போலும்! வானம் பார்த்த பூமியாக சிவங்கை தொகுதி மழையும் பொய்த்து விவசாயமும் பொய்த்து, மின்வெட்டால் சிறு தொழில்களும் நலிந்து, படித்தவர்களுக்கு வேலை இல்லாமல் அனைவரையும் வெளிநாட்டிற்கும் வெளி ஊர்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறது வறுமை! இந்தச் சூழ்நிலையில் வரும் தேர்தல் இந்தமுறை இன்னும் கூடுதல் கவனத்திற்கு வந்துவிட்டது. காரணம் சிதம்பரம் வயதைக் காரணம் காட்டி தன் மகனிற்கு வாய்ப்பை கொடுத்துவிட்டார். 

பாரதியஜனதா சார்பில் நிற்கும் ஹெச்.ராஜாவும் பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர்களில் முக்கியமானவர். அடுத்து திமுக நீண்ட காலத்திற்குப் பிறகு சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் களம் இறங்குகின்றது. ஒவ்வொரு முறையும் சிதம்பரத்திற்காக இந்த தொகுதியை தியாகம் செய்த திமுக இந்த முறை நேரடியாக களம் இருங்குவதால் கூடுதல் கவனம் பெறுகின்றது. அடுத்து அதிமுக. 1977-இல் இருந்து 80 வரை இந்த கட்சியின் சார்பில் பெரியசாமி தியாகராஜன் என்பவர் MP யாக இருந்துள்ளார், அதன்பிறகு பலதடவை போட்டியிட்டுருந்தாலும் வெற்றி பெற்றதில்லை.ஆகவே இந்தமுறை அதிக கவனம் பெறுகின்றது.

சிவகங்கைதொகுதியில் திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, ஆலங்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடக்கம். கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த ஆறு தொகுதிகளில் காரைக்குடி, திருமயம், ஆலங்குடி, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் அதிமுகவும் சிவகங்கையில் இந்தன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டும் வெற்றி பெற்றன. திருப்பத்தூர் தொகுதியில் மட்டும் திமுகவின் பெரியகருப்பன் வென்றார்.

செந்தில்நாதன் (அதிமுக)

அதிமுகவின் சார்பில் இந்தமுறை வேட்பாளராக நிறுதப்பட்டுருப்பவர் அதன் தற்போதைய சிவகங்கை மாவட்டச் செயலாளரான செந்தில்நாதன் என்பவர். நாகாடி செந்தில் என்றால் ஓரளவிற்கு பரிச்சயம் ஆனவர்.கடந்த சட்டமன்ற தேர்தலிலே இவருக்கு சீட் கிடைக்கும் என்று பேசப்பட்டது, ஆனால் சோழன் பழனிச்சாமிக்கு கிடைத்து எம்எல்ஏவும் ஆகிவிட்டார், அதனால் அப்போதே அம்மா இவருக்கு வாரியத்தலைவர் பதவியும் கொஞ்சநாளில் மாவட்டசெயலாளர் முருகானந்தை தூக்கிவிட்டு இவரை நியமித்தார். இப்போது நாடாளுமன்ற வேட்பாளர். 

பலம் :

சில உள்குத்துகள் இருந்தாலும் கவலை கொள்ளும் அளவிற்கு இல்லாதது இவரது பலம். மேலும் ஆளும்கட்சி என்பதால் பணத்திற்கு பஞ்சம் இல்லாமல் பிரச்சாரம் ஓடுகின்றது. தொகுதில் பெரும்பான்மையான தேவர்(கள்ளர்)இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கூடுதல் பலமுடன் வலம் வருகின்றார். அம்மாவின் காரைக்குடி பிரச்சாரம் கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது. மேலும் தற்போதைய எம்பியான சிதம்பரம் மீதான மக்களின் அதிருப்தி இவரை தெம்பாக வாக்கு கேட்க வைத்துள்ளது.

பலவீனம்: 

ஆளும்கட்சியாக இருப்பது முதல் பலவீனமும் கூட. கூட்டணி பலமும் இல்லை. அனைத்து சட்டமன்ற தொகுதிகளும் ஜெயித்தவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை. மேலும் மின்சாரப்பிரச்சனையை இந்த அரசு முழுவதுமாக தீர்க்கவில்லை. ஏற்கனவே வறட்சி பகுதியான சிவகங்கை மாவட்டம் கடந்த வருடம் மழையும் பொய்த்ததால் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவுகிறது. இதனால் மக்களின் அதிருப்தி பலமடங்கு கூடியுள்ளது. மேலும் எதிர்த்து போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் இவருக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. 

ஆகவே இவர் வெற்றிக்கனியை தொட கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

சுப.துரைராஜ் (திமுக)

திமுகவின் சார்பாக சுப.துரைராஜ் நிறுத்தப்பட்டு இருக்கின்றார். இவர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலேயே காரைக்குடி தொகுதி MLA ஆக இருந்தவர் (1984-89), எம்ஜிஆரின் இறப்பிற்கு பிறகு ஜெ அணி ஜானகி அணி என்று வந்தபிறகு அதே காரைக்குடி தொகுதியில் ஜானகி அணியின் சார்பாக நின்று தோற்றுப்போனார். அதன்பிறகு ஆர்எம் வீரப்பன் அணிமாறிய போது மாறி பின் வீரப்பன் எம்ஜிஆர் மன்றம் ஆரம்பித்தவுடன் அவருடன் இருந்தார் பின் திமுகவில் இணைந்து இப்போது வேட்பாளர் ஆயிருக்கின்றார். வசதிக்கு குறைவில்லாதவர். தொழில் அதிபர் படிக்காசு அவர்களுக்கு நெருக்கமானவர் மேலும் ஒரே சமுதாயத்தை சேர்த்தவர், ஆகவே எந்த சிரமமும் இல்லாமல் இவருக்கு சீட் கிடைத்து விட்டது.
ஏனென்றால் கடந்தமுறை எங்கும் இருந்த திமுக எதிர்ப்பு அலையையும் மீறி திமுகவின் பெரியகருப்பன் வெற்றிபெற படிக்காசும் அவர் சார்ந்த சமுதாயமும்தான்(வல்லம்பர்) காரணம் என்ற பேச்சு உண்டு.

பலம் 

சமுதாய பலம் மற்றும் பண பலம். ஆளும் கட்சியின் மீதான மக்களின் அதிருப்தி. மின்வெட்டு மற்றும் தண்ணீர்ப்பிரச்னை. பல கிராமங்களில் ஏற்கனவே அறிமுகம் ஆனவர் மற்றும் அனுபவம் வாய்ந்தவர். பல வருடங்களுக்குப் பிறகு திமுக நேரடியாக களம் இறங்குவதால் கட்சியினரின் உற்சாகம். சிதம்பரம் மீதான மக்களின் அதிருப்தி. இப்படி பல வகையில் இவருக்கு சாதகமான அம்சங்கள் இருக்கின்றன.

பலவீனம் 

திமுக மீதான ஸ்பெக்ட்ரம் ஊழல் கறை இன்னும் மக்கள் மறக்கவில்லை. சமீபத்திய அழகிரி பிரச்சனையில் ஏற்படும் உள்குத்துகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பலமான கூட்டணி இல்லாதது. இந்தனை முறை மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்தாலும் திமுகவின் சாதனையாக தொகுதிக்குள் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லாதது. 

இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் பிரசாரத்திலும், மக்களைக் கவர்வதிலும் கடைசிநேர கவனிப்பிலும் கவனம் செலுத்தினால் இவர் ஜெயிப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. 

ஹெச்.ராஜா (பிஜேபி)

பிஜேபி, தேமுதிக, மதிமுக, பாமக கூட்டணியின் சார்பாக பிஜேபியின் ஹெச் ராஜா களம் இறங்கியிருக்கின்றார். நன்கு படித்தவர், தொகுதிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆனவர்தான். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் சுதர்சன நாசியப்பனிடம் தோற்று இரண்டாம் இடம் வந்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தனியாக நின்ற சிதம்பரத்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளியவர். அடுத்து 2001ல் வந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணில் பிஜேபி சார்பாக நின்று காரைக்குடி தொகுதியில் ஜெயித்தவர். ஆகவே தேர்தல் அனுபவம் இவருக்கு நிறையவே உண்டு. 

பலம் 

நன்கு படித்தவர் என்ற பிம்பம். எம்எல்ஏவாக இருக்கும்போது ஆளும்கட்சியை எதிர்த்து போராட்டங்கள் செய்த அனுபவம். தொகுதியில் கணிசமாக இருக்கும் தேமுதிக மற்றும் மதிமுகவின் வாக்கு. கொஞ்ச நாட்களாக மோடிதான் பிரதமர் என்று ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம். திமுக மீதான ஊழல் கறை, ஆளும்கட்சி மற்றும் சிதம்பரம் மீதான மக்களின் அதிருப்தி. 

பலவீனம் 

கொஞ்சம் வாய்த் துடுக்கானவர். சமீபத்தில் பெரியாரை செருப்பால் அடிக்கவேண்டும் என்று பேசி எழுந்த சர்ச்சை. பிஜேபிக்கு என்று பெரிய வாக்கு வங்கி இல்லாதது. கூட்டணியில் உள்ள பாமக இந்தப்பகுதியில் அறவே இல்லாதது. மற்ற வேட்பாளர்களுடன் போட்டி போட்டு செலவழிக்க முடியாதது. கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து பிரச்சாரம் செய்வதில் இருக்கும் சிக்கல். 

இப்படி பலமும் பலவீனமும் மாறி மாறி இருந்தாலும் ஏதாவது ஆச்சர்யம் நிகழ்ந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் அல்லது மூன்றாவது இடத்திற்கு காங்கிரசுடன் போட்டி போடலாம்.
கார்த்திக் சிதம்பரம் (காங்கிரஸ்)

ஏழு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தனது தொகுதியில் இந்த தனது மகனைக் களம் இறக்கியிருக்கின்றார் ப.சி! வெற்றிபெற்ற ஏழு முறையும் கூட்டணி பலம் இருக்கும்போது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தனியாக நின்றபோது தோற்றுவிட்டார். இப்பொழுது வேட்பாளராக இருக்கும் கார்த்திக் சிதம்பரம் நன்கு படித்தவர். அதிரடியாக பேசக்கூடியவர். பசி இடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட அரசியலை செய்பவர். பசி யின் சார்பாக இதுவரை தொகுதி நிலவரங்களைக் கவனித்துக்கொண்டவர்.

பலம் 

ஜெயிக்க முடியாது என்றாலும் கவுரமான வாக்குகளை வாங்கி தங்கள் பலத்தை நிரூபிக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்க தயாராய் இருப்பது. தொகுதியில் பரவலாய் வங்கிகளை திறந்து மக்களுக்கு விவசாயக் கடனையும் கல்விக் கடனையும் எளிதில் கிடைக்கப்பெற செய்தது. போன்றவை இவருக்கு சாதகமாக இருக்கும். சமீபத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் ஃபெல் நிறுவனத்தை தொகுதிக்கு கொண்டுவந்தது.

பலவீனம் 

இவரது தந்தை சிதம்பரம்தான் இவரது பலவீனமும்! இத்தனைமுறை உயர்வான பதவிகளில் இருந்தும் தொகுதிக்கு சிறப்பாக ஒன்றும் செய்யாதது. சமீபத்தில் 2G வழக்கில் அடிப்பட்ட இவரது பெயர். ஈழத் தமிழர் விவகாரம். ஃபெல் நிறுவனம் கொண்டு வந்தாலும் மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுக்காதது. சரியான ரயில் வசதி இல்லாதது போன்றவை இவரை அதிகமாகப் பாதிக்கும். ஆனாலும் கவுரமான வாக்குகளைப் பெறுவார் என்றே தோன்றுகிறது.Friday, 28 February 2014

எனதுயிரே!
வார இறுதி பெசன்ட் நகர் பீச்.. சொல்லவே வேணாம், கடல்த் தண்ணிக்கு போட்டியா ததும்பி வழிந்து கொண்டிருந்தது கூட்டம்! பஸ்ஸ விட்டு இறங்கி சர்ச் எதிர்ல போய் மாதாவுக்கு செல்லமா ஒரு ஹாய் சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சேன். அவன் எங்க நிற்கிறான்னு தெரியல, மொபைலை எடுத்து அவன் நம்பருக்கு போட்டேன், கிடைக்கவில்லை.. சமயத்துல இப்பிடித்தான் கழுத்தறுக்கும். திரும்ப ட்ரை பண்ணினேன்.. ம்ம்ஹூம்...கிடைக்கவில்லை. ஏற்கனவே ஒருமுறை அஷ்ட லட்சுமி கோவிலுக்கு பக்கத்தில மீட் பண்ணிருக்கிறோம், ஒரு யூகத்தில் நடக்க ஆரம்பித்தேன். அவன பார்க்கிறதுக்குள்ள என்னைப் பத்தி சொல்லிர்றேன், ஏன்னா அதுக்கு அப்பறம் என்னை எங்க அவன் பேச விடப்போறான்?

நான் அனுஜன்யா, சுருக்கமா அனு! இப்ப நான் பார்க்கப் போறனே அந்தப் பொறுக்.. ச்சே அவன் பேர் அபினவ், சுருக்கமா அபின்னு கூப்பிடுவேன். அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா? உண்மையச் சொல்லப்போனா, ஒரு மாசத்துக்கு முன்னாடி வரை எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனா இப்ப? அவன் இல்லாம நானே இல்லை! அப்பிடி ஆக்கிட்டான் அந்தப்பாவி! கொஞ்சம் இருங்க.. நீங்களும்,  "இந்தப் பாழாப்போன லவ்வான்னுதானே?" கேக்கப்போறீங்க? தமிழ் சினிமா ஓவரா பாக்காதிங்க!

அந்தப்....ச்சே... அவன் பேரே வர மாட்டேங்குதுங்க, பொறுக்கின்னுதான் வருது, அப்பிடியே சொல்றேன் கண்டுக்காதிங்க. அந்த பொறுக்கிதான் எங்க வீட்ல எனக்காக பார்த்துப் பார்த்து தேடி கொண்டு வந்த மாப்பிள்ளை! அந்தப் பொறுக்கி பொண்ணு பார்க்க வந்த நாள் இன்னும் ஞாபகம் இருக்கு.

ரொம்பத் தடபுடலா வருவாங்கன்னு எதிர்பார்த்த எங்களுக்கு சிம்பிளா அபி, அவனோட அம்மா அப்பா மூணு பேரு மட்டும் கார்ல வந்து இறங்கினதப் பார்த்ததுமே ஒரு இனம் புரியாத சந்தோசம் வந்து ஒட்டிக்கொண்டது. வந்ததுமே எந்த பந்தாவும் இல்லாமல் இயல்பாக பேச ஆரம்பித்தார்கள், அவனும்தான்! அவன் என் அப்பா எதிரே இருந்ததால் பின் பக்கம் இருந்து அவன் மூஞ்சியை சரியாகப் பார்க்க முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் என் தவிப்பு புரிந்தோ என்னவோ, அவனே ரெஸ்ட் ரூம் எங்க இருக்குன்னு அப்பாவிடம் கேட்பதும் "அனு.. உன் ரூம்ல உள்ள ரெஸ்ட் ரூமுக்கு கூட்டி போம்மா" என்ற அப்பாவின் குரலும் கேட்டது.

எதுவும் சொல்லாமல் மாடிக்கு நான் நடக்க என் பின்னால் அவனும் வந்தான். ரூமுக்குள் போனதும் ரெஸ்ட் ரூமைப் பார்த்து கை காட்டினேன். அவன் போக வில்லை, மெதுவாகத் திரும்பினேன்.. அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நானும் ஒரு உந்துதலில் அவனைப் பார்த்தேன் சரியான உயரத்தில் கருப்பும் இல்லாமல் வெள்ளையும் இல்லாமல் ஒரு கவர்ச்சியான நிறத்தில் சின்ன மீசையோடு சுத்தமாக சேவ் செய்த தாடையோடு கண்ணில் உள்ள குறும்பை மறைக்கத் தெரியாமல் நின்றான்! பார்த்ததுமே ஒருத்தனைப் பிடிக்குமா என்ன? எனக்கு அவனை அன்றைக்கு அப்படித்தான் பிடித்துப் போனது!

ரெஸ்ஸ்ஸ்ட் ரூம்ம் அங்க... என்றேன் தயங்கியபடி..

அதுக்கு அந்தப் பொறுக்கி என் எதிரில் வந்து.. "ஆக்சுவலா உங்க வீட்டுக்குள்ள வரும்போது பேஸ் வாஷ் பண்ணிக்கனும்னு நினைச்சது உண்மைதான்.. பட் இப்ப அது தேவையில்லை" என்றான்!

ஒன்றும் புரியாமல் பார்வையாலே ஏன் என்று கேட்டேன்.

அதுக்கு அந்தப் பொறுக்கி "உன் அப்பா எதிர்ல உக்காந்து பேசினா அவரே ஃப்ரீயா பேஸ் வாஷ் பண்ணி விடறாரே? அதான் பேச வாயத் தொறந்தா ஷவர் தெறிக்குதே?" என்றான் சிரிக்காமல்.

ஆனால் நான்தான் என் அப்பாவை கிண்டல் செய்கிறான் என்ற ரோசம் கூட இல்லாமல் சத்தமாகச் சிரித்தேன்! அப்போது ஆரம்பித்தவள்தான்.. திகட்டத் திகட்ட சிரித்துக்கொண்டிருக்கிறேன் இந்த நிமிடம் வரை! அதன்பிறகு எங்கள் பேச்சு வளர்ந்து இரண்டு முறை இதே பீச்சில் மீட் பண்ணியும் விட்டோம்! இப்பவும் அதே பொருக்கியத்தான் பார்க்கப் போறேன்! உங்களுக்கு கதை சொல்ற சாக்குல இதையெல்லாம் அசை போட்டுக்கிட்டே கோவிலையும் தாண்டி நடந்தேன் போல...

பின்னாடி இருந்து அனு..அனு... அனுன்ன்ன்னு.....சத்தமாகக் கேட்டது!

திரும்பிபார்த்தால் அந்த பொறுக்கி..ரெண்டு கையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு மூச்சு வாங்கநின்றான்! 

"அடிப்பாவி... உன் பின்னாடி ஓடி வந்த இந்த ஓட்டத்தை ஒலிம்பிக்ல ஓடியிருந்தேன்னா தாலி பண்ணத் தங்கமாவது கிடைச்சிருக்கும்" என்றான் 

ஒன்றும் சொல்லாமல் பார்வைலே மன்னிப்புக் கேட்டபடி நின்றேன்..

அவனும் கோபத்தை மறந்து சேலையில் என்னைப்பார்த்ததும் உற்சாகமானான்! "வாவ் என்ன மேடம் இன்னைக்கு சேலைல வந்துருக்கீங்க?" என்றான் 

அதற்கு ஏதும் பதில் சொல்லாமல், அவன் கைகளைக் கோர்த்துக்கொண்டேன், அவன் தோளில் சாய்ந்து கொண்டேன், ஒரு பெண்ணுக்கு உச்சபட்ச சந்தோசமே இதுதான் என்று தோன்றியது எனக்கு. "டேய்.. பூ வாங்கித்தாடா" என்றேன், என்னை ஆச்சர்யமாகப் பார்த்தவன் மறு பேச்சு பேசாமல் ஓடிப்போய் வாங்கி வந்து அவனே என் தலையில் வைத்துவிட்டான். அப்பிடியே அவன் கைகளைப் பிடித்தபடியே நடந்து போய் கூட்டம் அதிகம் இல்லாத ஒரு மேடான பகுதியில் உக்கார்ந்தோம். எவ்வளவு நேரம் அமைதியாக அலைகளைப் பார்த்திருப்போம் என்று தெரியாது, இரண்டு பேருக்குமே அது பிடித்திருந்தது. அவன் தோளில் சாய்ந்தபடி நானும் ஆறுதலாய் என் கைகளைப் பிடித்தபடி அவனும்... இந்த உலகம் அப்பிடியே ஃபிரீஸ் ஆகக் கூடாதா என்று தோன்றியது.

"அபி..." என்றேன் நான்.

'என்னடி..ஆச்சர்யமா பேர் சொல்லிக் கூப்பிட்ற?" என்றான்.

"போடா பொருக்கி" என்றேன் வெட்கத்தோடு..

"ம்ம்..இது அழகு..." என்றான் சிரித்துக்கொண்டே.

"டேய்.. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு.. ஆனா மனசளவுல இப்பவே நான் உன் வைஃபாத்தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன், இனிமே நீ இல்லாத நிமிசங்கள என் வாழ்க்கைல கற்பனை கூடப் பண்ண முடியாது, என்னைய அப்பிடி மாத்தி வச்சிருக்க நீ! பொருக்கி.. காதலே சுத்த ஹம்பக்னு சொன்ன என்னையவே இப்ப உருகி உருகி காதலிக்க வச்சிட்ட! சத்தியமா சொல்றேண்டா.. சாகுற வயசுல கூட உனக்கு ஒரு நாள் முன்னாடியாவது நான் செத்துறனும்! ஏன்னா..ஒரு நிமிஷம் கூட உன்ன விட்டு என்னால இருக்க முடியாது" என்று சொல்லி முடிப்பதற்குள் என்னையும் மீறி கண்களில் கண்ணீர் கொட்டியது!

இரு கைகளாலும் என் முகத்தை ஏந்தியவன்... எதுவுமே சொல்லாமல் என்னை அனைத்து என் உதடுகளைக் கவ்விக்கொண்டான்! நானும்தான்.. ஆயிரம் வார்த்தைகளால் புரிய வைக்க முடியாததை ஒரு முத்தத்தால் புரிய வைத்தான்! அதன்பிறகு எதுவும் பேசவில்லை, கைகளைக் கோர்த்தபடி நடந்தோம், என்னை ஆட்டோவில் அனுப்பிவிட்டு அவனும் வீட்டுக்கு போனான்.

வீட்டுக்கு வந்தும் 'சாப்ட வாடி" என்ற அம்மாவிடம் சாப்பிட்டேன் என்று மையமாக பதில் சொல்லிவிட்டு ரீச்ட் சேஃப்லி என்று அவனுக்கு மெசஜ் அனுப்பிவிட்டு, சோபாவில் உட்கார்ந்தேன், கொஞ்சம் சுகமாக வலித்தது உதடு, பாவி.. அம்மா என்னமோ கேட்டாள், அப்பா எதுவும் பேச வில்லை, எப்போது போய்ப் படுத்தேன், எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை, காலையில் மணி பார்த்தேன் ஆறுதான் ஆயிருந்தது! அப்போதும் எந்திரிக்க மனம் இல்லை, மனம் முழுவதும் நேற்று நடந்ததை அசை போட ஆரம்பித்தது!

நேத்து பீச்ல நடந்துகிட்டத நெனச்சா எனக்கே வெட்க்கமா வந்தது, ச்ச்சே... அபி ஃபீல் பண்ணிருப்பான் பொறுக்கி.. ஆனா அந்த அழுகையும் அதுக்குபிறகு கொடுத்துகிட்ட முத்தமும் இன்னமும் நெஞ்சுக்குள்ளே  இருந்தது. இதுக்காகவாது இன்னொருவாட்டி அழுகுற மாதிரி சீன் போடலாம். இந்நேரம் அந்த ராஸ்கல் என்ன பண்ணுவான்? பேசணும்போல இருந்தது. ஆனாலும் பொருக்கி ராஸ்கல் முத்தம் கொடுக்கிற சாக்குல உதட்ட நல்லா கடிச்சி வச்சிட்டான்! அம்மா என்னடின்னு கேட்டதுக்கு பதிலே சொல்ல முடியல. அப்பா சொல்லவே வேண்டாம்..ஒரு மாதிரி பார்த்துகிட்டே போயிட்டாரு. எல்லாம் இவனாலதான்.. ஸ்வீட் ராஸ்கல்.. என்னடா பண்ற? உன்கிட்ட பேசனும்டா இப்ப.. ஐயோ.. அனுஜன்யா உனக்கு என்ன ஆச்சுடி? இப்பிடி புலம்ப வச்சிட்டானே?
 
நான் நெனச்சது அவனுக்கு எப்பிடி தெரிஞ்சதுன்னு தெரியல? என் மொபைல் பொறுக்கின்னு அவன் பேரைத் தாங்கி சிணுங்க ஆரம்பித்தது... பொருக்கி...நான் புலம்புறது தெரிஞ்சா அதுக்கும் கிண்டல் பண்ணுவான்... ஒண்ணுமே நினைக்காத மாதிரி பேச நினைத்து..ஹலோ என்றேன்...
 
ஹாய் டார்லிங்... என்னடி என்னையே நெனச்சிக்கிட்டு இருக்கியா? இல்லை.. நான் கொடுததையா?
 
(ராஸ்கல்..வீட்ல ஒளிஞ்சிருந்து பார்த்த மாதிரியே கேக்குறானே?) போடா..பொருக்கி.. எனக்கு வேற வேலை இல்லையா? நல்லா தூங்கிகிட்டு இருந்தேன்.. எழுப்பிவிட்டு கேள்வி வேற? என்னடா வேணும்?
 
ஒரு சந்தேகம் கேக்கணும் குட்டி.. நீ தனியா இருக்கியா? இல்லை.. உதட்டுக்கு மேல அட்டபூச்சிய ஒட்டி வச்சிருப்பானே அவன் இருக்கானா பக்கத்துல?
 
டேய்ய்..பொருக்கி...அப்பாவ கிண்டல் பண்ணாதடா... அவரு தூங்குவாரு, காலங்காத்தால என்னடா சந்தேகம் உனக்கு?
 
என்னது தூங்குறானா? எனக்கு ஏன் கொழுந்தியா இல்லாம போச்சுன்னு இப்பதாண்டி தெரியுது.. கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாத அப்பன்டி உனக்கு..
 
ஏய்ய்....லூசு.... ஏன்டா இப்பிடி படுத்துற? என்னமோ கேக்கனும்னியே? கேட்டுத்தொலைடா..எனக்கு தூக்கம் வருது.. என் உதடுதான் இப்படி  சொன்னதே தவிர.. இந்த ராஸ்கல் நடுராத்திரி பேசுனாலும் பேசிக்கிட்டேதான் இருக்கதோணுது, எனக்கே எனக்காக இவன  பெத்து கொடுத்ததுகாகவாது அவனோட  அம்மாவை கைமேல் வைத்துத் தாங்கனும்போல தோணியது. இப்ப என்னோட உலகத்துல அபி..அபி...அபிதான்... என்னையே எனக்கு மறக்கடிச்சிட்டான் ராஸ்கல்!

நேத்து இப்பிடித்தான் பீச்ல அபிய  பார்க்கபோற சந்தோசத்துல என் அம்மாவோட ஜாக்கெட்ட எடுத்து போட்டுக்கிட்டு, அம்மாகிட்ட போய் என்னம்மா இது ஒரே நாள்ல இப்பிடி ஸ்லிம் ஆயிட்டேன்னு கேட்டேன்! அதுக்கு அம்மா பார்த்த பார்வை இருக்கே? எல்லாம் அந்தப் பொருக்கியாலதான்.. அவன்கிட்ட சொல்லணும் டேய் தங்கக்குட்டி ஒருநாளாவது உன் குட்டிமா ட்ரெஸ் இல்லாம வெளில போறதுக்குள்ள கல்யாணம் பண்ணி கூட்டி போயிருடா... இப்பிடி வெட்க்கமில்லாம அவன்கிட்ட சொல்லணும்.. என் செல்லப் பொருக்கிகிட்ட எனக்கு என்ன வெட்கம்?
 
ஹலோ..ஹலோ.... ஹலோலோலோ... அபி அந்த முனையில் கத்திக்கொண்டிருந்தான்...
 
சொல்றா ராஸ்கல்..இருக்கேண்டா...ஏன்டா கத்துற?
 
என்னடி குட்டி.. டூயட் பாட போயிட்டியா?  குளிச்சிட்டு வந்து பாடுடி...அழுக்கி..உன் அப்பன மாதிரியே இருக்கியே நீயும்? குடும்பமே குளிக்கிறது இல்லையோ?
 
ஏய்ய்... இப்ப ஏன்டா அவர இழுக்குற? உனக்கு என்னமோ சந்தேகம் கேக்கனும்னியே அத கேளுடா மொதல்ல, முரட்டு ரவ்டி.. சின்ன புள்ளைங்க பப்பர் முட்டாய கடிக்கிற மாதிரி உதட்ட கடிச்சிட்டு பேச்சைப்பாரு.. வீட்ல யார் மூஞ்சியும் நான் பாக்க முடில தெரியுமா?
 
சரி விட்ரி செல்லம்.. அதுக்கு ஒரு மருந்து இருக்கு, அடுத்தமுறை பார்க்கும்போது அதையும் தர்றேன், அதவிடு இப்ப, ஏண்டி.. படிச்ச கவிதை.. பார்த்த படம் எல்லாத்துலயும் பெண்கள் உதடு தேன் மாதிரி இனிக்கும்.. வண்டு வந்து உட்காரும்னு பாடுனாங்க.. நேத்து என்னடி உன் உதடு ஒரே உப்பு கரிச்சது? ஆல் லேடிஸ் எங்கள ஏமாத்துரீங்கடி.. உன் உதடு ஏன்டி இனிக்கல? பதில் சொல்லுடி..
 
அட..அறிவே இல்லாத என் அறிவு செல்லமே! நேத்து அழுததால கண்ணீர் வழிஞ்சு உதட்டுல இருந்துச்சுடா...அதனாலதான் உப்பா இருந்திருக்கும்... சந்தோசமா இருக்கும்போது கொடுதுப்பாரு.. அப்ப தெரியும்! இன்னைக்கு நான் ரெம்ப சந்தோசமா இருக்கேண்டா வாலு..!
 
போடி...நீ அங்க சந்தோசமா இருந்தா எனக்கென்ன?
 
டேய்ய்..என் ட்யூப்லைட் மடையா... நான் என்ன சொன்னேன்... நான் இப்ப ரெம்ப சந்தோசமா இருக்கேண்டா!
 
ஏய்ய்..என்ன சொன்ன? இரு.. ஆஆ...செல்லகுட்டி குளிச்சிட்டு ரெடியா இருடி... பத்து நிமிசத்துல அங்க இருக்கேன்.. அந்த அண்டா வாயனையும்.. அவனோட பிகரையும் ஏதாவது கோவிலுக்கு அனுப்பி வச்சிரு போகலைன்னு சொன்னா குண்டு கட்டாத் தூக்கி வெளில போட்டுரு, நான் இதோ வந்துகிட்டே இருக்கேன்" என்றபடி போனைக் கட் பண்ணிவிட்டான்.

எனக்கு அதுக்கு அப்பறம் படுக்கையில் இருக்கப் பிடிக்கவில்லை, வேகமாக எழுந்து குளித்து அவனுக்குப் பிடித்த சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டு கீழே வந்தேன், அப்பாவுக்கு டிபன் கொடுத்துக் கொண்டிருந்த அம்மா என்னை ஆச்சர்யமாகப் பார்த்தாள்! "அம்மா.. இன்னைக்கு உங்க ப்ரோகிராம் என்னம்மா?" என்றபடி தட்டை எடுத்து வைத்துக்கொண்டு நானும் உக்காந்தேன்.

"ப்ரோகிராமா? என்னடி சொல்ற?" என்றாள் அம்மா.

அதாம்மா, நீயும் அப்பாவும் பத்திரிக்கை கொடுக்க போகணும்னு சொன்னீங்கல்ல, நீங்க போங்கம்மா, மதியத்துக்கு நான் சமைச்சு வைக்கிறேன் என்றேன்.

என்னை ஆச்சர்யமாக மேலும் கீழும் பார்த்த அம்மா :என்னடி? சோனையன் குடுமி சும்மா ஆடாதே? என்னடி விசயம்?" என்றாள் 

அப்பாவுக்கு புரிந்துவிட்டது போலும் "ஏய்.. அதான் புள்ள சொல்லுதுல்ல சமச்சி வைக்கிறேன்னு, கெளம்புடி பேசாம" என்று கை கழுவ போனார்.

அம்மாவுக்கு அப்போதும் புரியவில்லை போல என்னிடம் மெதுவாக வந்து "என்னடி விசயம்?" என்றாள்.

அது... அது வந்தும்மா.... அந்தப் பொ... நாக்கை கடித்துகொண்டேன், அவரு வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காரும்மா, அதான் நானே சமைக்கலாம்னு.... என்று இழுத்தேன்..

"அதானே பார்த்தேன்! என்னைக்கும் இல்லாத திருநாளாசமைக்கிறேன்னு சொல்றியேன்னு" என்று கிண்டல் பண்ணிவிட்டு கொஞ்ச நேரத்தில் இருவரும் பத்திரிக்கைகளை பையில் போட்டுகொண்டு கிளம்பிவிட்டார்கள்.

மெதுவாக சமையல் அறைக்குள் புகுந்தேன்.. என்ன சமைக்கலாம்? அந்த ராஸ்கலுக்கு என்ன புடிக்கும்னு யோசிக்கும் போதே ஒரு முறை ரெஸ்ட்ராரண்டில் சாப்பிடும் போது  'எனக்கு நான் வெஜ்ஜ விட வெஜ்ஜுதான் புடிக்கும், அதுவும் காலிஃப்ளவர்ல எது செஞ்சாலும் சாப்பிடுவேன்" என்று அவன் சொன்னது ஞாபகம் வந்தது, கிச்சனில் பார்வையை விட்டேன், காலிஃப்ளவரைத் தவிர எல்லாம் இருந்தது, சரி வாங்கிகிட்டு வந்து சமைக்கலாம் என்று வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினேன். மார்கெட் நடந்து போகும் தூரம்தான், ரயில்வே கிராசிங்கைத் தாண்டினால் வந்துவிடும், அந்த ஸ்வீட் ராஸ்கலுக்காக இது கூட செய்ய மாட்டனா என்ன?

அபிக்கு என்னென்ன சமைக்கணும், அவன்கூட என்னென்ன பேசணும் என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டே நடந்தேன், கேட் குளோஸ் ஆகி இருந்தது, ஓவர் ஹெட் ப்ரிட்ஜ் ஏறி போகவும் பொறுமை இல்லாமல் அனைவரையும் போல நானும் குறுக்கே நடக்க ஆரம்பித்தேன், அந்த நேரம் பார்த்து போன் அடித்தது, எடுத்துப்பார்த்தேன் அபி! இந்த ராஸ்கலுக்கு வீட்டுக்கு வர்ற வரையும் கூட பொறுமை இருக்காதே? என்று நினைத்துக்கொண்டு ஆன் பண்ணி "ஏன்டா பொறுக்கி..அதான் வீட்டுக்கு வர்றீல்ல? அப்பறம் என்ன போன்? என்றேன்.

அந்தப்பக்கம் "ஹலோ..ஹலோ...யார் நீங்க?" என்றது குரல்

அதிர்ச்சியாகி நம்பரைப் பார்த்தேன்... பொறுக்கி என்று இருந்தது, அவன் நம்பர்தான்! ஹலோ..இது அபி போன்தானே? நீங்க யாரு? என்றேன். 

"சாரிங்க.. அவரு பேரு அபியா? இங்க அமிஞ்சிக்கரைல ஒருத்தர் வண்டில வந்துகிட்டு இருக்கும் போது, பசங்க பட்டத்துக்கு போட்ட மாஞ்சா நூலு அறுந்து வந்து அவரு கழுத்துல சிக்கி கழுத்தை அறுத்துருச்சு போல.. அவரு நிலை தடுமாறி விழுந்து பின்னாடி வந்த லாரி ஏத்தி ஸ்பாட்ல உயிர் போச்சுங்க.. அங்க கிடந்த செல்போன எடுத்து அவரு கடைசியா பேசின நம்பருக்கு....." மறுமுனையில் சொல்லிக்கொண்டே போக எனக்கு காலடியில் உலகம் நழுவியது, கையில் இருந்த செல்போனும் நழுவியது....

உலகமே நிசப்தமாகத் தோண. என்னைப்பார்த்து மட்டும் ஒரு கூட்டமே கத்திகொண்டிருப்பதைப் பார்த்தேன்.. எதற்கென்று புரியாமலே தலையைத் திருப்பினேன்....

என்னை நோக்கியபடி ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது! ஒருவேளை அபிதான் என்னைக் கூப்பிட வருகிறான் போல... எனக்கு ஏனோ விலகத் தோன்றவில்லை!

"அபிபீபீபீபீபீ..................................."