Monday, 21 October 2013

சச்சின் ஒரு சகாப்தம்!

சச்சின்!
இந்தியாவில்.. ஏன்? இந்த உலகத்தில் கிரிகெட்டைத் தெரிந்த அனைவருமே இந்தப் பெயரை ஒரு முறையேனும் உச்சரிக்காமல் இருந்திருக்க முடியாது! இது ஒரு கிரிக்கெட் வேதத்தின் மந்திரச் சொல்! இந்தச் சரித்திரத்தைப் பற்றி இனிமேலும் புதிதாக என்ன இருக்கின்றது எழுத? ஆனாலும் இருந்துகொண்டேதான் இருக்கின்றது நிறைய! சச்சின் பிறந்ததில் இருந்து இன்று வரை அவரது ஒவ்வொரு அசைவுகளையும் நம் வீட்டு வரவேற்பு அறையிலும் எழுத்துக்களாகவும் பார்த்தாகிவிட்டது! 

ஆனாலும் சாதாரண கிராமத்தில் பிறந்த என்னைப்போல ஒருவனுக்கு கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தி அவரது கிரிக்கெட் பயணத்தோடு என்னையும் ஒரு கிரிக்கெட் ரசிகனாக சச்சினைப் பற்றி நான்தானே சொல்லியாக வேண்டும்? அதனால்தான் இந்தப்பதிவு! இது சச்சினின் சாதனைகளை வரிசைப்படுத்தி புள்ளி விபரம் கொடுக்க அல்ல! சச்சினின் வாழ்கையை ஆவணப்படுத்தவும் அல்ல! ஒரு சராசரி இந்தியக் குடிமகனின் உணர்வுகளில் கலந்த சச்சின் என்னும் சரித்திரத்தின் தொகுப்பே இது!


ஆயிரக்கணக்கான போட்டிகளில் ஒன்றாக முக்கியத்துவம் இல்லாத ஒரு போட்டியாக மாற வேண்டிய பாகிஸ்தானுடனான ஒரு டெஸ்ட் மேட்ச்.. சச்சின் என்ற சாதனை நாயகனின் அறிமுகத்தாலேயே வரலாற்றில் நிலைத்து விட்டது விந்தைதான்! ஆனால் இந்தப் போட்டியின் போதெல்லாம் எனக்கு கிரிக்கெட் அவ்வளவு பரிட்சயமில்லை. எனக்கு மட்டும் அல்ல..எங்கள் பகுதியிலேயே அவ்வளவாக இல்லை!

இன்னும் நன்றாக நினைவிருக்கின்றது சச்சினின் ஆட்டத்தை நான் பார்த்த அந்த முதல் தருணம்! 92ம் வருட உலகக்கோப்பை! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம், அவர்கள் முதலில் ஆடி நமக்கு 236 ரன்களை நிர்ணயித்தார்கள்! எளிதாக அடிக்க வேண்டிய ரன்களை ரவி சாஸ்த்ரி கட்டை போட்டு கடுப்படுத்திக் கொண்டிருந்தார்! ஸ்ரீகாந்த் டக்! அப்போதுதான் சுற்றி உள்ளவர்கள் ரஜினி படத்தில் ரஜினி என்ட்ரி சீனுக்கு பில்டப் கொடுப்பது போல டெண்டுல்கர்னு ஒரு சின்ன பையன் இருக்கான் அவன் மட்டும் இறங்கட்டும் அப்பறம் இருக்கு இவங்களுக்கு என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்! நானும் "இங்க யார்ரா தமிழ்? கணக்கா "யார்ரா டெண்டுல்கர்னு? கேட்டுகிட்டே இருந்தேன்!

என்னை வெகுநேரம் காக்க வைக்கவில்லை நம்மவர்கள்! ஏதோ பக்கத்து வீட்டு அண்ணன் போல வந்தார்! அவரும் வெகுநேரம் நிலைக்கவில்லை,(11 ரன்தான்) ஆனாலும் ஒவ்வொரு பந்தையும் அவர் பயமில்லாமல் எதிர்கொண்ட அந்த ஆட்டம் மட்டும் அப்படியே இருந்தது! இதே மேட்சில்தான் இன்னொரு வரலாற்று சோகமும் நடந்தது! 67 பந்துகளை விழுங்கி வெறும் 25 ரன்களை மட்டுமே அடித்த ரவிசாஸ்திரிதான் தோல்விக்கு காரணம் என்று நினைத்த ரசிகர்கள் அவர் படத்துக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள்! அத்தோடு போனவர்தான் சாஸ்த்ரி!


இந்த மேட்சுக்கு அப்பறம் அனைத்துப் போட்டிகளையும் தேடித்தேடி பார்க்கலானேன்! எங்கள் ஊர்ப் பக்கமெல்லாம் கால்பந்துதான் பிரதானம் இன்று வரை! எங்கள் பகுதியே ஒரு குட்டி பிரேசில் என்று கூட சொல்லலாம்! ( இதே தலைப்பில் சில வருடங்களுக்கு முன் சிங்கபூர் தமிழ் முரசில்கூட ஒரு கட்டுரை வந்தது எங்கள் பகுதியைப் பற்றி! ). ஊருக்கு ஊர் கால்ப்பந்து மைதானம்! ஒவ்வொரு ஊரிலும் ஒரு கால்பந்துக் கழகம் அதற்கு சொந்தமான ஒரு டீம் என்று களைகட்டும் பகுதி எங்கள் பகுதி! இன்று வரை மாதம் மாதம் ஒவ்வொரு ஊரிலும் கால்ப்பந்துப் போட்டிகள் நடந்துகொண்டுதான் உள்ளது!

இதையெல்லாம் எதற்காக சொன்னேன் என்றால்.. இத்தனையையும் மீறி எங்கள் பகுதியின் ஒரு தலை முறையையே கிரிக்கெட் பக்கம் சாய வைத்தது சச்சினால் மட்டுமே சாத்தியம் ஆனது! அப்போதெல்லாம் எங்கள் ஒரே இலக்கு இந்தியா ஜெயிக்க வேண்டும் அதுவும் சச்சின் ஆடிச் ஜெயிக்க வேண்டும்! பகலில் போட்டிகள் இருந்தால் பள்ளிக்கு சென்ற உடனே எனக்கு வயிற்று வலிகள் வரத்தொடங்கியது! பனை மட்டைகள் பேட் ஆனது!  கரிக்கோடுகள் ஸ்டம்ப் ஆனது! பசி, படிப்பு மறந்து விளையாடத் துவங்கினோம்! ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் சச்சின் ஆகும் கனவு எரிந்து கிடந்த காலம் அது!

அப்போதைய கால கட்டத்தில் சினிமா நடிகர்களுக்கு கூட மன்றம் இல்லாத எங்கள் பகுதியில் முதன் முதலாக சச்சினுக்காக ரசிகர் மன்றம் உதயம் ஆனது! அப்போதெல்லாம் எங்கள் பகுதியில் எந்த ஊரில் திருவிழா என்றாலும் கரகாட்டம் கண்டிப்பாக இருக்கும்! அப்போதே கூட்டுச் சேர்ந்து கொண்டு போவோம்! கரகாட்டம் ஆடும் பெண்ணுக்கு காசு கொடுத்தால்(குத்திவிட்டால்) கொடுத்தவர் பெயரை கரகாட்டம் ஆடும் பெண் மைக்கில் கொஞ்சம் கிறக்கமாக உச்சரிக்கும்! 

நாங்கள் காசு கொடுத்து ஒரு சீட்டில் எங்கள் மன்ற தலைவர் பெயரை எழுதி மறக்காமல் கீழே தலைவர் டெண்டுல்கர் ரசிகர் மன்றம் என்று எழுதியும் விடுவோம் அவருக்கே தெரியாமல்! அந்தப் பெண்ணும் கொடுத்த(குத்திய) காசுக்கு குறைவில்லாமல் அவர் பெயரை கொஞ்சலாகச் சொல்லி மறக்காமல் டெண்டுல்கர் ரசிகர் மன்றம் என்று சொல்லும்போது அவ்வளவு சந்தோசமாக இருக்கும்! தலைவருக்கு வீட்டில் அடி விழுவது தனிக்கதை! இப்படியே ஒவ்வொரு ஊர்க் கரகாட்டத்திலும் செய்து எங்கள் டெண்டுல்கர் ரசிகர் மன்றத்தைப் பிரபலப் படுத்த ஆரம்பித்தோம்! சொல்ல மறந்துவிட்டேன் எங்கள் மன்றத் தலைவருக்கு இன்று திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது! அவன் பெயர் சச்சின்! 


சச்சினின் சாதனைகள் அனைத்தையும் பட்டியலிட இந்தப்பதிவு போதாது! ஆனால் 1998ம் வருடம் நடந்த இந்த நிகழ்வைப் பற்றி சொல்லவில்லை என்றால் பதிவு முழுமை பெறாது! இது சார்ஜாவில் நடந்த ஒரு முத்தரப்புத் தொடர் பற்றியது.. இந்த வரிகளை நான் எழுத ஆரம்பிக்கும்போதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும் நான் எதைப்பற்றி சொல்லுகிறேன் என்று! இந்திய கிரிக்கெட்டை நேசிக்கின்ற ஒவ்வொருத்தருக்கும் ஒரு மறக்க முடியாத போட்டி அது! 

முத்தரப்புத் தொடரில் ஆஸ்திரேலியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது! அதே ஆஸ்திரேலியாவுடன் 46 ஓவருக்கு 276 ரன்கள் டார்கெட்! அட்லீஸ்ட் 237 ரன்களாவது எடுத்தால்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் நிலைமையில் இந்தியா! சச்சின் ஒருவராக நின்று போராடினார்! இடையில் மணல் புயல் வேறு வந்தது! ஆனாலும் மனம் தளராமல் அன்று அவர் நின்ற விதம் யாருக்கும் டிவியை அணைத்துவிட்டு படுக்க மனமில்லை! அன்று நாம் தோற்றுத்தான் போனோம்! ஆனாலும் 142 ரன்கள் அடித்து இந்தியாவை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வைத்தார் சச்சின்! இறுதிப்போட்டியில் அதே ஆஸ்திரேலியாவை மீண்டும் சதம் அடித்து கோப்பையை இந்தியா வெல்லக் காரணாமாக அமைந்தவரும் சச்சின்தான்!

அதன்பிறகு இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம் என்று கூறலாம்! சச்சின் என்ற தனிமனிதனின் ஆட்டத்தாலையே பல கோப்பைகளை இந்தியா வென்றது! அதன்பிறகு அவருக்கு முதுகுத்தண்டில் சில பிரச்சனைகள் வந்து மருத்துவர் ஆலோசனையின் படி தனது பேட்டின் கனத்தைக் குறைத்தார்! தனது பேட்டிங் ஸ்டைலையே மாற்றினார்! அவரது ஃபேவரிட்டான ஃபுல் ஷாட் ஆடுவதைக் குறைத்துகொண்டார். இருந்தாலும் சில போட்டிகளின் நடுவே அவர் முதுகு வலியால் அவதிப்படுவதைப் பார்க்கும் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் இதய வலியே வரும். இது மிகைப்படுத்திச் சொல்ல சொல்லவில்லை! ஒரு ரசிகனின் அந்த நேரத்து உணர்வு அதுவாகத்தான் இருந்தது!


இருந்தாலும் தனது உடற்தகுதியை அவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. தன்னுடன் களத்தில் நிற்கும் நேற்று வந்த ஜூனியர்களுக்குக் கூட ஆலோசனைகள் சொல்லி அரவணைத்து அவர்கள் சாதிக்கும்பொழுது முதல் ஆளாகக் கை தட்டி அவர்களைத் தட்டிக்கொடுத்து கொண்டுசெல்ல சச்சினால் மட்டுமே முடிந்தது. ஆனாலும் இந்த மென்மையான போக்கே இவரால் ஒரு அணித்தலைவராக சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. மேலும் அவர் அணித்தலைவராக இருந்த கால கட்டத்தில் பேட்டிங் பொறுப்பு முழுவதையும் தன் தோளில் சுமந்தவர் அவர். இப்போது உள்ளதுபோல் டெயில் என்டர்கள் வரை பேட்டிங் செய்யும் காலம் அது அல்ல என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

பாகிஸ்தானின் சயீத் அன்வர் இந்தியாவுக்கு எதிராக 194 ரன்கள் எடுத்து உலக சாதனை புரிந்தபொழுது இந்தச் சாதனையை சச்சின் முறியடிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் கனவாக இருந்தது. அவரே நியூசிக்கு எதிராக 183 ரன்கள் வரை வந்தார், ஆனாலும் உலக சாதனை என்பது கனவாகவே இருந்தது. அதன் பின்னர் கங்குலி முதல் நேற்று வந்த தோனி வரை அந்த ரன்களை நெருங்கி வந்தனர். ஆனாலும் அன்வரின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. 2010ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் 200 ரன்களைத் தொட்ட நிமிடம் அவருக்கு மட்டும் அல்ல ஒவ்வொரு இந்தியக் கிரிக்கெட் ரசிகனின் கண்களிலுமே ஆனத்தக் கண்ணீர் வழிந்தது!

உலக சாதனை தனக்கான இடத்தில் பெருமையாக அமர்ந்து கொண்டது! இந்தச் சாதனையை சில வருடங்களில் தனது சக வீரரான சேவாக் முறியடித்த போது முதல் ஆளாகக் கைதட்டி பாராட்டினார்.அதுதான் சச்சின்! 


அப்போது இவரையும் கங்குலியையும் வைத்து ஏகப்பட்ட வதந்திகள் அப்போது உலவின. ஏன்? தற்போதைய கேப்டன் தோனி கூடவும் சர்ச்சைகள் போல வதந்திகள் வந்தன. ஆனாலும் அணி நிர்வாகம் பற்றியோ தன்னுடைய பிரச்சனைகள் பற்றியோ வெளிப்படையாக எதையும் பேசி மீடியாக்களுக்கு இவர் தீனி போட்டதே இல்லை. அதுதான் சச்சின்!

எந்த ஒரு உண்மையான கிரிக்கெட் ரசிகனும் சச்சினை வெறுக்க முடியாது என்பதுதான் உண்மை! ஆனாலும் அவர்மீதும் அவர் திறமையின் மீதும் வைத்த விமர்சனங்களுக்கு எல்லாம் தனது ஆட்டத்தால் மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். "ஒரு நதிக்குத்தான் தெரியும் எந்தப்பாதையில் ஓட வேண்டும் என்று!" அதுபோலதான்.. சச்சினுக்கு மட்டுமே தெரியும் தனது ஓய்வை எப்போது அறிவிக்க வேண்டும் என்று. அவரும் சர்வதேச 20-20 யில் தனது முதல் ஓய்வை அறிவித்தார்! 100வது சர்வதேச சதங்கள் கடந்ததும் தனது ஒருநாள் போட்டிக்கான ஓய்வை அறிவித்தார்! இதோ.. இப்போது தனது 200 வது டெஸ்டில் டெஸ்ட் ஓய்வையும் அறிவித்துவிட்டார்!


2011ல் உலகக் கோப்பையை வென்றதும் சச்சினை தோளில் சுமந்து வந்தார்கள் நம் வீரர்கள். இது சச்சினுக்கான கோப்பை என்று! அப்போது விராட் கோஹ்லியிடம் ஏன் நீங்கள் சச்சினை தோளில் சுமந்து வருகிறீர்கள் என்று கேட்ட பொழுது அவர் சொன்னார் "23 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டை தன் தோளில் சுமந்தவரை இன்று ஒரு நாள் மட்டும் நாங்கள் தோளில் சுமக்கிறோம்" என்று! எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!

இதோ இன்னும் கொஞ்ச நாட்களில் இத்தனை வருட காலம் தன் தோளில் சுமந்த சுமையை இறக்கி வைக்கப் போகிறார் சச்சின்! இதுவரை சச்சின் ஆடும் 11 அணியில் இல்லை என்றாலும் இன்னும் இந்திய அணியில் இருக்கின்றார் என்ற சந்தோசமே ஒரு ரசிகனுக்குப் போதுமானதாக இருந்தது. இனிமேல் எந்தஒரு இந்திய அணியிலும் சச்சின் என்ற சகாப்தம் இல்லையென்ற உண்மையை அந்த உண்மை கொடுக்கும் வலியை ஒரு சராசரி கிரிக்கெட் ரசிகனாக நான் எங்கு இறக்கி வைப்பது என்று தெரியவில்லை! 
                                  விடை கொடுக்கின்றோம் சச்சின்! வேதனையோடு!