Wednesday, 12 June 2013

அது ஒரு மழைக்காலம்-8 ( பழைய நினைவுகள் ) !


அன்று.....
அந்த பிள்ளையார் கோவிலில் பிள்ளையாரை எங்களுக்கு காவலுக்கு வைத்துவிட்டு உட்கார்ந்துவிட்டோம்! அவரும் கைல உள்ள லட்ட திங்கிறதுலே குறியா இருந்ததால எங்களை கவனிக்கவே இல்லை! அவள்தான் ஆரம்பித்தாள் " டேய்.. என்னை லவ் பண்ணனும்னு உனக்கு எப்ப முதல் முதல்ல தோணுச்சு?" என்றாள்! 

"ஆஹா..துப்பாக்கில முத குண்ட லோட் பண்ணிட்டா"ன்னு நினைச்சுகிட்டே, " அப்பிடியெல்லாம் எனக்கு சரியா தெரியல கெளரி, சின்ன வயசுல இருந்து உன்னைய பார்க்குறேன், படத்தில் வர்றது மாதிரியெல்லாம் சுத்தி வெள்ள ட்ரெஸ் தேவதைகள் கும்மி அடிக்க, புகை மூட்டத்துக்கு நடுவுல எல்லாம் நான் உன்னை பார்க்கல! சின்ன வயசுல நம்ம பெரியவங்களே இவளை நீ கட்டிக்கிறியாடான்னு உன்னை காமிச்சி கேப்பாங்க! அப்ப என்ன முந்திகிட்டு நீதான் முதல்ல சொல்லுவ" நான் இவன கட்டிகிறேன்னு!" அப்ப நான்தான் அதிகமா வெக்கப்பட்டுக்கிட்டு உள்ள ஓடுவேன்!
ஆனா அப்பவே ஒரு இனம்புரியாத சந்தோசம் மனசுல இருக்கும்! அதுக்கு பிறகு பசங்களா சேர்ந்து காட்டுக்குள்ள விளையாட போகும்போது கள்ளிச் செடிய பார்த்துட்டு ஆளாளுக்கு அவங்க மனசுல உள்ள பொண்ணுங்க பேர அதுல போட்டி போட்டு எழுதுனாங்க! நான் அப்ப கூட சும்மாதான் நின்னேன்! அவங்க என்னையும் எழுத சொல்லி கட்டாயப்படுத்தும்போது எந்த யோசனையும் இல்லாம கள்ளி செடில நான் எழுதின பேரு "கெளரி"! அப்பதான் எனக்கே தெரிஞ்சது, என் மனசுல நீ எப்பிடி பதிஞ்சு போயி இருக்கன்னு! அப்பறம் சொல்லவே வேணாம், புதுசா ஒரு பென்சில் வாங்குனா கூட அது முதல்ல உன் பேரைத்தான் எழுதி பார்க்கும்!" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தேன்!
இதை சொல்லி முடித்ததும் என் எதிரில் இருந்தவள் கொஞ்சம் நெருங்கி வந்து என் நெற்றியில் முத்தம் ஒன்று இட்டாள்! " நான் வேணா இன்னொருமுறை சொல்லட்டுமா?" என்றேன்! " ம்ம்.. ஆசை..என்றவள் " சரிடா.. அதெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சிருக்குற?" என்றாள்! 

"அது என்ன பெரிய விசயம்? இதே கதையதானே அந்த சித்ராகிட்டையும் சொன்னேன்! அவ தங்கச்சிகிட்டையும் சொன்னேன்! அதான் மறக்காம கரெக்ட்டா ஞாபகம் இருக்கு"ன்னு சொன்னேன்! " கொஞ்ச நேரம் கூட உன் காதல என்னை சந்தோசமா அனுபவிக்க விட மாட்டியாடான்னு?" தலையில் நங்குன்னு ஒரு கொட்டு வைத்தாள்! அதையும் அந்த புள்ளையாருக்கே நேந்து விட்டேன்! " சரி நீ சொல்லு? நான் உன்கிட்ட சொன்னதுக்காக சரின்னு சொன்னியா? இல்லை உன் மனசுலயும் என்னை வச்சு தவிச்சிக்கிட்டு இருந்தியான்னு?" கேட்டேன்!

அவளும் சொல்ல ஆரம்பித்தாள் "சின்ன வயசுல உன்னைய காமிச்சு இவனையே கல்யாணம் பண்ணிக்கிறியான்னு பெரியவங்க கேக்குறப்ப கல்யாணம்னா என்னன்னே தெரியாமத்தான் ஆமான்னு சொல்லுவேன், ஆனா நாள் ஆக..ஆக... என்னையும் அறியாம உன்னை கவனிக்க ஆரம்பிச்சேன்! உன் வீட்ட தாண்டி போகும்போது என் பேச்சையும் மீறி என் கண்ணு உன் வீட்டு வாசல்ல உன் செருப்பு கிடக்கான்னு பார்க்கும்! எந்த தேவையும் இல்லாமையே ஏதாவது ஒரு தேவையை ஏற்படுத்திக்கிட்டு உங்க வீட்டுக்கு வர ஆரம்பிச்சேன், ஆனா அப்பகூட இந்த மர மண்டைக்கு என் காதலை புரிஞ்சிக்க தெரியல" என்று தலையில் தட்டினாள்.

நானும் விடாமல் "என் மண்டை ஃபுல்லா மூளைனு உனக்கே தெரியும்! அந்த மூளை ஃபுல்லா நீதான்னு அப்ப எனக்கு மட்டும்தான் தெரியும்! அதான் வேற எந்த விசயமும் என் மூளைக்கு ஏறவே இல்லை, சரி..மேல சொல்லு" என்றேன்!

உன் அத்தை,  அத்தை பொண்ணுங்கல்லாம் வர்றது உங்க அம்மாவுக்கு புடிக்குதோ  இல்லையோ.. எனக்குதான் பயங்கர கடுப்பா இருக்கும்! அவளுங்களோட நீ பேசினாவே எனக்கு எங்க வீட்டுல ஒரு வேலையும் ஓடாது.. அப்பவே உன் மடில நான் படுத்துகிட்டு அவளுங்களை "போங்கடி உங்க வீட்டுக்கு...இது எனக்கு மட்டுமே சொந்தமான உசுருன்னு சொல்லத்தோணும்! ஆனா அய்யா.. எந்த கவலையும் இல்லாம அவளுங்களோட கும்மாளம் அடிச்சிக்கிட்டு இருப்பாரு! 

இப்பிடி என்னோட காதல்...ஆசை.. பொறாமை..எல்லாததையும் நெஞ்சுக்குள்ள போட்டு பூட்டி வச்சிருக்கும் போதுதான் நீ வந்து காதல சொன்ன... அப்பவே உன்னை அள்ளிக் கட்டிக்கணும் போல இருந்துச்சு..நீ சொன்ன இடம் கோவில்ங்கிறதால அமைதியா போனேன்" என்றாள்!

"ச்சே... போச்சுடா" என்றேன்! "ஏன் என்னாச்சு" என்றாள்! உன் மனசுல இப்பிடி இருக்கும்னு அன்னைக்கே தெரிஞ்சிருந்தா வேற ஒரு நல்ல இடமா பார்த்து சொல்லியிருப்பேன்! கோவிலுக்குள்ள செருப்போட இருக்க மாட்டேன்னு சொன்னது எவ்ளோ தப்பா போச்சு" என்றேன்!

"அதுக்கென்ன? இப்பவும் வெளிலதான் கிடக்கு.. எடுத்துட்டு வரட்டுமா? என்றாள் சிரித்துக்கொண்டே......

இன்று....

அதே பிள்ளையார் கோவிலில் இருந்தோம்..கௌரியும் அவளது கணவனும் சென்ற பிறகும் எனக்கு என்ன பேசுவதென்று தெரியாமல் வாசலை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்! மனைவிதான் ஆரம்பித்தாள் "இந்த கல்யாணத்தை நினைச்சா ஆச்சர்யமா இருக்குங்க" என்றாள்! "என்ன ஆச்சர்யம்?" என்றேன்! 

"எவ்வளவோ பேரோட பேசுறோம் பழகுறோம்.. திடீர்னு அப்பா அம்மா மாப்பிள்ளை இவருதான்னு சொன்னதும் இந்த மனசு அப்பவே கணவனா ஏத்துக்க ஆரம்பிச்சிருதே அத சொன்னேன்" என்றவள் அதோடு விடாமல் திடீரென்று கேட்டாள்.. " ஏங்க என்னைத்தான் கல்யாணம் கட்டிக்கணும்னு உங்களுக்கு முதல்ல எப்ப தோணுச்சு?" என்றாள்! அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தேன்... "துப்பாக்கிகள் மாறினாலும் தோட்டா மட்டும் அதேதான்" என்றேன் சிரித்தபடி! அவளுக்கு புரியவில்லை... "என்ன சொல்றீங்க?" என்றாள்! 

அவளுக்கு புரியவும் வேண்டாம்.....


அடுத்த பாகம் படிக்க 


அது ஒரு மழைக்காலம்-9 (பயணங்கள் முடிவதில்லை!) !