Friday, 1 March 2013

அது ஒரு மழைக்காலம் - II ( திருவிழாக்காலம் )
அது ஒரு திருவிழா நேரம்... கூட்டத்தில் என் கைபிடித்து இழுத்து சென்றாள் கௌரி... கொஞ்சம் கூச்சம் நிறைய ஆசையோடு வெள்ளத்தில் அடித்துச்செல்லும் சருகு போல எதிர்ப்பே இல்லாமல் அவள்  பின்னாள் சென்றேன் எதற்கு என்று நான் கேட்க்கவில்லை, கண்ணனுக்கு போட்டியான என் நிறத்தையும் மீறி என் உடம்பின் ரத்த ஓட்டம் சென்னையின் ஆட்டோ மீட்டர் போல் தாறு மாறாக ஓடியது கண்முன் தெரிந்தது.. இழுத்துச்சென்ற அவள் நேராக நின்றது ஒரு மரத்தடி அம்மன் சன்னதி! அப்போது கூட அந்த அம்மனை கொஞ்சம் கிண்டலாகத்தான் பார்த்தேன்.. என்னவளுக்கு முன் நீ ஒன்றும் பெரிய அழகி இல்லை என்று! அது அந்த அம்மனுக்கு புரிந்தது போல.. என் தேவதையை பார்க்கவே இல்லை! ஆனால என் தேவதை மட்டும் கொஞ்சம் கண்ணீரோடு என்னைப்பார்த்தாள்....

குணா... ம்ம்.. சொல்லும்மா என்றேன்... அவள் கண்ணீரை பார்க்க எனக்கு தைரியமில்லை.. என் கண்கள் தரை பார்த்து நின்றது.. கொஞ்சம் அருகில் வந்து என் தாடை தொட்டு நிமிர்த்தியவள்.. என் கண்களை கொஞ்சம் அவள்  கண்ணீரின் வழியாக பார்த்தாள்.. குணா.. என் அப்பாவுக்கு ட்ரான்ஸ்பர் ஆயிருச்சு.. இன்னும் பத்து நாள்ல நாங்க போறோம்.. அடுத்த வருடம் அங்கதான் ஸ்கூல் படிக்கபோறேன்.. இனி டெய்லி உன்னை பார்க்கமுடியாது.. உன்கிட்ட பேச முடியாது... எப்பிட்றா நான் இருக்க போறேன்? என்றாள்.. அவள் வார்த்தைகளை முடிக்கும் முன்னமே அவள் கண்ணீருக்கு என்ன அவசரமோ? வேகமாக எட்டிப்பார்த்து என்னை நலம் விசாரித்தது....

நான் கிண்டலாக பார்த்த அம்மன் மேல் இப்போது கோபம் வந்தது... என் தேவதை எனக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ளும் தைரியத்தில்தான் நான் எந்த தெய்வத்தையும் வணக்குவதில்லை.. அதனால்தான் இந்த அம்மன் என்னைப்பழிவாங்க இதை செய்கிறது என்று நினைத்தேன்.. ஆனால் அடுத்து என் கெளரி சொன்ன வார்த்தைகளைக்கேட்டதும் என்னை அறியாமல் நானும் கொஞ்சம் ஓரமாக வணங்கிகொண்டேன்!

குணா.... கௌரியின் குரல் காதுக்குள் கேட்டது.. ம்ம்.. சொல்றா என்றேன்.. என்னடா கேட்டதுக்கு பதிலே சொல்ல மாட்டேங்கிற?.. அப்ப.. என்னைப்பார்க்காம நீ இருந்துருவியா? என்றாள்.. என்ன கேள்வி இது? வயலுக்கு போறவங்க தூக்குல கட்டுசோறு கொண்டுபோற மாதிரி என் உசுரையும் கட்டி எடுத்துகிட்டு போக போற? இதுல நான் தனியா கவலைப்பட என்ன இருக்கு? உன்னோட சந்தோசம்... துக்கம்.. எல்லாத்தையும் நீ கட்டி கொண்டு போற என் உசுரும்தான் அனுபவிக்க போகுது... என்றேன்! இதைக்கேட்டதும்... என் கெளரி முதல் முறையாக என் தன் உதடுகளால் என் நெற்றியை நனைத்தாள்... அந்த சந்தோஷ தருணத்திலும் ஓரக்கண்ணால் அம்மனைப்பார்தேன்.. நல்ல வேளை அம்மன் எங்களைப்பார்க்கவில்லை!

குணா.. இந்த முறை கொஞ்சம் உற்சாகமாக கேட்டது கௌரியின் குரல்... ஆனா உன்னை நான் வார லீவ்ல பார்க்கிறதுக்கு ஐடியா பண்ணிட்டேனே   என்றாள்... அதே உற்சாகத்துடன்!  என்னடா பண்ணிருக்க?.. என்றேன் நெற்றியில் அவள் தந்த ஈரத்தை தொட்டு ரசித்தபடி..  அதைப்பார்த்ததும் அதுவரை இல்லாத வெட்கம் அவள் முகத்தில் வந்தது... அப்பாவுக்கு பக்கத்துலதான் ட்ரான்ஸ்ஃபர்.. அங்க குவாட்ரஸ் கொடுக்குறதாலதான் அங்க போறோம்.. இப்பவே அம்மாகிட்ட சொல்லிட்டேன்.. ஒவ்வொரு வாரமும் இங்க வந்து இந்த அம்மனுக்கு விளக்கு போடணும்னு வேண்டியிருக்கேன்... அப்பிடியே இங்கயே ட்யூசனும் ஏற்பாடு பண்ணிட்டேன்.. அதனால ஒவ்வொரு வெள்ளிகிழமை ஸ்கூல் முடிஞ்சதும் இங்க சித்தப்பா வீட்டுக்கு வந்துருவேன்... அப்பிடியே இந்த கருவாயனையும் பார்த்துருவேனே... என்றாள்... என்ன..டெய்லி பார்க்கமுடியாது.. அதுவும்  சரிதான்... இந்த காக்கா பயல யாரு டெய்லி பார்க்கிறது? என்றாள் வெட்க்கதோடு... நான் கொஞ்சம் பக்தியோடு அம்மனைப்பார்தேன்......இன்று....

அதே திருவிழா காலம்... அதே அம்மன்... ஆனால் விளக்கு போடுவது என் மனைவி..... என் குழந்தையும் நானும் வேடிக்கை பார்க்கிறோம்... குழந்தை கேட்டாள்.. அப்பா.. ம்ம்.. சொல்லும்மா... என்றேன்... அம்மா வார வாரம் இங்க விளக்கு போட்றா.. கேட்டா நீங்க நல்லாயிருக்கனுமாம்... இங்க விளக்கு போட்டாத்தான் நல்லாயிருக்கலாமா அப்பா என்றாள்... என்ன பதில் சொல்வது? நானாக நினைத்துக்கொண்டேன்.. என்னைப்போல காதலர்களும்.. கணவர்களும் இருக்கும்வரை இந்த அம்மனுக்கு விளக்கு போட பெண்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்!

No comments:

Post a Comment