Friday, 1 March 2013

அது ஒரு மழைக்காலம் - 7 (மதுரை வாசம் ) !
அன்று.

மணக்கோலத்தில் நானும் கௌரியும் சிரித்துக்கொண்டிருந்தோம்! இந்த போட்டோகிராபர் தொல்லை வேற.. கரெக்ட்டா கௌரிய திரும்பிப் பார்த்து ரசிக்கிற நேரமா பார்த்து " சார்.. கொஞ்சம் திரும்புங்க சார்.. என்று ஒரு ஸ்நாப் எடுக்கணும்"ன்னு சொல்லிகிட்டே இருந்தான்! காலைல இருந்து அவ பக்கத்துலே இருக்கேன், ஆனா ஒரு வார்த்தை கூட பேச முடியல! ஆனாலும் அவள் அருகாமை தந்த வாசம், இனி இவள் எனக்குச் சொந்தமானவள் என்ற நினைப்பு தந்த உரிமையில் அவ்வப்போது அவள் விரல் கசக்கி கை கோர்த்த நிமிடங்கள் என ஒவ்வொரு நிமிடமும் மழை நேரத்தில் கேட்கும் ராஜாவின் இசையைப்போல ரசனையாக சென்றது!

மண்டபத்தோடு நண்பர்களும் போய் விட வீட்டில் எஞ்சியிருந்த சொந்தங்களும் போய்விட... நானும் அவளுமே பேசிக்கொள்ளத் தோதாக ஒரு முன்னோட்டத் தனிமை கிடைத்தது எங்களுக்கு! மெதுவாக அவள் அருகில் போனேன்! அவள் வெட்க்கப்பட்டுப் பின்வாங்கினாள்.. "அட.. உனக்கு கூட வெட்க்கப்பட வருதே?" என்று ஆச்சர்யம் கட்டினேன்! இன்னும் வெட்க்கப்பட்டாள்!

 பெண்களின் வெட்கம் இவ்வளவு அழகானதா? அவள் விரல் பிடித்தேன்... இன்னொரு கையால் எட்டி என் தோள்களில் அடித்தாள்! இப்ப எதுக்கு அடிக்கிற? என்றேன்... இன்னொரு அடி விழுந்தது... திடுக்கிட்டு முழிச்சேன்! கர்ண கொடூர கோபத்தோடு அப்பா.. "ம்ம்ம்.. ஏன்டா எவ்வளவு நேரமா கரடி  மாதிரி கத்திகிட்டு இருக்கேன்.. மதுரை வந்தாச்சு..இறங்குடான்னு... பாரு பஸ்ல ஒருத்தர் கூட இல்லை! எறங்கித்தொலைடா... இதுல வேற எதுக்கு அடிக்கிறன்னு ஒரு கேள்வி? பத்து மணிக்கு எந்திரிக்கிற நாயெல்லாம் எதுக்கு காலங் காத்தால நானும் வர்றேன்னு வரணும்?" என்று அர்ச்சனையை ஆரம்பித்தார்! இனி அவர் நிறுத்த மாட்டார்!

ஆனாலும் எனக்கு உடனே அந்தக் கனவில் இருந்து வெளியே வர மனசே இல்லை! அதன் பிறகு எந்த பஸ் எடுத்தோம் எங்கு இறங்கினோம் எதுவுமே எனக்கு தெரியாது! முடிவு தெரியாமல் கலைந்த அந்த கனவுக்குள்ளேயே கரைந்து கிடந்தேன்! திருமண மண்டபம் போனதுமே கௌரியதான் தேடினேன்! இந்தக் கனவை அவளிடம் சொல்ல வேண்டும்! எட்டி அவள் கை பிடித்த அந்த நிமிடங்களோடு நிறுத்தி "ம்ம்.... அப்பறம்?" என்று அவள் ஆவலோடு கேட்க்கும்போது கனவு கலைந்ததை சொல்லி விட்டு அவள் முகத்தில் வரும் ஏமாற்றம் கலந்த வெட்கத்தை ரசிக்க வேண்டும்! இப்படி கலவையான எண்ணங்களோடு அவளைத் தேடிக்கொண்டிருந்தேன்! குறுக்கும் நெடுக்குமாக அலைந்த தாவணிப் பெண்களையும் சுடிதார் பெண்களையும் கவனிக்கத் தோண வில்லை! அம்மாவும் அப்பவும் கூட கூட்டத்தோடு கரைந்து விட்டார்கள்!

திடீரென்று கைகளைத் தென்றல் தீண்டியது! நரம்புகளின் வழியாக மின்சாரம் மூளைக்குள் பாய்ந்தது! சடாரென திரும்பினால்... கௌரி என் கைகளை பிடித்தபடி! இப்படியெல்லாம் சொல்ல ஆசைதான் ஆனா.. எனக்கு அப்படியெல்லாம் தோணல! திருவிழாவில் பலூன் வாங்கித் தரச் சொல்லும் குழைந்தையை கை பிடித்து இழுத்துச் செல்லும்  அம்மாக்களை பார்த்திருக்கீர்களா? அப்படித்தான் என்னை இழுத்துப்போனாள் தறத் தறன்னு! 

மண்டபத்திற்கு கொஞ்ச தூரத்தில் உள்ள ஒரு சின்ன பிள்ளையார் கோவில் அது! உள்ளே சென்றோம், அங்கு பிள்ளையார் மட்டும் யாராவது துணைக்கு வருவார்களா என்று பார்த்தபடி தனியாக இருந்தார்! அப்போதுதான் மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததற்கு அடையாளமாக பூக்களும், அங்கு அழகான பெண்கள் வந்து சென்றார்கள் என்பதற்கு அடையாளமாக பசங்களின் மனதுமாக இரண்டும் சிதறிக்கிடந்தன!

முதலில் போய் பிள்ளையாரை வணங்கிவிட்டு வந்தாள்! அப்போதுதான் அவளை நன்றாகப் பார்த்தேன்! பச்சைக் கலர் பாவாடை தாவணியில் அந்த ஊரு மீனாட்சிக்கு சவால் விட்டு அழகாக இருந்தாள்! ஜடை பின்னாமல் குதிரை வால் போட்டு அதில் கனகாம்பரம் வைத்திருந்தாள்! அவள் காதில் உள்ள தொங்கட்டான் அவள் என்ன வேண்டுகிறாள் என்று தெரிந்துகொள்ள ஆடிப்பார்த்து முயற்சி செய்துகொண்டிருந்தது! 

காதோரத்தில் சுருண்டமுடி அதை ஆடாதே என்பதுபோல் உரசிக்கொண்டு இருந்தது! கழுத்தில் உள்ள தங்க சங்கிலி ஏதோ.. நானுந்தான் இருக்கேன் என்பதுபோல அவள் தாவணி முந்திக்குள் ஒளிந்துகொண்டு எட்டிப்பார்த்தது! கால் கொலுசு அப்பாடா என்பதுபோல் சத்தம் இல்லாமல் ஓய்வில் இருந்தது! அவள் மட்டும் கைகளை கூப்பியபடியே இருந்தாள்! ஆனாலும் நான் பார்ப்பதை உணர்ந்திருக்க வேண்டும், படக்கென்று திரும்பினாள்! எதிர்பாராத இந்த தாக்குதலால் நான் முழித்துக்கொண்டிருக்க.. " சரியான கேடிடா நீ.. சமயம் கிடைச்சா என்னையவே சைட் அடிக்கிற? என்றவாறே கொஞ்சம் விபூதி எடுத்துப் பூசிக்கொண்டு என் நெற்றியிலும் வைத்தாள்!

என் எதிரே உட்கார்ந்தவள் " டேய்.. இன்னைக்கு என்ன புதுசா பார்க்கிற மாதிரி பார்க்குற? இப்பிடியெல்லாம் பார்த்தா அப்பறம் வாழ்க்கைல முதல்முறையா நான் வெட்க்கப்பட வேண்டிவரும்! அதெல்லாம் உன்னால தாங்க முடியாது" என்றாள்! "சரி, என்ன பண்ணலாம் சொல்லு?" என்றேன்! "சரியான டியூப்டா நீ, என்னைய சைட் அடிக்க நானே உன்னைய மதுரைக்கு வர சொல்லணும், தனியா பேச நானே இந்த கோவிலுக்கு கூட்டி வரணும், இப்ப எங்கயாது போகலாம்னா, அதையும் என்கிட்டே கேக்குற? உன்னைப்போய் காதலிச்சேன் பாரு? என்னைய சொல்லணும்" என்றாள்!

 " சரி, அதான் தெரியுதுல்ல? விடு.. படத்துக்கு போவமா?" என்றேன்! "போடா.. சுத்தி நூத்துக்கணக்குல ஆளுங்கள வச்சிக்கிட்டு பேசவா நான் மதுரை வந்தேன்? உன்கூடவே.. உன்கூட மட்டுமே இருக்கணும்.. அழகர்கோவில் போகலாமா? என்றாள்! " ச்சே..வேணாம் கைல வண்டி இல்லை, பஸ் எடுத்து போயிட்டு வர்றதுக்கு லேட் ஆயிரும், எப்பிடியும் நாலு மணிக்கு மேலதான் எல்லோரும் கிளம்புவாங்க பக்கத்துலதான் திருப்பரங்குன்றம், அங்கபோகலாம்னு சொன்னேன்!

என்னை ஆழமாக பார்த்தவள் " டேய்.. எனக்கு எந்த கோவில், எந்த இடம் எதுவும் முக்கியம் இல்லை! உன்கூட நான் தனியா இருக்கணும் அவ்வளவுதான்! எங்க சாமி கும்பிட்டாலும் நான் உனக்காகத்தான் கும்பிடுவேன்! என்னதான் உன்னைய திட்டினாலும் ஊர்ல பஸ் ஏறுனதுல இருந்து உன்னை இங்க பார்க்கிற வரைக்கும் நான் தவிச்ச தவிப்பு எனக்குதான் தெரியும்! ஏதோ இந்த கல்யாணமே நமக்குத்தான் என்கிற மாதிரியே நீ கரெக்ட்டா வந்துரணும்னு எவ்ளோ படபடப்பா இருந்துச்சு தெரியுமா? என்று கண்கலங்கினாள்! " ஹேய்..லூசு.. விடு, இன்னைக்கு பஸ்ல வரும்போது நமக்கு கல்யாணம் ஆகுற மாதிரி கனவு கண்டேன் தெரியுமா?" என்றேன். "அப்படியா? என்று சகஜமானவள் " என்ன வந்துச்சு? சொல்லு" என்று ஆர்வமானாள்!

" அதெல்லாம் அப்பறம் சொல்றேன், அதுல நடந்த ஒரு காமெடி மட்டும் சொல்றேன், நாம ஸ்டேஜ்ல நிக்கும்போது போட்டோகிராபர் போட்டோ எடுத்துகிட்டு இருந்தாரு, திடீர்னு பின்னாடி ஒரே வெளிச்சம், போட்டோகிராபர் "யாருயா பின்னாடி லைட்ட போட்டதுன்னு" கத்த, லைட் எல்லாம் ஆப் பண்ணித்தானே இருக்குன்னு நான் சொல்றேன், ஒரே குழப்பம், வெளிச்சம் எப்பிடி வந்ததுன்னு? அப்பறம் பார்த்தா? ன்னு இழுத்தேன், அவளும் ஆர்வமாக " அப்பறம் என்னடா?" என்றாள், சேருக்கு பின்னாடி இருந்து உன் அப்பா எந்திரிக்கிராரு! ஏதோ தேங்காய் வைக்க வந்தாராம்... அவரு குமிஞ்சு தேங்காய் வைக்க போகத்துக்க.. அவரு மண்டைல இருந்துதான் அந்த வெளிச்சம் வந்துருக்கு" என்றேன்! "கனவுல கூடவாடா எங்க அப்பாவ இழுப்பன்னு?" துரத்த ஆரம்பித்தாள்! 

இன்று

அதே மதுரை! அதே சொந்தகார வீட்டு கல்யாணம்! எப்படியும் கௌரி வருவாள் என்று தெரியும், அதனால் அங்கு போவதை தவிர்க்கப்பார்த்தேன்! ஆனாலும் மனைவி விடவில்லை! மண்டபத்தில் பார்த்தேன், நல்லவேளை அவள் வரவில்லை! கொஞ்ச நேரத்தில் எனக்கு ஏதோ அந்த பிள்ளையார் கோவில் போகணும் போல தோன்றியது! மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அங்கு போனேன்! அந்த கோவில் நிறைய மாறியிருந்தது! பிள்ளையார் வசதியாக மாறிவிட்டார் போல? உள்ளே போனதுமே இதயத்தில் இரும்புப் பொதியாய் இறங்கியது! கௌரி அவள் கணவன் குழந்தையோடு இருந்தாள்! அவள் என்னை கவனித்தாளா தெரியவில்லை! அப்படி ஓரமாக நின்று கொண்டேன்!

மனைவியும் குழந்தையும் சாமி கும்பிட்டு வந்ததும் போகலாம் என்று அவசரபடுத்தினேன்! ஆனாலும் அவள் விட வில்லை " சாமி கும்பிட்டு உட்காராம போககூடாது என்று என் கைகளையும் பிடித்துக்கொண்டு அவர்கள் எதிரிலே உட்கார்ந்தாள்! நான் அவர்கள் பக்கம் நிமிரவே இல்லை! மனைவிதான் ஆரம்பித்தாள் " ஏங்க அழகர் கோவில் போயிட்டு போகலாமா? என்று! அதே நேரத்தில் கௌரியின் கணவனும் அவளிடம் கேட்டான் " கௌரி.. பக்கத்துலதான் திருப்பரங்குன்றம், போயிட்டு போகலாமா?" என்று! என்னையும் மீறி வந்த துளி கண்ணீரை அடக்கிக்கொண்டு அவளை நிமிந்து பார்த்தேன்! அவளும் அதே அவஸ்தையோடு என்னைப்பார்த்தாள்! இதையும் அந்த பிள்ளையார் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்!


அடுத்த பாகம்


அது ஒரு மழைக்காலம்-8 ( பழைய நினைவுகள் ) !
No comments:

Post a Comment