Friday, 1 March 2013

அது ஒரு மழைக்காலம் - 6 (பயணக்காலம்) !

அன்று....

மீண்டும் ஒரு வெள்ளிக் கிழமையின் அதிகாலை! வழக்கத்தைவிட அதிக உற்சாகமாகவே எழுந்துவிட்டேன். காரணம்? நான் உற்சாகமாக இருப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்க போகிறது? ஆமாம்... நீங்கள் நினைத்தது சரிதான்! என் கௌரியை பார்க்க போகும் சந்தோசம்தான்! ஆனால், இந்தமுறை அந்த அம்மன் கோவிலில் அல்ல.அந்த அம்மன், எங்கள் வசந்த மாளிகை அப்பறம் என் கெளரி கூடவே தொத்திகிட்டு வரும் அந்த சுருட்டை சுதா.. இப்படி வழக்கமான எல்லாவற்றையும் தாண்டி ஒரு புது இடத்தில் புதுச் சூழலில் சந்திக்கப்போகிறோம்! ஆமாம்.. எங்கள் இரண்டு வீட்டுக்கும் கொஞ்சம் நெருக்கமான ஒரு உறவு வீட்டு திருமணம் மதுரையில் நடக்கிறது. முதல் நாள் இரவே அங்கு சென்று விடலாம் என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள்!ஆனாலும் என் இந்த உற்சாகத்திற்கு காரணம்.... என் கெளரி என்னிடம் முன்னாடியே சொன்ன தகவல்தான்! அவள் வீட்டில் இருந்தும் முதல் நாளே அங்கு வருகிறார்களாம்! அம்மா வந்து என்னிடம் ஒரு பேச்சுக்காக வருகிறாயா என்று கேட்ட போதே நான் உடனே வருகிறேன் என்று துள்ளி குதித்த காரணமும் இதுதான்!இப்போது என் வேண்டுதல் எல்லாம் ஒரே பஸ்ல அவகூட போகணும்... அவ கை பிடிச்சிகிட்டு மதுரையின் மாட வீதிகளில் நடக்கணும், விரல்களை கோர்த்துக்கொண்டு மீனாட்சி அம்மன் கோவில் பொற்தாமரை குளத்தில் கால் நனைக்கணும், எத்தனையோ காதல்களை பார்த்த வைகை ஆற்றங் கரையில் அவளோடு உட்கார்ந்து கதை பேச வேண்டும்..இப்படி எத்தனையோ ஆசைகளை மனதுக்குள் தேக்கி வைத்து நானும் வலம் வந்து கொண்டிருந்தேன்!நினைவுகளை மனதுக்குள் தேக்கி வைத்து சுமக்க முடியாமல், வழக்கமாக நாங்கள் சந்திக்கும் அந்த அம்மன் கோவிலில் உள்ள ஒற்றை வேப்ப மரத்தடியில் போய் தனியாக அமர்ந்தேன். இந்த கோவிலும் காலம் காலமாக எத்தனை காதல்களை பார்த்திருக்கும்? ஜெயித்தவர்கள் அம்மனே காரணம் என்று உள்ளே போவார்கள், தோற்றவர்கள் இதோ இந்த ஒற்றை மரத்தடியில் அமர்ந்து தன் காதலின் நினைவுகளை இந்த மரத்தின் காதுகளில் காற்றின் வழியே சொல்லி விட்டு செல்வார்கள்!சாமி கும்பிடுவதில் அதிகமாக ஆர்வமில்லாத நான் கூட என் காதலின் வெற்றியை கர்வமாக இந்த அம்மனிடம் சொல்லவாது என் கௌரியோடு கை பிடித்து கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்! ஆனால் அப்போது தெரியவில்லை..... வேப்ப மரத்து உச்சியில் பேய்தான் இருக்கும் என்பார்கள், ஆனால் எனக்கான விதி என்னை பார்த்து சிரித்து கொண்டிருந்ததை!பாருங்க... இந்த காதலே இப்பிடிதாங்க! சந்தோசமா ஆரம்பிச்சேன்... திடீர்னு சோகமா போயிட்டேன்... அந்த மரத்தடியில் சென்று அமரும்போதே எங்களின் அந்த முதல் நாள் உரையாடல்  மனதினில் வந்து போனது!

அது என்னன்னே தெரியல... கௌரின்னு அவ பேரை நினைச்சாவே போதும், மெசேஜ்ல டிக்சனரி போட்டு டைப் பண்ணும்போது போட்டி போட்டு வந்து விழுகுற வார்த்தைகள் மாதிரி அவளோடு நான் இருந்த நினைவுகளின் அணிவகுப்பும் வரிசையா வந்து நிக்கும்! நேற்றும் அப்பிடிதான்... என் வீட்டு போன் அடித்தது... நான்தான் போய் எடுத்தேன்... எடுத்து ஹலோ சொன்ன எனக்கு இன்ப அதிர்ச்சி.. காரணம் எதிர்முனையில் என் கெளரி! " ஹலோ..லோ..லோ.. அந்தப்பக்கம் அவள் கத்திக்கொண்டிருந்தாள்! அதிர்ச்சியில் இருந்து மீண்டு "ஹலோ.. ஹேய்... என்று தடுமாற ஆரம்பித்தேன்!மறுமுனையில் அவள் " ஏன்டா.. பொறுக்கி... கஷ்டப்பட்டு யார் கண்ணுலயும் படாம பூத் வந்து போன் பண்ணிக்கிட்டு இருக்கேன்... போன எடுத்து காதுல வச்சிக்கிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்று பொறிந்தாள்! " ஹேய்.. கெளரி.. நான் உன்னைத்தான் நினைச்சிகிட்டே இருந்தேன்... கரெக்ட்டா நீயும் போன் பண்ணினியா..அதான் சந்தோசத்துல பேச்சே வரல" என்றேன்! " புளுகாதடா... சரி... அந்த சித்ரா வீட்டுக்கு வந்தாளே... அவ சொந்தகார பொண்ணு தேவி.. அவ ஊருக்கு போயிட்டாளா?" என்றாள்.

நானும் ஆர்வ கோளாறுல " ஹேய்.. அவ காலைல எட்டு மணி பஸ்ஸுக்கே போய்ட்டாடாடா......" என்று பாதியிலே நிறுத்தி நாக்கை கடித்து கொண்டேன்! ரைட்டு.. இன்னைக்கு சனியன் போன் வேசத்துல வந்துருச்சு!


" ஏன்டா.. பொறுக்கி.. அப்ப அவ பின்னாலே நீ பஸ் ஸ்டாண்ட் போயிருக்க? போகாம எப்பிடி அவ போன பஸ் டைம் எல்லாம் தெரியும்? இதுல வேற என்னையவே நினைச்சிகிட்டு இருந்தாராம்?" என்று மடக்கினாள்! எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, நல்ல வேளை அவ லக்கேஜ் எல்லாம் நான்தான் சைக்கிள்ள வச்சு கொண்டு போனேன்னு சொல்லல!கொஞ்ச நேரம் திட்டி விட்டு அவளே அமைதியானாள்! லவ் பண்றதுல இதாங்க பிரச்னை, எந்த நேரத்துல எந்த பால் வரும்னே தெரியாது! நல்ல ஃபுலோல போகும்போது  திடீர்னு பவுன்ஸ் பால் வந்து மூஞ்சிய பதம் பார்த்திரும்! வேற என்ன பண்றது? மூஞ்சிய துடைச்சிகிட்டே அவ சொல்றத கேக்க ஆரம்பிச்சேன்... " டேய்.. நல்ல கேட்டுக்க.. நாளைக்கு நைட்டு ஒரு கல்யாணத்துக்காக நாங்க மதுரை போறோம்... கோவிலுக்கு வர முடியாது, அனேகமா உங்க வீட்லயும் நாளைக்கு வருவாங்க, ஏன்னா அவங்க உங்களுக்கும் சொந்தம், அதனால நீயும் எப்பிடியாவது வந்துரு... அத விட்டுட்டு... நான் இந்த பக்கம் மதுரை போனதும் அந்த பக்கம் கோவில்ல போய் சித்ரா, சுதான்னு திரிஞ்ச... மவனே....ஊருக்கு வந்ததும் உனக்கு இருக்கு" என்று சொர்ணாக்கா மாதிரி மிரட்டினாள்!நானும் விடுவனா " ஐயோ.. என்ன கெளரி? அந்த சப்ப மூக்கி சித்ராவ நானாவது...பார்க்கிரதவாது? மீனாட்சி இருக்கிற இடம்தான் சிவனுக்கு மதுரைங்ர மாதிரி... எனக்கு நீ இருக்குற இடம்தான் கோவில்" என்றேன்! அந்த பக்கம் கோபம் மறைந்து சிரிப்பொலி கேட்டது... "டேய்..பொறுக்கி...இந்த வாய் மட்டும் இல்லை... உன்னை என்னைக்கோ நான் தலை முளுகிருப்பேன்" என்றாள்! அப்பவும் நான் விடாமல்.. " ச்சே..நீ குளிக்க இருந்த ஒரு சான்சும் என்னாலதான் போச்சா?" என்றேன்... " டேய்ய்...என்றாள்... காசு முடிந்தது போல..போனும் டொய்ங்ங்... என்றது!இன்று 

நான் மட்டும் வீட்டில் இருதேன், மனைவியும் பொண்ணும் ஏதோ வாங்குவதற்காக பஜார்  சென்றிருந்தார்கள்.  டிவியில் ஏதோ மெகா சீரியல் விளம்பரம் வந்து கொண்டிருந்தது! கிட்ட தட்ட எல்லா பெண்களுமே யாரிடமோ.. ஏய்ய்..என்று விரல் நீட்டி சவால் விட்டுக் கொண்டிருந்தார்கள்! அப்போது பார்த்து போன் சிணுங்கியது... எடுத்து "ஹலோ.. என்று விட்டு அந்த சவால் விட்ட பெண்ணின் புருஷன் கதியை ஒரு நிமிஷம் நினைத்தேன்... அதற்குள் அந்த பக்கம் " ஹலோ..லோ..லோ... என்று கத்தி கொண்டிருந்தாள்! எஸ்.. நீங்கள் நினைத்தது சரிதான்... மனைவிதான்! " ஒருத்தி இந்த பக்கம் கரடியா கத்துறேன்... போன எடுத்து காதுல வச்சிக்கிட்டு அப்பிடி  என்ன  ஆ.ஆ..ன்னு பார்க்கிறீங்க?" என்றாள்! அது ஒண்ணுமில்லை என்று சொல்ல  வாயெடுத்தேன்.. அந்த பக்கம் என் பொண்ணின் குரல் கேட்டது " எஸ் மம்மி...இந்த டேடி எப்பவுமே இப்பிடித்தான்... எப்போதும் ஒரு ஞாபகத்துல இருக்க மாட்டாரு.. " என்றாள். ஆமாம்... இப்போதும் எனக்கு என் கௌரியின் ஞாபகம் வந்து போனதை என்னால் தவிர்க்க முடியவில்லை!
அடுத்த பாகம்


அது ஒரு மழைக்காலம் - 7 (மதுரை வாசம் )

No comments:

Post a Comment