Friday, 1 March 2013

அது ஒரு மழைக்காலம் -5 ( காதல் காலம் ) !
முந்தைய பாகம் !

அன்று

அது ஒரு வெள்ளிக்கிழமை. வழக்கமாக வெள்ளிக்கிழமை என்றாலே எனக்கு அதிகாலையே விழிப்பு வந்துவிடும்.அதிகாலை விழிக்கிறேன் என்பதைவிட முதல்நாள் இரவில் இருந்தே தூக்கம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம்?.. என் கௌரியை பார்க்கபோகிறேன் என்ற நினைப்பைத்தவிர வேறு என்ன காரணம் இருக்கப்போகிறது? அவளை பார்க்கப்போகும் அந்த நாளில் மட்டும் என் ஒவ்வொரு செய்கையின் உந்துசக்தியாக அவள்தான் இருப்பாள். எங்கள் வீட்டிலும் நான் பொறுப்பாக கோவிலுக்கு செல்வதாக நினைத்துக்கொண்டார்கள்.எனக்குத்தானே தெரியும்... நான் பார்க்கப்போவது அந்த அம்மனை அல்ல.. என் தேவதையை என்று! மழைத்துளிக்காக வானம் பார்த்து காத்திருக்கும் மண் போல என் தேவதையின் வரவுக்காக நானும் காத்திருக்க தொடங்கினேன். என் உயிரை ஏழு கடல்.. ஏழுமலைகள் தாண்டிஎல்லாம் நான் வைக்கவில்லை, என் தேவதையின் இதயக்கூட்டுக்குள் பத்திரமாக வைத்துவிட்டு என் உயிரைப்பார்க்க நானே காத்திருந்தேன்.திமிரும் கூட்டத்தால் திணறிச்செல்லும்  பேருந்துபோல.. அவள் நினைவுகளால் நிரம்பிய என் பொழுதுகளும் திணறிக்கொண்டு மெதுவாகவே நகர்ந்தது. வழக்கம்போல அந்த அம்மன் கோவிலுக்கு வெளியே அமர்ந்தேன். அந்த அம்மனும் அங்கே  என்னைப்  பார்த்ததும் கோபம் கொண்டது  போல? என் முகத்தைப்  பார்க்க புடிக்காம  கரண்ட் கட் ( அப்பவே! ).. கரண்ட் கட்டானா என்ன? சிரிப்புல மின்சாரமும்..கண்களில் மின்னலையும் வச்சிருக்கிற என் தேவதை வந்ததும் பாரு.. நீயே உன் முகத்தைப்  பார்க்க முடியாம திரும்பிக்க போறன்னு அம்மனுடன் மனதுக்குள் சண்டை போட துவங்கினேன்.அம்மனும் எனக்கு  பயந்துகிட்டு என் தேவதையை உடனே வரவைத்துவிட்டாள். அதோ..தூரத்தில் என் தேவதை.. கைகளில் விளக்கை ஏந்தி..இதயத்தில் என்னை ஏந்தி.. என் தவிப்புகளை காலடியில் போட்டு  மிதித்து நடந்து வந்தாள். அவள் காலடி பட காத்திருந்தது போல கரண்ட் வந்தது... கோவில் ஒழி பெருக்கியில் நின்று போன பாடல் வரிகள் ஒலித்தது... " இந்த ஜென்மம் எடுத்ததில் என்ன பயன் என்று சொல்லடி நீயாத்தா...." என்று. ஆனால் எனக்கு சந்தேகமே இல்லை. என் ஜென்மம் இந்த தேவதைக்காகத்தான் என்றுதான் எனக்கு தெரியுமே!அவள் பூஜைகள் முடித்து வந்ததும் எங்கள் வழக்கமான வசந்த மாளிகைக்கு வந்தோம். அவளே ஆரம்பித்தாள்.. "என்னடா சீக்கிரமே வந்துட்டியா? கரண்ட் வேற இல்லைபோல என்ன பண்ணின? என்றாள். கரண்ட் இல்லைனா என்ன?..அதான் கோவில்ல நிறைய விளக்கு எரியுதுல்ல என்றேன். " அப்பறம் ஏன்டா அந்த சித்ரா கோவிலுக்கு வரல? என்றாள். அவளை பார்த்த மயக்கத்தில் நானும் '" ஏன் வரல? வந்தாளே... வரும்போதுகூட யாரோ சொந்தக்காரப்பொண்ணு தேவியாம்.. அதையும் கூட்டி வந்தாள் என்று அவள் விரித்த வலை தெரியாமல் போய்  விழுந்தேன். ஆப்பு செதுக்க உளி தேவை இல்லை.. என் வாயே போதும்... நல்லா செதுக்கி அதில் ஸ்டூல் போட்டு நானே உட்கார்ந்தேன்.கையில் வைத்திருந்த அர்ச்சனைப்பையை வைத்து என் மண்டையில் ஒரு அடி விழுந்தது.. நல்லவேள ஒரு தேங்கா மூடிய ஐயர் எடுத்துக்கிட்டதால சேதாரம் கம்மியா இருந்தது. " பக்கி..கோவிலுக்கு என்னைய பார்க்க வர்ற சாக்குல.. போற வர்ற பொண்ணுங்கள கணக்கெடுத்துக்கிட்டு இருக்கியா? இதுல புதுசா யாரு வந்துருக்கான்னு கூட தெரியுது? என்று ஐயர் அம்மனுக்கு மறந்து போன அர்ச்சனைகளை எனக்கு செய்துகொண்டிருந்தாள். நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.. நல்லவேள... ரெண்டாவது தெரு ப்ரியா வீட்டுக்கு புதுசா வந்த மேனகா கோவிலுக்கு வந்தத சொல்லல.கொஞ்சநேரத்தில் அவளே சமாதானமாகி நெற்றியில் விபூதி வைத்துவிட்டாள். நான் ஒன்றும் பேசாமல் அமைதிகாத்தேன். அடுத்து என்ன ஆயுதம் என்று தெரியாமல் ஆப்பு செதுக்க நான் என்ன முட்டாளா? அவளே ஆரம்பித்தாள்.. டேய்..பொறுக்கி... போற வர்ற பொண்ணுங்கள பார்த்து ஜொள்ளுவிட மட்டும் தெரியுதுல.. லவ் பண்ற பொண்ணுக்கு ஒரு கவிதை எழுதுவோம்... ஏதாவது கிப்ட் கொடுப்போம்..இப்பிடி ஏதாவது செய்யிறியா என்றாள். அப்பாடா.. என்ற நிம்மதியுடன்.. " இல்லடா.. நான் எப்பவுமே எதிர்  கவிதையெல்லாம் எழுதுவதில்லை என்றேன். "உன்னை யார்ரா எதிர் கவிதை எழுத சொன்னது? என்னைப்பத்தி எழுது என்றாள். அதான்டி சொல்றேன்... உன்னமாதிரி அழகான கவிதைக்கு நான் எப்பிடி எதிர்கவிதை எழுதமுடியும் என்றேன்.இந்த ஒரு வரியில் சித்ராவும்..தேவியும் மறைந்து உதட்டில்  வந்த புன்னகையை மறைத்துக்கொண்டு... "பொறுக்கி.. இந்த வாய் மட்டும் இல்லைனா... என்று என் முடி கலைத்தாள்... ஆனாலும் ஒரு குறை என்றேன் அவளிடம். என்னடா குறை கண்ட என்றாள். ஒரு அழகான கவிதையை ஆரம்பிச்ச கிடாமீசை.. சோம்பேறிப்பட்டு அத முடிக்காம விட்டுட்டான்.. என்றேன். அது யார்ரா கிடாமீசை எனக்கு தெரியாம? என்றாள். அதான்டி... மண்டைல உள்ள முடிய பூராம் மீசைலையும்... மீசைல இருக்கவேண்டிய கொஞ்சூண்டு முடியை  மண்டைலையும் வச்சிருப்பானே..அவன்தான் உன் அப்பன் என்றேன்...

நல்ல வேளை.. தேங்கா பைய நான் கைல எடுத்துக்கிட்டேன்.  அடிப்பதற்கு  அதை  தேடியவள்.. அது இல்லாதால் எரித்துவிடுவது போல முறைத்தாள்... " சரி.. அது என்னடா குறை? என்றாள்....  ஆமா.. அழகான கவிதையா உன்னை கொடுத்திட்டு உனக்கு ஒரு தங்கச்சிய கொடுத்து அத இன்னும் அழகா முடிச்சிருந்தா எவ்ளோ அழகா இருந்திருக்கும்? கெடுத்திட்டான் பாவி.. என்றேன்... உனக்கு நானே அதிகம்... இதுல ஒரு தங்கச்சி வேற கேக்குதா என்று துரத்த ஆரம்பித்தாள்...இன்று

அதே கோவிலில் பூஜைகளை முடித்து வந்த மனைவி மகளோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். " டேடி.. இந்த மம்மி ரொம்ப மோசம்.. கோவிலுக்குள்ள என்னை திட்டிக்கிட்டே இருக்கா... என் கிளாஸ்ல எல்லோருக்கும் சித்தி இருக்காங்க.. மம்மி அடிச்சா சித்திகிட்ட சொல்றாங்க.. லீவ்ல சித்திகூட இருக்காங்க.. ஏன் டேடி எனக்கு மட்டும் சித்தியே இல்லை? என்றாள்.. " அது வந்துமா...உன் தாத்தா இருக்கார்ல... அதான்மா.. உதட்டுக்கும் மீசைக்கும் நடுவுல பென்சில்ல கோடு போட்ருப்பாரே.. அந்த தாத்தா ஒரு சோம்பேறிம்மா... உனக்கு ஒரு சித்தி இருந்திருந்தா உனக்கு மட்டும் இல்லைமா.. எனக்கும் சந்தோசம்தான்.. என்ன பண்றது? என்றேன்.. இந்த முறையும் ஜாக்கிரதையாக கையில் அர்ச்சனை கூடையை பிடித்துக்கொண்டேன்... இதைக்கேட்ட அவள்.." உங்களுக்கு நானே அதிகம்..இதுல தங்கச்சி வேற கேக்குதா என்று துரத்த ஆரம்பித்தாள்... ஆனால் நான்தான் ஓடுவதை மறந்து நின்றுவிட்டேன்.அடுத்த பாகம்


அது ஒரு மழைக்காலம் -6 (பயணக் காலம் )

No comments:

Post a Comment