Friday, 1 March 2013

அது ஒரு மழைக்காலம் -4 ( விடுமுறை காலம் ) !
முந்தைய பாகம் 
அன்று...

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒன்பது மணி.... வழக்கம் போல தூக்கத்தில் இருந்தேன்.. அம்மா அப்பா வீட்டில் இல்லை, உறவினர் வீட்டு திருமணத்திற்காக அதிகாலையே சென்று விட்டார்கள்... இரவுதான் வருவோம் என்று சொல்லிவிட்டார்கள். நான் என் கௌரியை பார்ப்பதற்காக படிக்கவேண்டும் என்று கூறிவிட்டு இருந்துவிட்டேன். அவளை பார்ப்பதே இந்த இரண்டுநாள்தான்..அதையும் தவறவிட எனக்கு மனமில்லை.. அந்த அதிகாலை அரை தூக்கத்தில் கௌரியோடு காதல் டூயட் பாடிக்கொண்டிருந்தேன்... காபி மணம் காற்றில் வருவது போலவும்... சில்லென்ற கைகள் என்னை எழுப்புவது போலவும் தோன்றியது... அதை ரசித்துக்கொண்டிருக்கும்போதே... என் நெற்றியில் குளிர்ச்சியும்..அதை அனுபவிப்பதற்க்குள் கன்னத்தில் சூடும் உறைத்தது.... திடுக்கிட்டு எழுந்தால்... கைகளில் காபியோடும் உதடுகளில் புன்னகையோடும் என் கெளரி! என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை... கௌ...ரி..ரி.... நீயா? என்றேன்.... ஆமாண்டா சோம்பேறி... மணி ஒன்பது ஆச்சு இன்னும் என்ன தூக்கம் வேண்டி கிடக்கு?" என்றாள், இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.. என்னை நானே கிள்ளி பார்த்துக்கொண்டேன்.. " நீ கிள்ளி பார்த்ததெல்லாம் போதும்.. காப்பிய குடிச்சிட்டு குளிச்சிட்டு வா... டிபன் ரெடியாயிரும்.. சாப்ட்டுட்டு பேசலாம் என்றாள்.


அவசரமாக குளித்துவிட்டு வந்தேன்.... அதற்குள் அவள் எல்லாம் தயாராக எடுத்து வைத்திருந்தாள்... தரையில் அமர்ந்து சாப்ட உட்க்கார்ந்தேன்.. எதிரில் என் கெளரி எனக்கு எடுத்து வைத்தாள்.. இது ஏதோ எனக்கு கனவில் வரும் காட்சியாகவே தோன்றியது.. ஏய்ய்... சொல்லு நீ எப்பிடி இங்க வந்த? உங்க வீட்ல திட்ட மாட்டாங்களா? என்றேன்... எனக்கு எடுத்து வைத்துக்கொண்டே அவளும் சொன்னாள்.." இல்லடா.. நேத்து நைட்டு உங்க அம்மா எங்க வீட்ல வந்து சொல்லிட்டு போனாங்க.. அவங்க கல்யாணத்துக்கு போறதாவும்.. நீ படிக்கணும்னு வீட்ல இருக்கதாவும்.. அதனால என் சித்திட்ட சொல்லி உனக்கு சாப்பாடுக்கு உதவி பண்ண சொன்னாங்க... நான்தான் சித்தி உங்களுக்கு ஏன் சிரமம்னு சொல்லிட்டு நானே வந்திட்டேன்... ஏதோ.. இந்த ஒரு நாள் மனதால உன் மனைவியா இருக்குற மாதிரி இருக்குடா... என்றாள் கொஞ்சம் கலங்கியவாறு.ச்சீ.. என்ன ஒரே சென்டிமென்ட்டா புளியிர... அதெல்லாம் விடு..மதியம் என்ன சமைக்க போற? அத சொல்லு முதலில் என்றேன்.. கண்களை துடைத்துக்கொண்டு என்னை பார்த்தவள்.." போடா.. நான்தான் சொன்னன்ல... இன்னைக்கு மனசால உன் மனைவின்னு... இன்னைக்கு ஞாயிற்று கிழமை... அப்ப நீதான் சமைக்கணும் என்றாள்.... அதிர்ச்சியோடு அவளைப்பார்த்து... ஹேய்ய்... என்ன விளையாடறியா? என்றேன்... விளையாட்ரனோ வெறுப்பேத்துரனோ... இன்னைக்கு உன் சமையல நான் சாப்புடனும்...  வேணா நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் என்றாள்... சரி உன் தலைவிதி அப்பிடின்னா யாரால மாத்த முடியும் என்றவாறு நானும் கோதாவில் குதித்தேன்.எனக்கு தெரிஞ்சதெல்லாம் காய்கறில பருப்பு போட்டா சாம்பாரு... புளி கரைச்சி ஊத்துனா புளி குழம்பு.... கௌரியோட நல்லதுக்காக சாம்பாரே( மாதிரி ) வைத்தேன்... வாழக்காய மொளகா பொடிக்குல முக்கி எடுத்து வறுவல் என்றேன்... ஆனா நிறைய பேசினோம்... கடவுளே இந்த நொடிகள் அப்பிடியே நிற்ககூடாதா என்று தோன்றியது... கடிகாரத்தின் ஒவ்வொரு வினாடியும் என் உயிரையும் சேர்த்தே நகர்த்துவதாக தோன்றியது.நீயும் நல்லா படிடா... நானும் நல்லா படிக்கணும்... நான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தா எங்க அப்பா திருப்பதில மொட்டை போடறதா வேண்டியிருக்காருடா... என்றாள்.. ஹேய்... யாருக்கு என்றேன் அவசரமாக.... ச்சீ.... அவருக்குதான்.. என் மேல அவ்ளோ பாசம் என்றாள்.... போடி லூசு... இதுக்கு ஏன் திருப்பதி போகணும்? உன் அப்பா அங்க போய் மொட்டை அடிச்சா கண்ண மூடி இருக்குற பெருமாளே கடுப்பாயிருவாறு... ரெண்டு காது ஓரமா ஒரு நாலு முடி... பின் மண்டைல ஒரு பத்து முடி...இதுக்கு ஏன் அங்க போகணும்? இங்க இருந்தே ஒவ்வொன்னா எடுத்து திருப்பதி இருக்க திசை பார்த்து ஊதிவிட சொல்லு.. கரெக்ட்டா பெருமாள்கிட்ட போயிரும் என்றேன்.... கோவத்தோடு துரத்த ஆரம்பித்தாள்.இப்படி ஒவொரு நொடியும் சந்தோசத்தின் உச்சமாக சென்றது அன்று.... சரிடா நானும் வீட்டுக்கு போகணும் வா சாப்டுவோம் என்று சொன்னதால்... அவளை அமர வைத்து நானே எடுத்து வைத்தேன்... உனக்கு? என்றாள்... நீயே ஊட்டிவிடு என்றேன்... க்கும்.. ஆசை... அதெல்லாம்  இப்ப  இல்லை என்றவாறு சாப்பாடை எடுத்து வைத்தவள் கண் கலங்கினாள்.... அதைப்பார்த்து என் கண்களும் கண்ணீரை சிந்த தயார் ஆனது... இதைப்பார்த்த கெளரி... டேய் லூசு..நான்தான் வாழக்காய் காரம் தாங்காம கண்ணீர் விடறேன்.. நீ ஏன்டா அழுகுர என்றாள்.... அப்போது சிரிக்க  ஆரம்பித்தேன்.... அந்த நொடிகள்.....இன்று...

அதே ஞாயிற்று கிழமை... அதிகாலை தூக்கத்தில் இருந்தேன்...( ஒன்பது மணிதான் ) காதோரத்தில் டங்கென்று ஒரு சத்தம் கேட்டது...(காபியாம் ) இருந்தாலும் கண்களை திறக்காமல் அமைதிகாத்தேன்... சின்ன புள்ளை கூட எந்திருச்சு குளிச்சு சாப்ட வந்துருச்சு... இன்னும் தூக்கம் வேண்டி கிடக்கு... இன்னைக்கு ஞாயிற்று கிழமைதானே...இந்த ஒரு நாளாவது எனக்கு சமையல்ல ஹெல்ப் பண்ணலாம்ல... ஊரு உலகத்துல பாருங்க... ஒவ்வொருத்த பொண்டாட்டிக்கு  எப்பிடியெல்லாம்  ஹெல்ப் பண்றாங்கன்னு... என்று புலம்ப ஆரம்பித்தாள்.... இதைக்கேட்ட என் மகள்... அம்மா ப்ளீஸ்மா... அப்பா சமைக்க வேணாம்மா.... ஹீ நோஸ் ஒன்லி சாம்பார்... இல்லைனா கார குழம்பு... முடியலம்மா என்றாள்... அப்போது சிரிக்க ஆரம்பித்தேன்!
அடுத்த பாகம்


அது ஒரு மழைக்காலம் -5 (காதல் காலம் )
No comments:

Post a Comment