Friday, 1 March 2013

அது ஒரு மழைக்காலம் - 3 ( ஊடல் காலம் )


முந்தைய பாகம்


  அது ஒரு மழைக்காலம் - 2 ( திருவிழாக்காலம் )

அன்று....

அது ஒரு வெறுமையாய் சென்ற வாரத்தின் இறுதிக்காலம்.... ஒவ்வொரு விடியலுமே அவளைப்பார்த்து விடிந்த காலங்கள் போய்.. விடியவே வேண்டாம் என்று வெறுத்த கொடுமைக்காலத்தின் இறுதி நொடிகள் அது .. ஏனென்றால் அன்று வெள்ளிக்கிழமை! அதே அம்மன் கோவில்.. கௌரிக்காக   காத்திருந்த அந்த நொடிகள் மட்டும் நான் கவிஞனாக அவதாரமெடுத்த தமிழுக்கு சோதனை காலம்... ஆனால் நான் எழுதிய கவிதைகள் எல்லாமே அவளைப்பார்த்ததும்  தானாக குப்பைத்தொட்டி போய்விடும்.. பின்னே? நான் ஆயிரம் கவிதைகள் எழுதினாலும் என் பெருங்கவிதை கௌரிதான் என்று அவைகளுக்கு தெரியாதா என்ன?


என்ன?... ரொம்ப பழசா இருக்கா? என்ன செய்றது....  அவளுக்காக காத்திருக்கும் போது இப்படித்தான் ஏதாவது மொக்கையா யோசிச்சிகிட்டு இருக்கேன்... கெளரி  இப்ப இருந்தா இதுக்கும் பதில் சொல்லுவா ... நீ யோசிக்கிறது பூராம் மொக்கைதானடா.....என்று! தன்னால் சிரித்துக்கொண்டிருந்த என்னை பார்த்த பல பெண்கள் மனதில் கேள்வியோடும்.. போனா போகுதுன்னு கொஞ்சம் புன்னகையோடும் சென்றனர்... ஆனால் அந்த அம்மன் மட்டும் எந்த சலனமும் இல்லாமல் அப்படியே இருந்தது.. என்னைப்போல பல லூசுகளை பார்த்து பழகி விட்டதுபோல...


திடீரென்று... பலத்த காற்று...... தெருவில் கிடந்த குப்பை  சருகுகள் அப்படியே என் மூஞ்சியை வருடிவிட்டு சென்றன... அதையும் கண்மூடி ரசித்தேன்.... தூரத்தில் அவள் வருகை... இருங்க...இருங்க..... இதெல்லாம் நான் சொல்லவே இல்லையே? நீங்களா ஏன் நினைக்கிறீங்க? ஓவரா தமிழ் படம் பாக்காதிங்க.... இது எதுவுமே நடக்கவில்லை... ஆனாலும் கெளரி வந்துகொண்டிருந்தாள்! பாவாடை தாவணியில் அம்மனுக்கு போட்டியாக அழகு தேவதையாக என் கெளரி.... பக்கத்தில் அந்த சுருட்டை சுதா... அவளிடம் பேசிக்கொண்டே வந்தவள் என்னைக்கடக்கும்போது ஒரு பார்வை பார்த்தாள் தெரியுமா? அய்யோ..... அந்த பார்வையே போதும்.... என் ஒருவாரத்தவிப்பையும் காத்திருந்த நொடிகளின் வலியையும் அந்த பார்வை மயிலிறகால் வருடி விட்டு சென்றது...


மணிக்கணக்கில் காத்திருந்த எனக்கு.. அவள்  கடந்து சென்ற பின் காத்திருக்கும் மணித்துளிகளை கடக்க முடியவில்லை, அது தெரிந்தோ என்னவோ.... விரைவிலே திரும்ப வந்தாள்.... கூடவே அந்த சுதா..என்னைப்பார்த்து சம்பந்தமே இல்லாமல் வெட்கமாக சிரித்தவள்.. வர்ரேண்டி.... என்று அவளிடம்  கூறி விட்டு அவள் பதிலை எதிர்பாராமல் சென்று விட்டாள்.. கௌரியும் என்னை மெளனமாக கடந்து சென்றாள்.. எனக்கு தெரியும்..அவள் எங்களது வசந்த மாளிகை நோக்கித்தான் செல்கிறாள் என்று! ஆமாம்.. கோவில் மாடுகள் கட்டும் மாட்டுகூடம்தான் அந்த வசந்த மாளிகை...இதை உங்களிம் சொல்லி முடிப்பதற்குள் என் கால்கள் அங்குதான் இருந்தது!


உள்ளே... நான் போனதைகூட கவனிக்காமல் உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பதைப்போல் மாடுகள் அசை போட்டுக்கொண்டிருந்தன.... கெளரி கூட உர்ர்ரென்று இருந்தாள்... " கெளரி... அழைத்தேன்... பதில் இல்லை... கெளரி... மீண்டும் அழைத்தேன்... ம்ம்ம்.... என்று மட்டும் கேட்டது.... என்னாச்சு கெளரி? உனக்காக எவ்ளோ நேரம் இங்கே காத்திருந்தேன் தெரியுமா? நீ என்னடான்னா பேச மாட்டேங்கிற என்றேன்... சடக்கென்று அந்த பெரிய விழிகளால் உருட்டிப்பார்த்தவள்... ஏன்டா..பொறுக்கி... நான் வர்ற நேரம் தெரிஞ்சும் சீக்கிரமா கோவிலுக்கு வந்து போற வர்ற பொண்ணுங்கள ஜொள்ளு ஒழுக பார்த்திட்டு... இப்ப எனக்காக காத்திருந்தேன்னு பொய் சொல்றியா? என்றாள்!


 ஆஹா... சுருட்ட சுதா சுருதி மாறாம வாசிச்சிட்டு போயிட்டாளே... என்று நினைத்துக்கொண்டு...இல்லம்மா கெளரி.... நான் அப்பிடியெல்லாம் இல்லை என்றேன்...

போடா... பொறுக்கி... உனக்காக நான் வீட்ல பொய் சொல்லி வந்தேன் பாரு.. எனக்கு நல்லா வேணும்... இனி நான் இங்க வரவே மாட்டேன்..நல்லா டெய்லி வந்து உக்காந்து ஜொள்ளு விட்டுகிட்டு இரு என்றவள்... வேகமாக நகர்ந்தாள்... கொஞ்ச தூரம் போனவள் திரும்ப வந்தாள்... சந்தோசப்ப்படும்போதே.... ரொம்ப நடிக்காத என்று கூறி விட்டு கொஞ்சம் குங்குமத்தை நெற்றியில் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டாள்... ஒரு கலவையான  உணர்ச்சியில் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.. அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் மாடுகள் இன்னும் அசை போட்டுக்கொண்டிருந்தன...


இன்று...

அதே கோவில்... மனைவி குழந்தையோடு வந்திருந்தேன்... நீ போய் சாமி கும்பிட்டு வாம்மா... நான் இப்படி சும்மா காத்தாட வெளில வெய்ட் பண்றேன் என்றேன் மனைவியிடம்... "க்கும்.....உங்கள பத்தி தெரியாதா? என்னை உள்ள போக சொல்லிட்டு இங்க உக்காந்து போற வர்ற  பொண்ணுங்கள  சைட் அடிக்கிறதுக்கு?.. ஒழுங்கா உள்ள எங்களோட வந்து சாமி கும்புடுங்க என்றாள்... ஏனோ தெரியவில்லை? அந்த கணத்தில் என் கெளரி என் மனதில் நிழலாடியதை தவிர்க்க முடியவில்லை!


அடுத்த பாகம்


அது ஒரு மழைக்காலம் -4 (விடுமுறைக் காலம் )
No comments:

Post a Comment