Wednesday, 27 February 2013

OK..OK... ஒரு கல கல கண்ணாடி!
ஒரு கல் ஒரு கண்ணாடிய பத்தி எல்லோரும் நிறைய சொல்லிட்டாங்க. நாமளும் நம்ம பங்குக்கு ஏதாவது சொல்லனும்ல. ஏன்னா.. ரொம்ப நாளைக்கு பிறகு கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிக்க வைத்த படம் இது! கதை? அது எதுக்கு இங்க? இருந்தா சொல்ல மாட்டனா?  ஒரு இளைஞன் ஒரு இளைஞிய(?) லவ் பண்றான்.அதுக்கு அவன் பண்ற டகால்டி வேலைகள்தான் படம். அந்த இளைஞனுக்கு ஒரு நண்பன். அது சந்தானமா இருந்துட்டா கேக்கவா வேணும்?
 
 ராஜேஷும் சந்தானமும் சேர்ந்தா சும்மா ஷேவாக்கும் கெய்லும் சேர்ந்து ஓப்பனிங் இறகுன மாதிரி சும்மா பட்டைய கிளப்புறாங்க. ஓப்பனிங் நல்லா ஆடிட்டா பின்னாடி வந்து பிரவீன் குமார் வந்து அடிக்கிற இருவது ரன் கூட பெருசா தெரியும்ல? அந்த மாதிரிதான் இதுல உதயநிதி! சும்மா சொல்ல கூடாது கொஞ்ச நேரம் பவுன்ஸ் பால் பார்த்து பயந்த மாதிரி இருந்தாலும் பின்னாடி சுதாரிச்சிகிட்டு சார்ட் பிட்ச் பால வெளுத்து வாங்குற மாதிரி வாங்கியிருக்காரு.
 
 
 
 
சம்ரதாயமா சொல்லனும்னா ஹீரோ உதயநிதி ஸ்டாலின்! இப்பிடி ஒரு அறிமுகத்துக்குதான் இத்தனைநாள் காத்திருந்தார் போல? பக்கத்துவீட்டு பையன் தோற்றம் இவருக்கு பெரிய ப்ளஸ். ஆனா.. நாமதான் லோன் வாங்குன டியூவ நினைச்சு நாலு நாள் தாடியோட திரிஞ்சோம்னா.. பெரிய இடத்துப் புள்ளைங்க, அதுங்களுக்கும் விதிய பாருங்க? படம் முழுதும் சலூன் கடைக்கு பாக்கி வச்ச மாதிரியே வர்றாரு! கண்ணை அடிக்கடி சிமிட்டுவதுதான் காமெடின்னு யாரோ அவருக்கு ராங்கா அட்வைஸ் பண்ணிருக்காங்க போல?
 
படம் முழுதும் சிமிட்டிகிட்டே இருக்காரு! ஆனாலும் அதையெல்லாம் மறக்கவைக்குது நகைச்சுவையான திரைக்கதை. சில குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் உதயநிதி ஒரு நல்ல வரவுதான் தமிழ் சினிமாவிற்கு. அதே நேரத்துல உடன்பிறப்புகளின் வாழ்த்துக்களையும் துதிபாடிகளையும் நம்பாமல் இதேபோல நடிச்சா நேரமையான சினிமா ரசிகர்கள் எப்போதும் இவரை ரசிப்பார்கள். கூட்டத்தை நம்பி பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சார்னா இவரும் ஒரு அவருதான் என்ற நிலைதான்.
 
ஹீரோயின் ஹன்சிகா மோத்வாணி. நல்லவேள உதயநிதி  இந்த அம்மணிய தூக்குற மாதிரி எந்த சீனும் படத்துல இல்லை. அனேகமா இது உதயநிதியோட பர்சனல் வேண்டுகோளா இருக்கும் டைரக்டர்கிட்ட! இந்த அம்மா சிரிக்கும்போதும், கோவப்படும்போதும் அதுக்கே தனியா சப்டைட்டில் போடணும் போல?  அவருடைய பிரமாண்டமான உடம்புக்குள் நடிப்பை மட்டும் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு. சின்ன குஸ்பூன்னு யாரோ சொன்னத நம்பி கெக்கே பிக்கேன்னு சிரிச்சிகிட்டே இருக்கு இந்தப் பொண்ணு!
 
ஹன்ஷிகாகிட்ட யாராவது சொல்லணும்..  உதயநிதிக்கு முதல் படம்னா அம்மணிக்கு கடைசி படமா இருக்கவும் வாய்ப்பு இருக்கு. ஹன்ஷிகா மேல ராஜேஷ்க்கு என்ன கோபமோ? மாப்பிள்ளை கேரக்டர வச்சு மனசுல உள்ளதெல்லாம் திட்டி தீர்த்திட்டாறு! சரி விடுங்க.. அத அவங்க அப்பறமா டிஸ்கஸ் பண்ணிக்கட்டும்! ஆனா பாடல் காட்சிகளில் பாலைவனத்தின் வெப்பத்தையும் மீறி அம்மணி கண்ணுக்கு குளிர்ச்சியா வந்து போறாங்க! அது போதாதா நமக்கு?
 
இப்ப சந்தானம்... ராஜேஷ் திரைக்கதையே இவர மனசுல வச்சுதான் பண்ணிருப்பார் போல? புதுசா இறங்குற பேட்ஸ் மேன சீனியர் பேட்ஸ் மேன் வழி நடத்துற மாதிரி மனுஷன்  படம் பூரா உதயநிதிய தாங்குறாரு. இவருடைய முந்தைய படங்களில் கூட பார்க்க முடியாத ஃபேஸ் ரியாக்சன்கள் இதுல அல்ட்டிமேட்! அதுலயும் உதயநிதிய காப்பாத்த கதவை உடைக்க அவர் கொடுக்குற பில்டப்.. விழுந்து எந்திரிச்சி வந்ததும் சரண்யாவும் உதயநிதியும் பேசுற சீன்ல சந்தானம் கொடுப்பாரு பாருங்க..ஒரு ரியாக்சன்.. சான்சே இல்லை..
 
இவ்ளோ திறமைகளை வச்சிக்கிட்டு இருக்கவற இவ்ளோ நாள் சும்மா இரட்டை அர்த்தம் வசனம் பேச வச்சு வேஸ்ட் பண்ணிருக்கு தமிழ் சினிமான்னுதான் சொல்லணும்! பிளைட்ல மும்பை போற சீன்லயும் சரி.. கிளைமேக்ஸ்ல உதயநிதி பேசுற பட்லர் இங்க்லீஷ்க்கு இவர் கொடுக்கு டிரான்ஸ்லேசனும் சரி.. யாராவது இந்த சீன்களுக்கு சிரிக்காம இருந்தா கண்டிப்பா அவங்க டாக்டர பார்க்கிறது நல்லது! சந்தானம் பத்தி சொன்னா சொல்லிகிட்டே இருக்கலாம் .. வெல்டன் சந்தானம்.. கீப் ராக்கிங்!
 
இவர்க்ளைதவிர்த்து உதயநிதியின் அம்மா அப்பாவாக அழகம்பெருமாளும் சரண்யாவும். சரண்யா சும்மா ஓன் கிரவுண்ட்ல அடிச்சி ஆடற மாதிரி நடிச்சிருக்காங்க. அதுலயும் உதயநிதி ஹன்ஷிகாவ சிக்னல்ல பார்த்ததும் ஆட்டோவுக்கு அவர் மாறும் சீன் ஒன்னு போதும். அழகம் பெருமாள் வந்துட்டு போறாரு. ஆனா இவங்க இருபதுவருஷம் பேசாம இருக்கது சுத்த பேத்தல். எப்பிடி பார்த்தாலும் லாஜிக் இடிக்குது.
 
ஹன்ஷிகா அப்பாவா சாயாஜி ஷிண்டே, அம்மா உமா பத்மநாபன். ஹீரோயின் வானத்துல இருந்து வந்தாங்களாங்கற கேள்விய தவிர்க்கத்தான்  ராஜேஷ் இவங்க ரெண்டு பேரையும் இதுல கொண்டு வந்துருக்காரு! வேற காரணம் எதுவும் தெரியல. உதயநிதியும், சந்தானமும் சத்யம்ல வேலை பார்க்கிறதா சொல்றாங்க, ஆனா ஒரு சீன தவிர எல்லா நேரமும் இவங்க வெளிலதான் சுத்துறாங்க! சத்யம் முதலாளி ரொம்ம்ம்ப நல்லவரோ? படத்துல இந்த மாதிரி சின்ன சின்ன லாஜிக் மீறல்கள். ஆனா அதையெல்லாமே மறக்கடிக்குது ஒவ்வொரு பிரேமிலும் வரும் நகைச்சுவை! 
 
இசை ஹரீஸ் ஜெயராஜாம்! வழக்கமா வெளில இருந்து சுட்டு டியூன் போடுவாரு. இதுல வித்தியாசமா அவரோட பழைய பாடல்களையே திரும்ப ரீமிக்ஸ் பண்ணி போட்ருக்காரு! இருந்தாலும் கேட்கும்போது நல்லா இருக்கு. வேணாம் மச்சான் பாடல் மட்டும் மனசுல நிக்குது! இந்த ஒரு பாட்டுல மட்டும் சந்தானம் மீசையோட வர்றாரு! என்ன வேண்டுதலோ? ஒளிப்பதிவு பாலசுப்ரமணி. இதுபோல படத்துக்கு இதை மீறி ஒன்னும் செய்ய முடியாது. அதனால்தான் பாடல் காட்சிகளில் தன் பசிய தீர்த்துகின்ட்ருக்கார்!
 
மும்பை ஏர்போர்ட்ல  ரெண்டு பேரும் கட்டிக்கிறதோட படம் முடியும்னு பார்த்தா அதன் பிறகு ஏன் இந்த தேவை இல்லாத இலுவைனு தெரியல? முந்தைய படத்தோட ஹீரோவ அடுத்த படத்துல கொண்டு வர்ற ராஜேஷோட செண்டிமெண்ட் காரணமா இருக்கலாம். அப்ப அடுத்த படத்து கிளைமேக்ஸ்ல உதயநிதிய எதிர்பார்க்கலாம்! ஆனாலும் ஒரு ரசிகனுக்கு என்ன தேவையோ, அவன் எதை எதிர்பார்த்து தியேட்டருக்கு வர்றானோ.. அதை சரியான விகிதத்தில் கலந்து கட்டி கொடுத்த ராஜேஷை கண்டிப்பா பாராட்டியே ஆகணும்! கோடை விடுமுறைல குடும்பத்தோடு சிரிச்சு ரசிக்க ஒரு நல்ல திரைப்படம்.
 
 
 

No comments:

Post a Comment