Thursday, 14 February 2013

உங்கள் குழந்தைக்கு நீங்கள் தருவது என்ன?குழந்தைகளுக்கு தேர்வுக்காலம் வந்துவிட்டது!குழந்தைகளைவிட அவர்களின் பெற்றோர்கள்தான் அதிக மன உளைச்சலில் இருக்கின்றனர்! அவர்களை சோர்வடையாமல் படிக்கவைப்பது..தேர்வுக்கு நன்றாக தயார்செய்வது தன்னம்பிக்கையான வார்த்தைகளை சொல்வது இப்படி பல பெற்றோர்களின்  செயல் பாராட்டுக்கு உரியதுதான் என்றாலும்...தேர்வு முடிந்தவுடன் அவர்கள் செய்யும் அடாவடிகள்தான் குழந்தைகளை சோர்வடைய வைத்து அவர்களின் மனநிலையை மாற்றுகிறதோ என்ற கேள்வியும் வருகிறது! எல்லோருக்கும் தங்கள் குழந்தைகள் எல்லா  கலைகளிலும் சிறந்து வர வேண்டும் என்று ஆர்வம் உள்ளது இயற்கைதான்..ஆனால் அதற்காக அவர்களை கட்டாயப்படுத்தி அந்த பயிற்சிகளில்   ஈடுபடவைத்தால் வரும் விளைவுகளை யாரும் சிந்திப்பதே இல்லை!
தேர்வு அட்டவணை வரும் போதே சீசனில் காசு பார்க்கும் கூட்டங்களின் விளம்பரங்களுக்கு பஞ்சமிருக்காது, இசை..நீச்சல், கராத்தே....இப்படி பல பயிற்சிகளின் அட்டவணை நீண்டுகொண்டே செல்லும்! ஏதோ இந்த பயிற்சிகளில் ஏதாவது ஒன்றை செய்தால்தான் அவர்கள் புத்திசாலிகள் என்ற ஒரு மாயையை இவர்களின் விளம்பரங்கள் பெற்றோர்களின் மனங்களில் விதைக்கப்படுகிறது! விளைவு?

குழந்தைகள் தேர்வுகளுக்கு தயாராகும் போதே இவர்கள் அவர்களின் கோடைகால பயிற்சி வகுப்புகளுக்கு பணம் கட்டி என்னென்ன பயிற்சிகள் எத்தனை மணிக்கு என்று ஒரு அட்டவணை தயார்செய்து விடுகிறார்கள்! பிள்ளைகள் தேர்வை நினைத்து பயப்படுவதைவிட இந்த பயிற்சி வகுப்புகளை நினைத்துதான் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்!

இதைக்கொஞ்சம் கூர்ந்து நோக்கினால்... பெற்றோர்களுக்கு தன் பிள்ளை இதை கற்றுக்கொள்கிறான் என்ற சந்தோசத்தைவிட... என் பிள்ளை இந்த பயிற்சி வகுப்புக்க்கு செல்கிறான் என்று தன் அண்டை வீட்டுகளிடமும் சொந்தங்களிடமும் பெருமைபட்டுக்கொள்ளவே அதிகமாக ஆசைப்படுகின்றனர்! இவ்வாறு அவர்களிடம் சொல்லி அவர்களையும் அவர்கள் வீட்டு பிள்ளைகளை இதில் சேர்க்க மறைமுகமாக நிர்பந்திக்கின்றனர்!

 இது ஒரு சங்கிலித்தொடர்... அந்த பயிற்சியினால் குழந்தைக்கு என்ன நன்மை.. அந்த பயிற்சி வகுப்புகளின் பாதுகாப்பு.. பயிற்சியாளரின் நம்பகத்தன்மை இப்படி எதையுமே கருத்தில் கொள்ளாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அவர்களை கொண்டு அங்கு சேர்ப்பதால் என்ன விளைவுகள் என்று அறிந்துகொள்ள யாருமே விரும்புவதில்லை!

பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இதுபோன்ற பயிற்சிவகுப்புகளின் பாதுகாப்பு முறைகள் எந்த அளவுக்கு சரியானது என்று நம்மில் எத்தனை பேர் கருத்தில் கொள்கிறோம்?... உதாரணத்திற்கு பத்து குழந்தைகளுக்கு ஒரு பயிற்சியாளர் நீச்சல் கற்று கொடுப்பதற்கும் ஐம்பது குழந்தைகளுக்கு ஒரு பயிற்சியாளர் கற்றுக்கொடுப்பதர்க்கும் வித்தியாசம் உள்ளது! ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு அசம்பாவிதம் இதுபோன்ற பயிற்சி வகுப்புகளில் நடக்கின்றது! ஆனால் துரதிஷ்டவசமாக நமது அரசாங்கமும் இதுபோன்ற பயிற்சி வகுப்புகளுக்கு எந்த வித கடுமையான கட்டுப்பாடுகளையும் கொண்டுவர மறுக்கின்றது!

 நமது பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பதைக்கூட  நாம் தீர்மானிக்க முடியவில்லை என்றால்.. இதுபோன்ற கூட்டங்கள் நம்மிடம் காசு பறித்தால்கூட திரும்ப சம்பாதித்துவிடலாம்..ஆனால் சிலசமயம் பொறுப்பில்லாமல் குழந்தைகளின் உயிரையும் பறித்துவிடுகின்றனவே? யாருக்குமே தன் குழந்தை இந்த சமூகத்தில் ஒரு நல்ல மனிதனாக வரவேண்டும் என்று விருப்பமில்லை.. மாறாக தன் பிள்ளையும் சாமர்த்தியமாக பல திறமைகள் கொண்டவனாக இப்படி செல்கிறது பெற்றோர்களின் விருப்பங்கள்! ஒரு நல்ல சமூகம் நம் கண் எதிரிலேயே சந்தர்ப்பவாதிகளின் பிடியில் சென்று கொண்டு இருக்கின்றது!

முன்பெல்லாம் கோடைவிடுமுறை வந்தால் குழந்தைகள் சொந்த கிராமத்துக்கு செல்லும் ஆர்வத்திலும் மற்ற சொந்தங்களின் வீட்டுக்கு செல்லும் ஆர்வத்திலும் இருப்பார்கள்..இதற்க்கு தோதாக கிராமத்து திருவிழாக்களும் இந்த மாதங்களில்தான் வரும்! ஆனால் இப்போது இந்த காலங்களில் அவர்களை பார்ப்பது அபூர்பமாகி விட்டது... பெற்றோர்களில் யாராவது ஒருவர் வருவார்.ஏன் குழந்தைகள் வரவில்லை  என்றால். அவர்கள் அந்த கிளாஸ் செல்கிறார்கள் இந்த கிளாஸ் செல்கிறார்கள்... இப்படி ஏதாவது ஒரு பதில் வருகிறது! இவர்கள் இப்படி செய்து சொந்தங்களின் வேர்களை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்துக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு தெரியாமலே!

 இப்படி சொந்தங்களுடன் பழகாமல்.. நல்ல சூழ்நிலையை அனுபவிக்காமல் அந்த குழந்தை எப்படி நல்ல மனநிலையில் வளரும் என்று தெரியவில்லை? இதன் தாக்கம்தான் இப்போது அதிகரித்துவரும் குழந்தைகளின் குற்றங்கள்.. பணம் வேண்டுமென்று எட்டாம் வகுப்பு படிக்கும் ஒருவன் சக மாணவனை கடத்துவது... ஏழாவது படிக்கும் ஒருவன் சக மாணவிக்கு காதல் கடிதம் தருவது இப்படி போய்க்கொண்டிருக்கிறது குழந்தைகளின் உலகம்! இதற்க்கெல்லாம் அடிப்படை அவர்களின் மனஅழுத்தம்! அதை குறைக்கும் முயற்ச்சியில் ஈடுபடாமல் இன்னும் ரெண்டு பாறாங்கல்லை வைக்கும் முயற்ச்சிதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது!

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் பள்ளிகளும் இப்பொழுது இந்த வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டது! ஒன்பதாம் வகுப்பு பாதியிலேயே பத்தாம் வகுப்பு பாடங்கள் ஆரம்பம்மகிவிடும்! அதுபோக விடுமுறையைகூட சும்மா விடாமல் அதிலும் அதே பத்தாம் வகுப்பு பாட வகுப்புகள்! எங்கு செல்கிறது இந்த மாணவர் உலகம்! உண்மைலேயே இதற்குத்தான் குழந்தை பாதுகாப்பு தடை சட்டம் கொண்டுவரவேண்டும்! தங்களின் வியாபார உலகில் பள்ளியின் பெயரை நிலைநாட்ட பள்ளிகள் செய்யும் இந்த மன கொலைக்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறது இந்த அரசாங்கம்? 

அது சரி... என்பது குழந்தைகளை எரித்தவனையே ஒன்றும் செய்ய இயலவில்லை இந்த அரசாங்கத்தால்... பெற்றோர்களே அரசாங்கத்துக்கு உங்கள் குழந்தைகள் முக்கியமல்ல! ஏனென்றால் அவர்களுக்கு வாக்களிக்கும் வயது வரவில்லை! உங்களுக்கு உங்கள் பிள்ளைகளின் வாழ்வு முக்கியம்... அதுவும் அவர்களின் குற்றமில்லா வாழ்வு..அதற்க்கான சூழ்நிலையை நீங்கள்தான் ஏற்படுத்தி தரவேண்டும்! நீங்களும் சூழ்நிலையின் கைதியாகி விடாதீர்கள்!


No comments:

Post a Comment