Thursday, 14 February 2013

மகளிர் தினமா? மாய வலையா?இன்று உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது! கொஞ்சம் பொறுங்க... வாழ்த்து சொல்லுவதற்கு என் மனம் என்னை கேட்ட கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.. பதில் இருந்தால் உங்களுக்கும் நான் சொல்லுகிறேன் நீங்களும் அடுத்தவருக்கு சொல்லுங்கள்! மேலை நாடுகளை விடுங்கள்..நம் நாட்டில் மகளிர் என்ன சாதித்ததிற்கு இந்த தினம்? அல்லது எதை சாதிப்பதற்கு இந்த தினம்? யாருக்கேனும் சரியான புரிதல் இருக்கின்றதா? 1911- இல் இருந்து கொண்டாடுகிறோம்! 


இது நூறாவது ஆண்டாம்! கடந்த நூறாண்டுகள திரும்பி பார்த்தால் பெண்களின் வளர்ச்சி அபரிதமானதுதான்! ஆனால் சுதந்திரம் கிடைக்கும் முன்னரே சுதந்திர தினம் கொண்டாடினால் எப்படியோ.. இல்லை கிடைத்த சுதந்திரத்தை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்தாமல் அழிவுக்கு அழிவுக்கு பயன்படுத்தினால் எப்படி கேவலமாக இருக்குமோ இதுதான் இன்றைய இந்திய பெண்களின் நிலை இரண்டுக்குமே உதாரணங்கள் சொல்லமுடியும்! 
அனைத்திலும் சம உரிமை ஆணுக்கு பெண் சமம் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு நீங்களே மகளிர் தினம் என்று அந்நியப்பட்டு நிற்பதேன்? இந்த வியாபார உலகத்தில் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த முதலாளிகள் கொண்டுவந்த ஆயிரக்கணக்கான தினங்களில் இதுவும் ஒன்று! அவ்வளவுதான்.. இந்த தினங்கள் என்பது கூத்துகளில் மன்னர் வேடமிட்டவர் அணியும் கிரீடம் போன்றது.. ஒரு நாள் தலையில் வைத்து கொண்டாடிவிட்டு அடுத்த வேளை வரும் வரை மூலையில் கிடக்கும்! இது போலதான் இந்த மகளிர் தினமும்! உங்கள் மீது முதலில் நீங்கள் நம்பிக்கை வையுங்கள்! இன்று ஒரு கல்லூரி மாணவியையோ அல்லது சாதிக்க விரும்பும் எந்த பெண்களையும் கேட்டுப்பாருங்கள்.. உங்கள் ரோல் மாடல் யாரென்று? தயங்காமல் பதில் வரும்.. அன்னை தெரசா. கிரண் பேடி, இந்திராகாந்தி.. இப்படி!

யாரேனும் யோசித்தீர்களா? அரை நூற்றாண்டு கடந்த பின்னும் இவர்களை தவிர யாரையும் சொல்ல முடியவில்லை என்று! கேட்டால் ஆணாதிக்கம்.. அரசியலில் இட ஒதுக்கீடு இல்லை இப்படி சப்பையான காரணங்களை அடுக்குவார்கள்! இவையெல்லாம் உங்களுக்கு நீங்களே(விரும்பி)  போட்டுக்கொண்ட விலங்கு! கொஞ்சம் கவனித்து பாருங்கள் சாதித்த அனைவருமே தங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி கவலைப்படாதவர்கள்! ஆனால் இன்றும் பெண்கள் தாங்களே ஒரு குறுகிய வட்டத்தில் விரும்பி  அடைபட்டுக்கொண்டு  தந்தை கணவன் பிள்ளைகள் என்று இவர்களின் வட்டத்தை சுருக்கி விடுகின்றனர்!
 
உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு கொடுத்தார்களே என்ன நடந்தது? அல்லது என்ன சாதித்தீர்கள்? இன்றும் பல ஊர்களில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கமே உள்ளது! கேட்டால் இதுவும் உங்கள் ஆணாதிக்கம் என்பீர்கள்! உண்மையில் இந்த வார்த்தை கோழைகள் தப்பிக்க பயன்படுத்தும் வார்த்தை! இன்று அரசியலில் உள்ள பல பெரிய மனிதர்களின் வீட்டில் கேட்டுப்பாருங்கள்.. குடும்பத்திற்கு அவர்கள் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்! 

இது சரியென்று சொல்லவில்லை சாதிக்க விரும்புபவர்கள் முதலில் தடைகளை உடைக்க பழகுங்கள்! கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை இதை பெண்களுக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை ஆனால் பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான்! காலம் காலமாக தெரசாவையும் இந்திராவையும் கூறுவதை விட்டு விட்டு நீங்கள் ஒரு உதாரண மனுசியாக வாழ்ந்து காட்டி சொல்லுங்கள் மகளிர்தின வாழ்த்துக்களை! உங்களுக்கு நானும் சொல்லுகிறேன்!
 
நூறாண்டுகளாய் மகளிர் தினம்..  சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள்! இருந்தும் நம் நாட்டில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடில்லை..  இந்தியாவை விடுங்கள். நம் தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்!கொஞ்சம் பின்வரும் பட்டியலை பாருங்கள் பிறகு கொண்டாடுங்கள் மகளிர் தினத்தை! இது கடந்த வருடத்தின் புள்ளி விவரம் மட்டுமே!
 
2009- ம் ஆண்டு  மகளிர்க்கு எதிரான குற்றங்களைவிட  2010- ம் ஆண்டு  23 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுவாக கற்பழிப்பு, மானபங்கம், கடத்தல், பாலியல் கொடுமை, வரதட்சணை கொடுமை, கணவன், உறவினர்களால் கொடுமைப்படுத்தப்படுதல் போன்ற குற்றங்கள் பெண்களுக்கெதிராக அதிகளவில் பதிவாகும். அந்த வகையில், 2008ல் 6,262 வழக்குகள் பதிவாயின. கடந்தாண்டு, 5,126ஆக குறைந்த நிலையில், 2010  நவம்பர் வரை 5,508 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 2010 - ம் ஆண்டு 626 கற்பழிப்பு புகார்கள் பதிவாகியுள்ளன. சேலம், நெல்லை, விழுப்புரம் மற்றும் சென்னையில் தான் அதிகளவில் கற்பழிப்புகள் நடந்துள்ளன. ஊட்டி மற்றும் கோவையில், தலா ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டது என, கற்பழிப்பு பட்டியல் நீள்கிறது. கற்பழிப்பு சதவீதம், 2009 - ம் ஆண்டை விட 2010 - ம் ஆண்டு 12 சதவீதம் அதிகம்!
 
2010 - ம் ஆண்டு 1,278 கடத்தல் புகார்கள் பதிவாகியுள்ளன. இதில், சேலம், விழுப்புரம், நெல்லை, தஞ்சை மாவட்டங்களில் அதிகளவு புகார்கள் வந்துள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும், 2009 - ம் ஆண்டு  156 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். பெண்கள், பெண் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக 1,323 புகார்கள் பதிவாகியுள்ளன. சேலத்தில் அதிகபட்சமாக 130 பெண்களும், தேனியில் 71, நெல்லையில் 56, சென்னை மாநகரில் 25 பேரும் கடத்தப்பட்டுள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளன. இது 2009 - ம் ஆண்டை   விட 25 சதவீதம் அதிகம். வரதட்சணை கொடுமையால் இந்தாண்டு, இதுவரை இறந்த பெண்கள் எண்ணிக்கை 155. 2009 - ம் ஆண்டு 179ஆக இருந்தது. அடுத்தது, கணவன் மற்றும் உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் தொடர்பாக 1,409 புகார்கள் இந்தாண்டு பதிவாகியுள்ளன. சென்னை மாநகரில் அதிகபட்சமாக 117 மற்றும் திண்டுக்கலில் 94, தேனி மாவட்டத்தில் 115 புகார்கள் வந்துள்ளன. இது 2009 - ம் ஆண்டைவிட 5 சதவீதம் அதிகம்!
 
இத்தனை குற்றங்களில் எந்த குற்றத்துக்காகவாது மகளிர் அமைப்புகள் வீதிக்கு வந்து போராடியதாக கூற முடியுமா? ஒரு நடிகை உள்ளாடை இல்லாமல் வந்தால் காவலுக்கு வரும் கலாச்சார மகளிர் அமைப்புகள் எத்தனையோ பெண்கள் உள்ளாடைக்கு கூட வழியில்லாமல் கந்தலை போர்த்திக்கொள்ளும் அவலங்களை களைய என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? ஆடம்பரத்திற்கு அமைப்பு வைத்து.. விளம்பரத்திற்கு வீதிக்கு வந்து போராடி வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கிவர சொல்லும் பெண்களே இங்கு அதிகம்!

இந்த புள்ளி விவரங்கள் முற்றிலும் குறையாது ஒத்துக்கொள்கிறேன்! ஆனால் குறைப்பதற்கு முயற்சி செய்துவிட்டு மகளிர் தினம் கொண்டாடுங்கள்! பேருக்கு வாழ்த்து சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்! வாழ்த்துக்களுக்கு பதிலாக உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.. எந்த வகையிலாவது இந்த சமூகத்துக்கு உதவுவேன் என்றும்.. வரதட்சணை கொடுக்க வாங்க மாட்டேன் என்றும்! பாதி குற்றங்கள் குறைந்து விடும்! இனிமேலாவது உண்மையான மகளிர் தினம் கொண்டாட வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment