Wednesday, 27 February 2013

என் தாயுமானவள்!
நீரால் சூழப்பட்ட இந்த உலகத்தில் ஆண்கள் எப்போதுமே அன்பால் சூழப்பட்டே வளருகின்றார்கள்... பிறந்ததில் இருந்தே ஒரு ஆணுக்கு அன்பு பரிபூரணமாய் அள்ள அள்ள குறையாமல் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது! தாய்.. தமக்கை... காதலி.. மனைவி... இப்படி பலவழிகளில் பல ரூபங்களில் அன்பால் சூழப்பட்டே வளருகின்றான் ஓர் ஆண்மகன்! ஆனாலும் முழுமை பெறாத கவிதையாக வார்த்தைகளாக சிதறிக்கிடக்கும் வாழ்க்கையை கோர்த்து வைத்து காவியமாகவே மாற்றும் ஓர் அதிசயம்தான் பெண்குழந்தை! காய்ந்து போன பாலையாய் இருக்கும் வாழ்க்கையில் நீரூற்ற அனுப்பி வைக்கப்பட்ட தேவதை அவள்!

ஆண்மகன் எப்போதுமே ஆசிவதிக்கப்பட்டவனாகவே இருக்கின்றான்.. தாயால் நம் கடைசி வரை கூட வர இயலாது...பாதியில் வரும் மனைவி மீது அன்பு.. காதல் எல்லாமே இருக்கும்..... ஆனால் ஏதோ ஒரு மெல்லிய இழை நடுவில் ஓடிக்கொண்டுதான் இருக்கும், ஆனால் பெண்குழந்தை அப்படி இல்லை... அவள் ஒரு அள்ள அள்ள குறையாத அருட்குடம்..... தேவதையின் பிறப்பை நேரில் பார்த்தவன் என்று நம்மை கர்வம் கொள்ளச்செய்யும் ஒரு அதிசயம்! ஏன் பெண் குழந்தை மட்டும்? ஆண் குழந்தை என்றால் இவ்வாறு தோணாதா என்று தோன்றும் அறிவுப்பூர்வமான வாதங்களை ஒதுக்கி வைத்து என் தேவதையின் விரல் பிடித்து கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு வருகின்றேன்... அன்பு சாரல் அதிகமாக இருக்கும்! அறிவுக்குடையை சுருக்கி விட்டு முடிந்தால் அந்தச் சாரலில் நீங்களும் நனைந்துகொள்ளுங்கள்!

ஒரு காலை விடியலில் சூரியன் பார்த்து தாமரை மலரும் நேரத்தில்தான் என் தேவதையும் அவதரித்தாள்... கண்களால் பார்த்து ஆனந்த கண்ணீர் விடும்  தருணம் அது.. ஆனால் நான் தொலைபேசி வழி கேட்டு ஆற்றாமையில் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தேன்... பல காரணங்களால் உடனே சென்று பார்க்க முடியவில்லை... இரண்டு மாதங்கள் கழித்து சென்ற போது.... என் வெறுமைகளை மகிழ்ச்சி கொண்டு நிரப்ப வந்த என் தேவதையை என் கைகளில் தந்தார்கள்... முதன் முதலில் அந்த பிஞ்சு ரோஜாவை கைகளில் ஏந்திய தருணத்தை... அந்த உணர்ச்சியை எப்படி விவரிப்பது? என்னை தூக்கி வளர்த்த என் தாயை குழந்தையாக என் கைகளில் ஏந்திய உணர்வுதான் வந்தது... நான் செய்த பாவங்களை மன்னித்த கடவுள் எனக்கு தாயுமானவளாக என் மகளையே கொடுத்துவிட்டார்! நான் கைகளில் ஏந்தியவுடனேயே தன் பிஞ்சு விரல்களால் என் விரல்களை இறுக்கி பிடித்தாள் என் தேவதை... அந்த நொடி... எப்போதுமே ஒரு ஆயாசத்துடன் வந்துபோகும் முதுமை நினைவுகள் இம்முறை  கொஞ்சம் பயந்து போய் பின்வாங்கியது! பிறந்தவுடன் குழந்தைகள் கடவுளுடன் பேசுமாம்... என் மகளும் அப்போது பேசியிருப்பாள் கடவுளிடம்... என் அப்பாவுக்கு இனி நீ தேவையில்லை..... இதோ நான் வந்துவிட்டேன் என்று!அவள் அழுகையாலும் முனகளாலும் சங்கீதமாய் மாறிப்போன என் வீடு அவள் புன்னகைக்க ஆரம்பித்த போது... ஸ்ருதி..லயம் சேர்ந்து ஒரு இசை சங்கமம் ஆகிப்போனது! என்னை அடையாளம் கண்டு அவள் முதன் முதலில் என்னை பார்த்து சிரித்த போது... முற்றுப்பெறாத என் வாழ்க்கையின் வாக்கியங்கள் அர்த்தத்தோடு முற்றுப்பெற்றது! அந்த சிரிப்பு எந்த கவிஞனாலும் வர்ணிக்க முடியாத அழகிய கவிதை! வார்த்தைகளில் கொண்டு அடக்கமுடியாத வர்ணஜாலம். நான் இமய மலை போகவில்லை.. தவம் இருக்கவில்லை ஆனாலும் என் வீட்டுக்கு தெய்வம் வந்தது... என் தேவதையின் வடிவில்! என் வீட்டின் ஒவ்வொரு அடியையும் தன் பிஞ்சு பாதங்களால் பரிசுத்தம் ஆக்கிக்கொண்டிருக்கிறாள்... தன் பூ விரல்களால் எங்கள் அனைவரையும் ஆசிவதித்துக்கொண்டிருக்கிறாள்!

சமூகத்தின் கோரப்பற்களையே பார்த்து பழகிப்போன எனக்கு.. புதிதாக முளைத்த என் மகளின் பால் பற்களை பார்த்த போது... அவளால் கடிபடவே கடும்தவம் இருக்கவேண்டியதாயிற்று! தூக்கத்தில் அவள் என் கழுத்தைக்கட்டும் அந்த தருணத்தை தவறவிடாமல் இருக்க தூக்கம் தவிர்த்த இரவுகளை பழகிக்கொண்டேன்! என் விரல் பிடித்து அவள் நடை பழகிய போது... ஏதோ... அவள் என்னை வழி நடத்தி செல்லும் தாயாக மாறினாள்... நான் மீண்டும் ஒரு முறை குழந்தையாக மாறிப்போனேன்! என் அறியாப் பருவத்தின் கருப்பு வெள்ளை காலங்களை தேவதையின் அசைவுகளின் மூலம் வானவில்லாக வண்ணங்களோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

என் சிறு வயதில் காக்கா கடி உணவைக்கூட எச்சில் என்று ஏளனம் செய்து வாங்க மறுத்தவன் நான்... ஆனால் இன்று என் மகள் மிச்சம் வைத்து ஊட்டும் அந்த ஒரு கவளம் சோற்றுக்காக ஏங்கிப்போய் கிடக்கின்றேன்! என் நகர்த்த முடியாத சோக நிகழ்வுகளை தன் பிஞ்சு விரல்களால் புறந்தள்ளிவிட்டு அவள் புன்னகைக்கும் பொழுதுகளை கண்ணாடி சட்டத்தில் கவனமாக சேர்த்து வருகின்றேன். தேவதைக்கு ஆடை வாங்க சென்றால் ஒரு ஆடை எடுப்பதற்குள் அங்கு உள்ள அனைத்து ஆடைகளையுமே அவளுக்கு கற்பனையில் அணிவித்து விட்டுதான் எடுக்க முடிகிறது... மனைவிக்கு முகபவுடர் வாங்க பட்ஜெட் போட்டவன்.. இன்று மனைவி முறைப்பதை கவனமாக தவிர்த்துவிட்டு என் தேவதைக்கு மேக் அப் சாதனங்கள் வாங்கி கொண்டிருக்கிறேன்! இப்படி என் எண்ணம்... செயல் அத்தனையையும் ஆக்கிரமித்து என் பிராத்தனையின் கருப்பொருளாக மாறிவிட்டாள்! 

அவள் வாய் திறந்து ப்..ப்...பா.....என்று கூப்பிட்ட அந்த நொடியோடு காலம் அப்படியே நின்று விடக்கூடாதா என்று தோன்றியது! தெய்வங்கள் எப்போதுமே  தலையில் கிரீடத்துடன்... கையில் ஆயுதங்களுடன் வராதாம்.... சில வேளைகளில்  பிஞ்சு விரல்களும்... ரோஜா இதழ்களுமாய் மகளாகவும்  பிறந்து வருமாம்! என் தேவதையும் அப்படிதான் வந்திருக்கிறாள்.. இலக்கே இல்லாமல் எழுதிக்கொண்டிருந்த என் வாழ்க்கையின் பக்கங்களில் இன்று அன்பு மட்டுமே கலந்து அழகான கவிதைகளை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறேன்! என் வாழ்க்கை பக்கங்களின் கடைசி முற்றும் வரையில் இந்த அழகான அன்பு கவிதை என் தேவதையால் எழுதப்பட்டு கொண்டே இருக்கும்!

No comments:

Post a Comment