Tuesday, 26 February 2013

ஆகவே வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே!
அன்பு உடன்பிறப்புகளே.. சொல்லன்னாத் துயரத்தில் இருக்கின்ற வேளையிலே இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.. மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடிஎன்றால் எனக்கு இருக்கிற பக்கமெல்லாம் இடியா இருக்கு! வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேனே என்று வள்ளலார் சொன்னதைப்போல வாடிய மலரை கண்டு இன்று நான் வாடுகின்றேன்.. இயற்கையின் மேல் எனக்கு இவ்வளவு ஆர்வமா என்று நினைத்தால் தம்பி...நீதான் உடன்பிறப்பு என்ற வார்த்தைக்கு உண்மையான தகுதியானவன்! இங்கு இருக்கையில் மஞ்சள் துண்டும் திஹார் செல்கையில் வெள்ளை துண்டும் ஏன் போடுகின்றேன் என்று பகுத்தறிவில்லாத பார்ப்பன கூட்டங்கள் கேட்க்கலாம்.. ஆனால் நீ கேட்க மாட்டாய் என்று எனக்கு தெரியும்! ஏனென்றால் நாமெல்லாம் பெரியாரின் பாசறையில் வந்தவர்கள். மூட நம்பிக்கையில் ஊறி திளைத்தவர்கள் தஞ்சை பெரிய கோவில் விழாவுக்கு நான் பட்டு வேட்டி கட்டி பின்வாசல் வழியாக சென்றதை பார்த்து கேலி செய்தார்கள்.. ஆனால் நீ வாய் மூடி மௌனம் காத்தாயே? அப்பவே தெரியுமடா தம்பி.. நீ எவ்வளவு அடித்தாலும் தாங்குவாய் என்று! ஏனென்றால் நீ அண்ணாவின் பாசறையில் பாடம் படித்தவன்!
தொண்டன் ஒருவன் நெற்றியில் பொட்டு வைத்தால் அது என்ன ரத்தமா என்று கேட்ப்பேன்.. ஆனால் என் அன்பு செல்லம் அழகிரி பெருமாள் கோவில் பிரசாதம் நெற்றியில் வைத்தால் அது என்ன தக்காளி சட்னியா என்று கேட்ப்பேன்.. என் நகைச்சுவை பார்த்து நீயும் கைகொட்டி சிரிப்பாய்.. ஏனென்றால் நீ பகுத்தறிவு புடம் போட்ட உடன்பிறப்பு! அந்த அம்மையார் கோவிலுக்கு சென்றால் அண்ணாவின் வழி வந்தவர்களா என்று கேள்வி கேட்ப்பேன்.. வாடிய மலருக்காக குடும்பத்தில் காளகஸ்தி சென்றால் கண்ணை மூடிக்க வேண்டியதுதான் வேற என்ன செய்றது? இருந்தாலும் கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விட கூடாது என்ற என் வசனம் எனக்கு தேவையில்லாமல் ஞாபகம் வருகிறது!
நான் போட்ட உத்தரவை ரத்து செய்து சித்திரைதான் தமிழ் வருட பிறப்பு என்று மாற்றி விட்டார்கள்.. நீ கவலைப்படாதே உடன்பிறப்பே! அப்போது நீ கேட்க்காத கேள்வியை இப்போது பகுத்தறிவில்லாத பாமரர்கள் கேட்க்கிறார்கள்.. தை முதல் தேதி என்று  யார் சொன்னது.. அவர்களுக்கு எப்படி தெரியும்.. நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக புலவர்கள் கனிமொழி, கயல்விழி, சல்மா, தமிழச்சி, பா.விஜய் போன்ற சான்றோர்கள் சொன்னது என்று! நீ கவலைப்படாதே உடன்பிறப்பே அடுத்த தேர்தலுக்குள் கனிமொழியின் மகனும் எப்படியும் புலவர் ஆகிவிடுவான்.. நமக்கு கூடுதலாக ஒரு புலவர் குரல் கொடுப்பார்! நான் கட்டிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவ மனையாக்க போறார்களாம்.. அது எப்படி அதற்காக கட்டாத போது அதை மருத்துவமனையாக்க முடியும் என்று நான் கேட்க்கும்போது தவறிக்கூட நீ கேட்டுவிடாதே உடன்பிறப்பே.. ஒரு வீதியில் உள்ள வீட்டையே மாற்ற முடியும் என்றால் அதை மாற்ற முடியாதா என்று! நீ கேட்க மாட்டாய் என் செல்லமே.. ஏனென்றால் நீ அண்ணாவின் கொள்கைகளை கரைத்து குடித்தவன்!
நில அபகரிப்பு வழக்கில் பல முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவதை பார்த்தால் மனம் பதைக்கிறது.. நல்ல வேளை அதில் என் குடும்பத்து ஆட்கள் இல்லை எனும்போதுதான் நிம்மதியாகிறது! அதற்காக நாங்கள் தவறே செய்யவில்லை என்று தவறாக எண்ணிவிடாதே என் தம்பி.. என் பேரன் தயாநிதி அழகிரிக்கு உள்ள மூளை யாருக்கும் இல்லை.. நீ பார் உடன்பிறப்பே.. எங்கள் வெற்றி உறுதி என்று உன்னை உசுப்பேத்தி தெருத்தெருவாக நீ கூவும் போது தோல்வியை உறுதி செய்த என் பேரன் அதுவரை நடத்திய கிரானைட் தொழிலை ஏப்ரல் முதல் தேதியே கைமாற்றி விட்டான்.. அதாவது தேர்தலுக்கு முன்னமே! பார்த்தாயா என் உடன்பிறப்பே.. என் குடும்ப வாரிசின் மூளையை! நீ இதையெல்லாம் கண்டுகொள்ளாதே என் தங்கமே.. நீ வழக்கம் போல் உதய சூரியனுக்கு வாக்கு கேட்க புயலென புறப்பட்டு வா!
மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய அம்மையாரிடம் கோரிக்கை வைத்தேன் பார்த்தாயா என் தம்பியே? இதிலிருந்தே தெரியவில்லை? நான்தான் தமிழின தலைவர் என்று? ஆனால் 99 - இல் ஏன் கவர்னருக்கு இதை பரிந்துரை செய்தாய் என்று மறந்தும் கேட்டுவிடாதே..நீ கேட்க்கமாட்டாய்.. ஏனென்றால் நீ ஒரு பகுத்தறிவு சுடர்! கவனித்தாயா உடன்பிறப்பே? மறந்தும்கூட காங்கிரசிடம் இந்த கோரிக்கையை நான் வைக்கவில்லை! அங்குதான் வேண்டும் பகுத்தறிவு.. அவர்கள் மறுத்தால் மந்திரிகளை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும்.. என் செல்லம் அழகிரி பிறகு டெல்லியில் இருக்க முடியாது.. இங்கு வந்தால்?.. உனக்கே தெரியும்! வாடும் மலரை காய்ந்து  போனாலும்  விடமாட்டார்கள்.. ஆகவே என் உடன்பிறப்பே புயலென புறப்பட்டு வா... வேங்கையென சீறி வா... வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலே உதய சூரியனுக்கு வாக்குகள் சேகரிக்க!
வாழ்க தமிழகம் ( பிம்பிளிக்கி... பிளாப்பி...)


No comments:

Post a comment