Wednesday, 27 February 2013

குழந்தைகள் மீது திணிக்கப்படும் வன்முறை!


அனைவருக்கும் வணக்கம்,
 
இன்று குழந்தைகள் தினமாம்... நல்லதுதான்.. ஆனால் நம் நாட்டில் குழந்தைகளுக்கு உண்மைலே உரிய பாதுக்காப்பு உள்ளதா? இந்த தினத்தை கொண்டாடும் நிலையில்தான் அவர்கள் உள்ளார்களா என்றால்... இல்லையென்றுதான் வருத்ததோடு சொல்ல வேண்டும். ஒரு பக்கம் முகம் தெரியாத நபர்கள் மூலம் நடக்கும் பாலியல் கொடுமைகள் என்றால் இன்னொருபக்கம் வீட்டுக்குள் உள்ளவர்களாலேயே திணிக்கப்படும் வன்முறையை நாம் கண்டுகொள்வதே இல்லை... தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கும் நான் எதை சொல்லுகிறேன் என்று.
 
 
 
 
முன்பெல்லாம் நமக்கு தெரிந்து மலரும் மொட்டும், அரும்பும் தளிர் போன்ற சிறுவர்களுக்கான நிகழ்சிகள்தான் வரும், ஆனால் இப்பொழுது அவர்கள் திறமையை வெளிப்படுத்துகிறேன் என்று அவர்களை மலரும் முன்னே காய்த்து வெம்ப வைக்கும் நிகழ்ச்சிகள்தான் அதிகம் வருகின்றன! பெற்றோர்களை கேட்டால் என் பிள்ளைக்கு திறமை இருக்கு வெளிப்படுத்துகிறோம் என்று பொறுப்பில்லாமல் பதில் வரும், அந்த தொலைக்காட்சி நிறுவனத்தை கேட்டால் இது போன்ற நிகழ்சிகள்தான் டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிற வைக்கும் என்பார்கள்! ஆனால் எவருமே அந்த பிஞ்சு மனதில் விழும் கீறலை மறந்தும்கூட நினைப்பதில்லை!
 
குழந்தைகளை வைத்து பாடல் நிகழ்ச்சி நல்ல விசயம்தான்.. ஆனால் நல்ல திறமையை வெளிக்காட்டும் போட்டியைவிட பரிசுகளை தட்டி செல்லும் போட்டியே இங்கு அதிகம் நடக்கின்றது! அவர்களுக்கு பரிசு கொடுப்பது அவர்களை ஊக்குவிக்கும்தான்..ஆனால் அவர்கள் திறமையை விட அதிக பரிசு என்பது வியாபாரிகளின் விளம்பர வலையில் அவர்களை அறியாமல் தள்ளப்படுகின்றனர்! இதற்க்கு பெற்றோர்களும் உடந்தை.. பரிசு வாங்கிய குழந்தை பற்றி கவலை இல்லை, ஆனால் ஒவ்வொரு சுற்றிலும் வெளியேறும் குழந்தைகளை பார்த்தால் அவர்களின் மனநிலையை உணர முடியும்! அவர்கள் ஏமாற்றத்தில் அழுவதை பல நிமிடங்கள் காட்டி..அவரின் பெற்றோரும் கூட அழுது..அந்த போட்டிக்கு பிறகு அந்த பிள்ளையால் எத்தனை சீக்கிரம் மீண்டு வர முடியும்? அந்த போட்டியின் நடுவர்கள் வேறு ஏதோ வானத்தில் இருந்து வந்ததைப்போல் வார்த்தைகளால் அந்த பிள்ளையை வறுத்தெடுக்கும் படலமும் உண்டு! பரிசு வாங்கும் குழந்தையை பார்த்து பல பெற்றோர்கள் தன் குழந்தையிடம் அவர்களை ஒப்பீடு செய்யும் அவலமும் நடக்கும்! போட்டிகள் நல்லதுதான் அதன் நோக்கம் உண்மையாக இருக்கும் வரையில்! மாறாக பெற்றோர்களின் வெட்டி பெருமையும்  தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கும் குழந்தைகளை பலியிடாதவரை!
 
அடுத்த கொடுமையின் உச்சகட்டம் குழந்தைகளை வைத்து நடக்கும் நடன நிகழ்சிகள்! தொலைக்காட்சி நிறுவனங்களின் நோக்கம் அவர்களின் வியாபாரம்.. ஆனால் இந்த குழந்தைகளின் பெற்றோர்களின் நோக்கம் என்ன? அவர்களுக்கே வெளிச்சம்.. இதில் விதி விலக்காக சில உண்மையான திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் உள்ளது.. அவற்றை விடுங்கள்.. ஆனால் அதை நீங்கள்கூட பார்ப்பதில்லை! ஆனால் பல நிகழ்ச்சிகள் அருவருக்கத்தக்க வண்ணமே உள்ளது! இந்த நிகழ்சிகளில் இவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடலும் அவற்றிற்கு அந்த குழந்தைகளின் உடல் அசைவும் எந்த ஒரு நல்ல குடும்பமும் இதை அனுமதிக்காது! சமீபத்தில் நான் பார்த்தவரையில் அதிக பேர் நடனமாடியது எந்த பாடலுக்கு தெரியுமா? வரலாற்று சிறப்பு மிக்க "டேடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாரும் இல்லை.." இதில் உள்ள வரிகளுக்கும் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? இதற்க்கு அந்த குழந்தைகள் அர்த்தம் கேட்டால் அந்த பெற்றோரால் விளக்க முடியுமா? குழந்தைகளின் கவனத்தை ஒரு தவறான வழியில் திருப்பி கொண்டிருக்கிறது இந்த சமூகம்! தன்னை அறியாமலே!

இதற்கு நடுவராக இருப்பவர்கள் செய்யும் கூத்து அதைவிட கொடுமை.. அந்த குழந்தைகள் ஏதோ சொல்லிக் கொடுத்தபடி ஆடுவார்கள்.. ஆனால் இந்த நடுவர்கள் அதை குறை சொல்லி.. உங்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி இல்லை பிசிக்ஸ் இல்லைன்னு..  இதுவும் பத்தாதுன்னு அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் கருத்து கேட்பார்கள்.. அந்த குழந்தையின் அம்மா சளைக்காமல் அந்த பையன் என் பெண்ணோட இடுப்ப பிடிக்கும்போது சரியா பிடிக்கல.. இப்படி போகும் இவர்களின் கருத்து! உண்மைலே இதெல்லாம் இந்த நிகழ்ச்சிகளில் நடக்குது! அந்த குழந்தைகளுக்கு அந்த வயதில் என்ன தெரியச் கூடாதோ அதை மட்டுமே கற்றுக் கொடுக்கின்றன இதைப்போன்ற நடன நிகழ்ச்சிகள்! அதுபோக மூணு கணவனை மாற்றிய நடிகையும்.. நாலாவது திருமணம் செய்த நடிகனும் நடுவராக இருக்க அந்த குழந்தைகள் அவர்கள் காலில் விழுவது கொடுமையுளும் கொடுமை! இதை அந்த பெற்றோர்கள் ரசிப்பதும்.. ம்ம்..எங்கு செல்கிறது குழந்தைகளின் உலகம்? அவர்கள் திருமணத்தை குறைசொல்லவில்லை.. மாறாக குழந்தைகளின் முன்னால் அதை நியாயப்படுத்த வேண்டாம் என்றுதான் கூறுகிறேன்!

சமீபத்தில்  ஒரு நிகழ்ச்சியை எதார்த்தமாக பார்த்த பொழுது ஒரு பெண் குழந்தை.. அதற்க்கு மிஞ்சினால் பத்து அல்லது பதினொன்று வயது இருக்கும்.. நடிகை சுகாசினி நடுவர் என்று நினைக்கிறேன்! அந்த குழந்தை ஏதோ பேசும்பொழுது சமீபத்தில் வந்த ஒரு படத்தில் காமெடி நடிகர் பேசும் வசனத்தை பேசுகிறது..அதுவும் எப்படி? வயது வந்தவர்களே பெற்றோர்கள் முன் பேச கூச்சப்படும் வார்த்தைகளை! அதை சுகாசினியும் மிகவும் ரசித்து பாராட்டி பேசுகிறார்.. அவரை சொல்லி குற்றமில்லை..அந்த குழந்தையின் பெற்றோர்கள் அந்த குழந்தையை என்னவாக ஆக்க விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை? மக்கள் இதுபோன்ற நிகழ்சிகளை புறக்கனிக்கும்வரை தொலைக்காட்சி நிறுவனங்களின் இதுபோன்ற வக்கிர நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்! அரசாங்கமும் இதை கவனத்தில் கொண்டு குழந்தைகளை வைத்து தயாரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஒரு கட்டுப்பாடை கொண்டுவரலாம்! குழந்தைகளை குழந்தைகளாகவே வளர்ப்போம்! சாதனைகளை அவர்களாகவே செய்வார்கள்! நீங்கள் புகை போட்டு பழுக்க வைக்க வேண்டாம்.. தானாக கனியட்டும்
 

No comments:

Post a Comment