Thursday, 14 February 2013

மனைவி பேசாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பிரான்சில் அடெலி என்பவள் 65 ஆண்டுகள் யாருடனும் பேசவில்லை. 1850-ல் தனது இருபதாம் வயதில் ஆங்கில மதகுரு ஒருவரின் மகனான ஆல்பிரட் பின்சென் என்பவனைக் காதலித்தாள். அவனையே திருமணமும் செய்து கொண்டாள். அவன் ஒன்றுக்கும் உதவாத சோம்பேறி. ஊர் சுற்றித் திரிந்த அவனை அடெலி திருமணம் செய்த சில நாட்களிலேயே அவளை அவன் வெறுத்துத் தள்ளி விட்டான். மனம் சோர்ந்த அவள் தன் தந்தையிடம் வந்து சேர்ந்தாள். தந்தையின் ஆறுதல் மொழி மகளின் மன வேதனையை மாற்றவில்லை. 1915-ல் அவள் உயிர் துறக்கும் வரையில் யாருடனும் துளியும் பேசவில்லை. அவள் புகழ் பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் விக்டர் ஹியூகோ என்பவரின் மகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது!

( இதே போல் தன்மனைவியும் பேசாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் யாரும் கேட்க்கவேண்டாம்.. இது தெரிஞ்சா நான் ஏன் வாரத்துக்கு ஒருபதிவு போடறேன்? பத்து போடமாட்டேன்?!)

கிரேக்க கடவுள் ஜுபிடர் தன் மனைவி ஜுனோவை ஏமாற்றும் பொருட்டு அவளோடு அரட்டை அடிக்க ஒரு இளம் அழகிய தேவதையை ஏற்பாடு செய்கிறார். அவ்வாறு தன் மனைவி அரட்டை அடிக்கும் சமயம் மற்ற பெண்களோடு உல்லாசமாக இருப்பது ஜுபிடரின் வழக்கம். ஒரு நாள் இதை அறிந்த ஜுனோ வெகுண்டு எழுந்து தன்னிடம் அரட்டை அடிக்கும் தேவதை எக்கோவை தண்டிக்கிறாள். அந்த தேவதையின் குரலைப் பறித்துக் கொண்டு அடுத்தவர்கள் பேசுவதில் கடைசி வார்த்தையை மட்டும் அவள் உச்சரிக்கும்படி செய்து சாபம் விடுகிறாள். அதனால்தான் நாம் பேசும் போது கடைசி சொல் மட்டுமே எதிரொலிப்பதை ஆங்கிலத்தில் அந்த தேவதையின் ஞாபகமாக எக்கோ (Echo) என்று பெயர் வந்தது!
(இந்த எக்கோ தேவதையின் சாபம்தான் இன்று அனைத்து கணவர்களும் மனைவியின் பேச்சுக்கு மறு பேச்சிலாமல் அதையே எதிரொலிக்கின்றனர்!)

இடி மின்னலை வைத்து நீங்கள் இருக்குமிடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இடி விழுந்தது என்று உடனடியாகக் கணக்கிட முடியும். இடியின் வேகம் மணிக்கு 1200 கிலோ மீட்டர். அதாவது வினாடிக்கு 1 கிலோ மீட்டர். மின்னல் தோன்றிய சிறிது நேரத்திற்குப் பின்னர்தான் இடியின் சப்தம் கேட்கும். இந்த இடைப்பட்ட நேரத்தைக் கண்டுபிடித்து மூன்றால் வகுத்தால் இடி எவ்வளவு தூரத்தில் விழுந்தது என்பது தெரியும். உதாரணமாக மின்னலுக்கும் இடிக்கும் இடையே உள்ள நேர வித்தியாசம் 27 வினாடிகள் என்று வைத்துக் கொண்டால் அதை மூன்றால் வகுத்தால் வரும் விடை 9. அப்படியானால் 9 கிலோ மீட்டர் தூரத்தில் இடி விழுந்தது என்று அறியலாம்!
( இதுக்காக பூமி அதிர்வதை வைத்து உங்கள் மனைவி வரும் தூரத்தை கண்டுபிடிக்க முடியுமா என்று கேட்ப்பது டூமச்..!)

பூமி மற்றும் பிற கிரகங்களில் கிழக்கில் தோன்றி மேற்கே மறையும். சூரியன் வெள்ளி கிரகத்தில் மட்டும் மேற்கில் தோன்றுகிறது. ஏனெனில் பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்வது போல் வெள்ளி மட்டும் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழலும்.ஒருமுறை பூமி தன்னைத்தானே சுற்றி வந்தால் அதை நாம் ஒரு நாள் என்கிறோம். மேலும் பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றி வந்தால் ஒரு வருடம் என்கிறோம். அந்த முறைப்படி பார்த்தால் வெள்ளி கிரகத்தின் வருடம் அதன் ஒரு நாளை விட குறைவு. அது தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வர 5832 மணி நேரமாகிறது. ஆனால் ஒருமுறை சூரியனைச் சுற்றி வர அதற்கு 5400 மணி நேரமே ஆகிறது!
(சந்தேகத்தில் 24 மணி நேரமும் கணவனையே சுற்றிவரும் மனைவியை எந்த கணக்கில் சேர்ப்பது?)

உலகின் மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதன் உயரம் கடல் மட்டத்திற்கு மேலிருந்து எடுக்கப்பட்டது. ஹவாயிலுள்ள மௌனகியா எனும் மலையின் உயரம் கடல் மட்டத்திற்கு மேல் 4205 மீட்டர்தான். ஆனால் அது தோன்றும் கடலின் அடிப்பகுதியிலிருந்து கணக்கெடுத்தால் அதன் உயரம் 10,203 மீட்டர். இது எவரெஸ்ட் மலையை விட 1, 355 மீட்டர் கூடுதல் உயரமாகும்!
( இந்த கணக்கெல்லாம் வக்கனையா சொல்லுங்க?.. பெண்களின் மனதின் ஆழத்தை கண்டுபிடிங்கப்பா...! உபயோகமா இருக்கும்ல?)

ஒரு பெண்ணின் வயிற்றில் கரு வளரும் போது முதலில் இருதயம்தான் வளரும். இருதயம் வளர்வதற்குத் தேவையான சத்துப் பொருள் மாங்காயில் அதிகம் அடங்கியுள்ளது. இருதயம் வளரத் தேவையான சத்துப் பொருள் தேவைப்படும் போது அத்தேவையை நாக்கின் சுவையரும்புகள் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தெரிவிக்கின்றன. அதனால் உந்தப்பட்டு கர்ப்பிணிப் பெண்கள் மாங்காயை விரும்பிச் சாப்பிடுகின்றனர்!
( நல்லவேளை அந்த சத்து மாங்காயில் உள்ளது... ஒருவேள தங்கபஷ்பத்தில் இருந்திருந்தா கணவன்மார்களின் கதி?!)


 ட்டுவாட்ரா" எனும் மிருகதிற்கு "பினீயல் ஐ" எனப்படும் மூன்றாவது கண் உள்ளது. இந்த ஊர்வன இனத்தைச் சேர்ந்த ட்டுவாட்ராவின் உடல் வெப்பம் 11டிகிரி மட்டும்தான். இம்மிருகத்தினால் ஒரு மணி நேரம் மூச்சை அடக்க முடியும். இதன் முட்டை குஞ்சாவதற்கு 15 மாதங்களாகும். இதற்கு காலின பருவமடைய 20 ஆண்டுகளாகிறது. மேலும் வலி என்றால் என்னவென்றே இதற்குத் தெரியாதாம். கிட்டத்தட்ட 179 மில்லியன் வருடங்களுக்கு முன்பே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட இந்த உயிரினம் நியூசிலாந்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள்!
(கொடுத்துவச்ச மிருகம்.. ஜோடிகிட்ட அடிவாங்குனா கூட வலிக்காது.. ஹி.. ஹி.. எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?)

டிஸ்கி - அடைப்புகுறியில் உள்ளதெல்லாம் நகைசுவைக்காக மட்டுமே.. ( அப்ப யாரும் சிரிக்கலையா?) யாரும்  சீரியசா எடுத்துக்க வேண்டாம்! ஆனா தகவல்கள் உண்மையானது... இணையத்துக்கு நன்றி! 

No comments:

Post a Comment