Wednesday, 27 February 2013

ரஜினி எதற்காக குரல் கொடுக்கவேண்டும்?முல்லை பெரியாறு பிரச்னை வந்தாலும் வந்தது... பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்ற நூலை விட்டுவிட்டு வேறு எங்கேயோ திசைமாறி போய்க்கொண்டிருகிறது இந்த பிரச்னை. அணையில் நமக்கு உள்ள உரிமையை நிலைநாட்டுவதில் யாருக்கும் எந்த மாற்று கருதும் இல்லை, ஆனால் தமிழனில் வழக்கமான தும்பை விட்டு வாலை பிடிக்கும் மட்டமான புத்தி இப்பொழுதும் வெளிவர துவங்கி உள்ளது. காவிரி பிரச்னை, கூடங்குளம் பிரச்னை என அனைத்திலும் நடிகனை தூக்கி சுமக்கும் ஒரு கூட்டம் இந்த முல்லை பெரியாறு பிரச்சனையிலும் நடிகர்களை அதிலும் குறிப்பாக ரஜினியை  மையப்படுத்தி பிரச்சனையை ஊதிவிடுகின்றனர். இதனால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? எல்லோரும் ஒன்னு சேர்ந்து அணைக்காக போராடுவதை விட்டுவிட்டு இரண்டாக பிரிந்து ரஜினி செய்வது சரியா தப்பான்னு நமக்குள்ள அடிச்சிக்க வேண்டியதுதான்.


அது ஏன்? ஒரு நடிகன் குரல் கொடுத்தாதான் அது மிகப்பெரிய பிரச்னை என்று நம்புவீர்களா? அல்லது நடிகர்கள் குரல் கொடுத்துவிட்டால் அந்த பிரச்னை தீர்ந்துவிடுமா? அப்படி ஒரு நடிகனால் தீர்க்கப்பட்ட மக்கள் பிரச்சனைகளுக்கு ஏதேனும் ஒரு  உதாரணம் உள்ளதா? பிறகு ஏன் ரஜினியை பிடித்து இதில் இழுக்கவேண்டும்? ரஜினி ஒரு நடிகன், ஒரு சினிமா  வியாபாரி... யாரோ ஒருவர் பணம் கொடுக்க அதற்க்கு அவர் நடிக்கிறார். அதை நீங்கள் காசு கொடுத்து பார்க்கிறீர்கள்.. கொடுத்த காசுக்கு உங்கள் சந்தோசத்தை தவிர வேறு என்ன அவரிடம் எதிர்பார்க்கிறீர்கள்? கேட்டால் நாங்கள் காசு கொடுப்பதால்தானே அவர்களுக்கு கோடி கோடியாய் கிடைக்கிறது, அதில் மக்களுக்கு நல்லது செய்தால் என்ன என்பீர்கள், தெரியாமதான் கேக்குறேன்.. உங்களுக்கு மாதம் இருவதாயிரம் சம்பளம் உங்கள் மாத செலவு பத்தாயிரம்தானே? மீதிய எனக்கு தாங்கன்னு சொன்னா உங்களுக்கு எவ்வளவு கோவம் வரும்.. பணத்தின் மதிப்பு குறைவாக இருந்தாலும் எல்லாம் பணம்தான். ஒருவன் சம்பாதிக்கும் பணத்தில் கட்டாயம் நீ உதவி செய்தே ஆகவேண்டும் சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

நீங்கள் எல்லா நடிகர்களின் படத்தையுமா தியேட்டர் போய் பார்க்கிறீர்கள்? ரஜினி படம் என்றால் கொடுத்த காசிற்கு குறைவில்லாமல் சந்தோசமாக வெளியே வரலாம் என்று உங்களிடம் நம்பிக்கையை வரவைத்தது அவர்கள் திறமை. இந்த திறமைக்குதான் தயாரிப்பாளர் அவருக்கு கொடுக்கிறார், நீங்கள் தயாரிப்பாளருக்கு கொடுக்கிறீர்கள். அல்லது அவர் எப்பிடி நடித்தாலும் அவர் படத்தை நாங்கள் பார்ப்போம் என்று சொன்னால் ஏன் நீங்கள் பாபாவை ஓடவைக்க வில்லை? நஷ்டம் ஏற்பட்டு அவர் பணம் திருப்பிகொடுக்கும்போது நீங்களும் டிக்கெட்டுக்கு நூறு ரூபாய் பத்தாது இன்னொரு ஐம்பது ரூபாய் என்று அவருக்கு கொடுத்தீர்களா?

பிறகு ஏன் அந்த படத்தில் அப்பிடி பேசினார்.. இந்த படத்தில் இப்படி பேசினார் என்று கேட்ப்பீர்கள், அவர் பேசியது எல்லாம் படதில்தானே? அதை அவர் சொந்த வாழ்க்கையோடு முடிச்சு போட்டு குழப்பிக்கொண்டது உங்கள் தவறு, தனிப்பட்ட பேட்டியில் அவர் என்றைக்காவது நான் அரசியலுக்கு வர்றேன். கட்சி ஆரம்பிக்க போறேன் என்று சொல்லியிருக்காரா? படத்தில் அவர் பேசியதை வைத்து ஊடகங்கள் தூபம் போட்டதை நம்பி நீங்கள் கொடி பிடித்தால் அவர் மீது என்ன தவறு? படம் ஓடுவதற்காக அப்படி பேசினார் என்று கூறுகிறீர்கள்.. அதில் என்ன தவறு? கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும்போது கூட்டத்தை கவர சில சமரசங்கள் செய்துதான் ஆகவேண்டும். அதைதான் அவரும் செய்தார். ஓசில கிடைக்கிற ப்ளாக் எழுதும்போதே ஒண்ணுமில்லாத ஹிட்ஸ்க்காக பரபரப்பா தலைப்பு வைக்கிற நாம்.. கோடியில் வியாபாரம் செய்யும்  அவர்களை  குறை சொல்ல என்ன உரிமை இருக்கிறது?

குறை சொல்லுபவர்கள் சொல்லும் இன்னொரு விஷயம்... அன்னைக்கு தமிழ்நாட்டை ஆண்டவனாலகூட காப்பாற்ற முடியாது என்று அரசியல் பேசினார்.. தேர்தலுக்கு வாய்ஸ் கொடுத்தார் என்று, ஒரு இந்திய குடிமகனாக யாரும் எதைப்பற்றியும் பேச உரிமை உள்ளது அதைதான் அன்றைக்கு அவர் செய்தார். அன்றைக்கு உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப  இந்த கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வது ஒருவரின் உரிமையும் கூட.. அதையும் அவர் கட்டாயமாக சொல்லவில்லை வேண்டுகோள்தான் விடுத்தார், அப்பிடியும் அவர் சொன்ன கட்சிதான் ஜெயித்தாக வரலாறு இல்லை. அப்படி இருக்க ஓட்டு போட சொன்னதாலேயே அவர் அரசியல்வாதியாக முடியாது. அப்பிடி  பார்த்தா சென்னைல ட்ராபிக் ராமசாமி என்பவர் டெய்லி மக்களுக்காக குரல் கொடுத்துகிட்டு இருக்கார், வழக்கு போடறார் ஏன்? தேர்தலில்கூட நின்னார்.. நீங்கள் ஏன் அவர் பின்னாடி கொடிபிடிக்க வில்லை? முதலில் நடிகர்களை அரசியலுக்கு கூப்புடுவதை விட்டுவிட்டு இதுபோல மக்களுக்காக போராடும் நல்ல உள்ளங்களை தேடி அரசியலுக்கு கொண்டு வாங்க.

அடுத்த குற்றசாட்டு நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி கொடுப்பதாக சொன்னாரே.. என்னவாயிற்று என்று. இந்த கேள்வியை நதிநீர் இணைப்பு சாத்தியம் இல்லை என்று சொன்ன ராகுல் காந்தியை சட்டையை பிடித்து கேளுங்கள். குழந்தை பிறக்கிற முன்னாடி பேரு வைக்க சொன்னா எப்பிடி? இவ்வளவுக்கும் அவர் அசரவில்லை எனில் உடனே நீ கன்னடக்காரன்.. இங்க சம்பாதிப்பதை அங்க சொத்து வாங்கி போட்றன்னு பெர்சனல் அட்டாக்ல இறங்க வேண்டியது, நான் கேட்க்கிறேன்.. ரஜினியாவது சம்பாதிக்கும் காசில் அங்க சொத்து வாங்குறார், சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு வெளிமாநிலங்களில் சொத்து வாங்கவில்லையா? வெளிநாட்டு வங்கிகளில் பணம் போடவில்லையா? வெளிநாடுகளில் தொழில் முதலீடு பண்ணவில்லையா? இவர்களை என்னைக்காவது சட்டைய பிடிச்சி ஏன்டா இப்பிடி பண்ணினேன்னு கேட்ருக்கீங்களா? முதலில் கோவணத்த திருடறவன புடிங்கையா.. அங்கவஸ்திரம் திருடறவன அப்பறம் புடிக்கலாம்.

குறைசொல்லுபவர்கள் அடுத்து சொல்லுவது, தன் மகள் கல்யாணத்துக்கு ரசிகர்களுக்கு விருந்துவைக்கவில்லை, அவருக்கு உடம்பு சரியில்லாத போது பால்குடம் எடுத்தோம், மொட்டை போட்டோம்னு. சொந்த விசேசங்களுக்கு ஒருவரை அழைப்பதும் அல்லது தவிர்ப்பதும் அவரவர் விருப்பம், அவரிடம் போய் எங்களை அழைக்கவில்லை விருந்துவைக்கவில்லை என்று கூறுவது உச்சகட்ட அநாகரீகம். யோசித்துப்பாருங்கள்.. சென்னையில் விருந்து என்றால் இந்த ஒரு நேர விருதுக்காக தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்து வரும் ரசிகர்களுக்கு எவ்வளவு செலவாகும்? இதற்கும் எத்தனை பேர் அம்மாவின் மருத்துவ காசையும் பிள்ளைகளின் படிப்பு காசையும் எடுத்து வருவார்களோ? விருந்து வைக்காமல் இருப்பதுதான் பல குடும்பங்களுக்கு நல்லது.

ரசிகர்களே தவறை எல்லாம் உங்கள் மீது வைத்துக்கொண்டு நடிகர்களை குறை சொல்லாதீகள். கேரளாவுல நடிகர்கள் போராட்டம் பண்ணுனாங்க, கர்நாடகாவுல பண்ணுனாங்கன்னு இவங்களையும் தேவையில்லாம உசுப்பேத்தாதிங்க.என்ன காரணமாக இருந்தாலும் இந்த விசயதுலயாவது ஒழுங்கா இருக்காங்கன்னு சந்தோசப்பட்டுக்காங்க. ஏன்னா இவங்க குரல் கொடுத்ததும் ஒன்னும் ஆகபோறதில்லை, அப்பிடி குரல் கொடுத்தா மக்களை பதப்படவைக்கவும் உணர்சிகளை தூண்டவும் உதவுமே தவிர பிரச்சனையை தீர்க்க உதவாது. நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பாருங்கள். புடிச்சா போய் படம் பாருங்க இல்லைனா பேசாம இருங்க அதைவிட்டு மக்கள் பிரச்சனைக்கு எல்லாம் குரல் கொடுக்க அவங்க ஒன்னும் தேவ தூதர்கள் இல்லை.


1 comment:

 1. "ஓசில கிடைக்கிற ப்ளாக் எழுதும்போதே ஒண்ணுமில்லாத ஹிட்ஸ்க்காக பரபரப்பா தலைப்பு வைக்கிற நாம்.. "

  இதுக்கு மேல ஒண்ணும் பேச முடியாது.. இதுல ட்விட்டர் ஃபேஸ்புக் எல்லாமே வந்துடும் :-) .

  செம வைகை.. உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை.. எப்படி இதை தவற விட்டேன் என்று தெரியவில்லை. உண்மையில் இது இன்றைய நிலைக்கும் பொருத்தமாகத் தான் இருக்கிறது. ஏனென்றால் ஊடகங்கள் விமர்சகர்கள் கேட்கும் கேள்வி அப்ப இருந்து இப்ப வரை.. கீறல் விழுந்த... போலவே இருக்கிறது. எனவே ஒருவாட்டி எழுதினாலே அதை அப்படியே அடுத்ததற்கும் பதிலாகக் கொடுக்கலாம்.

  "அன்றைக்கு உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப இந்த கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வது ஒருவரின் உரிமையும் கூட."

  இது உண்மையில் லாஜிக்கான ஒன்று.. ஏனென்றால் கடந்த தேர்தலில் கலைஞருக்கு ஓட்டுப் போட்டவர்கள் காலத்திற்கும் அவருக்கே போடுகிறார்களா.. இல்லை ஜெ க்கு வாக்களித்தவர்கள் எப்போதும் அவருக்கே வாக்களிக்கிறார்களா!! அப்போது இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து கூறுவதை, காலத்துக்கும் அது தான் கூற வேண்டும் என்றால் எப்படி..!

  ரொம்ப நல்லா எழுதி இருந்தீங்க.. அனைத்திலும் உடன் படுகிறேன். நான் எழுதி இருந்தாலும் இதே தான் கூறி இருப்பேன் :-)

  ReplyDelete