Tuesday, 26 February 2013

பதிவுலக நாட்டாமையே.. தீர்ப்பு சொல்!

இந்த பதிவுலகம்  விசித்திரம் நிறைந்த பல சண்டைகளை  சந்தித்து இருக்கிறது. புதுமையான பல பதிவர்களை  கண்டிருக்கிறது. ஆகவே இந்த சண்டை  விசித்திரமல்ல, சண்டைபோடும் நானும்  புதுமையான மனிதனுமல்ல. பதிவுலக  பார்வையிலே  சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான். பதிவுலகில் குழப்பம் விளைவித்தேன்.... பதிவர்களை  தாக்கினேன் என்று  குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று? இல்லை... நிச்சயமாக இல்லை.... பதிவுலகில்  குழப்பம் விளைவித்தேன்.. ஏன்? பதிவுலகம் கூடாது என்பதற்காகவா? அல்ல.... பதிவுலகம்  கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பதிவர்களை  தாக்கினேன்.. ஏன்?  அவன் பதிவர்  என்பதற்காகவா? அல்ல....  அவனுடைய பதிவுகள்  பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக

உனக்கேன் இவ்வளவு அக்கறை?.. பதிவுலகத்தில்  யாருக்கும் இல்லாத அக்கறை?..என்றுதானே  கேட்பீர்கள்?..  நானே பாதிக்கப்பட்டேன்! சுயநலம்   என்பீர்கள். என் சுயநலத்தில்   பதிவுலக நலமும்  கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் பதிவுலக  பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் நான்  கடந்து வந்துள்ள கலீஜ் பதிவுகள்  எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். மட்டறுக்கும் மாடரேசன் இல்லை என் பிளாக்கில்...  அதனால்  அனானிகள் ஆட்டம் போட்டிருக்கின்றன... கெட்ட வார்த்தையில் கமென்ட் போட்டதில்லை  நான். ஆனால் கெட்ட வார்த்தையால் கமென்ட் போட்டு தாக்கப்பட்டிருக்கிறேன்..... கேளுங்கள் என் கதையை! பதிவுலக நாட்டாமை  அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
 .
தமிழ்நாட்டிலே ஏதோ ஒரு அரசு மருத்துவமனையில்  பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? சிங்கபூர்!  அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. ஃபோரத்தில் மட்டுமே பழகிக்கொண்டிருந்த  என்    நண்பர்களைக்  காண இந்தியா வந்தேன்...  சாட் ஹிஸ்டரியை வெளியிட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜலஜா, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். லேப்டாப்பை பறிகொடுத்தேன். ப்ளாக் யூசர் ஐடி மறந்தேன், பாஸ்வோர்ட் தொலைத்தேன் , கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த நண்பனைக்  கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் அவருடைய ப்ளாக் இல்லாமல் , நண்பனின்  பெயரோ பாபு . பாசமான  பெயர். ஆனால் பையிலே பணமில்லை . ஹிட்ஸ் வாங்கிய ப்ளாக் சீரழிந்துவிட்டது. கையில் ப்ளாக் . கண்களிலே கனவு . பாபு  அலைந்தார் . பாபுவுக்காக  நான் அலைந்தேன்...பாபுவுக்கு  கருணை காட்டினர் பலர். அவர்களிலே ஆண்டிகள்  சிலர் அவருடைய  லேப்டாப்பை  கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் ரமேஷ் , இவன் ஓசிச் சோறு திண்ணே என் பாபுவை ஓட்டாண்டி ஆக்க முயன்றான். நான் மட்டும் தடுத்திராவிட்டால் பாபு  அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பார்!

சிலர் நண்பன் என்ற போர்வையில் பாபுவுக்கு  கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவர்  ப்ளாக் ஐடியை  கேட்டனர். அதில் தலையானவன் இந்த டெரர் பாண்டியன்!. பாபுவின் பிளாக்கை  காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – தமிழ்மணத்தின்   பெயரால், இன்ட்லியின் பெயரால். பாபு  பதிவுலகில்  புழுவாகத் துடித்தபடியாவது பதிவெழுதிக் கொண்டு இருந்திருப்பார்!. அவரை  தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த டெரர் பாண்டியன்தான்!  தன் பிளாக்கை  இரக்கமற்ற இந்த பதிவுலகில்  விட்டுச் செல்ல அவர்  விரும்பவில்லை. தன் ப்ளாக்  வாசகர் இல்லாமல் காத்து வாங்குவதைக்  காண அவர்  விரும்பவில்லை. அவரே டெலிட் செய்துவிட்டார்!. விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறார்   பாபு . இது எப்படி குற்றமாகும்?

என் நண்பன்  விட்டுக் கொடுத்திருந்தால், தமிழ்மண மகுடத்திலே ஒரு நாள் – ஐடியை கொடுத்திருந்தால் , இன்ட்லியின் பிரபல பதிவுகளின் முகப்பிலே நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நாட்டாமை விரும்புகின்றார்? ஓட்டு  என் பாபுவை  மிரட்டியது. பயந்து ஓடினார்... கமென்ட்  என் பாபுவைத்  துரத்தியது. மீண்டும் ஓடினார் . ஹிட்ஸ்  என் பாபுவை  பயமுறுத்தியது. ஓடினார்... ஓடினார்....  பதிவுலகின்  ஓரத்திற்கே ஓடினார் . அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? பதிவெழுத விட்டார்களா என் பாபுவை?
டெலிட் பண்ணிட்டாருன்னு சந்தோசப்படுவிங்களா? அத விட்டு... நீதியாம்?....  வழக்காம்?


No comments:

Post a Comment