Thursday, 14 February 2013

முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்!


அன்புள்ள முதல்வருக்கு(?!),
ஒரு அப்பாவி மீனவனின் கடிதம், நீங்கள் நலமா என்று கேட்க்கப்போவதில்லை, உங்கள் நலம் மற்றும் உங்கள் குடும்ப நலம் ஊரே அறியும்! நாங்கள் நலம் என்றும் சொல்லப்போவதில்லை, எங்கள் நாதியற்ற வாழ்க்கையை நாடே அறியும், உங்களுக்கும் உங்கள் அன்னையையும் தவிர்த்து! நீங்கள் எழுதும் கடிதங்களுக்கு மத்திய அரசில் என்ன மரியாதை கொடுப்பார்களோ அந்த மரியாதையை இந்த கடிதத்திற்கு கொடுக்க வேண்டாம்! அது உங்கள் பதவியை காப்பாற்ற எழுதுவது! இது எங்கள் உயிரை காப்பாற்ற எழுதுகிறோம்! தேர்தல் நேரம் வேறு, உங்களுக்கு கூட்டணி பற்றி பேசவும், தொகுதி பங்கீடு பற்றி பேசவுமே நேரம் சரியாக இருக்கும், எங்கள் உயிரை பற்றி உங்களுக்கு கவலைப்பட நேரமிருக்காது! இருந்தாலும்.....எங்களில் ஒருவன் இறந்தால்  உங்கள் ஓட்டு கணக்கில் ஒன்று குறையும், அதற்க்காகவாது கவலைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்! ஐநூறு மீனவர்களை சுட்டதர்க்குகூட டெல்லி செல்லாத நீங்கள் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு டெல்லி செல்லப்போவதாக கேள்விப்பட்டேன்! நல்லது....அப்படியே உங்கள் அன்னையிடம் எங்களைப்பற்றியும் சொல்லுங்கள்! பிரான்சில் சிங்கின் தலைப்பாகைக்கு வரிந்து கட்டி பேசிய மன்மோகனிடம் சொல்லுங்கள், இங்கு தமிழ் மீனவனின் தலையே போய்க்கொண்டிருக்கிறது என்று! இலங்கைத்தமிழன் சாகும்போதுதான் இந்திய இறையாண்மை தடுத்தது! இப்பொழுது இந்திய மீனவனே செத்துக்கொண்டிருக்கும் பொழுது எந்த இறையாண்மை தடுக்கிறது என்று கேட்டுச்சொல்லவும்,ஆஸ்திரேலியாவில் ஒரு வட இந்தியன் தாக்கப்பட்டால் கொதித்து எழும் இந்திய பத்திரிக்கைகள் இத்தனை மீனவன் இறந்த பின்னும் மௌனம் காப்பது நாங்கள் இந்தியர் இல்லை என்பதாக அர்த்தமா?! அதுசரி....நாங்கள் தேர்ந்தெடுத்த உங்களுக்கே எங்களைப்பற்றி அக்கறை இல்லை..அவர்களிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?! ரெம்ப நாளா உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்...எங்களுக்கென்று ஒரு அமைச்சரை நியமித்தேர்களே...அவர் யார் என்ன பெயர் என்று சொல்லமுடியுமா? இத்தனை நடந்த பிறகும் ஒரு கண்டன அறிக்கை கூட விடாமல் உங்கள் பின்னால் பதுங்கிக்கொள்ளும் அவரை பார்க்கவேண்டும்!


எங்கள் உயிரின் மதிப்பு உங்களுக்கு ஐந்து லட்ச்சத்தோடு முடிந்துவிடுகிறது! என்ன செய்வது உயிரோடு இருந்தால் உங்கள் ஓட்டு கணக்கு அதைவிட கம்மிதான்! இதை மனதில் வைத்தாவது நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்! தமிழின தலைவர் என்று சொல்லியே ஒரு பக்கம் தமிழினத்தையே ஒழித்தாகிவிட்டது! அந்த வெறி பிடித்த வேட்டை நாய்களுக்கு இன்னும் ரத்த வெறி அடங்காமல் இப்பொழுது நாடு தாண்டி நாட்டாமை செய்கின்றது! இங்கு உள்ள தமிழர்களையும் அழித்து விட்டால் உங்கள் வாரிசுகளை எங்கு கொண்டு போய் முதலமைச்சர் ஆக்குவது?!


உங்களுக்கு கவலைப்படவேண்டிய விசயந்தான்....யோசிங்க ஐயா! கனிமொழியின் மகன் தலைவராகும் காலத்திலும் கூட வோட்டு போட நாங்கள் வேண்டும்! இந்த படித்தவர்களை நம்ப்பாதீர்கள்! நீங்கள் செய்த ஊழலும், அடித்த கொள்ளையும் தெரிந்துவிட்டால் வோட்டை மாற்றிப்போடும் அபாயம் உண்டு! ஆனால் நாங்கள் மட்டும்தான் ஒரு ரூபாய் அரிசிக்கும் இலவச டிவிக்கும் எப்போதும் மாறாமல் இருப்போம்!


முடிவாக ஒன்று ஐயா....இது முடியாத தொடர்கதை என்று எங்களுக்கும் தெரியும்! அதானால் அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள், யார் சாவது என்று தெரியாமலே கடலுக்கு செல்வதை விட...வாரம் ஒருவரை நாங்களே தேர்ந்தெடுத்து அனுப்பிகிறோம்! அவர்கள் வெறி அடங்கும் வரை சுட்டுக்கொல்லட்டும்! மகாபாரத்தில் வருமே அதுபோல! எங்களுக்கும் ஒரு பீமன் வராமலா போவான்?!! அதுவரை உங்கள் கடிதங்கள் தொடரட்டும்! அதுவரை உங்கள் வசனத்தை நீங்களே 

சொல்லிக்கொள்ளுங்கள்!"வாழ்வது நானாக இருக்க, சாவது தமிழனாக இருக்கட்டும்!"

      இப்படிக்கு,
     உங்கள் ஓட்டு வங்கியில் ஒரு அப்பாவி மீனவன்

No comments:

Post a Comment