Wednesday, 27 February 2013

களைகள் இங்கு கொல்லப்படும்! ( சவால் சிறுகதை 2011 )


இது சவால் சிறுகதைப் போட்டி 2011-க்கான எனது சிறுகதை முயற்சி.......


இன்று அதிகாலை....
தேதி - 30-10-11  நேரம் - 05:00 AM


விடியும் பகலோடு நிலா போகமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்த அதிகாலை நேரம்....இரவெல்லாம் ஊர் சுற்றிய தெருநாய்கள் கொஞ்சமாய் களைத்துப்போய் தெரு ஓரத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன.. அவைகளை தொந்தரவு செய்யாமல் அந்த வீதியிலேயே கொஞ்ச தூரம் நடந்தால்..ஒரு பிள்ளையார் கோவில் வரும்.. அவரை கும்பிட்டபடி கவனமாய் நடங்கள்.. பால்காரனும் பேப்பர்காரனும் உங்களைப்பற்றி கவலைப்பட நேரமில்லாமல் சைக்கில் ஓட்டுவார்கள். கவனமாக அந்த பிள்ளையார் கோவிலை கடந்து வந்தால் ஒரு டீக்கடை வரும்..இப்போது டீ குடிக்க நமக்கு நேரமில்லை...அவசரமாக ஒருவரை கவனிக்க போகிறோம்....அதனால் கொஞ்சம் வேகமாக நடந்தால் டீக்கடை தாண்டி மூன்றாவது வீடு..இப்பொது அங்குதான் போகிறோம்.. பங்களா என்று சொல்லமுடியாத பெரிய வீடு... பெரிய கேட் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது... நமக்கு அது முக்கியமில்லை.. ஏனென்றால் நாம் எட்டித்தான் பார்க்கபோறோம்....  

மாடியில் உள்ள தனியறையில் பதட்டத்தோடு இருந்தார் குணசீலன்... உளவுப்பிரிவின் உயர் அதிகாரி.. இவர் பதட்டமாக இருப்பதற்கும் காரணம் இருந்தது..அவரது மேஜையில் இருந்த விஷ்ணு அனுப்பிய தகவல் இருந்தது..அதை கொஞ்சம் குழப்பத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவரது ஐபோன் விஷ்ணு பெயரை தாங்கி சிணுங்கியது.... குழப்பத்தோடு காதுக்கு கொடுத்தார்... " ஹலோ... விஷ்ணு என்றார்....


" ஹலோ.. சார்.. எஸ்.பி. கோகுலுக்கு உங்க மேலயெல்லாம் சந்தேகம் இல்லை  சார்.... இந்த விசயத்துல நான்  இன்வால்வ் ஆனத மோப்பம் புடிச்சு என்கிட்ட சும்மாதான்  துருவி துருவி கேட்டாரு.... இன்பாக்ட்... அவருக்கு இதை தெரிஞ்சு ஒன்னும் ஆகப்போறதும் இல்லை.... அதான் மறுக்கமுடியாம அந்த க்ளூவ கொடுத்தேன்...ஆனா கவலைப்படாதிங்க அது தப்பான க்ளூதான் கொடுத்தேன்...அதோட நகல்தான் உங்களுக்கு கொடுத்துருக்கேன்..என்றார் விஷ்ணு....

" சரி.. பரவாயில்ல விடு..போன்ல எதுவும் பேசவேண்டாம்... பதினோரு மணிக்கு பெசன்ட் நகர் பீச் வந்துரு... நேர்ல பேசிக்கலாம் என்றபடி தொடர்பை துண்டித்தார்.. ஆனால் கொஞ்சம் பதட்டமாகவே உணர்ந்ததால் ஒரு சிகரெட்டை உதட்டுக்கு கொடுத்து யோசிக்க ஆரம்பித்தார்... கோகுலை எப்படி மடக்க்கலாம் என்று மனக்கணக்கு போட்டவாறு.. அவரது நினைவுகள் ஒரு வாரம் பின்னோக்கி  சென்றது....

ஒரு வாரம் முன்பு பின்னிரவு நேரம்.....
தேதி - 23-10-11 நேரம் - 11:45 PM

ஹோட்டல் ப்ளூ ராயல் பார்க் பாரில் யாரையோ எதிர்பார்த்தபடி  தனியாளாக தாகத்தை தனித்துக்கொண்டிருந்தார் குணசீலன்... பின்னால் இருந்து குரல் கேட்டது " ஹாய் குணா... என்றபடி வந்துகொண்டிருந்தார் பிராபகர்..  சாரி குணா.. கொஞ்சம் லேட் ஆயிருச்சு...என்றபடி எதிர் இருக்கையில் அமர்ந்தார்.

" சொல்லு பிரபா... என்னைய ஏன் இங்க வரச்சொன்ன? என்றார் குணசீலன்.

" குணா.. நான் இப்ப சொல்லப் போறத முழுசா கேளு... அடுத்த வாரம் அதாவது 30 ம் தேதி... சென்னை துறை முகத்தில் இருந்து ஒரு கண்டைனர் நிறைய நவீன ரக துப்பாக்கிகளும் ஆயுதங்களும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்துக்கு போகுது... அது எல்லாமே இஸ்ரேல்ல இருந்து வர்ற நவீன ஆயுதங்கள்... இது மட்டும்தான் எனக்கு கொடுக்கப்பட்ட தகவல்... ஆனா அது ஆந்திராவில் உள்ள நக்சல்களுக்கு தெரிந்து அதை கடத்த திட்டம் போட்ருக்காங்க... இதுல நம்ம வேலை... அதாவது உன் வேலை ரொம்ப ஈசி... போர்ட்ல இருந்து வெளியாகும் கண்டைனர்ல இருந்து எந்த கண்டைனர்ல இருந்து அந்த ஆயுதம் வெளியாகுதுங்குற தகவல் மிகவும் ரகசியம்... அதை மட்டும் நீ கண்டுபிடிச்சு சொல்லிட்டா... நமக்கு கிடைக்கிறது இரண்டு கோடி குணா... உன்னோட செல்வாக்க வச்சு இத நீதான் செய்யணும்... நீ ஒக்கே சொல்லிட்டா நாளைக்கே ஐம்பது லட்சம் அட்வான்ஸ் என்று... சொல்லி முடித்தார் பிரபாகர்.

இரண்டு கோடி என்றதுமே...விஸ்கியில் போட்ட ஐஸோடு சேர்ந்து அவர் மனமும் கரைய ஆரம்பித்தது... " சரி பிரபா.. நான் ஒத்துக்கிறேன்... ஆனா.. கண்டைனர் வெளியாகுற அன்னைக்குத்தான் என்னால உறுதியான தகவல சொல்ல முடியும்.. அதுவரை என்னை தொந்தரவோ தொடர்போ செய்ய வேண்டாம்... வேலை முடிந்ததும் நானே உனக்கு கால் பண்றேன் என்று கூறி.. கடை பெக் விஸ்கியையும் ஒரே சிப்பில் முடித்துவிட்டு அப்போதே மனதுக்குள் திட்டம்போட துவங்கினார். 


தேதி - 30-10-11 நேரம் 11:00 AM 

பெசன்ட் நகர் பீச்.... அஷ்ட லக்ஷ்மி கோவில் ஓரமாக இரண்டு சிகரட்களை கரைத்த பின்பு விஷ்ணு வந்தார்....

" ஹலோ சார்... கொஞ்சம் லேட் ஆயிருச்சு...சாரி.. என்றான்....

" இட்ஸ் ஓக்கே... விஷ்ணு... அந்த உண்மையான க்ளூவ கொண்டு வந்தீங்களா? என்றார் அவசரமாக...

" கொண்டு வந்துட்டேன் சார்... அதாவது சரியா இன்னைக்கு ஆறு மணிக்கு கண்டைனர் போர்ட்ட விட்டு வெளியாகும்... அதோட க்ளூ ரொம்ப ஈசி... அதாவது நான் கோகுல் சாருக்கு கொடுத்தத கொஞ்சம் மாத்தி பாருங்க... அதான் க்ளூ என்றான்....

" ஹேய்..வெயிட்..வெயிட்... என்றவாறு ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து எழுத ஆரம்பித்தார்.... S W H2 F6.... இதை எப்பிடி மாத்தணும் என்றவாறு விஷ்ணுவை பார்த்தார்....

" ரொம்ப சிம்பிள் சார்... W S F6 H2 இப்படி மாத்துங்க... W - White Container S - Six O Clk, F6 - 66 , H2 - 82 இதான் சார் க்ளூ.. ஆறு மணிக்கு ஒயிட் கண்டைனர் லாரி.. அதோட நம்பர் 6682 , இந்த அளவு தகவல்தான் சார் எனக்கு கிடைச்சது... இததான் கோகுல் சார்கிட்ட நான் கொஞ்சம் மாத்தி சொன்னேன் என்று சொல்லி முடித்தார் விஷ்ணு...

" ஓக்கே.. தேங்க்ஸ் விஷ்ணு.. இதுக்கான பலன் உன்னை தேடி வரும்... ஆனா உனக்கு நிச்சயமா தெரியுமா விஷ்ணு? கோகுலுக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்லைன்னு? 

" சார்.. என்னை நம்புங்க சார்.. நான் தகவல் சேகரிக்கிறேனு தெரிஞ்சு.. அவரு சும்மா கேட்டாரு... அதான் மறுக்கமுடியாம அந்த க்ளூவ கொஞ்சம் மாத்தி கொடுத்தேன்.. மற்றபடி ஒன்னும் இல்லை சார்.. என்றார் விஷ்ணு.

" ஓக்கே விஷ்ணு.. நீ கிளம்பு என்றபடி.. விஷ்ணு மறையும் வரை காத்திருந்துவிட்டு... ஒரு பொது தொலைபேசியை நோக்கி சென்றார்... தகவல் சொல்ல...


தேதி 30- 10-11 நேரம்  20:00 PM 

மீனம்பாக்கம் பின்னால் இருந்த அந்த காட்டுப்பகுதியே கொஞ்சம் பரபரப்பாக இருந்தது...  காரணம்... பதினைந்து நக்சல்கள் கொல்லப்பட்டு... அந்த சண்டையில் உளவுத்துறை உயர் அதிகாரி குணசீலனும் உயிரிழந்தார் என்று மேலிடத்திற்கு தகவல் சொல்லப்பட்டது... இன்னும் எந்த பத்திரிக்கையாளர்களும் வரவில்லை... அதிரடிப்படை வீரர்களை பாராட்டிவிட்டு கொஞ்சம் ஓரமாக ஒதுங்கினார் எஸ்.பி.கோகுல்... தனது போனை எடுத்து விஷ்ணுவுக்கு டயல் செய்தார்...

" ஹலோ விஷ்ணு.. இப்ப எங்க இருக்க? என்றார்..

"சார்..நான் இப்ப பல்லாவரதுலத்தான் இருக்கேன்.. ஏன் சார்? ஏதும் முக்கியமான விசயமா? என்றார் விஷ்ணு..

" ம்ம்.. ஆமா.. நீ உடனே கிளம்பி வா" என்று இடத்தை சொன்னார்...

அடுத்த அரை மணியில் விஷ்ணு அங்கு இருந்தார்... விஷ்ணுவை பார்த்ததும் கோகுல் வேகமாக வந்து அவரை கட்டிகொண்டார்... குட் ஜாப் விஷ்ணு.. நீ இல்லைனா இது சாத்தியமே இல்லை... என்று கையை நீட்டினார் கோகுல்..

" இதுல நான் என்ன சார் செஞ்சேன்? எல்லாமே உங்க பிளான்தானே? பட்.. குணசீலன் சாருக்கு பொய்யான க்ளூவ கொடுக்க சொன்னீங்க... சரி.. ஆனா இந்த பிளான் எதுவுமே எனக்கு தெரியாதே சார் என்றான்... 

" உண்மைதான் விஷ்ணு.... நீ ஆரம்பத்துல என்கிட்டே வந்து குணசீலன் தகவல் சேகரிக்க சொல்றாருன்னு சொல்லும்போதே சந்தேகம் வந்துச்சு.. டிபார்ட்மென்ட் ஆளுங்கள வச்சா விஷயம் லீக் ஆயிடும்னுதான் உன்கிட்ட சொன்னார்.. ஆனா நீ எனக்கு விசுவாசமானவன்னு அவருக்கு தெரியாது.. ஆனா எப்பிடியோ நீ என்கிட்டே அந்த க்ளூவ கொடுத்தத மோப்பம் பிடிச்சிட்டாரு.. அதனாலதான் அவர்கிட்ட என்கிட்டே கொடுத்தது தப்பான க்ளூனு சொல்லசொன்னேன்... அதுவுமில்லாம வேற க்ளூவ கொடுத்து அவங்கள டைவேர்ட் பண்ணினேன்.. ஆறு மணிக்கு நீ குறிப்பிட்ட அந்த கண்டைனர் உள்ள எங்க அதிரடிப்படை வீரர்கள் இருந்தாங்க.. அவங்கள ஈசியா அத கடத்த விட்டு அவங்க இடத்துலே போய் அவங்கள தாக்குரதுதான் திட்டம்... அதுதான் இங்க நடந்தது... எல்லா நக்சல்களும் காலி.. என்று சொல்லி முடித்தார்..

" சார்.. சூப்பர் ப்ளான் சார்.. ஆனா அந்த ஆயுதம் உள்ள கண்டைனர் என்னாச்சு சார்?

" ரொம்ப ஸேபா அது சேர வேண்டிய இடத்த சேர்ந்துருச்சு விஷ்ணு... "

"  அதெல்லாம் சரி சார்.. குணசீலன் சார் இங்க எப்பிடி வந்தார்? எப்பிடி இறந்தார்? விஷ்ணு கேட்டார்..

" ம்ம்.. நீ பெசன்ட் நகர்ல அவர்கிட்ட க்ளூவ கொடுத்திட்டு போனதும்.. அவர் யார பார்க்கிறார்.. என்ன பேசுறார் கண்காணிக்க அவர் போன் பேச்சை கூட ட்ரேஸ் பண்ண முயற்சி பண்ணினோம்.. பட் அவர் க்ளவரா பப்ளிக் போன்ல போய் பேசினார்.. அவர் போனதும் அங்க இருந்து ட்ரேஸ் பண்ணி அவர் நண்பர் பிராபகர எங்க கஸ்டடிக்கு கொண்டு வந்திட்டோம்.. அப்படியே குணசீலனையும்  நாங்களே........

" சார்ர்ர்..... நீங்களேவா? 

" ஆமா..விஷ்ணு... நாங்களே கொன்னுட்டு இங்க சண்டைல செத்த மாதிரி அரேஞ் பண்ணிட்டோம்.... அது கூட டிபார்ட்மென்ட் மேல கெட்ட பேர் வரக்கூடாதுன்னுதான் சண்டைல செத்த மாதிரி பண்ணினோம்... என்ன பண்றது விஷ்ணு? பயிர் நல்லா இருக்கணும்னா வரப்பு மேல இருக்க களைய எப்ப வேணா வெட்டலாம்... ஆனா பயிருக்கு நடுவுல உள்ள களைய அப்பப்ப எடுக்கணும்.. இல்லைனா பயிர் வளராது... புரியுதா? ஓக்கே..விஷ்ணு... கொஞ்ச நேரத்துல ப்ரெஸ் வந்துருவாங்க... மினிஸ்டர் வந்துகிட்டு இருக்காரு... ஆக்ட் பாஸ்ட்.. என்றபடி வீரகளுக்கு கட்டளைகளை பிறப்பித்தார்....


தேதி 30-10-11 நேரம்  21:00 PM 

எல்லா சேனல்களிலும் பிரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது....

ஆயுதங்களை கடத்த முயன்ற நக்ஸல்களிடம் நடந்த சண்டையில் பதினைந்து நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்... போலிஸ் தரப்பில் உளவுத்துறை ஐ.ஜி.திரு குணசீலன் உயிரிழந்தார்... சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற உள்துறை அமைச்சர் எஸ்.பி.கோகுல் மற்றும் வீரர்களுக்கு பாராட்டுகளையும் உயிரிழந்த திரு.குணசீலன் அவர்களுக்கு அஞ்சலிகளையும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார்... 

காப்பி ஷாப்பில் காபி குடித்தவாறு இதை பார்த்து கொண்டிருந்த விஷ்ணு சிரித்துக்கொண்டான்.... No comments:

Post a Comment