Wednesday, 27 February 2013

மந்திரி பதவியைக் காப்பாற்றிக்கொள்ள 10 யோசனைகள்!


நாட்டுல இப்ப ஒரே ஒரு போட்டி வச்சா மட்டும்தான் யாராலையும் பரிசே வாங்க முடியாது! என்ன போட்டின்னு கேக்குறீங்களா? எந்த துறைக்கு யார் யார் மந்திரின்னு யாரையாவது கேட்டுப் பாருங்க! அவ்வளவு ஏன்? ஏதாவது மந்திரிய கேட்டு பாருங்க, "கொஞ்சம் இருங்க பேப்பர் பார்த்துட்டு சொல்றேன்னுதான் சொல்லுவாங்க! அந்த அளவுக்கு இருக்கு இப்ப நிலைமை! அட எப்பிடிப் பார்த்தாலும் நாம ஓட்டு போட்டு ஜெயிச்சு மந்திரியானவங்க அவங்க! அவங்களுக்கு ஒரு கஷ்டம்னா நம்ம மனசு தாங்குமா? தாங்காது! அதான் இருக்க மந்திரிகள் எப்பிடி பதவிய தக்க வச்சிகிறதுன்னும், மந்திரி பதவி இல்லாதவங்க என்ன பண்ணினா மந்திரியாகலாம்னும் இல்லாத மூளையை கசக்கி பல யோசனைகளை சொல்றேன்! இத கேட்டுக்கிறதும் கேக்காததும் அவங்க விருப்பம்! (இது ஜாலிக்காக மட்டுமே! நோ சீரியஸ்!)
1. மந்திரிகள் அனைவரும் முதலில் மிச்ச சொச்சம் இருக்கும் மானம் ரோசம் எல்லாத்தையும் மூட்டை கட்டி பரண் மேல் போடவும்! வீட்டில் பரண் இல்லையென்றால் புதிதாக கட்டியாவது போடவும்! அப்படியும் கொஞ்ச நஞ்சம் மிச்சம் இருக்கிறது என்று நினைத்தால் தங்கள் தொகுதிப் பக்கம் ஒருமுறை சென்று வரவும்! தொகுதி மக்கள் எப்பிடியும் மானங் கெட்ட தனமாகத்தான் திட்டுவார்கள்! அதைக் கேட்டு ரோசம் வந்து தொகுதி மக்களுக்கு நல்லது செய்தீர்கள் என்றால்.... சாரி..... நீங்கள் மந்திரியாக இருக்கும் தகுதியை இழக்கிறீர்கள்!

2. மந்திரியாக ஆவதற்கு கல்யாணம் ஆகாமல் இருத்தல் நலம்! ஏற்கனவே ஆகிவிட்டதா? பரவாயில்லை, ஆளும்கட்சியாக இருக்கும்வரை மட்டுமாவது அவர்களை டைவர்ஸ் செய்துவிடவும்! இந்த விதி கணக்கில் வராத சின்ன வீடுகளுக்கும் பொருந்தும்! ஏன்னா வாங்குற கட்டிங் இவர்களுடைய சொந்த  பந்தங்களுக்கே பத்தாது! அதனால் மேலிடத்தின் கோபத்திற்கு ஆளாகலாம்! அப்படியே டைவர்ஸ் செய்ய மனமில்லை என்றாலும் மாமன் மச்சான்களை அருகில் சேர்க்க வேண்டாம்! உங்க மனைவி(கள்) கெட்ட வார்த்தையில்  திட்டினாலும் அருகில் சேர்க்க வேண்டாம்! ஏனென்றால் நமக்குதான் மான ரோசம் இல்லையே?

3. மந்திரிகளுக்கு சுவிங்கம் மெல்லும் பழக்கம் இருந்தால் ரொம்ப நல்லது! பழக்கம் இல்லையென்றாலும் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் மேலிடத்தில் பேசும்போது பேசுற மாதிரியும் இருக்கணும் பேசாத மாதிரியும் இருக்கணும்! பார்க்கப் போகும்போது ஒரு சுவிங்கத்தை வாயில் போட்டுவிட்டால் பிரச்சனையே இல்லை! ஈயம் பூசுன மாதிரியும் இருக்கும், பூசாத மாதிரியும் இருக்கும்!

4. வழக்கமா சரக்கடிச்சிட்டு பொண்டாட்டிகிட்ட பேசும்போது எப்பிடி பேசுவீங்க? லேசா வாய பொத்திகிட்டு பேசுவீங்கல்ல? அந்த பயிற்சிதான் உங்களுக்கு இப்ப உதவ போகுது! மேலிடத்தில் பேச போகும்போது நீங்க சரக்கடிச்சிருக்கதா நினைச்சிக்கங்க! அப்பிடி நினைச்சா கை தன்னால போய் வாய பொத்திரும்! பொத்திருச்சா? நல்லது... அப்பிடியே முதுக லேசா 45டிகிரிக்கு பெண்ட் பண்ணுங்க! ஓக்கே.. இனி ஆட்சி முடியுற வரை நீங்கதான் மந்திரி!

5. நீங்க எந்த துறைக்கு வேணா மந்திரியா இருங்க, ஆனா பத்திரிக்கைல பேட்டி கொடுக்கும்போது மறக்காம, இப்ப உள்ள கரண்ட்டு பிரச்சனைக்கு கடந்த ஆட்சிதான் காரணம்னு சொல்லணும்! உதாரணத்துக்கு நம்ம நாராயணசாமி என்ன மந்திரின்னு யாருக்காவது தெரியுமா? ஆனா அவரு இன்னும் ஒரு வாரத்தில் எரிபொருள் நிரப்புவோம், இரண்டுநாளில் கரன்ட்ட பல்ல வச்சு கரன்ட்டியாவது எடுப்போம்னு பேட்டி கொடுக்கலியா? அந்த மாதிரிதான்! உங்ககிட்ட யாராவது மைக்க நீட்டுனாவே.... கரண்ட்டு பிரச்சனைக்கு கடந்த ஆட்சிதான் காரணம்னு கரண்ட்டு கம்பிள தொங்கிகிட்டாவது பேட்டிய தட்டி விடுங்க! 

6. உடல் உறுப்புகளில் எதையாவது நீங்கள் கட்சிக்காக நேந்துவிட வேண்டும்! அதுக்காக கை கால் இந்த மாதிரி இல்ல, விரல் நாக்கு இந்த மாதிரி! தலைமை எந்த நேரமும் உள்ளே போவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அந்த நேரத்தில் அடுத்து நாம்தான் முதல்வர் என்று யோசிக்காமல் டபக்குன்னு விரலையாவது நாக்கையாவது வெட்டி விட்டு தலைமை சீக்கிரம் வெளியில் வர சாமிக்கு பலி கொடுத்தேன் என்று சொல்லிவிடவும்! இதனால் ரெண்டு நன்மைகள், ஆயுசுக்கும் நீங்கதான் மந்திரி, நாக்க  வெட்டிக்கிட்டதால வீட்டுலயும் பொண்டாட்டி கேக்குற கேனத்தனமா கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை!

7. பள்ளியில் படிக்கையில் ( கொஞ்சமாவது படிச்சிருந்தா ) மாறுவேடப் போட்டியில் காட்டுமிராண்டி வேஷம் போட்டிருந்தால் இப்போது நான் சொல்லும் யோசனை உங்களுக்கு சிரமமாக இருக்காது! சொந்த ஊர் மாரியம்மன் அல்லது காளியம்மன் கோவில் திருவிழா வந்தால் கொஞ்சம் கூட யோசிக்காமல் எம்ப்டி பாடியில் மசாலா சிக்கன் கணக்கா மஞ்சளை தடவிக்கொண்டு வேப்பிலையை மட்டும் கட்டிக்கொண்டு தீமிதிக்கவும்! எல்லாம் தலைமைக்காகதான் என்று மறக்காமல் போட்டோவுடன் பேட்டியையும் தட்டி விடவும்! ஆனால் வேப்பிலை ஆடையோடு இருக்கும் அந்த நேரத்தில் ஆடு வந்து மேய்ந்துவிட்டால் கம்பெனி பொறுப்பேற்காது! மேயும் ஆட்டுக்கு பின்னால் நாயும் தனது நாக்கை நன்றாக நாலு இஞ்ச் தொங்க போட்டுக்கிட்டு காத்துக்கொண்டிருந்தால் பின்னர் ஏற்படும் நஷ்டத்திற்கு கம்பெனியிடம் நஷ்ட ஈடு கேக்க கூடாது!

8.  தலைமையின் வீட்டில் இருப்பவர்கள் எப்போதுமே புரியாத புதிராக இருப்பதால், யாருக்கு எப்போது மரியாதை கொடுக்க வேண்டும் அல்லது வணக்கம் வைக்க வேண்டும் என்ற குழப்பம் வரலாம்! இங்கதான் நீங்க புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்! தலைமையின் வீட்டுக்குள் போகும்போது யார் சேலைகட்டி எதிரில் வந்தாலும் காலில் விழுந்துவிடவும்! அது வீடு கூட்டும் ஆயாம்மாவாக இருந்தாலும் சரி, கவலை வேண்டாம், அந்த வீட்டில் யார் எப்போது அதிகாரத்துக்கு வருவார்கள் என்று தெரியாது! சேலை சரி, சுடிதார் போட்ட போட்ட பெண்கள் வந்தால் என்ன செய்வது என்று கேட்க்கின்றீர்களா? அப்பவும் தயக்கம் இல்லாமல் காலில் விழுந்து எந்திரிக்கவும்! யார் கண்டது, அது கூட யாருக்காவது ஒண்ணுவிட்ட ரெண்டுவிட்ட சொந்தமாக இருக்கக்கூடும்!

9. கூடுமானவரை கல்யாணம் ஆகாத பி.ஏ.க்களை வைத்துக்கொள்ளவும்! அப்படியே கல்யாணம் ஆயிருந்தாலும் அவரது மனைவி ஏதாவது கிராமத்து அக்மார்க் அருக்கானியாக இருப்பது அவரது குடும்ப வாழ்க்கைக்கும் நல்லது!  உங்களது மந்திரி வாழ்க்கைக்கும் நல்லது! அதையும் மீறி அழகாய் இருந்தாலும் அவரையும் டைவர்ஸ் செய்துவிட்டு வர சொல்லவும்! (எதத்த்தன?)! அதுபோக கூடுமானவரை தமிழ்படங்களை பார்ப்பதை தவிர்த்துவிடவும், ஏனென்றால் ஏதோ ஒரு சபலத்தில் நீங்கள் சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்ட போக... அந்தச் சபலமே உங்கள் மந்திரி வாழ்க்கையில் லாரியை ஏற்றி விடும் ஜாக்கிரதை!

10. சட்டசபையில் எதிர்கட்சிகள் அதிரி புதிரியாக கேள்வி கேட்டால்  கவலையே வேண்டாம்! எழுந்துநின்று முதலில் முதல்வரை வாழ்த்தி புகழ்ந்து பேச ஆரம்பிக்கவும்! பேசிக்கொண்டே இருக்கவும்... நீங்கள் டயர்ட் ஆகின்றீர்களோ இல்லையோ? கேள்வி கேட்டவர் ஆகிவிடுவார்! அதுதான் நமக்கு முக்கியம்... அவர் கேட்ட கேள்வியை மறந்து அடுத்த கேள்வியை கேட்டதும் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கவும்! அதுக்குள்ள சாப்பாட்டுக்கு மணி அடித்து விடுவார்கள்! நீங்களும் நைசாக கிளம்பிவிடலாம்!

இந்த யோசனைகள் காப்பி ரைட் செய்யப்பட்டது! இதனை பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக ராயல்டி கொடுக்க வேண்டும்! மீறினால் முட்டை மந்திரிச்சு எல்லோர் வீட்டுக்கும் அனுப்பிவிடுவேன் சாக்கிரதை!

No comments:

Post a Comment