Wednesday, 27 February 2013

நினைவில் நிற்கும் சுவைகள்(உணவுகள்)!கடந்த வார இறுதி விடுமுறையில் வீட்ல மீன்குழம்பு வைத்தேன்! அது என்ன கடந்த வாரம்? எப்போதுமே நீதானே சமைப்ப, அப்பிடின்னு சொல்றவங்களுக்கு, அதுவும் உண்மைதான்! அசைவ அயிட்டங்கள் அம்மாவை தவிர யார் செய்தாலும் எனக்கு திருப்தி இருப்பதில்லை! ஆகவே நானே செய்துவிடுவேன்! என் வீட்டில் என்னோடு இருப்பவர்களுக்கும், அது மீன், நண்டு அல்லது சிக்கன் எதுவாக இருந்தாலும் நான் சமைப்பதுதான் பிடிக்கும்! 

கடந்த வாரமும் இப்பிடித்தான் என் நண்பன் ஒருவன் அதை சாப்பிட்டு விட்டு கண்கலங்கினான்! "சரி விடுடா.. இதுக்கெல்லாமா அழுகுறது? வேணும்னா ஒரு கைச்செயினோ மோதிரமோ வாங்கி போட்டு உன் அன்ப காட்டிட்டு போன்னு" சொன்னேன்! அப்பறம்தான் தெரிஞ்சது பயபுள்ள குழம்பு காரத்துல கண்ணு கலங்கியிருக்கான்! இருந்தாலும் ரொம்ப நாள் கழித்து கார சாரமாக சாப்பிடுவதாக சொன்னான்! இது அவன் மட்டும் அல்ல பல பேர் என்னிடம் சொன்னதுதான்!
 
இதற்கான காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால் கண்டிப்பாக என் அம்மாவின் வழி வந்ததாக இருக்கும்! சிறு வயதில் இருந்து இன்றுவரை நாவில் சுவை தங்கியிருக்கும் உணவுகளைப் பற்றி அன்று நெடுநேரம் நினைத்துக்கொண்டிருந்தேன்! அன்று மூன்று வேளைக்கும் ஆக்கித் திண்ண அரிசி இருந்தாலும் காலையில் கூழ் என்பதுதான் குடியானவனுக்கு அழகு என்று இருந்த காலம்! ஆனால் ஏதாவது ஒரு விசேசம் என்று வந்துவிட்டால் தெருமுனைக்கு வந்த யாரும் முகவரி கேட்க வேண்டியதில்லை! நாட்டுக்கோழி மசாலாவும் மீன் குழம்பு வாசமும் அவர்களை குண்டுகட்டாகத் தூக்கி வீட்டி வந்து போட்டு விடும்! நாங்கள் இருப்பது செட்டிநாடு என்பதால் குழந்தைகள் கூட ரசனையாக சாப்பிடும் வழக்கம் உடையவர்கள்! இயற்கையாகவே காரம் கொஞ்சம் அதிகமாகவே சேர்ப்போம்! காரம் என்று பேசும்போதே அம்மா வைக்கும் மீன் குழம்பும் நண்டு குழம்பும் நாக்கில் வந்து ரெண்டு சொட்டு நீரைத் தட்டி விட்டுப் போகிறது!
 
அதுவும் இப்போதுபோல்  உலோகப் பாத்திரங்களில் வைப்பது இல்லை! மஞ்சட்டி ( மண் சட்டி ) மீன் குழம்பும் நண்டு குழம்பும் ருசியை அனுபவித்தவர்களுக்குத் தெரியும்! அப்போதெல்லாம் வாரத்தில் ஒருமுறைதான் கவிச்சி! திங்கள் கிழமை காரைக்குடி சந்தை! எட்டுப்பட்டிக்கும் அதுதான் பெரிய சந்தை! அப்பா அங்கு இருந்து மீன் அல்லது நண்டு வாங்கி வீட்டுக்குள் நுழைவதில் ஆரம்பிக்கும் எனது உளவுத்துறை வேலை! எத்தன மீன் அல்லது நண்டு! பெருசா சின்னமா, நண்டுல மூக்கு கால்( பெரிய கால் ) இருக்கா இல்லையா போன்ற அதிமுக்கிய ரகசியங்களை பையை பிரிக்காமலே கண்டுபிடித்து என் அக்காக்களிடம் சொல்வதில் எனக்கு பத்மஸ்ரீ விருதே இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கலாம்!
 
மீன் என்றால் அம்மா குழம்பை மட்டும் முதலில் கூட்டி விடுவார்கள்! மஞ்சட்டியை வைத்து அது காய்ந்ததும் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கொஞ்சம் வெந்தயம் போட்டுத் தாளித்து, சின்ன வெங்காயம் போட்டு பொன் நிறமாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு வதக்கி அம்மியில் அரைத்துவைத்த மசாலாவை ஒரு உருண்டையாக புளியில் ஊர வைத்திருப்பார்கள்! அதை அம்மியில் அரைப்பதே பெரிய கலை! என்னென்ன வச்சு அரைப்பாங்கன்னு இங்க போட்டா ரெசிபிய போட்ட மாதிரி ஆயிரும்! அதனால நேர குழம்பு கொதிக்கிற கண்டிசனுக்கு போயிருவோம்! குழம்பு நல்லா கொதிச்சு வருபோது அதுல கரைச்சு வச்ச புளிய ஊத்துவாங்க! நல்லா கொதிச்சு வத்தி வரும்போது அதுல அலசி வச்ச மீன் துண்டுகளப் போட்டு மூடி வச்சுட்டு, கலைஞர் உண்ணாவிரதம் இருக்க நேரத்துக்குள்ள அடுப்ப அமத்தி கொலைய வடிச்சு வச்ச ( மண் பானை சோறு ) சுடு சோத்துல ஊத்தி சாப்பிட்டாவுல இருக்கு! ஆஹா... ஆனா சாப்பிடும்போது காரம் தெரியாது! சாப்பிட்டு முடிச்ச பிறகுதான் தெரியும்! இல்லை.. எரியும்! அப்போதைக்கு உடனடி தீர்வு தயிர் மிதப்ப எடுத்து உதட்டுல தடவிக்குவோம்! தேங்கா எண்ணெயை எடுத்து கைகளில் தடவிக்குவோம்! ஆனாலும் அந்தச் சுவை மட்டும் நாக்கின் அடியில் தங்கிவிட்டது! கால ஓட்டத்தில் அந்த மண் சட்டி குழம்பை இன்னும் ருசிக்க முடியவில்லை! 

முதல்நாள் மீன் குழம்பு என்றால் மறுநாள் கண்டிப்பாக காலையும் மதியமும் ஏதாவது ஒரு கூழாகத்தான் இருக்கும்! கூழ் என்றால் பொதுவாக எங்கள் பக்கம் சோளக் கூழும் கேப்பைக் கூழும்தான்! ஏனென்றால் சோளம் எங்க பக்கம் தோட்டப்பயிர்! கேப்பை மலிவாக கிடைக்கும்! காலையில் அப்போதுதான் காய்ச்சிய கூழை சூடாக தட்டில் ஊற்றி கொடுப்பார்கள்! அதில் அவரவர் விருப்பம் போல ஏதாவது போட்டுக்கொள்வோம், நான் சீனி ( சர்க்கரை ) போட்டுக்கொள்வேன்! மீதம் உள்ள கூழை அப்பிடியே ஆப்பையில் ( அகப்பை ) எடுத்து கஞ்சிக்குள் போடுவார்கள்! கஞ்சி என்றால் ஏதோ முதல்நாள் மீதம் ஆன சோற்றில் தண்ணியை ஊற்றினால் கஞ்சி என்று நினைத்துவிடாதீர்கள்! 


கஞ்சியின் சுவை அதில் ஊற்றும் நீரில்தான் உள்ளது! இப்போதுதான் இங்கு குழாய்த் தண்ணி எல்லாம், அப்போதெல்லாம் நல்ல தண்ணி கிணறு என்று ஒன்று உண்டு, அதில் தண்ணி எடுத்து வருவதே என் அக்காக்களுக்கும் பக்கத்தில் உள்ளவர்களும் ஒரு அன்றாட நிகழ்வு! எத்தனை மணிக்கு போக வேண்டும் என்று முதல்நாளே கூட்டம் எல்லாம் நடக்கும்! தலையில் ஒரு குடமும், இடுப்பில் ஒரு குடமுமாக அவர்கள் தண்ணீர் எடுத்து வருவதைப் பார்த்தால் பாம்பே சர்க்கஸ் தோற்று விடும்! அவ்வளவு அனாயாசமாக நடப்பார்கள்! அதுகூட பெண்களின் இடுப்பு எலும்பின் அவசியத்தை உணர்ந்து பெரியவர்கள் அவர்களுக்கு கொடுக்கும் பயிற்சியாக இருக்கும்! பாருங்க கஞ்சில ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்! 

இப்படி அந்த தண்ணீரில் ஊரும் பழைய சாதத்தின் ருசியே தனி! காலையில் திரவமாக ஊற்றிய கூழ் மதியம் பார்த்தால் ஒவ்வொரு ஆப்பையும் ஒவ்வொரு உருண்டையாக இருக்கும்! அதை அந்தக் கஞ்சியோடு சேர்த்து எடுத்துவைத்து அதில் அந்த நேத்து வச்ச மீன் குழம்பை ஊற்றி சாப்பிட்டால்... அதோடு கொஞ்சம் பச்ச மிளகாய், கொஞ்சம் வெங்காயமும் கடித்தால்.. ஆஹா... இப்போது எவ்வளவு பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் கூட அந்த ருசியை மீட்டெடுக்க முடியவில்லை!

 இன்னும் எவ்வளவோ உணவு வகைகள், இப்போதெல்லாம் ஆசைக்கு கூட அதை ருசிக்க முடியவில்லை, கஞ்சி கூட இப்போது உள்ள கார்பரேசன் தண்ணிக்கு அதன் ருசியை இழந்துவிட்டது! கேப்பைக்களி, உளுந்தங் களி, வயல் நண்டு ரசம், முள் முருங்கையும் இம்புரா இலையும் சேர்த்து அரைத்த தோசை, இன்னும் எத்தனையோ உணவுவகைகள்! முடிந்தால் அதைப்பற்றியும் எழுத ஆசை உள்ளது! 
 

மீசை!மீசை என்ற வார்த்தையைக் கேட்டதுமே அதோடு சேர்த்து வீரம் என்ற வார்த்தையும் சேர்த்தே நம் நினைவில் வரும்! அது என்னன்னே தெரியல? மீசைக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்புன்னு? இருந்தாலும் நம்ம ஆளுகளுக்கு மீசை வச்சாத்தான் ஆம்பள! அத முறுக்கி விட்டாத்தான் வீரம்னு அந்த காலத்துலேயே முடிவு பண்ணிட்டாங்க போல? நல்லா இந்திவாலா மாதிரி கொழுக் மொழுக்னு இருந்த ஆனானப்பட்ட சிவபெருமானுக்கே மீசைய வச்சு அத முறுக்கியும் விட்டது யாருங்கிறியக? எல்லாம் நம்ம பயகதான்!
 
 
 
ஆனா அது என்னன்னு தெரியல? தமிழ் கடவுள்னு சொல்ற முருகனுக்கு மட்டும் மீசைய வைக்காம விட்டுபுட்டானுங்க! ஒருவேள அது அந்த தெய்வான புள்ளையோட கண்டிசனா இருக்கும்! ஏன்னா அந்த புள்ள அந்த இந்திரனோட மகளாம்ல? சரி விடுங்க, அதெல்லாம் பெரிய எடத்து வெவகாரம்! நமக்கெதுக்கு? நம்ம மீசக் கதைக்கு வருவோம்!
 
மீசையிலதான் எத்தன வகை? அரும்பு மீச! அருவா மீச! பென்சில் மீச இப்பிடி வக வகயா இந்த உலகத்துக்கு மீசய கொண்டுவந்து காட்டுனது எல்லாம் நம்மா தாத்தன் பாட்டனாத்தான் இருக்கும்! இந்த சிவன் விஷ்ணு நம்ம ஆளுங்களுக்கு அறிமுகம் ஆகுறதுக்கு முன்னாடியே நம்மளுக்கு அறிமுகம் ஆனவங்கதான் கோட்டக் கருப்பும் முனியனும்! இவங்களுக்கு எல்லாம் பார்த்தா மூஞ்சி பூராம் மீசையாத்தான் இருக்கும்! அதனாலே நம்மா ஆளுங்களும் மீச வச்சாதான் ஆம்பளைன்னு அதுக்கு தனியா உரம் போட ஆரம்பிச்சாங்க!
 
அதுமட்டும் இல்லை, மீசை இல்லைனா அந்த காலத்து ஆயாஸ் எல்லாம் அவன (மீச)மசுருக்கு கூட மதிக்காதாம்! போட்டோ எடுக்க வசதியில்லாத அந்த காலத்து மன்னர்களை வரையும்போது எல்லோருக்கும் பெரிய பெரிய மீசய வச்சு அழகு பார்த்த தமிழன், திருவள்ளுவருக்கு மட்டும் கொஞ்சம் ஓவர் டைம் போயி தாடியையும் சேர்த்தே வரஞ்சிட்டான்! இந்த விசயம் மட்டும் அவரு பொண்டாட்டி வாசுகிக்கு தெரிஞ்சதுன்னா, கெணத்துல பாதில விட்டுட்டு வந்த வாளிய திரும்ப எடுத்துட்டு வந்து வரஞ்சவன் மண்டையிலே போடுவாங்க!
 
சரி விடுங்க.. கொஞ்சம் கூட நன்றி இல்லாம நம்மள படைச்ச பிரம்மாவுக்கே தாடி வச்ச ஆளுங்கதானே நம்ம! இப்பிடி அடர்த்தியா கொலு கொழுன்னு மீச வச்சிக்கிட்டு திரிஞ்ச நம்ம ஆளுங்க மேல யார் கண்ணு பட்டதோ தெரியல? திடீர்னு தூணு மாதிரி இருந்த மீசையெல்லாம் துரும்பா எளச்சி போச்சு! போதாக்கொறைக்கு இந்த பாகதவர்  சின்னப்பா எல்லாம் நல்லா பருவம் வந்த தேயில கொழுந்து கணக்கா கொஞ்சூண்டு மீசய வச்சு நடிக்க ஆரம்பிச்சாங்க!
 
அவர்கள் காலம் தொட்டு எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி  போன்றவர்கள் காலம் எல்லாம் தமிழர் மீசையின் இருண்ட காலம் எனலாம்! ரெண்டு தட்டாம் பூச்சிய புடிச்சு ரெக்கைய பிச்சிபுட்டு மூக்குக்கு ரெண்டு பக்கமும் ஒட்டி வச்ச மாதிரிதான் மீசை! இப்படி ஒரு விடுதலைக்காக ஏங்கிய மீசையை மீட்டெடுக்க வந்தவர்கள்தான் கமலும் ரஜினியும்! அதிலும் இந்த ரஜினி ரெண்டு பேர அடிசிபுட்டு லைட்டா மீசைய வேற கொத்தி விடுவாரு! அங்குதான் விதிக்கப்பட்டது மீசைப் புரட்சியின் மீள் விதை!
 
 
 
தமிழனுக்கு திரும்பவும் மீசக்காச்சல்! நானும் தமிழன்தானே? அத வளக்க நான் பட்ட பாடு.. ஸ்..ஸ்..  ஆனா அது என்ன கருமமுன்னே தெரியாது, டக்குன்னு வளர்ந்து தொலைக்காது! வயக்காட்டுல நெல்லு விதைச்சு வளர்க்கிறத காட்டிலும் இதுக்கு அதிகமா மெனக்கெட வேண்டி இருந்தது! எட்டாப்பு படிக்கும்போது கூடப் படிச்ச பொண்ணுங்க எல்லாம் திடீர்னு ஒரு வாரம் காணாம போயி திரும்ப வரும்போது பார்த்தா அடையாளமே மாறியிருக்கும்ங்க! என்னடான்னு கேட்டா பக்கத்துல உள்ள மாரியப்பன் குகுசுன்னு சொல்லுவான் " அது சமஞ்சிருச்சாம்டா"னு!
 
அவன்தான் எங்க கிளாஸ்ல கெட்ட வார்த்தைக்கு நேந்து விட்டவன்! நமக்கு புடிக்காத ஆள கெட்ட வார்த்தைல திட்டனும்னா அவனுக்கு ரெண்டு கல்கோனா முட்டாய் வாங்கி கொடுத்தா போதும்! கெட்ட வார்த்தைல பயங்கரமா திட்டிபுடுவான்! நம்மளையும் பக்கத்துல வச்சுக்குவான்! ஏன்னா கஸ்டமர் சேட்டிஸ்பேக்சன் ரொம்ப முக்கியமாம்! ஆனா அந்த நாதாரி அடுத்த செகண்டே அவன்கிட்ட ஒரு முட்டாய் கூட வாங்கிகிட்டு நம்மள நாறத்தனமா திட்டுவான்! சரி அத விடுங்க நம்மா மீசக் கதைக்கு வருவோம்!
 
அவன் அப்படி சொல்லும் போது நாங்களும் அப்பாவியா அவன்கிட்ட கேப்போம் " அப்ப நாமளும் சம்ஞ்சிட்டா அடுத்தநாளே நமக்கு மீசை வந்துருமாடா?"னு! அவன் கொஞ்சம் வெவரம் " அப்பிடியெல்லாம் வராதுடா.. நாமதான் வர வைக்கணும், டெய்லி சேவ் பண்ணனும் நைட்டு படுக்கும்போது வெளக்கெண்ணை தேச்சு படுக்கணும், காலைல தேங்காண்ணெய் தேய்க்கணும்.. இப்பிடி நிறைய சொன்னான்! அவன் ஈசியா சொல்லிட்டான் நமக்குதான் பெரும்பாடா போச்சு!
 
வீட்டுக்கு போற வழில ஒரு போலீஸ்காரர் வீடு! அவரு டெய்லி சேவ் பண்ணுவாரு, அவரு மகன்கிட்ட சொல்லி.. என்ன சொல்லி? போலிஸ் மகன்னா சும்மாவா? ஒரு கொய்யாபழம் வாங்கி கொடுத்து அவரு சேவ் பண்ணி போட்ட ஒரு பிளேடு தேத்துனேன்! ( நல்லவேள.. அப்ப இந்த எய்ட்ஸ் கருமாந்திர பயமெல்லாம் இல்லை )! அத ஒளிச்சு வச்சு யாரும் இல்லாத எடமா பார்த்து தண்ணிய தொட்டு வச்சு சுயோக சுபதினத்தில் லேசா சேவ் பண்ண ஆரம்பிச்சேன்! அப்ப பார்த்தா போஸ்ட் மேன் வந்து பெல் அடிக்கணும்? அவசரமா மறைக்கிறேன்னு சொல்லி உதட்டுக்கு மேல கிழிந்தது! இப்பிடி முதல் முயற்சியே ரத்தக்களரியாக ஆரம்பித்ததுதான் என் மீசை வளர்ப்பு பயணம்!
 
அதற்க்கு பிறகு பல முயற்சிகள்! ஆனாலும் லேசா கூட எட்டி பார்க்கல மீசை! ஆனாலும் சோர்ந்துவிட வில்லை, என்னைப்போல மீசை வளர்ப்பில் ஆர்வமுள்ள நண்பர்கள் சேர்ந்துகொண்டு அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபடுவோம்! அப்படி ஒருநாள் ஸ்கூல் வராண்டாவில் ஆலோசனை நேரத்தில் நான் ஆர்வக்கோளாரில் " ஏன்டா, நம்ம *** டீச்சருக்கு மட்டும் மீச நல்லா முளைக்குது, இன்னைக்கு சேவ் பண்ணிட்டு வந்துருக்கு போல? ஆனா வேணும்னு நினைக்கிற நமக்கு ஏன்டா முளைக்கலைன்னு? அப்பாவியாத்தான் கேட்டேன்!
 
பின்னாடி அதே டீச்சர் ரூபத்துல விதி கொம்பு முளைச்சு நின்னத பார்க்கல! ங்கொய்யால... என்னா அடி? கைல உள்ள கம்பு உடையற வரை அடிச்சது!  இதெல்லாம் என் மீசை வளர்ப்பு பயணத்தில் ஆராசுவடுகள்! ஆனாலும் என் மீசை ஆர்வத்தை தீர்த்துவைக்க வந்ததுதான் பள்ளி ஆண்டுவிழா! அதில் ராஜராஜன் நான்தான்! நல்லா இருப்பதிலே பெரிய மீசயாய் ஒட்டி பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் அவ்வளவு வசனங்களையும் மனப்பாடம் செய்தேன்! ஆண்டுவிழா அன்று அந்த மீசையை ஒட்டி கண்ணாடியில் பார்த்த அந்த நிமிடம்தான் நான் மாரியப்பன் சொன்ன கெட்ட வார்த்தை ஆயிட்ட உணர்வு!
 
 

யார் சிறந்த அடுத்த முதல்வர்? - 2


இப்போது உள்ள சூழ்நிலையில் யார் சிறந்த முதல்வராக இருக்கமுடியும் என்ற கடந்த பதிவின் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன்! கடந்த பதிவில் தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இரண்டு கட்சிகளையும் தவிர்த்து மற்ற கட்சிகளையும் சில தலைவர்களைப் பற்றியும் பார்த்தோம். முந்தைய பாகம் படிக்காதவர்கள் அதையும் இங்கு படித்து விடவும்! அப்போதுதான் ஒரு முழுமை கிடைக்கும்!
அ.தி.மு.க! இப்போதைய ஆளும் கட்சி! கடந்த பொதுத் தேர்தலோடு காணாமல் போகும் என்று பல அஞ்சா நெஞ்சர்கள் ஆருடம் சொன்ன கட்சி! ஆனால் அழிவின் விளிம்புக்கு போன கட்சிக்கு அவர்களே மறைமுகமாக ஆக்சிஜன் கொடுத்துவிட்டார்கள்! அதன் காரணமாக இன்று அசுர பலத்தோடு ஆளும்கட்சியாக இருக்கின்றது! இன்றைய அ.தி.மு.கவின் அடையாளம் ஜெயலலிதா மட்டுமே! அவரையும் தாண்டி யாருமே நினைவுக்கு வருவதில்லை! அவரும் வரவிடுவதில்லை! அவர் கட்சியை கையில் எடுத்த காலத்தில் இருந்தே தன்னை மிஞ்ச கூடியவர்களையும் தன்னோடு மோதக்கூடியவர்களையும் கவனமாகக் களை எடுத்துக் கொண்டிருக்கிறார்! இந்த களைஎடுப்பில் எம்.ஜி.ஆர் காலத்திலேயே செல்வாக்காக விளங்கிய பலரும் காணாமல் போய்விட்டனர்! ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசு, முத்துசாமி, எஸ்.டி.எஸ், சேடப்பட்டி இப்படி வசீகரமான ( மக்களிடம் ) இரண்டாம் கட்ட தலைவர்களை அடையாளம் தெரியாமல் ஆக்கினார்!
இப்படி கவனமாக பூக்களை மட்டுமே தனக்கான பாதையில் போட்டுக்கொண்டு வந்ததால் அவருக்குப்பின்னால் எந்த பூஞ்ச்செடியையும் காணவில்லை! அதையும்மீறி ஜெயாவின் அரசியல் வாரிசு என்ற பரமபதத்தில் அவராலே   ஏத்திவிட்டு அவராலே கொத்தி வீழ்ந்தவர்கள்தான் அதிகம்! சுதாகரன், டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ், ராவணன் இப்படி இவராலே வீழ்ந்த மன்னார்குடி விக்கெட்டுகள் அதிகம்! ஆனால் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் சற்றும் மனம் தளராத விக்ரமாத்தித்யர்கள் யார் என்று பார்த்தால் சட்டென்று மனதில் நிழழாடுவது மூன்று உருவங்கள்தான்! ஓ.பன்னீர்ச்செல்வம், ஜெயகுமார், நத்தம் விஸ்வநாதன்!


ஆனால் இவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழகத்திலும் தனிப்பட்ட செல்வாக்கு என்று பார்த்தால் பூஜ்யமே! இதில் ஓ.பன்னீர்ச்செல்வம் மட்டும் ஆறுமாத காலம் பாதணிகளை அரியணையில் வைத்து ஆட்சி நடத்தியவர் என்ற முறையில் அறிமுகம்! இவரிடம் நிர்வாகத்திறமை என்று பார்த்தால், பட்ஜெட் சூட்கேசில் ஜெயாவின் படத்தை ஒட்டிக் கொண்டு வருபவரிடம் அதனை எதிர்பார்த்தால் நாம்தான் முட்டாள்! இவரெல்லாம் நாவலர் மாதிரி இப்படி இரண்டாம் இடத்திலே இருப்பதுதான் அவருக்கும் நல்லது தமிழகத்திற்கும் நல்லது!
அடுத்து நத்தம் விஸ்வநாதன்! இப்போதைய மின்சாரத்துறை அமைச்சர்! ஆட்சியில் அமர்ந்து ஒருவருடம் ஆகிய நிலையிலும் தனது துறையில் உள்ள பிரச்சனையே இன்னும் இவரால் தீர்க்கமுடியவில்லை! அல்லது முயற்சியே செய்யவில்லை எனலாம்! அப்படி இருக்கும்போது ஆட்சி முதலமைச்சர் பதவி என்பது இவருக்கு குருவி தலையில் பனங்காய்தான்! இப்படி அ.தி.மு.க வில் ஜெயாவை தவிர்த்து யாரை எடுத்துக்கொண்டாலும் ஒரு வரி கேள்விபதில் போல சுலபமாக கடந்துவிடலாம்! ஆக ஜெயாவை தவிர்த்து அந்த கட்சியில் யார் முதல்வராக வந்தாலும் அது அப்ரசண்டி கைல ஆட்சிய கொடுத்தது போலதான் இருக்கும்!
இப்போது தி.மு.கவுக்கு வரலாம்! அ.தி.மு.க வை பொறுத்தவரையில் ஜெயா இருக்கும் வரை அடுத்து என்ற கேள்விக்கே அங்கு இடமில்லை! அப்படி ஒரு கேள்வி வந்தால் அதை கேட்டவருக்கும் அங்கு இடமில்லை! ஆனால் தி.மு.கவில் இப்போதைய முக்கிய விவாதமே அடுத்து என்பதில்தான் இருக்கிறது! இதற்கு முதல் முக்கிய காரணம் என்று பார்த்தால் இப்போதைய தலைவர் கருணாநிதியின் வயது! இரண்டாவது காரணம் என்று பார்த்தால் பல சமயம் பனிமலை போலவும் சில சமயம் எரிமலை போலவும் நடக்கும் வாரிசு சண்டை!
இப்போது தலைவர் என்ற இசை நாற்காலிக்கு ஸ்டாலின் மற்றும் அழகிரி என இரண்டு பேர் சுற்றுகின்றனர்! இப்போதைக்கு இல்லையென்றாலும் ஆட்டத்துக்கு நானும் தயார் ஆகிக்கொண்டிருக்கிறேன் என்று கனிமொழியும் காத்துக்கொண்டிருக்கிறார்! ஆகக்கூடி.. இந்த வாரிசு சண்டை ஒருவிதத்தில் கருணாநிதிக்கு துன்பத்தை தந்தாலும் இன்னொருவிதத்தில் மகிழ்ச்சியே! கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்களிடம் யார் அடுத்த வாரிசு என்பதில் மாற்றுக் கருத்து உண்டே ஒழிய கருணாநிதியின் வாரிசுகளில் ஒருவர்தான் கட்சியின் அடுத்த வாரிசு என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இல்லையே! இது அவருக்கு சந்தோசமான விசயம்தானே?


முதலில் கனிமொழியை பற்றி பார்க்கலாம்! ஆரம்பகாலங்களில் கவிதைகளோடு திருப்திபட்டு கொண்டவர் கடந்த திமுக ஆட்சியில் முழு வேகத்தோடு தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்! நாட்டுப்புற கலைகள் மற்றும் சமூக ஆர்வலராக தன்னை காட்டிக்கொண்டவர் 2007 இல் இதே மாதம் மாநிலங்களவை உறுப்பினர் ஆகி பதவி வெளிச்சத்தை தன் மீது பாய்ச்சிக்கொண்டார்! வணிகவியல் முதுகலை முடித்திருக்கிறார்! ஆனால் மாநிலத்தை நிர்வாகம் செய்ய அதுமட்டுமே தகுதியாகிவிடாது என்பதை அவரும் அறிவார்! நாட்டையே உலுக்கிய 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ளார்! 
மத்தியில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தை பொருத்து இந்த வழக்கின் போக்கு இருக்கும் என்பதால் மீண்டும் கைது பயம் மனதுக்குள் இருக்கும்! ஆனால் இவருடைய பெரும்பாலான முடிவுகள் இவரது தாயார் ராஜாத்தி அம்மாவால் எடுக்கப்படுவது இவரது துரதிஷ்டம்! ஆக இவருக்கு தலைவர் வாய்ப்பு என்பது மிக குறைந்த சதவீதமே உண்டு! அப்படியே வாய்ப்பு கிடைத்து இவர் முதல்வர் ஆனாலும் இவருக்கு கட்சியை கட்டுகோப்பாக கொண்டுசெல்வதே பெரிய சவாலாக உருவெடுக்கும்! நாட்டை நிர்வாகம் செய்ய நேரம் இருக்காது! இவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காத வரை தமிழக மக்கள் புண்ணியம் செய்தவர்கள்!அடுத்து, வாரிசுப் போட்டியில் தன்னை வலுக்கட்டாயமாக இணைத்துக்கொண்ட அழகிரி! 1980 களில் முரசொலி பத்திரிகை வேலைகளை கவனிப்பதற்காக மதுரைக்கு குடும்பத்தோடு குடியேறியவர்! ஒரு கட்டத்தில் பத்திரிகை வேலைகள் நின்று போனாலும் தலைநகர் சென்று ஸ்டாலினோடு மல்லுக்கட்ட தைரியம் இல்லாமல் மதுரையில் தனி ஆவர்த்தனம் செய்யத் துவங்கினார்! ஒருகட்டத்தில் இவருடைய அடாவடி தாங்காமல் கருணாநிதியே இவரை கட்சியில் இருந்து நீக்கி யாரும் இவரோடு தொடர்புகொள்ளக் கூடாது என்று கூறினார்! அதனையொட்டி ஒரு கலவரமே மதுரையில் நடந்து அடுத்து வந்த தேர்தலில் பலபேரை சுயேட்சையாக நிப்பாட்டி சொந்த கட்சி வேட்ப்பாளர்களையே தோற்கடித்த வரலாறு இவருக்கு உண்டு! 

ஆனால் கருணாநிதியின் பிள்ளைப்பாசம் இவற்றை விட பெரியது! மீண்டும் கட்சிக்குள் வந்து முன்னைவிட அசுரபலத்தோடு அதிகாரம் செய்யத்துவங்கினார்! இவருக்குள் புகைந்து கொண்டிருந்த வாரிசு பிரச்சனையை தினகரன் வாயிலாக நிதி சகோதரர்கள் தூண்டி விட மூன்று உயிர்களை பலி வாங்கி அமுக்கப்பட்டது வரலாறு! மதுரையில் இவரை புகழ்ந்து பேனர் வைத்தே பெரிய ஆள் ஆனவர்கள் உண்டு! கடந்த தி.மு.க ஆட்சியில் இவரது அடிப்பொடிகள் ஆடிய ஆட்டம் மதுரையை தனித்தீவாக ஆக்கியது! ஒரு மேயரே கையில் கம்புடன் கலவரம் செய்த அரிய காட்சிகள் எல்லாம் நடந்தது! ஆனால் அதையெல்லாம் தட்டிக்கேட்டு அவர்களை தள்ளி வைக்காமல் முன்பைவிட அவர்களை அதிகமாக அரவணைத்துக் கொண்டார்! இது அடாவடி செய்பவர்களுக்குதான் எனது அரசியலில் இடம் என்று சொல்லாமல் சொல்லியது!

 வானம் பார்த்த பூமிகலாகிய தென்மாவட்டங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் கரன்சி மழையை பொழிய விட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததாக தலைமை நம்பியது அல்லது நம்ப வைத்தார்! அதற்கு பரிசாக தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை உருவாக்கி அவருக்கு கொடுத்தார் கருணாநிதி! அதுவும் போதாது என்று அவர் அடம்பிடித்ததால் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கவைத்து கேபினட் அமைச்சராகவும் ஆக்கினார்! ஆனால் நாடாளுமன்றம் ஒழுங்காக செல்லாமல் துறை கூட்டங்களில் கூட இணை அமைச்சரையும் அதிகாரிகளையும் பதில் சொல்ல வைத்து ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளாகினார்! ஆனால் அதைப்பற்றியெல்லாம் இவர் கவலைப்படவில்லை, இவருடைய ஒரே நோக்கம் இப்போது கட்சியை இவர் கட்டுக்குள் கொண்டுவருவது! இவர் படித்தது பி.ஏ.வரலாறு! ஆனால் இவர் கட்சியின் தலைவர் பதவியை கைப்பற்றி முதலமைச்சர் ஆனால் அதுதான் தமிழ்நாட்டின் மோசமான வரலாறாக இருக்கும்!இறுதியாக ஸ்டாலின்! யோசிக்காமல் அம்புகளைவிடும் ஜெயலலிதா கூட யோசித்து அம்புகளை விடும் ஒருவர்! கருணாநிதி தாயாளு அம்மையாரின் மூன்றாவது மகனாக 1953 இல் பிறந்தவர்! இவர் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே (1967 - 1968 ) தனது கோபாலபுரம் தோழர்களை இணைத்துக்கொண்டு கோபாலபுரம் இளைஞர் தி.மு.க என்ற அமைப்பினை ஏற்படுத்தி தனது அரசியல் வாழ்க்கையை துவங்கினார்! ( கவனிக்க ஸ்டாலின் அரசியல் அனுபவம்தான் கனிமொழியின் வயது! ) இதன் தொடர்ச்சியாக 1980 யலில் இளைஞர் அணி அமைப்புரீதியாக மதுரையில் துவங்கப்பட்டது! ( கவனிக்க அழகிரி மதுரை வந்த வருடம் ) ஒவ்வொரு ஊருக்கும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணியை கட்டியமைத்ததால் அவருக்கு இளைஞர் அணி அமைப்பு செயலாளர் பதவியை வழங்கினார் கருணாநிதி! 

இவருடைய இளமையிலே மிசா சட்டத்தால் சிறையில் அடைக்கப்பட்டவர்! 1984 ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று தோல்வியை தழுவினார்! அதன்பிறகும் இங்குதான் தொடர்ந்து நின்றார் கடந்த தேர்தலை தவிர்த்து! பஞ்சாயத்து ராஜ் திட்டம் சீர்படுத்தப்பட்டு 1996 இல் நடந்த மாநகராட்சி தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் ஆனார்! இவர் மேயராக இருந்த காலத்தில் சென்னையின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினார்! இவரது காலத்தில்தான் சென்னையில் அதிக மேம்பாலங்கள் கட்டப்பட்டது! 2006 இல் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னர் உள்ளாட்சித் துறை அமைச்சரானார்! பின் கருணாநிதியின் வயது காரணமாக அவரது சுமையை குறைக்க 2009 இல் துணை முதல்வராக பொறுப்பேற்றார்! 

இப்படி கட்சியில் சாதாரண உறுப்பினராக சேர்ந்து கட்சிப்பணியாற்றி வட்டப்பிரதிநிதி, மாவட்டப்பிரதிநிதி,பொதுக்குழு,செயற்குழு என முறைப்படி தேர்வுகள் பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியில் இளைஞர் அணி செயலாளர், துணைப்பொது செயலாளர் மற்றும் பொருளாளர் என படிப்படியாக வந்தவர்! இவரைப்பற்றி கட்சியில் பொதுவாக சொல்பவர்கள் சொல்வது, இவரை நம்பி இருப்பவர்களை இவர் காப்பாற்ற முயற்சி செய்யமாட்டார் என்று, இந்த ஒப்பீடு கூட அழகிரி அவரது அடிப்பொடிகள் என்ன செய்தாலும் அவர்களை காப்பாற்றுவதால் வந்தது! ஸ்டாலினின் இந்தக்குணம் அரசியல்வாதிகளால் வேணுமானால் குறைசொல்லப்படலாம்! ஆனால் சாமானியனாக பார்த்தால் பாராட்ட வேண்டிய குணம்! 

இவரது ஆதரவு இருந்துவிட்டால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு இது அந்த தைரியத்தை கொடுக்காது! ஆக மொத்தத்தில் தி .மு.க என்ற கட்சியில் முதல்வராகும் வாய்ப்பு உள்ளவர்களில் அரசியல் அனுபவத்திலும் முதிர்ச்சியிலும் மற்றும் நிர்வாகத்திறமையில் தன்னை நிரூபித்த வகையிலும் சரி, மு.க.ஸ்டாலின்தான் சிறந்தவாராக தெரிகிறார்! அந்த கட்சியில் இருந்து இவரைத்தவிர யார் வந்தாலும் அது தமிழ்நாட்டுக்கு சோதனை காலமாகத்தான் இருக்கும்!

இங்கு நான் செய்திருக்கும் ஒப்பீடு முழுக்கு முழுக்க என் அரசியல் அறிவுக்கு எட்டியவரையில் மட்டுமே செய்திருக்கிறேன்! ஏன் ஜெயலலிதாவே இருக்ககூடாது? அல்லது ஏன் கருணாநிதியே இருக்ககூடாது? என்று கேட்ப்பவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை! ஏனென்றால் நான் ஆரம்பத்திலே சொன்னதுபோல, இது அவர்கள் இருவரையும் தவிர்த்து முதல்வர் பதவிக்கு வாய்ப்பு உள்ளவர்களை பற்றிய ஒப்பீடு மட்டுமே! இதில் மாற்று கருத்து இருந்தால் சொல்லவும் மாறாக கருணாநிதி எதிர்ப்பை இந்த கட்டுரையோடு குழப்பி ஜல்லியடிக்க வேண்டாம்!

யார் சிறந்த அடுத்த முதல்வர்? - 1


தமிழகத்தை ஆண்ட, ஆளுகின்ற அல்லது ஆளத் துடிக்கின்ற ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு கால கட்டத்திலும் அதன் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி கொக்கி போல தொங்கி கொண்டே இருக்கும்! இது சில சமயம் எதிர் பார்த்தபடியும் பல சமயம் எதிர்பார்க்காதபடியும் நடப்பதுண்டு! இப்போது உள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் அடுத்த முதல்வராக ஆசைப்படுபவர்களில்,அதற்கு வாய்ப்பு இருப்பவர்களில் யார் கொஞ்சமாவது நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார் என்பதை கொஞ்சம் என் பார்வையில் பார்க்கிறேன்! நமது தமிழ்நாட்டில் தலைவர் என்பவர் வெறும் மக்கள் செல்வாக்கை மட்டுமே வைத்து முடிவு செய்யப்படுகிறார்! இது  கொஞ்சம் ஆபத்தானது!
தலைவர் மட்டுமே இங்கு  முதலமைச்சர் ஆக கூடிய  சூழ்நிலையில் அவர் நல்ல நிர்வாகியாகவும் இருப்பது அவசியமாகிறது! அந்த வகையில் யார் கொஞ்சம் நம்பிக்கை அளிப்பவராக  இருக்கிறார்  என்று என் அறிவுக்கு எட்டியவரையில் கொஞ்சம் அலசிப்பார்க்கிறேன்! இந்த கட்டுரையின் முடிவில் என்னை ரத்தத்தின்  ரத்தமாகவோ  அல்லது உடன் பிறப்பாகவோ பார்ப்பது  உங்கள் பார்வையில் உள்ளது! முதலில் இப்போது உள்ள முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதல்வர் எப்படி தலைவர்கள் ஆனார்கள் பற்றி கொஞ்சம் சுருக்கமாகப் பார்க்கலாம்!
ஆரம்ப காலத்தில் ஒரு நடிகையாக மட்டுமே தமிழர்களுக்கு அறிமுகமானவர் பின்னர் தலைவியாக மாறியது தமிழன் மட்டும் அல்ல, அவரே எதிர்பார்க்காததுதான்! அடுத்து என்ன என்று யோசிக்கும் முன்பாகவே  சாமர்த்தியமாக முடிவெடுத்து அ.தி.மு.க வில் தன்னை இணைத்துக்கொண்டார்! எம்.ஜி.ஆரின் புகழின் நிழலிலே அரசியல் செய்துகொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரிடமே அரசியல் செய்தது வரலாறு! ஆனாலும் தன்னை எம்.ஜி.ஆர் தவிர்க்க முடியாமல் பார்த்துக்கொண்டது இவரது திறமை! எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு இரண்டாகப் பிளந்த அ.தி.மு.கவை திறமையில்லாத எதிர்கூட்டத்தால் ஒன்றாக்கிக் கொண்டு அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்தார்!
இவர் அதிமுகவை கொண்டு மக்களிடம் சேர்த்ததை விட அ.தி.மு.கவின் இரட்டை இலை இவரை அதிகமாகவே மக்களிடம் சேர்த்தது! அதே நேரத்தில் ராஜீவின் மரணமும் சேர்ந்துகொள்ள சுலபமாகவே ஆட்சி அதிகாரத்தை ருசி பார்த்தவர்! ஆனாலும் கட்சியை விட்டு  எத்தனை பேர் போனாலும் இன்னும் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது இவரது திறமைதான்! இவர் சிறந்த நிர்வாகி என்றால் ஆம் என்று தைரியமாக சொல்லலாம்! ஆனால் அதை நல்ல வழியில் செயல்படுத்துகிறாரா என்று கேட்டால் யோசிக்க வேண்டி வரும்! நிர்வாகத்தை விட கருணாநிதியை பற்றியே அதிகம் கவலைப்படுவதால் இவரது நிர்வாகம் சிலசமயம் கடிவாளம் இல்லா குதிரை போல தறிகெட்டு ஓடுகிறது!

தி.மு.க தலைவர் கருணாநிதி! ஆரம்பகாலத்தில் தனது போராட்ட குணத்தால் தலைமையை ஈர்த்தவர்! தனக்கு சமமான தகுதியுடயவர்களையும் தனக்கு போட்டி என்று நினைக்க கூடியவர்களையும் சமயம் பார்த்து தட்டி வைத்து தலைவர் என்று தன்னைத்தானே அடையாளப்படுத்திக்கொண்டவர்! ஆனால் அதற்காக அவர் உழைத்த உழைப்புகளையும் தாங்கி கொண்ட சோதனைகளையும் புறந்தள்ள முடியாது! தனது எழுத்துக்களால் அந்தக்காலகட்ட இளைஞர்களையும் இந்தி எதிர்ப்பால் மாணவர்களையும் உசுப்பிவிட்டு அவர்களைக்கொண்டே கட்டி எழுப்பினார் தனக்கான தி.மு.கவை! இன்றுவரை தி.மு.கவில் எத்தனை கோஷ்டிகள் இருந்தாலும் தலைவர் பேச்சுக்கு மறு பேச்சில்லை எனபது கண்கூடு!
அவர்மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழக அரசியலை இவரை சுற்றியே ஓட வைப்பதுதான் இவரது சாதனை! இவர் சிறந்த நிர்வாகி என்றால் ஆம் என்று சொல்லலாம்! ஆனால் தனது ஒவ்வொரு அறிவிப்பிலும் தனக்கான வாக்குகளை உறுதிப்படுத்திக் கொள்வதில்தான் ஆர்வம் அதிகம் இருக்கும்! கடந்த ஆட்சியில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தை வளர விட்டு ஜெயலலிதாவை முதல்வராக்கியதில் இவர் பங்கு அதிகம்! தடி எடுத்தவன் எல்லாம் தன்டால்காரன் ஆகியது இவருக்கு நிர்வாகத்  திறமை இல்லையா அல்லது நிர்வாகமே இவர் கையில் இல்லையா என்ற சந்தேகத்தை வலுவாக்கி இவருக்கு ஓய்வு கொடுக்க வைத்தது!

இரண்டு பெரிய கட்சிகளை தவிர்த்து, அடுத்த முதல்வராக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் தே.மு.தி.க விஜயகாந்த்தை பார்ப்போம்! இவருக்கு ஆசை இருக்கும் அளவிற்கு அனுபவம் இல்லை! மக்கள் சேவைக்கு படிப்பு அவசியம் இல்லை என்று காமராஜரையும் எம்.ஜி.ஆரையும் உதாரணம் சொல்லிக்கொள்ளலாம்! ஆனால் அவர்கள் காலம் வேறு இப்பொழுது உள்ள சூழ்நிலை வேறு! கடந்த இரண்டு தேர்தல்களில் இவர் கொடுக்கும் வாக்குறுதிகளை பார்த்தால் இவரும் ஒரு அரசியல்வாதியாக ஆசைப்படுகிறாரே தவிர மாநிலத்தை நிர்வாகம் செய்ய ஆசைப்பட வில்லை!
இவரது ரசிகர்களையும் கட்சி உறுப்பினர்களையும் தாண்டி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த இவர் இன்னும் உழைக்க வேண்டும்! ஆனால் இவரும் சட்டமன்றம் போகமாட்டேன் என்று சொல்லி சேம் குட்டை சேம் மட்டை என்று நிரூபித்து கொண்டிருக்கிறார்! மக்கள் பிரச்சனையை மக்கள் மத்தியில் பேச எம்.எல்.ஏ பதவியும்  எதிர்கட்சி தலைவர் பதவியும் எதற்கு? மேலும் கட்சியை நிர்வாகம் செய்வது மட்டுமே மாநிலத்தை நிர்வாகம் செய்யும் தகுதியாகி விடாது! ஆகக்கூடி பார்த்தால் இன்னும் இரண்டு பொதுத்தேர்தல்கள் வரை வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கவேணா செய்யலாம்! முதல்வர் ஆவதற்கு இவர் இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும்! அதுதான் தமிழகத்திற்கும் நல்லது!

அடுத்து வை.கோ! இவர் நல்ல மனிதர்! இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் ஊழல் போன்ற கரும்புள்ளிகள் இல்லாதவர்! ஆனால் நல்ல மனிதர் எனபது மட்டும் சிறந்த நிர்வாகிக்குத் தகுதியாகிவிடாது! இவரது ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்தோமானால் எந்த  பிரச்சனையையும் ஆக்கப்பூர்வமாக  அணுகாமல் உணர்ச்சியின்  வேகத்திலே அனுகிக்கொண்டிருக்கிறார்! கூட்டணி மாறுவது அரசியலில் சகஜம் என்றாலும் எந்த தலைவரை எதிர்த்து ஆறு உயிர்களை தியாகம் செய்து புதிய கட்சி கண்டாரோ அவரிடமே போய் அண்ணே.. என்று கண்கலங்கி நின்றதை மக்கள் ரசிக்கவில்லை! அன்றைக்கு சரியத் துவங்கிய அவரது நம்பகத்தன்மையை இன்றுவரை அவரால் மீட்க முடியவில்லை!
மேலும் முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் போன்ற பிரச்சனைகளில்  மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதில் அந்தந்த பகுதி மக்களோடு மட்டுமே நின்றுவிடுகிறார்! தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனையான மின்சாரம், விலைவாசி போன்ற பிரச்சனைகளில் இவரது நிலைப்பாடு தெரியாமலே போகிறது! ஆக மொத்தம் இவர் முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்புகள் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது! ( கருணாநிதிக்கு பிறகான தி.மு,க. முடிவு செய்யும் என்று காத்திருக்கிறார் ) ஆனால் அப்படி இவர் முதலமைச்சர் ஆனாலும் தமிழகத்தில் பெரிய நிர்வாக மாற்றங்கள் எதுவும் ஏற்ப்பட்டுவிடாது என்பதே உண்மை!
அடுத்து 2016 ல் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்லித்திரியும் ப.ம.க வையும் காங்கிரசையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை! ஏனென்றால் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் ப.ம.கவும், தனக்கு இருப்பது பித்தம் என்றே தெரியாத நிலையில்தான் காங்கிரசும் இருக்கின்றன! இந்த பிரெண்ட், வெளிநாட்டு மாப்பிள்ளை கேரக்டர் எல்லாம் செய்ய ஆசைப்படாமல் ஒன்லி ஹீரோதான் என்பதுபோல இப்போது செந்தமிழன் ( நானெல்லாம் பச்சை தமிழன் ) சீமான் களம் இறங்கி உள்ளார்! அதுபோக சண்டை காட்சிகளில் குறுக்கும் நெடுக்குமாக சிதறி ஓடும் மக்கள் போல திருமாவளவன், சரத்குமார், கிருஷ்ணசாமி போன்றோரும் உள்ளனர்! இவங்களும் இல்லைனா போரடிக்கும்ல?
அ.தி.மு.க மற்றும் தி.மு.கவில் யாருக்கு எப்படி வாய்ப்புகள் இருக்கு என்பதைப்பற்றி அடுத்தபதிவில் பார்க்கலாம்! ( சஸ்பென்ஸ்க்காக இல்லை! உண்மைலே பதிவின் நீளம் கருதி மட்டுமே இந்த முடிவு! )

இரண்டாம் பாகம் படிக்க இங்கே சொடுக்கவும்!

கதை சொல்ல நேரம் இல்லை!


தினமும் இரவில் தூங்கப்போகும் முன்னர் கதை சொல்லச் சொல்லி அடம்பிடிக்கும் மகளிடம் தூக்கத்தை கெடுக்குறாளே என்று அந்த நேரத்தில் கோபம் வந்தாலும் அவளின் அம்மா அவங்களுக்கு தெரிந்த காக்கா கதையையும் குரங்கு கதையை மட்டும் வைத்து ஒப்பேத்தி கொண்டிருப்பதை பார்க்கும்போது கொஞ்ச நேரத்தில் தூக்கம் தொலைந்து விடும்! நம் பிள்ளைகளுக்கு எல்லாமே நிறைவாக கொடுக்கிறோம் என்றுதான் நாம் நம்மளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்! உண்மையில் நம் குழந்தைகளுக்கு தேவை நம் ஐ போனும் லேப் டாப்பும் அல்ல! அவர்கள் மனதுக்கு நெருக்கமான ஒரு உறவு! அவர்களை அப்படியே வேறு உலகத்துக்கு பெயர்த்து கொண்டு போகும் ஒரு கதை! ஆனால் இதையெல்லாம் நாம் கொடுக்க தவறுவதால்தான் அவர்கள் நம் ஐபோன் கேம்களையும் லேப்டாப் டாம் அண்ட் ஜெர்ரிகளையும் வேறு வழியில்லாமல் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்!

சிறுவயதில் எனக்கு கதை சொல்ல நிறையப் பேர் உண்டு. அதிலும் மாலை நேரம் ஆனால் என் அக்காக்கள், நான் இன்னும் பக்கத்து வீட்டு பிள்ளைகள் என வீட்டுத் திண்ணையில் சுற்றி அமர்ந்து என் ஆயா( அப்பாவின் அத்தை ) சொல்லும் கதைகளுக்காக ஆவலுடன் காத்திருப்போம்! அவர் கதை சொல்லும் அழகே தனி! தினமும் ஒரு கதைதான் என்று ஒரு கணக்கு அவரிடம். கதை முடிந்த பின்னும் இன்னும்ம் ஒரு கதை சொல்லச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருப்போம்! அதுபோதாது என்று அம்மாவுடன் தூங்கும் போது, எனக்கு மட்டும் தனிக்கதை உண்டு! அப்படி அம்மா எனக்கு அறிமுகப்படுத்தியதுதான் மனுநீதிச்சோழன், தென்னாலி ராமன், பீர்பால் எல்லோரும்! 

இப்போது நான் எழுதும் எழுத்தின் ஒவ்வொரு விதையும் அப்போது விதைக்கப்பட்டதுதான்! பள்ளிகளில் அப்போது சிறுசேமிப்பு என்ற திட்டம் உண்டு! நான் ஆறாவது படிக்கும்போதே அதில் உள்ள காசை வீட்டுக்கு தெரியாமல் எடுத்துத் தெனாலிராமன் கதைகள் புத்தகம் வாங்கினேன்! ஆனால் அதை ஒழிக்கத் தெரியாமல் வீட்டில் அடி வாங்கியது தனிக்கதை! ஆனால் கதைகளை படிக்கும் ஆர்வம் அப்போதே துவங்கியது எனலாம்! பள்ளி விட்டு வரும் வழியில் நூலகம் உண்டு! வார நாட்களில் தினமும் மாலை ஒருமணி நேரம் அங்குதான் பொழுது போகும்! அப்படி அங்கு அறிமுகமான புத்தகங்கள்தான் பூந்தளிர், கோகுலம் கதிர், அம்புலிமாமா போன்ற சிறுவர் புத்தகங்கள்! அதிலும் பூந்தளிர் புத்தகத்தை எடுக்க தினமும் பெரிய போட்டியே நடக்கும்! எனக்கு தெரிந்து தமிழில் முதலில் படித்த படக்கதைகள் அதில்தான்!

அதில்வந்த சில கேரக்டர்கள் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை! சுப்பாண்டியின் சாகசம், வேட்டைக்கார வேம்பு போன்றவை ரசிக்கவைத்த தொடர்கள்! நேற்று ஒரு திருமண விழாவில் முதல்வர் சொன்னதாக இரு குருவிகளின் கதை படித்தேன்! இதை எங்கேயோ படித்தது போல இருக்கிறதே என்று மூலையின் ஃபோல்டர்களில் தேடினால் எனக்கு கோகுலம் கதிர் அறிமுகமான போது அதில் படித்த முதல் படக்கதையே  இதுதான்! அதை நினைத்து சந்தோசப்படும் போதே சின்ன நெருடலும் வந்தது நம் பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்கள் நினைத்து பார்த்து சந்தோசப்பட என்ன வைத்திருக்கிறோம் என்று! யோசித்துப்பார்த்தால் ஒன்றுமே இல்லை!


அந்த காலத்தில் இன்னொரு மறக்கமுடியாத அறிமுகம் வாண்டுமாமா கதைகள்! இந்தவாரம் விகடனில் அவரது பேட்டி பார்த்தேன்! இதை நான் எழுதுவதற்கு தூண்டுதலே அவரது அந்தப் பேட்டிதான்! விகடனில் சொன்னதுபோல இரு தலைமுறைகளை தன் கதைகளால் கட்டிப்போட்டவர்! இன்றைக்கு ஹாரி பாட்டர் வாங்கி கொடுத்து அதை தன் பிள்ளைகள் படிப்பதை பெருமையாக பீத்தும் பெற்றோர்களை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது! அவர்களுக்கு அம்புலிமாமா, சந்தமாமா புத்தகங்களை பற்றி தெரியாது என்று நினைக்கிறேன்! இன்னும் அவைகள் வருகிறதா என்று தெரியவில்லை பழைய புத்தகங்கள் கிடைத்தாலும் பிள்ளைகளுக்காக தேடி வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்! நம் கோவத்தால், அடிகளால் புரியவைக்க முடியாத அன்பு, வீரம், விட்டுக்கொடுத்தல் போன்றவைகளை இந்தக் கதைகள் கண்டிப்பாக அவர்களுக்கு கொடுக்கும்! 

இப்போது உள்ள குழந்தைகளுக்கு கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்கும் தன்மையே இல்லாமல் வளருகின்றன. காரணம் நாம் வளர்ப்பு முறையில் அல்ல! வளரும் சூழ்நிலையில் உள்ளது!  இப்போது போல அப்போது டிவிக்களின் ஆதிக்கம் இல்லை. தெருவே ஒரு இடத்தில்தான் கூடி இருக்கும். பெரியவர்கள் எங்களைப்போன்ற சிறுவர்களை கூட்டி வைத்து இன்று அதன் பெயர்களை கூட மறந்துவிட்ட பல விளையாட்டுக்களை விளையாட சொல்லுவார்கள்! இரவு உணவு வரை இதுதான் வேலை! கொஞ்சம் வளர்ந்ததும் ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகள் என தனித் தனி விளையாட்டுகளில் பிரிந்துவிடுவோம்! ஆண்கள் திருடன் போலிஸ், ஐஸ் பாய், மரத்தில்  ஏறி விளையாடும் அணிலா உணிலா..இப்படி போகும்! பெண்களுக்கு தாயம், பல்லாங்குழி, சொட்டங்கி, நுன்னுதான் குச்சி இப்படி போகும்! இன்றைக்கு  இந்தப் பேர்களை கேட்டால் சிரிக்கும் குழந்தைகள்தான் அதிகம்! 

அன்றைக்கெல்லாம் தெருவெல்லாம் மண் வீதிகள்தான்! இன்று போல கான்க்ரீட் அல்ல! வீதி மணலில் விழுந்து புரண்டு தூறல் வரும்போது வரும் மண்வாசனையில்  மயங்கி அதை வாயில் வைத்துப்பார்த்து உதை வாங்கிய சம்பவங்களும் உண்டு! ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை முச்சந்தியில் (மூன்று வீதி சந்திக்கும் இடம் ) மண்ணெடுத்து திருஷ்டி கழிப்பார்கள்! இன்றைக்கு என் குழந்தைக்கு மண்ணெடுக்க மண் இல்லை! கபடியை போலவே அப்போது எங்கள் பக்கத்தில் பட்டை என்ற விளையாட்டு மிகவும் பேமஸ்! இதற்கு மணல் மிக முக்கியம்!  அதை விடிய விடிய விளையாண்ட காலமெல்லாம் உண்டு! இன்று எனக்கு கூட அதன் பேர் மட்டுமே ஞாபகம் உள்ளது எப்படி என்று மறந்துவிட்டது! இப்படி கால ஓட்டத்திலும் அவசர ஓட்டத்திலும் அடுத்த தலைமுறைக்கான இந்த சங்கிலித்தொடரை அறுத்துவிட்ட பெருமை என் தலைமுறைக்கு வந்துவிட்டது!

இப்படி என் ஞாபகச் சிதறல்களில் எழுதுவதற்கு எவ்வளவோ உள்ளது! ஆனால் அடுத்த தலைமுறைக்கு என்ன இருக்கும் என்று நினைத்துப்பார்த்தால் நம் மீது உள்ள வெறுப்புதான் முதலில் வரும் என்று நினைக்கிறேன்! என் தாத்தன் பாட்டியும் பெற்றோரும் எனக்கு கொடுத்த எவ்வளவோ விசயங்களை என் குழந்தைக்கு நான் கொடுக்க வில்லை! ஐந்து வயதில் பள்ளியை எட்டிப்பார்த்த நான் இன்று இரண்டு வயதில் மகளை லேர்னிங் ஆக்ட்டிவிட்டீசில் மூழ்கடித்துக்கொண்டிருக்கிறேன்! பிள்ளைகளை பிள்ளைகளாக பார்க்காமல் ஏதோ ரேசில் ஓடப்போகும் குதிரைகளாகவே தயார் செய்து கொண்டிருக்கிறேன்! தவறு என்று தெரிந்தாலும் வீண் ஜம்பமும் வறட்டு கௌரவமும் அதை விட்டுக்கொடுக்காது! குற்ற உணர்ச்சி வரும்போதெல்லாம் இப்படி ஒரு கட்டுரை எழுதிவிட்டுப் போகவேண்டியதுதான்!

துப்பாக்கி படத்தின் கதை முதன் முறையாக!


உலகமே ஆவலோடு எதிர்பார்த்துகிட்டு இருக்க படம் இளைய தளபதி நடிக்கும் துப்பாக்கி படத்தைதான்! துப்பாகியோட கதை என்ன? வழக்கமா விஜய் படத்துக்குக் கேக்க கூடாத கேள்விதான் இது! இருந்தாலும் படத்த ப்ரமோட் பண்ண டிவில ஷோ பண்ணும்போது எவனாவாது கிருத்துருவம் புடுச்ச பய மொதக்கேள்வியே இதான் கேப்பான்! அங்க சொல்றதுக்காவது ஏதாவது ஒன்னத் தேத்தி வைக்கணும்! அதுக்குதான் இந்த ஸ்டோரி டிஸ்கசன்! ஒட்டுக் கேக்காதிங்கன்னு சொன்னாலும் கேக்கவா போறீங்க? ஒரு ஓரமா நின்னு கதைய ஒட்டுக் கேட்டுட்டுப்  போங்க!
 
 
 
அஞ்சு பாட்டு நாலு சண்டைல ஒரு மணி நேரத்த ஓட்டிரலாம்! எப்பிடியும் ஒரு தங்கச்சி இருக்கும்! அந்தபுள்ளகூட செண்டிமெண்டா பேசுற சீன் நாலு வச்சு ஒரு அரை மணி நேரத்த ஓட்டிரலாம்! எப்பிடியோ பஸ்லயோ ட்ரைன்லையோ போய் பயபுள்ள தீவிரவாதிங்கள கொல்லத்தான் போகுது, அப்பிடி போகும்போது ஏதாவது ஒன்னு லவ் பண்ணாதா என்ன? ஹீரோயின் மேட்டர் ஓவர்! இந்த வில்லனுக்கு என்ன பண்ணலாம்? இந்த முறை வித்தியாசமா வில்லன வெளிநாட்ல வச்சிரலாம்! பின்ன எத்தன படத்துலதான் பஸ்ல ட்ரைன்ல போயே ரவுடிங்கள கொல்றது? இந்தவாட்டி ப்ளைட்ல போகட்டும்!
 
ஓப்பனிங் சீன்.. கிரேன் ஷாட்லகாமிக்கிறோம்! அமெரிக்க மக்கள் எல்லோரும் அங்கயும் இங்கயும் சிதறி ஓடிகிட்டு இருக்காங்க! நயாகரா நீர்வீழ்ச்சில(இந்த இடத்துல யாரும் நயன்தாரா நீர்வீழ்ச்சின்னு தப்பா படிக்காதிங்க!) இருந்து பயங்கர வெள்ளம் ஊருக்குள்ள வருது! ஒருபக்கம் தண்ணி ஃபோர்சா வர்ரத காமிக்கிறோம்.. அந்தப்பக்கம் கட் பண்ணி மக்கள் சிதறி ஓடரத காமிக்கிறோம்!
 
ஒரு கட்டத்துல மக்கள் ஒண்ணுமே செய்ய முடியாம ஒரு இடத்துல கூடி... கடவுளே எங்கள காப்பாத்த யாருமே இல்லையான்னு கத்துறாங்க! அப்பத்தான் மேல ஒரு ஏர்இந்தியா ப்ளைட் பறக்குறத காமிக்கிறோம்! அப்பிடியே ஜூம் பண்ணி ஜன்னல் வழியா கேமராவ கொண்டு போறோம்! அதுல ஜன்னல் ஓரமா விஜய் தூங்கிகிட்டு இருக்காரு! மக்களோட குரல் அவரோட காதுக்குள்ள போற மாதிரி பண்றோம்! இதை சி.ஜி.ல பார்த்துக்கலாம்!
 
மக்களோட குரல் உள்ள போனதும் விஜய் டபக்குன்னு முழிக்கிறாரு! எட்டிப்பார்த்தா ஒரே வெள்ளம்! விஜய் உடனே யோசிக்காம எந்திரிச்சு பைலட் ரூமுக்கு ஓடறாரு! இவரு அங்க போவாருன்னு தெரிஞ்சி பைலட் ரூம் திறந்தே இருக்கனும் அது ரொம்ப முக்கியம்! விஜய் வேகமா அங்க போய் பைலட்கிட்ட ஒரு கட்டிங் பிளேர் கடன் வாங்கி ப்ளைட் அடில கட் பண்ணி அப்பிடியே குதிக்கிறாரு!(இங்க கட்டிங் பிளேர் வச்சு கட் பண்ணும்போது பேக் ரவுண்ட் ஸ்கோர் ரொம்ப முக்கியம்! நாலு பேர விட்டு...துப்பு..துப்பு..துப்பாக்கி..துப்பு..துப்பு..துப்பாக்கின்னு  கத்த  விடனும்! )  இதை அப்பிடியே ஸ்லோ மோசன்ல காமிக்கிறோம்! ப்ளைட்ல எல்லோரும் அதிர்ச்சியாகி எட்டிப்பார்க்குறாங்க! அதுல அமெரிக்காவுக்கு படிக்க வர்ற காஜல் அகர்வாலும் பார்க்குறாங்க! அதுலே அவங்களுக்கு லவ் வர்றத ஃபேஸ் ரியாக்சன்ல காமிக்கிறோம்!  
 
அந்தபக்கம் மக்கள் உயிர் பயத்துல பிராத்தனை பண்ணிகிட்டே இருக்காங்க! திடீர்னு பார்த்தா வெள்ளம் வர்றது நின்னு போகுது! மக்கள் எல்லோரும் அப்பிடியே அதிர்ச்சியாகி சந்தோசத்துல கடவுளுக்கு நன்றி சொல்றாங்க! என்ன நடந்ததுன்னு பார்க்க அப்பிடியே அருவிக்கரை ஓரமா போறாங்க... அங்க பார்த்தா... பார்த்த மக்கள் எல்லோரும் அப்பிடியே கீழ விழுந்து கும்புட்றாங்க! ஏன்னா விஜய் நயாகரா நீர்வீழ்ச்சி குறுக்கால படுத்துகிட்டு வெள்ளத்த தடுத்து வச்சிருக்காரு! இதை அப்பிடியே ரெண்டு கிரேன் வச்சு, ஒரு ஹெலிகாப்டர்ல கேமரா வச்சு ஜூம் பண்ணிப் பண்ணி காமிக்கிறோம்! எப்பிடி? உலகத்துல எவனுமே யோசிச்சே பார்க்காத ஒரு ஓப்பனிங் சீன்? அப்பிடியே எந்திரிச்சு வந்து ஒரு ஓப்பனிங் சாங்!
 
சாங் முடிஞ்சதும் சம்ப்ரதாயமா சண்டை வரணும்! அதுக்குதான் என்ன பண்றோம், சாங் முடிஞ்சதுமே ஹெலிகாப்டர்ல வில்லன் வந்து இறங்குறாரு! ஏன்னா நயாகரா தண்ணில அவரு மினரல் வாட்டர் பேக்டரி வச்சிருக்காரு! அத தடுத்து நிறுத்தவும் கோவம் வந்து விஜய்ய கொல்றதுக்காக வர்றாரு! இறங்கி வந்த வில்லன் ஒவ்வொருத்தனையா புடிச்சு இங்க யார்ரா துப்பாக்கி? இங்க யார்ர துப்பாக்கின்னு கேட்டுகிட்டே வர்றாரு! அதுவரைக்கும் விஜய் அவரப் பார்க்காம திரும்பிநின்னு  ஒத்தக்காலால இன்னொரு காலச் சொறிஞ்சிகிட்டே நிக்கிறாரு! கரெக்ட்டா விஜய்ய புடிச்சு திருப்புறாரு வில்லன்! வில்லன பார்த்த விஜய் அதிர்ச்சியாகி நிக்கிறாரு! இங்கதான் வைக்கிறோம் ட்விஸ்ட்! பிளாஸ்பேக்....!
 
 
 
 
கிராமத்துல ஆத்து தண்ணிய மறிச்சு மினரல் வாட்டர் பேக்டரி கட்டி ஊரையே ஏமாத்துற வில்லன் அமெரிக்காவுல இருக்கான்னு தெரிஞ்சு, அவனைக் கொல்றதுக்கு ஊர்ல எல்லோரும் காசு வசூல் பண்ணி விஜய்ய அமெரிக்கா அனுப்புறாங்க! வரும்போது தங்கசிகிட்ட போயி "கண்டிப்பா நீ வயசுக்கு வர்றதுக்குள்ள திரும்பி வந்துருவேன், நீ வயசுக்கு வந்ததும் இந்த ஆத்து தண்ணிலதான் உனக்கு சடங்கு செய்வேன் இந்த அண்ணன், இது சத்தியம்!" அப்பிடின்னு சொல்லும்போது பேக்ரவுண்ட்ல பேரரசு  வாய்ஸ்ல ஒரு சோக பிட் சாங் போடறோம்!
 
அப்பிடியே அழுதுட்டு இந்தப்பக்கம் திரும்புனா முறைப்பெண் அமலாபால்! " நீங்க தகிரியமா போங்க மாமா, ஊர சுத்தி  வேட்டையாடுன அய்யனாரு இப்ப உலகத்தச் சுத்தி வேட்டையாட போகுது!(ங்கொய்யால..ப்ரடியூசர் காசுதானே?) நீங்க வர்ற வரைக்கும் நான் காத்துகிட்டு இருப்பேன்! என்ன.. உங்க அப்பாவ மட்டும் என் பக்கத்துல வரக்கூடாதுன்னு சொல்லிருங்க! அப்பறம் நான் உத்தரவாதம் இல்லை" னு சொல்லுது! " நீ கவலைப்படாத புள்ள.. நான் போயிட்டு ரெண்டு சண்ட போட்டு சீக்கிரம் அவனக் கொன்னுட்டு வந்தர்றேன், இடைல யாரோடயாது ரெண்டே ரெண்டு சாங் மட்டும் பாடிக்கிறேன் கண்டுக்காதன்னு சொல்லிகிட்டே எல்லோருக்கும் டாட்டாக் காட்டி கிளம்புராறு!
 
ப்ளைட்ல ஏறுன பிறகுதான் ஞாபகம் வருது வில்லனோட அட்ரஸ் எழுதின அவனோட போட்டோவ மறந்துட்டு வந்தது! ஐயோன்னு நினைக்கும்போதே ப்ளைட் அவரு ஊர கிராஸ் பண்ணுது! அப்ப எட்டி ஜன்னல் வழியா பார்க்குறாரு!
 
கீழ வயல்ல தங்கச்சி அண்ணேன்னு...கத்திகிட்டே ஓடி வருது! அதோட கைல அந்த போட்டோ! அப்பிடியே அந்த போட்டோவ தூக்கி வீசுது! அது அப்பிடியே பறந்து... பறந்து... வர்ரத ஸ்லோ மோசன்ல காமிக்கிறோம்! அது அப்பிடியே பறந்து வந்து விஜய் இருக்க ஜன்னலுக்கு நேர வந்து ஒட்டிக்குது! அத பார்த்த விஜய் அத எடுக்க முடியாம யோசிக்கிறாரு, உடனே மொபைல் போன எடுத்து அந்த வில்லன போட்டோ எடுத்துக்கிராறு!
 
கட் பண்ணி கிராமத்துக்கு கொண்டு போறோம்! போட்டோவ தூக்கி போட்டுட்டு நிக்கிற தங்கச்சிகிட்ட அப்பா ஓடியாந்து " எப்பிடிம்மா அந்த ப்ளைட்லதான் உன் அண்ணன் போறான்னு கண்டுபிடிச்சன்னு கேக்குறாரு!  " என் அண்ணனோட வாசம் எனக்கு தெரியாதாப்பானு" சொல்லிகிட்டே கண்ணு கலங்குது தங்கச்சி! இங்க ஒரு சோக பிட் பேரரசு  வாய்ஸ்ல போடறோம்!
 
 
 
 
இப்ப கட் பண்ணி அமெரிக்கா! இந்த ரெண்டு பாரா பிளாஸ்பேக்க விஜய் நினைச்சுப் பார்த்து முடிக்கிற வரைக்கும் வில்லன் அவரு சட்டைய புடிச்ச படியே நிக்கிறாரு! யார கொல்லணும்னு இங்க வந்தாரோ அவருதான் அந்த வில்லன்! வில்லன மட்டும் விட்டுட்டு அடியாள பூராம் அடிச்சி போடறாரு விஜய்! ஏன்னா வில்லன்கிட்ட சவால் விடனும்ல?
 
சொன்னமாதிரியே சவாலும் விடறாரு! உன் செல்வாக்கு சாம்ராஜ்யம் எல்லாத்தையும் அழிச்சி நடு தெருவுல நிக்க வச்சு கொல்றேன்னு! சொல்லிட்டு அப்பிடியே  ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு டீ குடிக்க போறாரு! அங்க பார்த்தா காஜல் அகர்வால் வந்துருக்காங்க! விஜய்ய அவங்க ரூமுக்கு கூட்டி போறாங்க! அப்பவே ஒரு ட்ரீம் சாங் காஜல் பாடறாங்க! பாட்டு முடிஞ்சதுமே காஜல் அவங்க காதல விஜய்கிட்ட சொல்றாங்க! விஜய் கொஞ்சம் யோசிச்சிட்டு.. " நான் இப்பவே என் முறை பொண்ணத்தான் கட்டிக்கிவேன்னு சொன்னா ஒரு குத்து சாங் போட முடியாது! வெயிட் பண்ணு சாங் முடிஞ்சதும் சொல்றேன்னு சொல்லிட்டு தூங்க போறாரு!
 
நைட்டு திடீர்னு சத்தம் கேட்டு முழிச்சா.. வில்லனோட ஆட்கள் கதவ உடச்சிகிட்டு இருக்காங்க! இதைபார்த்த காஜல் ஓடிப்போய் விஜய்ய கட்டிக்கிறாங்க! இந்த இடத்துல குத்து பாட்டு பாடுவாம்னு யோசிக்கிற விஜய் வில்லன்கள பார்த்து மனசு மாறி பின்பக்கமா காஜல இழுத்துகிட்டு ஓடறாரு! ஓடும்போதே காஜல ஒரு இடத்துல ஒளிஞ்சிக்க சொல்லிட்டு விஜய் மட்டும் ஓடறாரு! வில்லனோட ஆட்கள் துரத்துறாங்க! இதை மாத்தி மாத்தி காமிக்கிறோம்! விஜய் திடீர்னு ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ள ஓடி டாய்லெட்ல உள்ள போய் ஒளியிராறு!
 
அவர துரத்தி வந்த வில்லனோட ஆட்கள் எல்லா இடத்துலயும் தேடி கடைசியா டாய்லெட் உள்ள வர்றாங்க! அங்க பார்த்தா ஏகப்பட்ட டோர்ஸ் இருக்கு! கதவ திறக்கவும் முடியாம போகவும் முடியாம சுத்தி சுத்தி வர்றப்ப.. ஒருத்தன் மட்டும் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சான்! எல்லோரும் அங்க போய் ஏன்டா சிரிச்சன்னு கேக்குறாங்க, அதுக்கு அவன் ஒரு டாய்லெட் டோர பார்த்து கை காமிக்கிறான்! அங்க பார்த்தா " இந்த டாய்லெட்டில் ஒளிந்து கொண்டிருப்பது உங்கள் விஜய்" அப்பிடின்னு ஒரு சிலேடு! பழக்க தோசத்துல எஸ்.எ.சி. போட்டு போயிட்டாரு! 
 
ஒருவழியா விஜய்ய அடிச்சி வில்லன்கிட்ட கூட்டிட்டு போறாங்க! உள்ள போகும்போதே வில்லன் சைடுல ரெண்டு வெள்ளைக்கார ஜிகுடிய வச்சிக்கிட்டு முமைத்கானோட  ஐட்டம்  சாங்க பார்த்துகிட்டு இருக்காரு! விஜய்யும் வலியோட ஆடறாரு! பாட்டு முடிஞ்சதும் வில்லன் விஜய்ய பார்த்து "பார்த்தியா எப்பிடி தூக்கிட்டு வந்தேன்னு?" ன்னு சொல்றான்! உடனே விஜய் இடுப்புல கை வச்சிக்கிட்டு சத்தமா சிரிக்கிறாரு! வில்லன் புரியாம பார்க்கும்போது
 
"என்னது? தூக்கிட்டு வந்தியா? போட்டோவுக்கு பின்பக்கம் அட்ரஸ் இருந்ததால அத பார்க்கமுடியல.. அதான் உன் வழில உன் அட்ரச கண்டுபிடிச்சு வந்தேன்னு சொல்லி அடிக்க ஆரம்பிக்கிறாரு! எல்லோரையும் அடிச்சி முடிச்சு ஃபேக்டரிய தீ வச்சு கொளுத்தி வில்லன கொல்லும் போது கட் பண்ணி கிராமத்த காமிக்கிறோம்! அங்க தங்கச்சி வயசுக்கு வந்துருது! கட் பண்ணி திரும்ப அமெரிக்கா! காஜல் போலிசோட வர்றாங்க! போலிஸ் விஜய்க்கு தேங்க்ஸ் சொல்லி FBI ல சேர சொல்றாங்க! ஆனா தாய் நாட்டுக்குத்தான் என் சேவைன்னு சொல்லிட்டு வர்றாரு.அத அப்பிடியே ஃபரீஸ் பண்ணி காட்றோம்!
 
வெளில வந்து காஜல்கிட்ட நீயும் என் கூட ஊருக்கு வா பிளைட்ல போகும்போது ஒரு குத்துப்பாட்டு போட்டுட்டு ஊர்ல வந்து நீயே நேர்ல பாருன்னு சொல்லி கூட்டி வர்றாரு! சொன்னமாதிரியே ஒரு குத்துப்பாட்டு முடிச்சிட்டு ட்ரைன்ல வந்து ஊர்ல இறங்குறாங்க! ஊரே கூடி நின்னு வரவேற்பு கொடுக்குது! இங்கயும் பேக்டரி மூடுனதால தண்ணி ஊருக்குள்ள வருது! அதுலே தங்கச்சிக்கு சடங்கு பண்ணும்போது எல்லோரும் சந்தோசமா இருக்காங்க! அமலாபால் ஓடியாந்து மாமான்னு கட்டிக்குது! அதைப்பார்த்த காஜல் அப்பிடியே ஓரமா போய் கண்ணீரத் துடைச்சிகிட்டு சிரிச்சிகிட்டே வந்து வாழ்த்துறாங்க! படத்தையும் முடிக்கிறோம்!
 
ஆமா.. விஜய்க்கு ஏன் துப்பாக்கின்னு பேர்னு கேக்க கூடாது! நீங்க அவர நடிகன்னு சொல்லும்போது நாங்க காரணம் கேட்டமா? அது மாதிரித்தான் இதுவும்!
 

மஜீத்!

2011 
வெளியே மழ இப்பத்தான் விட்டுருந்துச்சு.மழ விட்டுட்டுப் போன  குளிர்சில  இந்த உச்சி மத்தியானம் கூட குளுகுளுன்னு இருக்கு.மழ விட்ட தைரியத்துல ஈஸி சேர போர்டிகோல கொண்டாந்து போட்டுச் சாஞ்சிகிட்டு அந்த சிலுசிலுப்ப மேல்ல வாங்கிகிட்டேன். எப்படா மழ விடும்னு காத்துகிட்டு இருந்தமாதிரி வாசல்ல ரெண்டு சிட்டுகுருவி ங்க வந்து கீச்சு கீச்சுன்னு என்னமோ பேசிகிட்டு என்   கண்ணுக்கு தெரியாத அதோட இரையக் கொத்திகிட்டு இருந்துச்சுங்க.

அப்பப் பார்த்து இந்த பக்கத்து வீட்டு வாண்டு ஒரு வெடி   வச்சி  வெடிச்சதும் அதுங்க ரெண்டும் ஏதோ இந்த உலகம் அழியப் போகுதுங்கற மாதிரி அவசரமா பறந்து போயிருச்சுங்க . அவனச் சொல்லியும் குத்தம் இல்லைநாளைக்கு தீவாளி! வெடி வைக்கிற கொஞ்ச நஞ்ச சந்தோஷத்தையும் இந்த மழ வந்து ஊத்திக் கெடுக்குது! அதான் மழ விட்டதுமே வெடிய தூக்கிட்டு வந்துட்டான்.
எனக்கு ஏதோ ஒரு காப்பித்தண்ணி  குடிச்சா நல்லாருக்கும்  போலத் தோணுச்சு. " சாந்தா.. கொஞ்சம் காப்பித்தண்ணி போட்டு கொண்டு வர்றியா?" இங்க இருந்தே கொரல் கொடுத்தேன். " க்கும்.. சாப்ட போற நேரத்துல என்ன காப்பித்தண்ணி வேண்டிக் கிடக்கு?" ன்னு பதில் வந்துச்சு. இருந்தாலும் காப்பித்தண்ணி வரும்னு தெரியும். மழ  விட்டதுமே வீதில குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்ட திரிஞ்ச ஆடு மாடுகள வேடிக்க பார்த்துகிட்டு இருக்கும்போதே சாந்தா காப்பித்தண்ணியோடயோட வந்தா.

இந்தாங்கன்னு அத என் கைல கொடுத்துட்டு " ஏங்க, நாளைக்கு தீவாளி, மூத்தவகிட்டையும் மாப்ளகிட்டையும் நான் நேத்து பேசும்போது தீவாளிக்கு வரச்  சொல்லிட்டேன், இந்த சுமதிக்கும் மீனாவுக்கும் நீங்க ஒரு எட்டு போன் பண்ணி பேசிருங்க. குழந்தைகள கூட்டிக்கிட்டு சீக்கிரமே வரச் சொல்லுங்க.அப்பறம் மஜீத் அண்ணன் வீட்டுக்கு போன் பண்ணிருங்க.  நம்ம தம்பியும்  சிங்கபூர்ல இருந்து இந்த வருஷம் தீவாளிக்கு வரலைன்னு சொல்லிட்டான் பொங்கலுக்கு வந்துக்குறானாம். லீவு பிரச்னை இல்லையாம். கடைசில முடிவு செஞ்சதால டிக்கெட் வெலதான் கூட இருக்காம்." ன்னு மூச்சுவிடாம அடுக்கிக்கிட்டு இருக்கும் போதே போன் வந்து அவ பேச்ச பாதிலே கலச்சிடுச்சு.

வேகமா உள்ள போயி போன எடுத்து காதுக்கு வச்சவ "எப்ப?" "எப்பிடி?"ன்னு கேட்டுகிட்டே அதிர்ச்சியாயி உக்காந்துட்டா. "என்னடி? என்ன?"  நானும் பதறிக்கிட்டே எந்திருச்சுப்போய் போன எடுத்துக் காதுல வச்சுப்பார்தேன். அந்தப்பக்கம் ஒரு சத்தமும் இல்ல. அவகிட்டே கேட்டேன் " என்னாச்சுடி?"  முட்டிக்கிட்டு வந்த கண்ணீரோட அவ சொன்னா "ஏங்க..நாம ஒருத்தலப் பத்தி பேசும்போது அவங்க வந்தா அவங்களுக்கு ஆயுசு நூறுன்னு சொல்லுவோம்ல, ஆனா இப்பதான் மஜீத் அண்ணனப் பத்தி பேசினேன். ஆனா அவரோட ஆயுசே முடிஞ்சிருசாங்கன்னு சொல்லி வாய் விட்டு கதறிட்டா.

எனக்கு ஏதோ கீழ நிக்கிற தரையே நழுவுற மாதிரி இருந்துச்சு. "எப்பிடி ஆனுச்சாம்?  அப்துல்லா மாப்ள சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்பறம் வீட்ல சும்மாதானே இருந்தான்? தக்கிரதுகூட இல்லையே?" ன்னு கேட்டேன். அவளும் அழுதுகிட்டே சொன்னா " வீட்லதான் இருந்தாராம், திடீர்னு  நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாராம், ஏதோ ஆர்ட்டு அட்டாக்காம், ஆஸ்பெட்டலுக்கு தூக்குரதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சாம், அனேகமா இன்னக்கி   சாயங்காலத்துக்குள்ள எடுத்துருவாங்கலாம்" ன்னா.

எனக்குஒண்ணுமே பேசத் தோணல. நெஞ்சுல கை வச்சபடியே ஈசிச் சேர்ல சாஞ்சி உக்காந்துட்டேன்.கொஞ்ச நேரம் முன்னாடி தெரிஞ்ச சிலுசிலுப்பு இப்ப இல்ல.அந்தப்பக்கம் சாந்தா அழுதுகிட்டே இருந்தா.  ஒடனே கெளம்பணும்னு  கூடத் தோணாம  கைத்தடிய கீழ போட்ட  குருடன் மாதிரியே உக்காந்துட்டேன். எனக்கும் மஜீத்துக்குமான சிநேகத்துல  நெனச்சிப்பார்க்க எவ்வளவோ இருந்தாலும் நுப்பது வருசத்துக்கு முன்னாடி இதேதீவாளிக்கு மொதநாள்  நான் இருந்த நெலம  கண்னு  முன்னாடி வந்துச்சு!
1980  
வேல முடிஞ்சு கசகசப்போட வெளிய வந்து என் சைக்கிள் நிப்பாட்டியிருக்குற இடத்துப் பக்கமா போனேன். ஏதோ நான் வேலை பார்க்குற  மெசினு  சுச்சத் தட்டுனா ஓடற மாதிரித்தான் நானும் போனேன், ஒனர்ச்சியே  இல்லாம!  நாளைக்குத் தீவாளி! கூட வேல பாக்குறவங்க  எல்லாரும்  வேக வேகமா வெளிய போய்கிட்டு இருந்தாங்க.       என்னச் சுத்தி  எல்லாருமே சந்தோசமா இருக்க மாதிரியே இருக்கு!

ஆனா எனக்கு மட்டும் சந்தோசம்னா அர்த்தம்  என்னன்னு இன்னும் சரியாகூட வெளங்கல.இருந்தாலும்.. என்னமோ நேத்து என் எட்டு வயசு  மூத்த மக ஆசையாக்   கேட்டதுதான்  மனசுக்குள்ளப் போட்டு   கொமஞ்சிகிட்டே இருக்கு! மெதுவா சைக்கில எடுத்துகிட்டு நேத்து நடந்தத அச போட்டுகிட்டே  வந்தேன். தெனமும் வர இருவது போக இருவது.. நாப்பது கிலோ  மீட்டர்  சைக்கில் அழுத்துற எனக்கு  இந்த  மாதிரி  அசபோட  பல சம்பவங்கள் இருக்கும்!

சொற்ப சம்பளத்துல ஒரு அச்சாபிசில வேலை.அதுகூட என் ஊர்ல இருந்து இருவது கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம்! எனக்கு வெவசாயத்தத்   தவிர வேற வேல தெரியாது, எங்க பரம்பர  நெலமும் அப்பாவோட பொறந்த அண்ணந் தம்பிங்க பாகம் பிரிச்சது போக பணக்காரங்களின்  மனசு மாரி ரொம்ப சுருங்கிப்போச்சு. 

முப்போகம் அதுல    பார்த்தாக் கூட சாப்பாட்டுக்கே பத்தாது. ஆனா எங்க ஊரு ஒரு போகத்துக்கே வானம் பார்த்த பூமி! என் சம்பளத்துல  என் முழுக் குடும்பமும் மூணு வேள வயித்தக் கழுவுறதே பெரிய பாடு, இதுல  என் மகளோட ஆசய நான் எங்க இருந்து நெறவேத்துறது? என் காலு  மட்டுந்தான்  பெடலை மிதிச்சிக்கிட்டு இருந்துச்சு, மனசு என்னமோ அவ ஆசயிலே ப்ரேக்  புடிச்சி நின்னுக்கிச்சு.

" அப்பா.. நாளைக்கு அப்பறம் தீபாவளிதானே?" இது மக
"ஆமாண்டா... " சைக்கிள துடைச்சிகிட்டே நான்.
"லட்சுமிக்கு அவங்க அப்பா பட்டுப் பாவாட சட்ட  எடுத்து கொடுத்துருக்காங்க.. வெடியெல்லாம் கூட வாங்கிட்டாங்கப்பா" கண்ணு ரெண்டையும் விரிச்சிகிட்டே சொன்னா,
"சரிடா.. உனக்கும் தங்கச்சிங்களுக்கும் அப்பா நாளைக்கு கவுன் எடுத்து தர்றேன்" ன்னு சொன்னேன்.
"போப்பா..கவுனெல்லாம் வேணாம், எனக்கு பட்டுப் பாவாடசட்டதான் வேணும்" ன்னு சொல்லி கண்ணக் கசக்க ஆரம்பிச்சா..

"சரிடா, அப்பா எடுத்து தர்றேன்னு சொல்லி அப்ப அவள சமாளிச்சிட்டேன். ஆனாலும் எப்பிடின்னுதான் இன்னும் எனக்கு வெளங்கல. முதலாளி கொடுத்த  கொஞ்சோண்டு போனஸ்ல பெரியவ இவளுக்கு, இவளுக்கு இளையவ ரெண்டு பேரு, கடைசியா மகன் வேணும்னு தவம் இருந்து பத்து மாசத்துக்குமுன்னாடி பொறந்த மகன், பொண்டாட்டி வேற பச்ச உடம்புக்காரி! இப்டி எல்லாருக்கும் சாதா துணி எடுக்கவே துண்டு விழுகும் போல? இதுல நாளைக்கு தீவாளிக்கு கவிச்சி ஏதாவது எடுக்கணும். பொண்டாட்டி  வேற காலைல எண்ணெப் பலாரம் செய்யணும்னு சொல்லுவா, பட்டு பாவாடை எடுக்கணும்னா இது எல்லாத்தையும் தியாகம் பண்ணனும். ஆனா சின்ன புள்ளைங்க இருக்க வீட்ல அதுவும் முடியாது. இப்பிடி கண்டமேனிக்கு யோசிச்சிகிட்டே சைக்கிளை சந்தப்பேட்ட மஜீத்து கட முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்னேன்.

மஜீத்து எப்பிடின்னு தெரியாமலே எனக்கு கூட்டாளியானவன். நான் சின்ன வயசுல இதே காரக்குடி சந்தப்பேட்டயில என் அத்த  வீட்டில வளர்ந்தவந்தான். ஏன்னு கேக்காதிங்க, அது ஒரு பெரிய கத.  சுளுவா சொல்லனும்னா அப்பா ரெண்டாம் தாரம் கட்டிக்கிட்டாரு, அதுக்கு பொறவு அங்க எனக்கு யாரும் ஆதரவு இல்லாம நின்னப்ப  மவராசி என் அத்ததான் நான் இருக்கேன்னு சொல்லி கையோட என்ன கூட்டிகிட்டு  வந்து சோறு போட்டுவளத்தா.

மஜீத்து பக்கத்துல செஞ்சதான், அவன் படிக்காம ஊரச் சுத்திட்டு, ஒரு டெய்லர்கிட்ட  வேலக்குச் சேந்து  தொழிலக்  கத்துகிட்டு இன்னைக்கு இதே சந்தப்பேட்டயில ஒரு கட பாத்து உக்காந்துட்டான்.  நானும்தான்! எட்டாப்போட படிப்ப நிப்பாட்டிட்டு அத்த வீட்ல ஆடு மாடுகள மேச்சிகிட்டு வெவசாயம் பாத்துகிட்டு  கால ஓட்டத்துல கல்யாணமும் செஞ்சு, குடும்பக் கொழப்பங்களால  என் சொந்தக் கிராமத்துக்குப் பொலம் பெயந்துட்டேன்.

ஆனா விதி என் வேல ரூபத்துல வந்து இதே சந்தப்பேட்டைய  கிராசுப் பண்ணிப் போற மாரியே வச்சிருச்சு. சைக்கில நிப்பாட்டி  ஸ்டேண்டு போட்டுட்டு  வெளிய  போட்ருந்த மரப்பெஞ்சுல உக்காந்தேன். என்ன நிமிந்து ஒரு பார்வ பாத்துட்டு அங்க வேல பாக்குற  வேலக்காரப் பையனையும் ஒரு பார்வ பாத்துட்டு வேலயில மும்மரமானான் மஜீத்து.  தீவாளிக்கு  மொத நாளுங்கறதால தக்க வேண்டிய  துணி எல்லாம் நெறய குமிஞ்சி  கிடந்துச்சு. அந்தப்பையன மஜீத்து பாத்தது டீ வாங்கிட்டு வரத்தான்னு  அந்தப் பையனுக்கும் தெரியும். அவனும் ஒரு  தூக்குச்  சட்டிய தூக்கிட்டுக் கிளம்பிட்டான்.

டீ வர்றவரைக்கும் அவன் எதுவும் பேசல, நானும் எதுவும் பேசாம மோட்டுவாயப் பார்த்துகிட்டு உக்காந்திருந்தேன். அந்த பையனும் வந்து டீய சின்ன லோட்டாவுல ஊத்திக் கொடுத்தான். ஒரு டீய நாலா  ஊத்திக் கொடுக்குற வித்ததான் இந்தமாரி கடகள்ல வேலபாக்க மொதத் தகுதியே. இந்தப்பையனும் அதுல நல்லாவே தேறிட்டான்னு டீய பாத்ததுமே தெரிஞ்சிச்சு. சிரிச்சிக்கிட்டே டீயக் குடிச்சேன். ஆனா.. என்  மனசுக்குள்ள ஓடுன கவலை ரேக மஜீத்துக்கு எப்பிடி தெரிஞ்சிச்சின்னு  தெர்ல. " என்னடா ஒரு மாதிரியா இருக்க? எதும் பிரச்சனையா?" ன்னு கரெக்கெட்டா கேட்டான். "அதெல்லாம் ஒன்னுமில்லைடா"ன்னு சொல்லி மழுப்பப் பாத்தேன்.

தச்சிகிட்டு இருந்த துணியெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு எங்கிட்ட வந்து உக்காந்தான். "சும்மா மழுப்பாத, எதயோ நெனச்சு மருகிக்கிட்டு இருக்க நீ, எங்கிட்டே சொல்றதுக்கு என்ன?" ன்னு கேட்டுகிட்டே தோளுமேல கைய வச்சான். அதுக்குமேல என்னால சொல்லாம இருக்க முடியல " என்னடா சொல்றது?  உன் மூத்த மருமகளுக்கு நாளக்குப் போட்டுக்க   பட்டுப்பாவாட சட்ட வேனுமாண்டா, நான் எங்கடா போவேன்?" ன்னு சொல்லும்போதே ஒடஞ்சிட்டேன்.தோள்ல இருந்து கைய எடுத்தவன்..கொஞ்ச நேரம் அப்டியே அமதியா இருந்தான். அப்பறம் என்னப் பாத்து " சரி.. நீ கல்லுக்கட்டிக்கு போயி தங்கச்சிக்கு, மத்த ரெண்டு மருமகளுகளுக்கும், மருமவனுக்கு வாங்க வேண்டியத வாங்கிட்டு வா, மூத்த மருமகளுக்கு ஒன்னும் வாங்க வேணாம், மொதல்ல நீ கல்லுக்கட்டி கெளம்பு" ன்னு சொன்னான்.

நானும் அப்ப எதுவுமே பேசத் தோணாம கெளம்பிட்டேன். காரக்குடி கல்லுக்கட்டி சந்தப்பேட்டல இருந்து சைக்கிள அழுத்தி மிதிச்சா அஞ்சு நிமிசத்துல வந்தர்லாம். கல்லுக்கட்டி  ரோட்ல  உள்ள  பெரிய பெரிய கடைகங்ல வாயப் பொளந்து பாத்துக்கிட்டே அதுக்கு எதுத்தாப்ள கூவி வித்த துணிகள பணத்த எண்ணி எண்ணிப் பார்த்துகிட்டு ஒருவழியா எல்லாருக்கும் வாங்கி முடிச்சேன். திரும்பவும் மஜீத்து கடெக்கு சைக்கில மிதிச்சேன்.

எனக்கு வீட்டுக்கு போறதுக்கும் மனசே இல்லை. உள்ள போகும்போதே பெரியவ கால வந்து கட்டிக்கிட்டு கேப்பா " அப்பா, பட்டு பாவாட சட்ட வாங்கிட்டு வந்தியான்னு? " நல்ல வேள.. சின்னம் ரெண்டுக்கும் இன்னும் வெவரம் தெரியல,  உலகத்துலே ரொம்பக் கொடுமையான விசயம் தன் கொழந்த ஆசப்பட்டு கேட்டத வறுமைய காரணம் காட்டி வாங்கி தர முடியாத அப்பனுங்க நெலமைதான். ஏதோ நான் செஞ்ச பாவம், எனக்கும் அந்த நெலம வந்துருச்சு! என் சைக்கிளும் மஜீத்து கடெகிட்டப் போய்த் தன்னால நின்னுச்சு. 

நானும் சைக்கிள விட்டு எறங்காம கால ஊண்னபடியே நின்னேன்.
"என்னடா எல்லாம் வாங்கிட்டியா?" உள்ள இருந்து மஜீத்துதான் கேட்டபடிக்கு வந்தான். " ம்ம்.. ஆச்சுடா"ன்னு சொரத்தே இல்லாம சொல்லிட்டு, "சரிடா நான் கெளம்புறேன்" ன்னு சொன்னேன். "கொஞ்சம் இருடா" ன்னு என் கையைப் புடிச்சவன்.. " டேய்.. அத எடுத்துகிட்டு வாடான்னு" கடப் பையங்கிட்ட கொரல் கொடுத்தான்.

கடப்பையன் கையில ஒரு தினத்தந்தி பேப்பர்ல சுருட்டின பொட்டலத்தோட வேகமா ஓடியாந்தான். மஜீத்து அதை வாங்கி என் கையில திணிச்சு "சரி..இப்ப கெளம்பு, இத என் மூத்த மருமககிட்ட கொடுத்துரு" ன்னு சொன்னான். "என்னடா இதுன்னு?" கேட்டுகிட்டே அதப் பிரிச்சேன்.. உள்ள பச்சை கலர் பட்டுப் பாவாட சட்ட புதுத் துணியோட வாசத்தோட இருந்துச்சு!

அதப் பாத்ததுமே எனக்கு எதுவுமே பேசத் தோணல, அப்பிடியே  மஜீத்தோட கையி ரெண்டையும் கெட்டியாப் புடிச்சிகிட்டு கண்ணு ரெண்டும் கலங்கிப் போயி நின்னேன். அப்பறமா சுதாரிச்சிக்கிட்டு அவன்கிட்ட கேட்டேன் "ஏதுடா இது? நான் போயிட்டு வர்றதுக்குள எங்க போய் வாங்குன?" படபடப்போட கேட்டேன். அவன் சாதரணமா சொன்னான் "விட்ரா.. இது எடத்தெருல ஒருத்தங்க தக்க கொடுத்தாங்க,  பாத்தேன்.. என் மருமவளுக்கு  இல்லாதத நான் என்ன பெருசா சம்பாதிக்கப் போறேன்? அதான்.. அத எடுத்து மருமவ அளவுக்கு நீ கல்லுக்கட்டிக்கு போய்ட்டு வர்றதுக்குள்ள தச்சிட்டேன்னு சொல்லிட்டு உள்ள போனான். " சரிடா, அவங்க வந்து கேட்டா அவங்களுக்கு எப்புடி கொடுப்ப?ன்னு கேட்டேன்.      "அட போடா, இன்னைக்கு  விடிய விடிய கல்லுக்கட்டில கட இருக்கும், மல்லுக்கட்டி இன்னொரு பத்து ஜாக்கெட் கூடத் தச்சன்னா இதே மாரி எடுத்துட்டு வந்து அவங்களுக்கு தச்சு கொடுத்துட்டு போறேன்ன்னு சொல்லி என் வாய அடச்சான். 

எனக்கு அதுக்கு பொறவு என்ன பேசுறதுன்னே தெரியல. அவன் கொரல் மட்டும்  கடைக்கு உள்ள இருந்து கடவுள் பேசுற மாதிரி வந்துச்சு, " டேய்.. தங்கசிகிட்ட சொல்லி நாளைக்கு கறிய நல்லா உப்புக்கறி போட்டு வையி, மத்தியானம் வர்றேன்"ன்னு சொன்னான். அப்பத்தான் எனக்கு மண்டைல ஒறச்சிச்சு, இந்தப் பட்டுப்பாவாட கவலைல அவன தீவாளிக்கு  வீட்டுக்குக் கூப்புட மறந்துட்டேன்னு! பதிலுக்கு நானும் " அதெல்லாம் வறுத்து வைக்கலாம், நீ மறக்காம தங்கச்சி பாத்திமா குழந்தைங்களையும் கூட்டிகிட்டு நேரத்தோட வந்துசேருன்னு" சொல்லிகிட்டே சைக்கிள எனம்புரியாத சந்தோசத்தோட மிதிக்க ஆரம்பிச்சேன்.

2011 

தோளு ரெண்டையும் புடிச்சு யாரோ உலுக்குற மாதிரி இருந்துச்சு! திடுக்குன்னு முழிச்சேன். சாந்தாதான் நின்னா. " ஏங்க..இப்படியே சாஞ்சு உக்காந்தா ஆயிப்போச்சா..போங்க போயி மூஞ்சியக்  கழுவிகிட்டு  வாங்க, இப்ப கெளம்புனாத்தான் எடுக்குறதுக்குள்ள போலாம்" ன்னு அவசரப்படுத்தினா. அதுவும் சரிதான்ன்னு சொல்லி,  கெளம்பி வீட்டப் பூட்டும் போதுதான் ஞாபகம் வந்துச்சு.

வேகமா வீட்டுக்குள்ள  ஓடுனேன்... என் பழைய பொட்டி ஒன்னைத் தொலாவி அதுக்குள்ள அதப் பாத்ததும்தான் எனக்கு உசுரே வந்துச்சு. அது..  அன்னக்கு மூத்த மகளுக்கு அவன் தச்சு கொடுத்த பட்டுப்பாவாட சட்ட. அத அப்பிடியே கைல எடுத்து பத்திரப்படுத்திகிட்டு வெளிய வந்தேன். சாந்தா கூட கேட்டா " என்னங்க? ஏன் இப்பிடி அவசரமா உள்ள ஓடுனீங்க? ன்னு! அவளுக்கு  ஒன்ன்னும்மில்லைன்னு ஒரு பதுலச் சொல்லிட்டு  வீட்டப்  பூட்டிகிட்டு கெளம்பிட்டோம்.

எக்செல் வண்டிய எப்பிடி ஓட்டிகிட்டுப் போனேன்னு எனக்கே தெரியல. ஆனாலும் அநிச்சையா அவன் வீட்டுக்கிட்ட போய்த்தான் நின்னேன். வாசலுக்கு வெளிய அங்கங்க கூட்டங் கூட்டமா நின்னு பேசிகிட்டு இருந்தாங்க. என்ன அங்க பார்த்ததும் பழக்கமானவங்க தலைய அசச்சாங்க. எனக்கு யாரயும் பாக்கத் தோணல.நேர வீட்டுக்குள்ளதான் போனேன், அங்க மஜீத்து அமதியாப் படுத்திருந்தான்.தலமாட்டுல பாத்திமாவும் அப்துல்லாவும்! அவனுக்கும் மூணு மக.இன்னும் யாரும் வரல. எங்களப்பாத்ததும் பாத்திமா   "அண்ணேணே.... அண்ண்ணி... னு கதறலோட கத்திகிட்டே ஓடியாந்து சாந்தாவ கட்டிக்கிட்டு அழுதுச்சு!

எனக்குதான் அதப் பாத்து தாங்குற சக்தி இல்ல. மஜீத்த அப்பிடி பாக்கவும் புடிக்கல. இருந்தாலும் அவங்கிட்ட போனேன்.. எங் கைல  இருந்த  பட்டு பாவாடைய அவன்  மேல போட்டேன். "இன்னக்கு எம் புள்ளைங்க வளந்து சம்பாதிச்சு  நெனச்சத வாங்கி போடலாம்டா... ஆனா அன்னக்கு  நீ தச்சுக் கொடுத்த இந்தப் பட்டுத்துணிக்கு ஈடாகுமாடா எதுவும்? நீ இல்லாம நான் உன்ன நெனச்சுப்பாக்க எனக்கு நீ நெறய பண்ணிருக்கடா.. ஆனா நீ என்ன நெனைச்சுக்க நான் உங்கிட்ட வாங்கிகிட்டதத் தவுர வேற எதுவுமே பண்ணலடா உனக்கு! நம்ம நட்போட அடயாளமா இந்தப் பட்டுத்துணிய நீயே கொண்டுபோன்னு" அவன் மேல போர்த்திட்டு மெதுவா வெளில வந்து ஒரு மூலை பார்த்து உக்காந்துட்டேன்.

நேரம் போய்கிட்டே இருந்துச்சு, சொந்தகாரங்க  ஒதவியோட நடக்க வேண்டிய காரியமெல்லாம் மளமளன்னு நடந்துச்சு. அவனோட மகளுகளும் அழுகையோட என்னத் தாண்டி வீட்டுக்குள்ள போனதப் பாத்தேன். பாத்திமாவோட கதறலோட மஜீத்து எங்ககிட்ட இருந்து போய்ட்டான்.


நான் எங்கயும் போகல. அவன குழிக்குள்ள  இறக்குரத பார்க்குற சக்தியெல்லாம் எனக்கு இல்ல. அதனால அங்கயே இருந்தேன். காரியமெல்லாம் முடிஞ்சதும் கூட்டமும் கொஞ்சம்  கொஞ்சமா கொறையத் தொடங்கிச்சு. நான் சாந்தாவப்   பார்த்தேன். அவளும் நான் பாத்ததன் அத்தம் தெரிஞ்சிகிட்டு கிளம்பினா."அண்ணே..கொஞ்சம் நில்லுங்கண்ணே.." பாத்திமாதான் கூப்ட்டது. "என்னம்மா?" என்றேன்.

எதுவும் சொல்லாம வீட்டுக்குள்ள போய் கைல ஒரு பொட்டலத்தோட வந்து அத என் கைல திணிச்சது. "என்னம்மா இது? என்றேன். "மீனாவுட்டு புள்ளைக்கு  மட்டும்  இன்னும் இவரு கையாள எதுவுமே தச்சுப் போடலைன்னு  சொல்லிகிட்டே இருந்தாருண்ணே, இந்தத்  தீவாளிக்கு வீட்டுக்கு  வரும்போது மீனாவுட்டுப் புள்ளைக்கு கொடுக்கணும்னு அவரே உக்காந்து தச்சதுண்ணே இது!

இத கொடுக்குறதுக்கு முன்னாடியே அவசரப்பட்டு போயிட்டாரு! இத பேத்திகிட்ட  நீங்களே கொடுத்துருங்கண்ணே"ன்னு  சொல்லிட்டு அடக்க முடியாமல் அழுதுச்சு. நானும்தான், அத கைல வாங்கிகிட்டு அவ்வளவு நேரம் அடக்கிவச்சத அழுது தீர்த்தேன். வீட்ட விட்டு கெளம்பி வரும்போது திரும்பி பாத்தேன். அவன் தச்ச தையல் மிசின் மட்டும் இனி எனக்கு யார் துணைங்ற மாதிரி தனியா இருந்துச்சு. கிட்டத்தட்ட என்னப்போலவே!

குறிப்பு -  ஒரு உண்மை சம்பவத்தின் தொகுப்புதான் இந்தக்கதை. இணைய உலகத்தை தாண்டி வெளியே பார்த்தால் இப்பிடி உறவுகளையும் மீறிய மதங்களையும் கடந்த உன்னதமான நட்புகளை நம் முகங்களுக்கு எதிரே காணமுடியும். ஆனால் இணையம் என்னும் முகமூடி போட்டுக்கொண்டு இங்கு நடக்கும் உன் மதமா என் மதமான்னு நடக்கும் விவாதங்களை பார்த்தால் சின்ன புன்னகையோடு கடந்து விடுகிறேன். இந்த நட்பின் கதை எனக்கு தெரியும் என்பதால். மனித மனங்களை நேசிக்காத எந்த மனிதனையும் மதத்தின் பெயரால் எந்தக்கடவுளும் விரும்புவதில்லை.