Thursday, 26 July 2018

முற்றம் வைத்த வீடு.


சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். தானியங்கி இமிக்ரேசன் முடிந்ததும் என் கடவுச்சீட்டை வாங்கிச் சரி பார்த்த  பாதுகாவலரிடம்  "தேங்க்ஸ்" என்று ஒற்றை வரியில் கடமைக்கு சொல்லிவிட்டு விலகி நடக்க ஆரம்பித்தேன். விமான நிலையைம் ஏராளமான யூனிட் மின்சாரத்தை விழுங்கிக்கொண்டு பளிச்சென இருந்தது. பூச்செடிகளின் முன்பு ஒரு காதல் ஜோடி கட்டிப்பிடித்தபடி செல்பி எடுத்துகொண்டிருன்தனர். ஆனால் அதை ரசித்துப்பார்க்கும் மனநிலையில்தான் நான் இல்லை. கொஞ்ச தூரம் நடந்ததும் டூட்டி ப்ரீ ஷாப் வித விதமான பாட்டில்களோடு தன்னை அலங்கரித்துக்கொண்டு பயணிகளை உள்ளே இழுத்துக்கொண்டிருந்தது. வழக்கமான பயணம் என்றால் இமிக்ரேசன் தாண்டி அந்தக் கடைக்கு அருகே போவதற்குள் பிராந்தியா விஸ்கியா? ஒண்ணா ரெண்டா என்று ஒரு பட்டிமன்றமே நடத்திக்கொண்டு செல்வேன். ஆனால் இப்போது உள்ள மனநிலையில் அங்கு நின்று கூட பார்க்காமல் எனக்கான கேட் நம்பரை பார்த்து நடக்க ஆரம்பித்தேன்.

சுமார் அரை கிலோ மீட்டர் நடந்திருப்பேன்! இருப்பதுலே ஆகக்கடைசி வாயில்(கேட்) எனக்கு. கூட்டம் அனைத்தும் ஏற்கனவே உள்ளே சென்று காத்திருக்கும் வராந்தாவில்(வெயிடிங் லாஞ்ச்) குவிந்திருந்தது. பேருக்கு இரண்டு மாற்று துணிகள் வைத்திருந்த கைபையை ஸ்கேனுக்கு அனுப்பிவிட்டு உள்ளே சென்றேன். வழக்கமாக பயணங்களோடு எடுத்து செல்லும் ஐபேட் கூட எடுக்க வில்லை. நான் உள்ளே செல்வதற்கும் விமானத்திற்கு அழைப்பதற்கும் சரியாக இருந்தது. அழைத்து முடிப்பதற்குள் அருகே சென்று குமிந்தனர் நம்மவர்கள். விமானப் பயணங்களில் நம்மவர்கள் என்னை ஆச்சர்யப்படுத்தும் அல்லது சிரிப்பை வரவைக்கும் பல விசயங்கள் உண்டு. அதில் ஒன்று அழைத்தவுடன் கும்பலாக போய் நிற்பது. இங்கு 90காசு கொடுத்து காப்பி வாங்கும் கடையில் கால்மணி நேரம் வரிசையில் நிற்பவர்கள் 900டாலர் கொடுத்து வாங்கும் விமான பயணத்திற்கு 10நிமிடம் பொறுமையாக  இருப்பதில்லை.

ஒருவழியாக உள்ளே சென்று இருக்கையை தேடி அமர்ந்து கண்களை கைகுட்டையால் மறைத்துக்கொண்டு இருக்கை பட்டையை அணிந்துகொண்டு சாய்ந்துவிட்டேன். வழக்கமாக அருகில் இருப்பவரிடம் மெதுவாக பேச்சு கொடுத்து அப்பிடியே பீரோடு ஒயின் கலந்து அடிக்கும் என்  அனுபவத்தையும் ரம்மோடு வெந்நீர் ஊற்றி அதில் மிளகுதூள் போட்டு அடித்தால் சளிக்கு நல்லது என்ற அவர்களின் அனுபவங்கள் வரை பரிமாறிக்கொள்வது வழக்கம். ஆனால் இப்போது யாரோடும் பேசும் மனநிலையில் இல்லை. கேப்டன் இனிய காலை வணக்கம் சொல்வது மங்கலாக கேட்டது. விமானப் பணிப்பெண்கள் அவசரகால யுத்திகளை ஊமை பாஷையில் 80 களின் தூர்தர்சனின் மதிய செய்தியை போல சொல்லி சிறுவயதை  ஞாபப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

முன்சீட்டில் ஒரு குழந்தை வீறிட்டு அமைதியைக் குலைத்து அழுதது. பக்கத்து சீட் ஆசாமி தான் விமானத்தில் வந்து அமர்ந்துவிட்டதாக நூறாவது முறை தொலைபேசியில் யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தார். பின்சீட்டில் ஒருவர் பிளாக் லேபிள் தீர்ந்துருச்சு மாப்ள அதான் ரெட்லேபில் வாங்கியிருக்கேன் என்று தொலைபேசியில் சொல்லிக்கொண்டிருந்தார் பணத்தை மிச்சம் பண்ணிய திருப்தியுடன். ரயில், பஸ் அல்லது விமானம் இப்படி எந்தப் பயணமாக இருந்தாலும் கடைசி நேர உரையாடல் நம்மவர்களுக்கு எப்பொழுதுமே சுவாரஸ்யம்தான். இதன் உளவியலை தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நினைவுச் செல்கள் என்னை இது எதிலும் நிலைக்கவிடவில்லை. நேற்று இரவு நடந்தது மெதுவாக மனதில் ஓடியது. 

இரவு சாப்பாடு சம்பிரதாயங்களை முடித்து விட்டு படுக்கைக்கு வர 11 மணி ஆகிவிட்டது. வெளிநாட்டு வாழ்க்கையில் சாப்பாடு கூட சம்ப்ரதாயம்தான். எப்போதும் போல வீட்டுக்கு போன் செய்ய ஆயத்தமானேன். அதற்கு முன்னதாகவே என் கைபேசி என் அம்மா நம்பரை தாங்கி அழைத்தது. எனக்கு ஆச்சர்யம் கொஞ்சம் பயம் வேறு. ஏதேனும் அவசரம் இல்லையென்றால் எனக்கு அழைக்க மாட்டார்கள். ஏதேனும் தேவை என்றால் கூட நானாக பேசும்போதுதான் சொல்வார்களே தவிர அழைத்து கேட்க மாட்டார்கள். என்னவாக இருக்கும் என்ற யோசனையோடே திரும்ப அழைத்தேன். தம்பி.. என்று கூறிவிட்டு அழுகையை அடக்க முடியாமல் அழுதார்கள். எனக்கு பதறிவிட்டது, அப்பாவில் ஆரம்பித்து மனதிற்கு நெருக்கமான அனைவர் பெயரையும் சொல்லி நலம்தானே என்றேன். எல்லோரும் நல்லா இருக்கோம்.. ஆனா நம்ம பழைய வீடு...என்று இழுத்தார்கள். 

கொஞ்சம் புரிந்துவிட்டது. அப்பாவின் தவறு இப்பொழுது துரத்தி அடிக்கிறது. எங்கள் பரம்பரை பழைய வீட்டை அப்பா அவரது தம்பியின் பேரில் உள்ள நம்பிக்கையில் அவரின் தொழில் தேவைக்கு லோன் வாங்க அவர் பெயருக்கு எப்பவோ எழுதிக்கொடுத்துவிட்டார். வசதி வாய்ப்பு இல்லாத போது பாசம் மட்டுமே போதும் என்று இருந்தவருக்கு வசதி வாய்ப்புகள் வந்ததும் இந்த வீடே என்னுடையது என்று எங்களை வீதியில் துரத்தினார். பின்னர் நான் சம்பாதித்து வீடு கட்டியது எல்லாம் படையப்பா பார்ட் 2 கதை. ஆனால் ஒரே பாட்டில் முடியாமல் இடையில் 15 நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. கூடவே நீண்ண்ண்ண்ட சட்டப் போராட்டமும். 

"தம்பி.. என்னாச்சு?" என்றார்கள் அம்மா மறுமுனையில். ம்ம்.. சொல்லும்மா இருக்கேன் என்றேன் என் நினைவுகளை மீட்டுக்கொண்டு. "இன்னைக்கு சாயங்காலம் வீடு அவங்களுக்குன்னு தீர்ப்பாயிருச்சு தம்பி, நாளைக்கே வந்து இடிக்க போறாங்களாம்"  என்று அழுகையினூடே சொன்னார்கள் அம்மா. "சரிம்மா போன வை" என்று அலைபேசியை துண்டித்துவிட்டு படுத்துவிட்டேன். பிறந்ததில் இருந்து கூடவே இருந்த நண்பனை இழக்கப்போகும் துயரம் வந்து அமர்ந்துகொண்டது நெஞ்சில். அதை பழைய வீடுதானே என்று சாதாரணமாக கடந்துவிட முடியாது. நான் பிறக்கும்வரை அதாவது மூன்று அக்காக்களுக்கு பிறகு நான் பிறக்கும் வரை நாங்கள் பக்கத்து நகரத்தில்  இருந்தோம் அல்லது இருந்தார்கள். ஏனென்றால் அப்பாவின் வேலைக்குச் செல்லும் தொழிற்சாலைக்குப் பக்கமாக வேண்டும் என்பதால்.

நான் பிறந்ததும் நான்கு குழந்தைகளுக்கும் சேர்த்து பெரிய வீடு தேவைப்பட்டது. அப்படி ஒரு வீட்டில் வாடைக்கு இருக்க என் அப்பாவின் பொருளாதாரம் இடம்கொடுக்காமல் இந்த பழைய வீடு இருக்கும் கிராமத்திற்கு வந்தோம். இதற்காக அப்பா தினமும் போக பதினைந்து வர பதினைந்து ஆகா முப்பது கிலோமீட்டர் சைக்கிள் அழுத்த வேண்டியிருந்தது வேலைக்கு. ஆனாலும் அப்போது அது ஒன்றுதான் அவர்களுக்கு வழியாக இருந்திருக்கும். சரியாக நான் பிறந்து ஆறு மாதத்தில் இந்த வீட்டுக்கு வந்து விட்டோம். வீடு வீடு என்று சொல்கிறேனே தவிர நாங்கள் வரும்போது வீடாக இருக்கவில்லை. ஆடு மாடுகள் கட்டும் தொழுவமாகத்தான்  இருந்தது. ஆனால் வீடு அழகான முற்றம் வைத்த வீடு. பிறகு சில வருடங்கள் ஓடி ஓரளவிற்கு எனக்கு நினைவு தெரிந்த வயதில் வீடு என்று இருந்ததை ஒரு அழகான வீடாக மாற்றியிருந்தனர் என் அம்மாவும் மூன்று அக்காக்களும் சேர்ந்து.

வாசலில் இரு பக்கமும் திண்ணை. படியேறி உள்ளே போனதும் பெரிய பத்தி (வராண்டா அல்லது ஹால்) சாணம் போட்டு மெழுகி பளபளவென்று எப்பொழுதுமே குளிர்ச்சியாக இருக்கும். அதைத் தாண்டி உள்ளே போனால் நாட்டு ஓடு போர்த்திய சுத்துக்கட்டு வளவு நடுவில் வானம் பார்த்த முற்றம். மேற்குப் புறத்தில் இரண்டு அறைகள் ஒன்றில் சாமி கும்பிட மற்றும் இரண்டு மர அலமாரி(பீரோ) வைத்திருக்கும். இன்னொரு அறையில்  நெல்மூடைகள் அடுக்கி இருக்கும். விடிகாலையில் அப்பா படிக்க எழுப்பிவிடும்போது இந்த நெல்மூட்டைகளுக்கு நடுவில் அமர்ந்து படிப்போம். கத கதவென்று இருக்கும் சமயங்களில் அந்தக் கதகதப்பிலே தூங்கி விட்டு உதை வாங்குவதும் நடக்கும். தீபாவளி சமயங்களில் செய்த அதிரசமும் முறுக்கும் ஒரு பெரிய தூக்கு வாளியில் போட்டு இந்த அறைக்குள்தான் இருக்கும். அம்மாவுக்கு தெரியாமல் எடுத்து அவ்வப்போது டவுசர் பைகளில் போட்டுக்கொண்டு ஓடுவதெல்லாம் அந்த அறையில்தான்.

வடகிழக்கு மூலை எப்போதுமே முளைப்பாரி போடும் இடம் அதனால் அங்கே படுக்க மாட்டோம். பொங்கல் அன்று எங்கள் முற்றத்தை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். முற்றம் முழுவதும் அடைத்து மாக்கோலம் இட்டிருப்பார் அம்மா. இரண்டு பானை வைத்து பொங்கி அங்கேயே சாமி கும்பிட்டு அந்த அடுப்பை சுற்றியே அமர்ந்து சாப்பிடுவோம். அன்று மட்டும் அல்ல மழை அல்லாத ஒவ்வொரு இரவிலும் அங்கேதான் இரவு சாப்பாடு. முற்றத்தின் மேலே நடுவில் நிலா மற்றும் நட்ச்சத்திரங்களின் அழகோடு உணவருந்துவதே ஒரு தவம். மழை வந்தால் இன்னும் சந்தோசம், நான்கு மூலைகளிலும் கூரை வாய் தகரத்தில் இருந்து விழும் நீரை சேமிக்க இருக்கும் பாத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்து அந்த மழையில் ஆடுவோம். அம்மாவும் அக்காவும் துணிகளை எடுத்து அந்த மழையோடு துவைக்க ஆரம்பித்துவிடுவார்கள். காகிதத்தில் கப்பல் செய்து வீட்டுக்குள் விட்டு வெளியில் ஓடி யார் கப்பல் முதலில் வருகிறது என்று சண்டை போடுவோம். இப்படி ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு நினைவுகளை புதைத்து விட்டே அந்த வீட்டை பூட்டினோம் 15 வருடங்களுக்கு முன்பு.

ஞாபகங்களை அறுத்துவிட்டுத் திடீர் என்று எழுந்தேன். மணி பார்த்தேன் அதிகாலை இரண்டு மணி. நேசித்த உயிர், பிரியும் வேளையில் கடைசியாக முகத்தை பார்க்க ஒரு ஆசை அலல்து வெறி வருமே அதுபோலத்தான் அப்போது தோன்றியது. அப்பொழுதே இணையத்தில் தேடி பயணசீட்டை உறுதிசெய்துவிட்டு விடிவதற்காக காத்திருந்தேன். காலை ஒன்பது மணிக்கு விமானம்  ஐந்து மணிக்கு எல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பி இதோ விமானத்திலும் அமர்ந்து விட்டேன். மெதுவாக மணி பார்த்தேன் விமானம் கிளம்பி ஒருமணி நேரம் ஆகியிருந்தது. இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது திருச்சி செல்ல. அங்கிருந்து ஒரு இரண்டு மணி நேர பயணம் என் கிராமத்திற்கு. அதற்குள் இடித்துவிடாமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டேன். வருவதை வீட்டிற்கு போன் பண்ணி சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. படைப்பா படத்தில் சிவாஜி வீட்டை விட்டு கிளம்பும் போது கடைசியா நான் வாழ்ந்த வீட்ட கட்டிபுடிச்சிக்கிறேன்னு சொல்லும் அந்தக் காட்சியை  காமெடியாக பார்த்து காமெடியாகவே மெமேகளில் பழகி விட்ட அந்த உணர்வு இப்போது உயிரோடு சேர்த்து வைத்து அழுத்தியது. 

ஒரு செடியை வேரோடு புடிங்கி நட்டால் கூட கூடவே அதன் தாய் மண்ணையும் சேர்த்தே எடுத்து நடுவார்கள். இல்லையென்றால் செடி வளராது. ஒரு செடிக்கே அப்படி இருக்கும்போது உணர்ச்சிகளாலும் உணர்வுகளாலும் பின்னிப் பிணைந்த நானும் சாதாரண மனிதன்தானே. சாதாரண மாட்டுத் தொழுவமாக இருந்த அந்த வீடு நான் வளரும்போது என்கூடவே சேர்ந்தே வளர்ந்து வந்திருக்கிறது. முன்பக்கம் மூங்கில் சட்டங்களால் அடைக்கப்பட்டது செங்கல் சுவராக மாறியது. என் ஏழு  வயதில் மின் இணைப்பில் ஒளிரதுவங்கியது பிறகு சாணி மொழுகிய தரை சிமெண்ட் பூசிக் கொண்டது. காலப்போக்கில் அதுவே டைல்ஸ் கல்லாக மாறியது. குடும்பத்தில் வயதான மூத்தவர்களுக்கு செய்யும் பணிவிடை போல ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தோம்.

அக்கம் பக்கத்தில் யார் வீட்டில் குழந்தை பிறந்தாலும் அந்த வீட்டு பத்தியில்தான் தொட்டில் கட்டிப்  போடுவார்கள். என் ஆயாவின் தாலாட்டு அப்பிடி. மாலை நேரம் ஆனால் அந்த தெருவிற்கே எங்கள் வீட்டுத்  திண்ணைதான் மனமகிழ் மன்றம். தாயம், பல்லாங்குழி ஒருபக்கம் ஓடும். பெரியவர்கள் கதைப்பேச்சு ஒருபக்கம். விடுமுறை தினங்களில் எங்கள் வீடு முழுநேர மனமகிழ் மன்றமாகிவிடும். இதெல்லாம் 80களின் இறுதியில் அல்லது 90களின் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன். அப்பொழுதெல்லாம் ஒளியும் ஒலியும் மற்றும் ஞாயிறு படம் தவிர தொலைக்காட்சி பார்ப்பது பாவம் என்றிருந்த காலம். இப்போது யோசித்துப்பார்க்கிறேன் அந்த வீட்டில் எப்போது நான் கடைசியாக இருந்தேன் என்று. அனைத்தையும் காலி செய்து வீட்டைப்பூட்டி வெளியேறும் போது கொஞ்சம் இருங்கள் என்று கூறி  ட்ரவுசரை இறுக்கப் பிடித்தபடி உள்ளே ஓடி தாழ்வாரத்தில் ஒரு ஓட்டை போட்ட டப்பாவில் கொன்னை இலைகளைப் போட்டு அதில் விட்டிருந்த இரண்டு பொன்வண்டுகளைப் பார்த்தபடி எடுத்து வந்தேன். அதுதான் அந்த வீட்டுக்கும் எனக்குமான கடைசி நூல் அறுந்த தருணம் என்று அப்போது நினைக்கவில்லை. 

கிராமத்திலேயே வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்துகொண்டு அந்த வீடு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதை பார்த்துக்கொண்டே நானும் வளர்ந்தேன். வாசல் கதவுகளில் கரையான்கள் கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் தன் சாம்ராஜ்யத்தை அமைத்துக்கொண்டது. வருடங்கள் ஓடி நான் சிங்கை வந்து 6 வருடம் ஆகிவிட்டது. இடையில் அங்கேயே வேறு இடம் வாங்கி வீடும் கட்டியாகிவிட்டது. ஊருக்கே தொட்டில் கட்டிய அந்தப் பத்தியில் என் குழந்தைக்கும் தொட்டில் கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையோடு பெண் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள் அம்மா. ஆனால் காலம் எங்களுக்கான பதிலை இப்படி வைத்திருக்கும் என்று யாருமே யோசிக்கவில்லை. இப்பிடி கண்மூடியும் தூங்காமல் நினைவுகளோடு போராடிக்கொண்டிருக்கும்போதே விமானம் இறங்கி ஓடுபாதையில் ஓட ஆரம்பித்தது. குடிநுழைவு மற்றும் சுங்க சோதனைகளை விரைவாக முடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியில் வந்து என் ஊருக்கு செல்லும் பேருந்தில் அமர்ந்தேன். அப்போதுகூட வீட்டுக்கு பேச வேண்டும் என்று தோன்றவில்லை. 

சட்டப்போராட்டங்களுக்கு இடையில் கூட சமாதானத் தூது விட்டுப்  பணம் கூட கொடுக்கிறேன் அந்த வீட்டை தாருங்கள் என்று கூறியும் அதை தர மனமில்லாத என் சித்தப்பாவின் வீம்புக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று என்னால் யூகிக்க  முடியவில்லை. பணம் ஈகோ இப்படி எல்லாவற்றையும் கடந்தது அந்த வீட்டுக்கும் எனக்குமான பந்தம். சமீபத்தில் பல லட்சங்களில் சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கினேன். ஆனால் இன்று வரை ஒருமுறைதான் அதை பார்த்திருக்கிறேன். அது என்னுடைய வீடு என்று கூட என் மனதில் இன்னும் பதியவில்லை. ஆனால் பால்ய வயதில் பல வருடங்களுக்கு முன்னால் என் பழைய வீட்டை விட்டு வந்தாலும் அது மட்டுமே என்னுடைய வீடாக மனதில் பதிந்துவிட்டது. கண்ணெதிரே நீருக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் நண்பனைக் காப்பாற்ற முடியாத கையறு நிலையில் இருந்தேன். 

இப்படி அந்த வீட்டுக்கும் எனக்குமான ஞாபகங்களை என் மூளைச்  செல்களில் எங்கெங்கு ஒளித்து வைத்தேனோ அவையெல்லாம் வரிசை கட்டி வந்து நின்றது. என் கிராமம் வந்து விட்டதாக நடத்துனர் கதறுவது அசரீரி போல காதுக்குள் கேட்டது. அனிச்சையாக இறங்கி நடக்க ஆரம்பித்தேன். வரிசையான விசாரிப்புகளைக் கடந்து நேரே வீட்டுக்கு கூடப் போகாமல் என் பழைய வீட்டைத்தான் நோக்கி நடந்தேன். பதின்ம வயதுப் பிள்ளையின் அகால மரணத்திற்குப் போவது போல இருந்தது என் மனநிலை. என் வீடு இருக்கும் தெருவுக்குள் கால் வைத்ததுமே நெஞ்சுக்கூட்டுக்குள் ஏதோ நொறுங்கும் சத்தம் . வீதி நெடுக உரிமையோடு வந்தன உறவுகள். கைப்பையை யாரோ வாங்கிக்கொண்டனர். ஆறுதல் அளிக்காது என்று தெரிந்தும் ஆறுதல்கள் காதில் கேட்டது. வீட்டை நெருங்க நெருங்க தெரிந்துவிட்டது. எல்லாமே முடிந்துவிட்டதென. என் சாவில் கூட முழிக்காதே என்று சாபம் விட்ட முதியவர்களின் இறப்பு போல இருந்தது என் வீடு. ஆமாம்.. அப்போது வீட்டிற்கான எந்த அடையாளமும் இல்லாமல் என் நம்பிக்கையோடு சேர்ந்து நொறுங்கிபோய்க்கிடந்தது என் வீடு. இறுதிச்சடங்கில் சிதறிக்கிடக்கும் பூக்கள் போல வீதியெங்கும் சிதறிக்கிடந்தன செங்கல்கள்.

என்னைப் பார்த்ததும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டார் சித்தப்பா. அப்போது கூட வரவேற்க தவறாத வாசல்படியில் கால் வைத்து உள்ளே போனேன் காலடியில் இடறியது மர உத்திரம். எத்தனையோ குழந்தைகளை தொட்டில் கட்டி தூங்க வைத்த உத்திரம். தூரத்தில் நின்ற பங்காளியை கூப்பிட்டு இதை மட்டும் நான் எடுத்துக்கொள்கிறேன் என்று சித்தப்பாவிடம் கேட்க சொன்னேன் உத்திரத்தைக் காட்டி. அவரும் அவரிடம் பேசி சரி என்றதும் இரண்டுபேரை உதவிக்கு கூப்பிட்டு அதை எடுத்து என் வீட்டில் வைக்க சொன்னேன் என் அம்மாவின் ஆசைக்காக.  பத்தி தாண்டி வளவு போனேன் காலில் இடறியது ஒரு  சின்னச் சங்கு. எடுத்துப்பார்த்தேன் என் பெயர் பொறித்திருந்தது. ராமேஸ்வரத்தில் எப்போதோ பெயர் பொறித்து வாங்கியதை மராமத்து வேலையின் போது நிலையில் மேலே விளையாட்டாய்ப் பதித்தது. என் நண்பனின் இறுதிப்பரிசாக எண்ணிக்கொண்டேன். அதற்கு மேல் முடியவில்லை வெளியில் வந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிதேன். மெதுவாக திரும்பிப் பார்த்தேன். துரோகத்தின் வலியைத் தாங்கிக் கொண்டு என் அழகான முற்றம் மட்டும் அப்பிடியே இருந்தது.


Thursday, 28 December 2017

அது ஒரு மழைக்காலம்-9 (பயணங்கள் முடிவதில்லை!)அன்று...

நானும் கௌரியும் அந்த பிள்ளையார் கோவிலில் நேரமே போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தோம். பிறகுதான் நேரம் பார்த்தோம் மதியம் ஆகி விட்டது. "இதுக்கு மேல என்னைய மண்டபத்துல காணும்னா என் அப்பா கொன்னுடுவார்னு" கௌரி பதறிக்கொண்டு கிளம்பினாள். கொஞ்ச தூரம் நானும் அவளோடு உரசிக்கொண்டு நடக்க ஆசைப்பட்டு கூடவே போனேன். வாசல் வரை அதை தவிர்த்து என்னை தள்ளிவிட்டுக் கொண்டே வந்தவள் வாசல் தாண்டுவதற்கு முன் என்னை இழுத்து கன்னத்தில் ஒரு முத்தம் வைத்துவிட்டு அதை திருப்பி கூட வாங்காமல் பாதி ஓட்டமாய் ஓடி விட்டாள்  மண்டபத்திற்கு! வெகுநேரம் கன்னத்தைத்  தடவியபடியே நின்றுவிட்டு பிறகு நானும் மண்டபத்திற்கு போனேன்.

மண்டபத்திற்கு நுழையும்போதே அப்பா வாசலில் நின்றார்! "ஏண்டா எருமை, எவ்ளோ நேரமா தேடறோம் எங்க போய் தொலைஞ்ச?" என்று ஆரம்பித்தார். அம்மா குறுக்க வந்ததால் தப்பித்தேன்! "ஏன்? எதுக்கு?" என்றேன் ஒற்றை வரியில்! அம்மாதான் சொன்னார்கள் "ஒன்னும்மில்லப்பா.. நாளைக்கு ரிசப்ஷன்க்கு கண்டிப்பா இருந்துட்டு போகணும்னு சொல்லிட்டாங்க! அதான் நீ இருக்குறியா இல்ல நீ மட்டும் போயிருவியான்னு கேப்போன்ன்ன்ன்னு" என்று சொல்லும்போதே அங்கு கௌரியின் அப்பாவும் வந்தார்!

"எங்களையும் ரொம்ப வற்புறுத்துறாங்க, ஆனா கௌரிக்கு நாளைக்கு முக்கியமான கிளாஸ் இருக்காம், அதான் யோசிக்கிறேன்னு சொன்னவர் அப்படியே என்னை பார்த்து "குணா.. உனக்கும் கிளாஸ் உண்டுல்ல? ஒன்னு பண்ணேன், கௌரியும் நீயும் பஸ்ல போயிருங்களே? இப்பவே சாப்பிட்டு கிளம்பினா இருட்டுறதுக்குள்ள ஊருக்கு போயிரலாம்" என்றார்! எனக்கு சந்தோச அதிர்ச்சியில் பேச முடியாமல் நின்றுருந்தேன்!

"ஏன்டா எருமை.. அதான் கேக்குறாங்கல்ல பதில் சொல்றா" என்றார்! "கிளாசுக்கு மட்டம் போட்டுட்டு இங்கயே ஊரு சுத்திட்டு போகலாம்னு நினைச்சியா? வா.. வந்து சாப்பிட்டு கௌரியை கூட்டிகிட்டு ஊருக்கு கிளம்புற வழிய பாரு, நாங்க நாளைக்கு நைட்டே வந்துருவோம்" என்றார்! இன்னுமே என்னால் அதை நம்ப முடியாமல் நின்றேன்! கௌரியை தேடினேன் அவளைக் காணும். இதை நானே அவளிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. மண்டபம் முழுக்க பறந்து கொண்டிருந்த பட்டாம் பூச்சிகளுக்கு நடுவே என் பட்டுப்புழுவைத் தேடினேன்.

ஒருவழியாக கண்டுபிடித்து மொட்டை மாடிக்கு வர சொல்லி அதிர்ச்சி கலந்த சந்தோசத்தோடு இருவரும் ஒன்றாக ஊருக்கு போகும் சந்தர்ப்பம் வாசித்ததை சொல்லி முடித்தேன். அவளோ சரி அடுத்து என்ன என்பது போல நின்றாள். "என்ன கௌரி?எவ்ளோ சந்தோசமான விஷயம் சொல்றேன் நீ உனக்கு சம்பந்தமே இல்லாதது மாதிரி நிக்கிற?" என்றேன். அலட்சியமாக சிரித்துக்கொண்டே சொன்னாள் "என் அப்பாவா வந்து உன்கிட்ட எனக்கு துணையா போக சொல்லுவார்னு நீ நினைக்கிறியா?" என்றாள். நான் ஒன்னும் புரியாமல் நின்றேன், அவளே சொன்னாள் "அட லூசு.. எனக்கு கிளாஸ் இருக்கு நான் போயே ஆகணும், நீங்க வேணா குணா வீட்ல கேளுங்க அவங்க போனா அவங்க கூட போயிறேன்னு' சொன்னேன். எனக்கு தெரியும் உங்க வீட்லயும் தாங்கிட்டுதான் வருவாங்கன்னு, எப்பிடியும் உன்னைய மட்டும் துணைக்கு அனுப்புவாங்கன்னு நினைச்சேன் அதேமாதிரியே நடந்துருச்சு" என்றாள்.

"அடிப்பாவி" என்றேன்! இந்த முறை என் டேர்ன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கௌரியை இழுத்து கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு திரும்பிப்பாராமல் வந்து ஒன்னுந்தெரியாதது போல அம்மாவின் அருகில் நின்று விட்டேன். கௌரி மேலிருந்து வந்தாள், அவளைப் பார்த்ததும் அம்மா அவளிடம் "என்னம்மா கௌரி, ரெடி ஆயிட்டியா? கிளம்புங்க இப்பவே கிளம்புனாதான் சரியா இருக்கும்" என்றார்கள், அவளும் பெயருக்கு "இந்த கிளம்பிட்டேன் அத்தே" என்று சொல்லிவிட்டு கன்னத்தில் கை வைத்தபடி என்னை முறைத்துக்கொண்டே போனாள்! எனக்குத் தெரியும் அது முறைப்பு இல்லை என்று! 

ஒருவழியாக கௌரி கிளம்பி அவள் அம்மா அப்பாவோடு வாசலுக்கு வந்தாள். "குணா.. பார்த்து பத்திரமா போங்க, போயிட்டு மாமா வீட்டுக்கு போன் பண்ணு, நீங்க போறதுக்குள்ள நாங்களும் வீட்டுக்கு போயிருவோம்" என்றார். நாங்களும்  நல்ல புள்ளையாக தலை அசைத்துவிட்டு எல்லோரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினோம். வெளியில் வந்து ஆட்டோ எடுக்கும்வரை கூட வந்தார்கள். ஆட்டோவில் அவள் அருகில் உக்கார்ந்ததும் ஒரு இனம் புரியாத சந்தோசம் ஒட்டிக்கொண்டது. அவளும் நானும் எதுவுமே பேச வில்லை. ஆனால் எங்கள் விரல்கள் எங்களை முந்திக்கொண்டு கதைகள் பேசிக்கொண்டது.

நான்தான் மெதுவாக ஆரம்பித்தேன் "கௌரி,' "என்ன?" என்றாள் ஒற்றை வரியில், என் கைகளின் தஞ்சம் அடைந்த அவள் கைகளை விலக்காமலே! "எங்கள விட நீங்க நெருங்குன சொந்தம் இல்ல இவங்களுக்கு, ஆனாலும் ஏன் உன் அப்பாவை இருந்துட்டு போக சொல்லியிருக்காங்கன்னு தெரியுமா?" என்றேன். "அதான் எனக்கும் தெரியல" என்றாள். "ஏன்னா.. திடீர்ன்னு நைட்டு கரன்ட்டு கேட் ஆணுச்சுன்னு வச்சுக்க உங்க அப்பாவலதான் அதை சமாளிக்க முடியும்" என்றேன்! "எப்பிடி?" என்றாள் அப்பாவியாக.
"ஏன்னா.. உன் அப்பாதான் தலைல எப்போதுமே 200W மெர்குரி லைட்ட கட்டிக்கிட்டே திரியுறாரே" என்றேன். முதலில் ஓஒ.. என்றவள் அர்த்தம் புரிந்ததும் "டேய்ய்ய்.... என்றபடி ஆட்டோ என்றும் பாராமல் அவள் விரல்களுக்குள் கிடந்த என் கையை எடுத்து கடித்துவிட்டாள்!


இன்று..


மண்டபத்தில் உட்க்காந்திருந்தேன், மனைவி மெதுவாக உள்ளே அழைத்தாள், அருகில் போனதும் "ஏங்க.. நைட்டு விருந்து இருக்காம் அவசியம் இருந்துட்டு போக சொல்றாங்க, நானும் பாப்பாவும் இருக்கோம், நீங்க போயி நாளைக்கு வேலைக்கு போகணும்ல நாங்க நாளைக்கு அப்பா கூட வந்துர்றோம்" என்றாள் ஒரே மூச்சாக, அப்போது மாமனாரும் அருகில் வந்து "ஆமா மாப்ள.. அப்பிடியே போகும் போது ராதிகாவையும் (மனைவியின் சித்தி மக்கள்) கூட்டி போய் அவங்க வீட்ல விட்ருங்க என்றார். "சரி" என்றேன் ஒற்றை வரியில். ஆட்டோவில் போகும்போது ராதிகாவிடம் கேட்டேன்.. "ஏன் உன் பெரியப்பாவ நைட் தங்கிட்டு போக சொல்லிருக்காங்க சொல்லு?" என்றேன்....


Wednesday, 21 October 2015

TIME TO SAY "GOOD BYE" TO SEHWAG!

விரேந்திர ஷேவாக்! இந்த பெயரை 2001 மார்ச் மாதத்துக்கு முன்பு கேட்டிருந்தால் BCCI கூட யாரென்று உதட்டைத்தான் பிதுக்கியிருக்கும்! 1999 ஏப்ரல் மாதமே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் இந்தியன் டீமில் வந்து விட்டார்! ஆனால் இவரது கெட்ட நேரம் அப்போது சோயப் அக்தர் ஃபுல் ஃபார்மில் இருந்தார்! 7வது ஆளாக இறங்கி 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்! அதோடு மட்டும் அல்லாது 3 ஓவர்கள் வீசி 35 ரன்கள் வாரி வழங்கி அந்த மேட்சில் பாகிஸ்தான் வெற்றிக்கு வழி வகுத்தார்! இது போதாதா? அப்பொழுதே ஓரங்கட்டப்பட்டார்! 

அதன்பிறகு 20 மாதங்களுக்கு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. மிகவும் போராடி தன்னை நிரூபித்து மீண்டும் டிசம்பர் 2000-இல் ஜிம்பாவே அணிக்கு எதிரான சீரியஸில் அணியில் இணைந்தார். ஆனாலும் சொல்லிக்கொள்ளும்படி அவரது ஆட்டம் அமையவில்லை. அதன் பிறகுதான் ஒரு திருப்புமுனை ஆட்டம் அவருக்கு அமைந்தது. இந்திய அணிக்கும்தான்! 2001 மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 6 வது ஆளாக இறங்கி 54 பந்துகளில் 58 ரன்களை விளாசி இந்தியா 315 ரன்களை தொட காரணமானார்! அதுபோக இரண்டாவது பேட் செய்த ஆஸ்திரேலியாவை 255 ரன்களுக்குள் சுருட்ட இவர் எடுத்த 3 விக்கெட்டுகளும் காரணமானது! அன்று தொற்றிக்கொண்டது ஷேவாக் ஜுரம் இந்திய ரசிகர்களுக்கு.

அதே வருடம் இலங்கையில் நியூசி அணியுடன் சேர்ந்து ஒரு முத்தரப்பு தொடர். இவருடைய நல்ல நேரமா அல்லது அணியின் நல்ல நேரமா என்று தெரியவில்லை. டெண்டுல்கர் காயம் காரணமாக அத்தொடரில் பங்கேற்கவில்லை. மறு யோசனையே இல்லாமல் தன்னுடன் சேர்ந்து ஷேவாக்கை ஓப்பனிங் இறங்க சொல்லிவிட்டார் கங்கூலி! அந்த முத்தரப்பு தொடரில் இந்தியா நியூசி பைனல். நியூசி முதலில் பேட் செய்து 264 ரன்கள் குவித்தது. முதல் முறையாக ஓப்பனிங் இறங்குறார் ஷேவாக்! அதுவும் ஒரு பெரிய சேசிங்கில்(அப்போது இந்த ரன்களே பெரிய சேசிங்தான்). ஷேவாக் நியூசி பந்து வீச்சை வெளுத்து வாங்கி 69 பந்துகளில் 100 ரன்களை தொட்டார்! இதுவே அவரது முதல் சதமும் கூட! இவரும் கங்கூலியும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 143 ரன்களை குவித்து சாதனை செய்தது.

இனிதான் பிரச்சனையே! டெண்டுல்கர் காயத்தில் இருந்து மீண்டு வந்தார். ஓப்பனிங் யார் யார் இறங்குவது என்று ஒரு புதிய பிரச்னை முளைத்தது. கங்குலி முடிவின் படி சில போட்டிகளில் டெண்டுல்கர் மூன்றாவது ஆளாக இறங்கினார். ஆனால் இதுவே இருவருக்கும் இடையில் ஒரு பெரிய பனிப்போராக வெடித்தது. பிரச்சனையை வளர்க்க விரும்பாத கங்குலியும் அணியின் நன்மை கருதி தனது ஓப்பனிங் இடத்தை ஷேவாக்குக்கு விட்டுத்தந்து தான் மூன்றாவது ஆளாக இறங்க ஆரம்பித்தார். மிகப்பெரிய ஜாம்பவான் என்று புகழப்படும் சச்சின் சறுக்கியது இந்த விஷயத்தில்தான்! இதைப்பற்றி ஷேவாக்கிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது "எந்த இடத்தில் ஆடுகிறேன் என்பது எனக்கு முக்கியம் அல்ல, கேப்டன் ஆடசொல்லும் பொசிசனில் ஆடுவேன், எனக்கு தேவை பேட் ஒரு பிட்ச் ஆகி வரும் பந்து அவ்வளவுதான்!" என்றார். இவரது இந்த வார்த்தை இளைஞர்கள் மத்தியில் இவரை இன்னும் உயரத்தில் தூக்கி வைத்தது!

இதன்பிறகு இவர் தொட்டதெல்லாம் பொன் எனபது போல அணி தோற்றாலும் ஜெயித்தாலும் இவரது ஆட்டம் இதே போல பொறி பறந்து கொண்டிருந்தது! 69 பந்துகளில் அடித்த சதம் சாதனையை 60 பந்துகளில் அடித்து அவரே முறியடித்துக்கொண்டார்! இந்திய அளவில் இந்த சாதனையை சமீபத்தில்தான் கோலி முறியடித்தார். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் இந்திய அளவில் மிக விரைவாக 150/200/250/300 ரன்களை தொட்டவரும் இவர்தான் இதுவரை! 2004இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 294இல் இருந்து மெதுவாக ஓடி ஓடி 300 எடுப்பார் என்றே பார்த்துக்கொண்டிருகையில் திடீரென்று இறங்கி வந்து ஒரு சிக்ஸ் அடித்து 300த் தொட்டது இந்திய ரசிகர்களுக்கு ஒரு சிலிர்ப்பான அனுபவம். மீண்டும் 2008இல் ஒருமுறை சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 300 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார் அதுவும் 278 பந்துகளில்! டெஸ்ட் ஆட்டங்களில் இது புதுசு!
டெஸ்ட் மேட்ச் என்றாலே பேட்டுக்கு பந்தை வைத்து ஒத்தடம் கொடுக்கும் வேலை என்ற நிலையை மாற்றி 20/20 க்கு இணையான விறுவிறுப்பை கொண்டு வந்தவர் இவர்தான். 2006 மற்றும் 2007 களில் இவரது மோசமான பார்ம் காரணமாக டீமில் இருந்து நீக்கும் நிலைமைக்கு வந்தார். மீண்டும் 2007இல் உலகக்கோப்பைக்கு டிராவிடின் ஆதரவினால் உள்ளே வந்தார். ஆனாலும் அதில் ஒரு செஞ்சுரி அடித்ததோடு இந்திய அணியும் வெளியேறியதால் அவருடைய மோசமான பார்ம் தொடர்ந்தது. மீண்டும் அவர் அணிக்குள் வர இரண்டு ஆண்டுகள் ஆகியது. 2009களின் ஆரம்பத்தில்தான் அவர் அணிக்கு வந்தார். வந்த வேகத்தில் நியூசிக்கு எதிராக 60 பந்துகளில் சதம் அடித்து தனது பார்ம் முழுவதும் பறிபோகவில்லை என்பதை சொல்லாமல் சொல்லினார்! இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் 2011இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் 219 ரன்கள் விளாசி சச்சினின் சாதனையை முறியடித்தார்! இவரது இந்த பார்ம் 2013இல் குறையத் தொடங்கியது. அவரது உடல் தகுதியும் ஒத்துழைக்கவில்லை. 2013 பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டவாது ஒருநாள் போட்டியுடன் இவரது ஒருநாள் போட்டி முடிவுக்கு வந்தது. தனது முதல் போட்டியில் விளையாடிய பாகிஸ்தானே அவருக்கு கடைசி போட்டியாகவும் அமைந்தது ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை. அதே வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி அவருக்கு கடைசி போட்டியாக அமைந்துவிட்டது.
ஆனால் அவரது சாதனைகள் என்றென்றும் அவர் பெயரை சொல்லிக்கொண்டேதான் இருக்கும். இனி இந்திய அணிக்கு வரும் ஓப்பனர்களுக்கு ஷேவாக்கின் ஆட்டமே ஒரு பாடப்புத்தகம். எல்லாவிதமான கிரிக்கெட்டுக்கும் தன்னை தயார்படுத்திக்கொண்டு அனைத்திலும் ஓப்பனராக இறங்கி முத்திரை பதித்ததில் ஹெய்டன், கில்க்ரிஸ்ட்க்கு அடுத்து இவர்தான் என்று தைரியமாகக் கூறலாம்! உங்களை வழியனுப்ப தயாராகிவிட்டோம் ஷேவாக். ஆனாலும் இனி வரும் தலைமுறைக்கு உங்கள் அனுபவத்தையும் ஆட்ட நுணுக்கத்தையும் கொடுக்க தவறாதீர்கள்! Good Bye Sehwag! 

Image credits Google.

Friday, 24 April 2015

கூவம்!
கூவம்.... இந்த வார்த்தையை கேட்டதுமே மூக்கைப்பிடிக்கும் மக்கள்தான் அதிகம் நம் தமிழ்நாட்டில்! சென்னையைப்பற்றி தெரிந்தவர்களுக்கு கூவத்தைப்பற்றி தெரியாமல் இருக்காது. ஆனால் கூவத்தின் மூலம் எத்தனைபேருக்கு தெரியும்? கூவம் ஆறு சென்னையின் மேற்கு பகுதியில் 65 கி.மீ. தூரத்தில் கேசவரம் அணையில் இருந்து தொடங்குகிறது. இந்த ஆறு கடம்பத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் கூவம் கிராமத்தில் தொடங்கி மணவாள நகர், அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு, கண்ணார்பாளையம், பருத்திப்பட்டு, பூவிருந்தவல்லி, மதுரவாயல், அமைந்தக்கரை வழியாக ஓடி சென்னைக்குள் வருகிறது. சென்னையில் அடையாறு, பக்கிங்காம், ஓட்டேரி ஆகிய கால்வாய்களின் மூலமாகவும் மேலும் நந்தனம், மாம்பலம், அரும்பாக்கம், விருகம்பாக்கம், கொடுங்கையூர் ஆகிய ஓடைகளின் மூலமாக சாக்கடைகளோடு சங்கமித்து சென்னைக்குள் மட்டும் 18 கி.மீ. பயணம் செய்து கடலில் கலக்கின்றது!
 
கூவத்தின் வரலாறு இப்படி என்றால் அதன் பெருமைகளும் குறைந்ததல்ல, இன்று எல்லோரும் விடுமுறையோ, ஓய்வோ.. எதுவாக இருந்தாலும் குடும்பத்தோடு பீச்.. மாயாஜால் என்று போவதைப்போல் 1820 - களில் கூவம் கரைதான் மக்களுக்கு குடும்பத்தோடு பொழுதுபோக்க சிறந்த இடம்! அதுமட்டும் அல்ல.. இது ஒரு புனிதமான ஆறாகவும் கருதப்பட்டது! புதுப்பேட்டை கோமலீஷ்வரன் பெட்டியில் உள்ள கூவம் ஆற்றில் வந்து குளித்துவிட்டுத்தான் கந்தக்கோட்டம் முருகனை தரிசிக்கச்செல்வாராம் வள்ளல் பச்சையப்பர்! அன்றைய சென்னை ஆளுநர் கிராண்ட் டஃப் கோவம் கரையோரத்தில் உள்ள மஞ்சள் அரளி மரங்களில் இருந்து நீரில் விழும் அரளி மலர்களை பார்க்க ஆனந்தமாக உள்ளது என்று கூறி மகிழ்ந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன! இத்தனை பெருமைகளை கொண்ட கூவம் ஆறு சாக்கடையாக மாறியதன் பரிணாம வளர்ச்சி என்ன? அதையும் கொஞ்சம் பார்ப்போம்...
 
கூவம் ஆறு சீரழிந்ததின் முதல் படி என்று பார்த்தால்... 1934 - இல் இந்தியாவில் விளையும் பருத்தியும் மூலம் துணிகளை உற்பத்தி செய்து பிரிட்டனுக்கு அனுப்பவேண்டும் என்று பிரிட்டனில் இருந்து அன்றைய கவர்னர் மார்ட்டின் பிட் - க்கு ஒரு உத்தரவு வந்தது! உடனே அவர் பல பகுதிகளில் இருந்து நெசவாளர்களை அழைத்து வந்து சிந்தாகிரிப்பேட்டையில் குடி அமர்த்தினார். ஒரு நல்ல நாளாக பார்த்து நெசவுத்தொழில் சாயங்கள் மூலம் கழிவு நீர் கூவத்தில் பாய ஆரம்பித்தது! இதுதான் பிள்ளையார் சுழி! இதன் தொடர்ச்சியாக இன்றைய கூவத்தின் நிலைமை என்ன? சுமார் 700 துணைக்கால்வாய்களின் மூலமாக சென்னையின் கழிவுநீர் கூவத்தில் சங்கமம் ஆகிறது. அதுபோக சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளின் மூலமாக சுமார் 40 டன் மருத்துவ கழிவுகள் கூவத்தில் கொட்டப்படுகின்றது! மேலும் சென்னையில் உள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிற்ச்சாலைகளின் மூலமாக எந்த வித கட்டுப்பாடும் இன்றி அல்லது கட்டுப்பாடு இருந்தாலும் சட்டத்துக்கு புறம்பாக கழிவுகள் கூவத்தில் கலக்கின்றன! கூவம் ஆற்றின் கரைகளில் மட்டும் சுமாராக 5000 குடும்பங்களுக்கு மேல் குடிசை போட்டு  வசித்து வருகின்றனர்! இவர்களின் அனைத்து கழிவுகளும் நேரடியாக கூவதில்தான் சங்கமம்! இப்படி போட்டி போட்டு கூவத்தை ஒரு சாக்கடையாக மாற்றியதில் அனைவருக்குமே சமமான பங்கு உண்டு!

 


கூவம் சாக்கடையாக மாறியதன் பரிணாம வளர்ச்சியை பார்த்தோம்! அதனை தூய்மை படுத்த நமது அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்னனென்ன? கொஞ்சம் சுருக்கமாக பார்த்துவிடுவோம்... 1960 - இல் சென்னை மாகாண அரசு திட்ட மதிப்பீட்டில் அறிக்கை தயார் செய்தது. அதன்படி சேத்துப்பட்டு அருகே அடையாறை கூவத்துடன் இணைக்கலாம் என்று அதில் பரிந்துரை செய்தது. திட்டம் முடிந்ததோ இல்லையோ ஆனால் அதற்குள் காங்கிரஸ் முடிந்தது! அடுத்து அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது, 1967 - இல் ரூ. 118 லட்ச ரூபாய் மதிப்பில் கூவத்தை சுத்தப்படுத்த திட்டத்தை தொடங்கி வைத்த அண்ணா பேசும்போது லண்டனுக்கு தேம்ஸ் நதிபோல சென்னைக்கு கூவம் என்று மாறும் நிலை வர வேண்டும் என்று தன் ஆசையை சொன்னார்! அதன்படியே 1973 - இல் படகுகள் விடப்பட்டன! ஒவ்வொரு படித்துறையிலும் பாரி..ஓரி என தமிழக கடையேழு வள்ளல்களின் பெயரில் மண்டபங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இன்று? இவையெல்லாம் வெறும் ஆவணமாகத்தான் காட்சியளிக்கின்றன!


1973 ல் படகு திட்டத்தை தொடங்கி வைத்த அப்போதைய முதல்வர் கருணாநிதி!

மேலும்.. 1976 - இல் ம.பொ.சி. தலைமையில் அமைந்த ஒரு குழு ரூ.22 கோடியில் திட்டம் தீட்டி செயல்படுத்தியது. அதுபோக 1941 - இல் செவன்  டிரென்ட்  என்ற ஆலோசனை குழுமமும், மேக் டொனால்ட் குழுமமும் ரூ.34.8 கோடியில் திட்டம் தீட்டியது! 1998 - இல் அரசு பொதுப்பணித்துறை மூலம் 19 கோடி ரூபாய்க்கு திட்டம்.. 2000 - இல் தமிழக அரசு சார்பில் ரூபாய் 700 கோடியில் திட்ட மதிப்பீடு என ஒவ்வொரு முறையும் திட்டத்தின் மதிப்பீடு கூடியதே தவிர கூவத்தில் கழிவுநீர் குறையவே இல்லை!


1970ல் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் S.J.சாதிக் பாட்ஷா பார்வையிட்டபோது!
இவ்வாறு தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கடைசிக்கட்டமாக 2009 - இல் கருணாநிதி தலைமையில் ஆன அரசு கூவத்தை சுத்தப்படுத்த ரூபாய் 1200 கோடி செலவில் திட்டம் தயார் செய்து சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி இரண்டு ஆண்டுகளில் திட்ட வரையறை இறுதி செய்து அடுத்த ஆறு ஆண்டுகளில் இதனை செய்து முடிப்பதாக ஒப்பந்தம் போட்டு முதல்கட்டமாக ரூ.23 கோடி மதிப்பில் முதற்கட்ட பணியை துவக்கினர். மேலும் நிதி உதவிக்காக ஆந்திராவில் இருந்த சாய்பாபாவை அப்போதைய துணைமுதல்வர் ஸ்டாலினும் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் சந்தித்தனர். சாய்பாபாவும் 15 கி.மீ. தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் ஆகும் செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தாக செய்திகள் வெளியாயின. துரதிஷ்டவசமாக அவர் இன்று உயிரோடு இல்லை மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் நடந்துவிட்டது! பதவியேற்ற புதிதில் ஜெயலலிதா தலைமைலான அரசு இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி  வைத்துள்ளதாக அறிவித்தது.  இதைப்பற்றி அப்போது பதவியேற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் கூறுகையில் முந்தைய அரசு இதற்க்கான அடிப்படை ஆய்வுகளை செய்யவில்லை என்றும் அதனால்தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் விரைவில் மாற்று திட்டத்தை முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறியிருந்தார்! ஆனால் இதோ ஆட்சியே முடியபோகிறது இன்னும் மாற்றுத் திட்டம் வந்தபாடில்லை. அதுசரி பாவம் தமிழக அமைச்சர்களுக்கு மண் சோறு சாப்பிடவும் காவடி தூக்கி அங்கப்பிரதட்சணம் செய்யவே நேரம் போதவில்லை! இதை கவனிக்கவா நேரம் இருக்க போகிறது!

அவர்கள் என்னவேனாலும் செய்துவிட்டுப்போகட்டும். அடுத்த ஆட்சியிலாவது இதற்கான நடவடிக்கை உண்டா என்று பார்ப்போம். ஆட்சி மாறுவதற்குள் கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டம் சாத்தியமா? அதற்க்கு அடிப்படையாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்! இதேபோல சிங்கப்பூரில் என்ன வழிமுறைகளை கையாண்டார்கள் என்பதைப்பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடுவோம்! நீங்களே பார்த்தீர்கள்.. இதுவரை தவணை முறைகளில் பல ஆயிரம் கோடிகளை விழுங்கி விட்டு நான் இப்படித்தான் என்று அடம்பிடித்து ஓடிக்கொண்டிருகிறது கூவம்! கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட 1200 கோடி ரூபாய்  திட்டம் தவணை முறைகளில் கொட்டிய பணத்தை மொத்தமாக கொட்டப் போகிறார்கள் என்பதே கசப்பான உண்மை! கரைகளை அகலப்படுத்தி அங்கு உள்ள கழிவுகளை அகற்றினால் மட்டும் கூவம் தூய்மை ஆகிவிடாது! இந்த வேலையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.. முதலில் கூவத்தில் கலக்கும் கழிவுகளின் மூலத்தை அறிந்து அவற்றை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.. இன்னும் புரியும்படி சொன்னால் பாம்பு கடித்தவனுக்கு கடிவாய்க்கு முன்னாள் கட்டுபோடுவதுபோல! விஷம் ஏறிவிட்டது..சிகிச்சை எடுத்துதான் ஆகவேண்டும்.இருந்தாலும் மேலும் விஷம் ஏறாமல் கட்டுபோடுவோம் அல்லவா? அதுபோலதான்! கூவம் கெட்டுவிட்டது... சுத்தப்படுத்திதான் ஆகவேண்டும்.. அதற்குமுன் மேலும் கழிவுகள் சேரும் பாதையை அடைக்க வேண்டும்! ஆனால் இதுவரை அதற்க்கான முயற்சிகள் எடுக்கப்படவே இல்லை.. சரி..சிங்கப்பூரில் இது எப்படி சாத்தியமாயிற்று? கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்...
 
சிங்கப்பூரிலும் ஆறுகள் ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னாள் நம் கூவத்தை விட மோசமாக இருந்தது! அதனை தூமைப்படுத்தியது என்பது ஏதோ ஒரே இரவில் மேஜிக் செய்வது போல நடக்கவில்லை! அவர்களும் இன்றைய நிலையை அடைய பத்து வருடங்கள் போராட வேண்டி இருந்தது! அப்போதைய சிங்கபூர் அரசாங்கம் நீண்ட தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தீட்டி அதே நேரம் மக்களுக்கும் பாதிப்பில்லாமல்.. கம்பி மேல் நடப்பதைப்போல் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து இன்றைய நிலையை அடைந்தது!
 
It should be a way of life to keep the water clean,
to keep every stream, every culvert, every rivulet,
free from unnecessary pollution. In ten years let us
have fishing in the Singapore River and fishing in
the Kallang River. It can be done.
 
இது என்ன வரிகள்...யார் சொன்னது தெரியுமா? சிங்கபூர் அரசாங்கம் ஆறுகளை தூய்மைபடுத்த ஆரம்பிக்கும்போது அதாவது 1977 - இல் அப்போதைய பிரதமர் லீ க்வான் யூ சொன்ன வார்த்தைகள் இது! எவ்வளவு தன்னம்பிக்கை தெறிக்கிறது பாருங்கள்.. வார்த்தை அலங்காரம் இல்லை.. வெட்டி சபதம் இல்லை... ஆனால் பத்து வருடங்களில் செய்துமுடித்தார்! அதாவது 1987 - களில் அவரது கனவு நிறைவேறியது! எப்படி சாத்தியமாயிற்று?
 
1 . முதலில் குடியிருப்புகள்.. முறையான கழிவுநீர் செல்ல வழியில்லாமல் முறையான கழிப்பிட வசதியில்லாமல் அங்கு குடியிருந்த சுமார் 27000 குடும்பங்கள்தான் அவர்களது முதல் பார்வை. அதற்காக அவர்களை அப்படியே காலி செய்து தவிக்கவிடாமல் அவர்களுக்கு முறையான மாற்று இருப்பிடம் ஏற்ப்பாடு செய்து கொடுப்பது.
 
2 . உணவுப்பொருட்கள் உற்பத்தி நிலையம், வாகன பழுதுபார்க்கும் கடைகள் போன்றவற்றிற்கு தனித்தனி தொழிற்பேட்டைகளை அமைத்துகொடுப்பது. அவற்றின் கழிவுகள் முறையான சுத்திகரிப்பிற்கு பிறகே கால்வாயில் கலப்பதை உறுதிசெய்வது.
 
3 . அனைத்து பன்றி, மீன்  பண்ணைகளையும் மற்றும் வாத்துப் பண்ணைகளையும் ஒதுக்குபுறமாக அமைத்து அவற்றை இன்றுவரை முறையாக கண்காணித்து வருவது.
 
4 . அடுத்து நடைபாதைக்கடைகள்.. இவற்றால் சாலை போக்குவரத்து பாதிக்கபடுவது மட்டுமன்றி.. முறையான பாதைகள் இல்லாமல் கழிவுகள் அப்படியே கலப்பதை தடை செய்வதற்காக இவர்களை ஒருங்கிணைத்து ஒரு கடை தொகுதியை ( Hawkers Centre ) அரசாங்கமே அமைத்து கொடுத்தது.. இதில் முறையான குடிநீர், கழிவுநீர் பாதைகளோடு  வடிவமைத்து கொடுத்தது. இவ்வாறு அப்போதே சுமார் 5000 பேருக்கு அமைத்து கொடுத்தது.
 
5 . அடுத்து காய்கறி மற்றும் பழக்கடைகள்.. இவற்றிற்கு முறையான இடங்களை ஏற்படுத்திக்கொடுத்து அவற்றின் கழிவுகளை சுத்தப்படுத்த வசதிகளையும் ஏற்படுத்திகொடுத்து அவற்றை இன்றளவும் கண்காணிப்பது.
 
6 . ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் குப்பைகளும் அகற்றப்பட்டு அதன் கரைகளை அகலப்படுத்தியது.
 
7 . கரையோரங்களில் உள்ள குப்பையான கழிவுகள் அகற்றப்பட்டு அவற்றை ஆற்று மணல் கொண்டு நிரப்பியது.
 
8 . கழிப்பிட வசதியில்லாத மக்கள் கழிவுகளை ஆற்றில் கலப்பதை தவிர்க்க குடியுருப்புகளை அரசாங்கமே ஏற்படுத்தி கொடுத்தது.
 
இப்படி பல வழிகளை சிங்கபூர் அரசாங்கம் கையாண்டது..அதுமட்டும் அல்லாமல் இவற்றையெல்லாம் கண்காணிக்க முறையான அரசாங்க அமைப்புகளை உருவாக்கி அவற்றை திறம்பட நிர்வகித்து வருகின்றது. இப்படி முழு உள் கட்டமைப்பையே மாற்றுவது சென்னையில் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. உண்மைலே கூவத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தால் ஆட்சியாளர்கள் முதலில் பாதாள சாக்கடை திட்டத்தை முறையான திட்டங்களுடன் விரிவு படுத்த வேண்டும். என்னதான் சிங்கபூர் நிறுவனமாக இருந்தாலும் நமது அடிப்படை கொஞ்சம்.. இல்லை நிறையவே மாறவேண்டும்.
 
சென்னையில் கழிவறை வசதி இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலையை கொண்டுவரவேண்டும். மேலும் அனைத்து வீடுகளிலும் குளிக்கும் நீரும் பாதாள சாக்கடையில் கலப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை குழாய்களை முறையாக பராமரிக்கவும் பழுது பார்க்கவும் வேண்டும். இதற்க்கு சிங்கப்பூரில் உள்ளதைப்போல் அவற்றை 30 வருடங்களுக்கு மேல், 10 லிருந்து 29 வருடங்கள், 10 வருடங்களுக்கு குறைவானது என்று வகைப்படுத்தினால் பராமரிக்கவும் பழுது பார்க்கவும் எளிதாக இருக்கும்.. மேலும் பாதாள சாக்கடைகளை பழுது பார்க்க மனித உழைப்பை முழுவதும்  பயன்படுத்தாமல் நவீன தொழில்நுட்ப்பத்தை பயன்படுத்தலாம். இந்த நவீன தொழில்நுட்பம்(Sewer Rehabilitation) என்பதைப்பற்றி  தனி கட்டுரையே எழுதலாம். அது ஒரு கடல். அது இந்த கட்டுரைக்கு அவசியமில்லை. ஆட்சி அமைக்கும் அரசியல் கட்சிகள் வோட்டு அரசியலுக்காக ஆக்கிரமிப்புகளையும், தொழிற்சாலை கழிவுகளையும் கண்டுகொள்ளாமல் விடாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.


 
புறநகர்களில் மண் அள்ளுவதை தடுத்து பள்ளமாகாமல் தடுக்க வேண்டும். அப்போதுதான் நீரோட்டத்தில் கழிவுகள் அடித்து செல்ல வாய்ப்பு உண்டு. மேலும் ஆற்றின் கரைகளில் வணிக வளாகங்களையும் விடுதிகளையும் அரசாங்கமே ஏற்படுத்தி அதன்மூலம்  வரும்  வருமானத்தை  இதன் பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்! இப்படி சென்னையின் உட்க்கட்டமைப்பையே முழுதாக மாற்றுவது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை? ஆனால் கண்டிப்பாக இதெல்லாம் சாத்தியமானால் மட்டுமே கூவம் உண்மைலேயே மணக்கும். இல்லையென்றால் அரசியல்வாதிகளின் வார்த்தைகளும் இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்படும் பணத்தால் அவர்கள் வாழ்க்கையும் மட்டும்தான் மணக்கும்! அவர்கள் கூவத்தை கடக்கும்போது காரின் கண்ணாடியை ஏற்றிக்கொண்டு செல்லட்டும் நாம் வழக்கம் போல் மூக்கை பிடிக்க பழகிக்கொண்டு நம் வாரிசுகளுக்கும் பழகிக்கொடுப்போம்!


Friday, 16 January 2015

"ஐ" - விமர்சனம்!"ஐ" படத்தை பத்தி ரெண்டுநாளா இணையத்துல வந்த விமர்சனங்கள பார்த்துட்டு படம் பார்க்க போகலாமா வேண்டாமான்னு ஒரு குழப்பம் இருந்தது! எப்பிடி இருந்தாலும் சரின்னு சங்கர் மேஜிக்கை நம்பி டிக்கெட் எடுத்து போயாச்சு! வழக்கம் போல பழைய கல் தோசைல வெஜிடபில்ஸ் தூவி பிஸான்னு கொடுக்க ட்ரை பண்ணியிருக்கார்! அத விக்ரம் ப்ளேவர் வச்சு கொடுத்ததால வெற்றியும் பெற்றிருக்கார்!

கதைன்னு பார்த்தா ஒரு அப்பாவி + நல்லவன் ஒரு பணக்காரி + நல்லவள காதலிக்கிறான்! இந்த ரெண்டு பேரையும் பிடிக்காத நாலு பேர் சேர்ந்து நம்ம ஹீரோவோட அழக சிதைச்சு அடையாளம் தெரியாம கோரமா ஆக்குறாங்க! இது ஒரு வியாதின்னு நம்பிகிட்டு இருக்க நம்ம ஹீரோ இது சதின்னு தெரிஞ்சு வில்லன்கள பலி வாங்குறதுதான் கதை! எங்கயும் கேக்காத புது கதையா இருக்குல்ல? ஆனா இதை திரைக்கதையா எடுத்த விதத்துலதான் சங்கர் தெரியுறார்!

விக்ரம்! இந்த படத்துல ஒரு நடிப்பு அசுரனாவே மாறியிருக்கார்! வடசென்னைல வாழும் ஜிம் கோச் லின்கேசனாகட்டும், அதே லின்கேசன் மாடல் லீ யாக மாறுவதாகட்டும் மனிதர் உழைப்பை அள்ளிக்கொட்டியிருக்கிறார்! ஆனால் விக்ரம் சென்னைத் தமிழ் பேசுவதுதான் பிஸாக்கு ஊருக்காய் வச்ச மாதிரி தனியா உறுத்துது! வைரஸ் தாக்கம் உடம்புல பரவ ஆரம்பிச்சதும் ஒரு நடுக்கத்தோட உடம்பெல்லாம் ஒட்டி டாக்டர வந்து பார்த்து பேசும் இடம் கிளாஸ்! விக்ரமத் தவிர இதுல யாரும் இவ்ளோ சிறப்பா பண்ணியிருக்க முடியுமான்னு யோசிக்க முடியல! 
எமி ஜாக்சன்! கதைப்படி மாடலிங் பொண்ணா வர்றாங்க! அதுக்கு சிறப்பான தேர்வுதான்! ஆனா அந்த முகத்துல எந்த உணர்ச்சியையும் பார்க்கமுடியல! அதுசரி முகத்தைமட்டும் பார்க்கிற மாதிரி டைரக்டர் எந்த சீனுமே வைக்கல! பட் கடைசில விக்ரம அந்த நிலையிலும் ஏத்துக்க முன் வர்றப்ப நம்ம ஈர்க்குறாங்க!  நம்ம ஊர் கதாநாயகிங்க கதைக்கு தேவை அதனால அப்பிடி நடிச்சேன்னு பண்ற பில்டப்பையெல்லாம் இவங்க அனாசயமா பண்ணியிருக்காங்க! உங்கள் சேவை எங்களுக்கு தேவை அம்மணி!

சந்தானம்! முதல் பாதி பெரும்பகுதியை கடத்துவதற்கு இவர் உதவுகிறார்! அதுவும் பவர்ஸ்டாரை பார்த்தல் இவருக்கு கவுண்டர் ஓவர்டைம் வரும்போல! அதுவும் எமி பிகினியில் இருக்கும்போது உங்க கூகுளை மூடுங்கன்னு சொல்லும்போது தியேட்டர் அதிர்கிறது! இடைவேளைக்கு பிறகு இவருக்கு வேலை இல்லை! ஆனால் இவரும் விக்ரமும் சேர்ந்து திருநங்கையை கிண்டல் அடிப்பது முகம்சுழிக்க வைக்கிறது! அவரைப்பற்றி அடிக்கும் கமெண்ட்களும்! தவிர்த்திருக்கலாம்! 

சுரேஷ்கோபி, ராம்குமார் இன்னும் சிலர் வந்து போகிறார்கள்! அஞ்சானை விட காமெடியான சஸ்பென்ஸ் வச்சுருக்கார் இயக்குனர் இதுல! அதை சஸ்பென்ஸ் இல்லாமல் சொல்லியே திரைக்கதையை நகர்த்தியிருக்கலாம்! முற்பாதியில் வரும் இரண்டு சண்டைக் காட்சிகளுமே ரொம்ப நீநீநீளம்! எப்படா சண்டை போட்டு முடிப்பீங்கன்னு அலுக்க வைக்கிறது!  சில இடங்களில் கிராபிக்ஸ் ஓவர் டோஸ் ஆகி அலுக்க வைக்கிறது! மெர்சலாயிட்டேன் பாடல் ஒரு உதாரணம்!

காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லை! எமிக்கு விக்ரம் மேல் காதல் வருவதற்கு சரியான காட்சிகள் இல்லை! ப்ளாஸ்பேக்கும் ரியலும் மாறி மாறி வருவதால் சில இடங்களில் குழப்பம் வருகிறது. "அதுக்கும் மேல" ன்னு சொல்லி வில்லன்களுக்கு தண்டனை கொடுப்பது முதலில் ரசிக்க வைத்தாலும் அத்தனை பேரையும் கோரமாமாக காண்பிக்கும்போது அருவருப்பாக வருகிறது. இதுக்கும் மேல யோசிச்சிருக்கலாம்!  கிளைமேக்ஸ் கொஞ்சம் முன்னாடி அந்த எதற்கு அந்த சோலோ மெலொடி? படத்தின் வேகத்தை அப்பிடியே தடுத்து நிறுத்துகிறது! 

பல லாஜிக் மீறல்கள், கேள்விகள் இருந்தாலும் அதையெல்லாம் மறக்க வைக்கும் கலை ஷங்கருக்கு நன்றாகவே தெரிகிறது! இவருக்கு இன்னும் அசுர பலமாய் ஏ.ஆர்.ரஹ்மான் பிசிஸ்ரீராம் கூட்டணி! பாடல்கள் ஏற்கனவே ஹிட்! பின்னணியிலும் மிரட்டியிருக்கிறார்! பிசிஸ்ரீராம் சொல்லவே வேணாம்! சைனாவின் அழகாய் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார்! 

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போகிறவர்களுக்கு இந்தப்படம் ஏமாற்றாது! குழந்தைகளுடன் பார்க்க முடியாது! இன்னும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் 20நிமிடங்களுக்கு கத்திரி போட்டால் இன்னும் அழுத்தமாகப் பதிவான் இந்த "ஐ"
மற்றபடி இது இணையப் புலிகளுக்கான படம் அல்ல இது! 

Thursday, 18 September 2014

பேச்சுலர்ஸ் சமையல்! - திருக்கை மீன் குழம்பு!

என்னைய மாதிரி பேச்சுலர்களுக்கு... வெயிட்.. என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியும்! கழுதை வயசு ஆகியும் இன்னும் என்ன பேச்சுலர்ன்னுதானே? அட தங்ஸ் ஊருக்கு போய்ட்டாங்கப்பா.. இங்க இருந்தா மட்டும்? அப்பவும் சமையல் நாமதேன்! (வேற வழி?) என்னதான் கடைல நான்வெஜ் சாப்ட்டாலும் நம்ம வீட்டுல வாங்கி அத சுத்தமா கிளீன் பண்ணி சமைச்சு சாப்டரதுலதான் தனிருசியே இருக்கும்னு நீங்க நினைச்சா நீங்களும் என் நண்பனே! வாங்க உங்களுக்காகத்தான் இந்த பதிவே! புருஷன் மேல பாவப்பட்டு இனியாவது நல்ல சாப்பாடு சமைச்சு போடுவோம்னு நினைக்கிற அம்மணிகளும் இந்தப் பதிவ கண்டுக்கலாம்!

திருக்கை மீன் கேள்விப்பட்டுருப்பீங்க, நிறைய பேருக்கு அதை முறையா எப்பிடி சமைக்கணும்னு தெரியல. அந்த குறை இனி இருக்காது. . விளக்கம் குறைவாகவே கொடுக்குறேன், அடுத்தடுத்த ஸ்டெப்களை புகைப்படமாகவே தர முயற்சி பண்ணியிருக்கேன் பார்த்துக்கங்க. சரி.. முதலில் தேவையான பொருட்கள பார்த்துருவோம். 

திருக்கை மீன்       -      ஒரு கிலோ

சின்ன வெங்காயம் - தேவையான அளவு

பூண்டு -                           ஒரு முழு பூண்டை உரிக்காமல் நச்சு வைத்துக்கொள்ளவும்

பச்சை மிளகாய் -        தேவையான அளவு

மிளகுதூள்            -        கொஞ்சம் மிளகு எடுத்து மிக்சியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்

புளி                        -         தேவையான அளவு ஊற வைத்துக்கொள்ளவும்.

வெந்தயம் -                  தேவையான அளவு 

( கீழே உள்ள போட்டோவைப் பார்த்துக்கொள்ளவும் )அடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் காயந்ததும் (நல்லெண்ணெய்யாக இருந்தால் டேஸ்ட் நல்லா இருக்கும் ) வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் வெட்டி வைத்த பச்சை மிளகாய் பூண்டு எடுத்து போட்டுருங்க.சிறிது நேரத்தில் அதில் வெட்டி வச்ச வெங்காயம் எடுத்து போட்டு லேசா உப்பு சேர்த்து கொஞ்சம்  வதங்கும் வரை நல்லா கிண்டி விடுங்க. கீழ போட்டோ பாருங்க.

வெங்காயம் வதந்கிருச்சுன்னா இப்ப தக்காளிய போடலாம். தக்காளி போட்டு நல்லா வதங்க விடுங்க.தக்காளி வெங்காயம் நல்லா வதங்கி மிக்ஸ் ஆனதும் அதுல லேசா மஞ்சள் தூள் போட்டு கிண்டுங்க, கொஞ்சம் கிண்டுனதும் அதுல பொடி பண்ணி வச்ச மிளகுத் தூள போட்டு நல்லா கிண்டி விட்டு அடுப்ப சிம்ல வச்சு நல்லா வதங்க விடுங்க.கொஞ்ச நேரம் கழிச்சி அதுல மிளகாய் மல்லித் தூள் போட்டு நல்லா வதக்குங்க. ( நான் செட்டிநாட்டு ஆளு, காரம் கொஞ்சம் கூட போட்டுருப்பேன் போட்டோல! நீங்கவேணா கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாம்!) 
பொடி போட்டு நல்லா வதங்குனதும் அதுல கரைச்சு வச்ச புளித் தண்ணிய ஊத்தி நல்லா கிண்டி விடுங்க. உப்பும் சரி பார்த்துக்கங்க. இப்ப கொஞ்ச நேரம் அடுப்ப கொஞ்சம் கூட்டி வச்சு பாதிரத்த மூடி வச்சுருங்க. அது நல்லா கொதிச்சு கொஞ்சம் வத்தி வரும் நேரத்துல கிளீன் பண்ணி வச்சுருக்க மீன எடுத்து அதுல போட்டுருங்க. கீழ உள்ள போட்டோஸ் பாருங்க.

மீன் போட்டதும் அடுப்ப சிம்ல வச்சு மூடி வச்சுருங்க. கொஞ்ச நேரத்துல வெந்துரும். மீன் வெந்ததும் ஒரு நாலு பல்லு பூண்ட நச்சு அதுல போட்டு (கொஞ்சம் கொத்தமல்லி இருந்தாலும் சேர்த்து போடலாம்) மூடிட்டு அடுப்ப அமத்திருங்க. உடனே சாப்பிடாம ஒரு அரை மணி நேரமாவது வெயிட் பண்ணுங்க. இப்ப திருக்கை மீன் குழம்பு தயார்!மத்த மீன்களுக்கும் இதே பார்முலாதான். அந்த மிளகுதூள் மட்டும் தேவை இல்ல, மத்தபடி இதே மெதட்தான். ட்ரை பண்ணி பாருங்க. முக்கியமா கல்யாணம் ஆன ஆண்கள் சமைக்கும்போது உங்க தாங்க்ஸயும் பெண்கள் தங்கள் மாமியாரையும் நினைக்காமல் சமைப்பது நலம்! அப்பறம் மிளகாதூள கூட போட்டுட்டு காரம் அதிகமாயிருச்சுன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பு இல்ல!

அடுத்து உங்கள செட்டிநாட் சிக்கென் மாசாலாவோட சந்திக்கிறேன்!