Saturday, 16 March 2019

பொள்ளாச்சி பயங்கரம்!
பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரம் மனதை பதைபதைக்க வைக்கிறது. ஒருகட்டத்துக்கு மேல் அந்த வீடியோவில் அந்தப் பெண்களின் கதறலைக் கேட்க முடியவில்லை. கண்ணீர்தான் வருகிறது. உணர்ச்சி வேகத்தில் நாமே அந்த கொடூரர்களை ஏதாவது செய்யவேண்டும் போல தோன்றுகிறது. ஆனால் உணர்ச்சி வசப்படாமல் அல்லது சமூக வலைத்தளங்களில் மட்டும் பொங்கிக் கொண்டிருக்காமல் அந்தக் கயவர்களுக்கு எப்படி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதை பற்றி யோசிக்க வேண்டும்.

எனக்கும் இந்த தேர்தலில் அடிமை அதிமுக அரசு தோற்கவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் அதற்காக தயவுசெய்து இதை அரசியல் நோக்கத்தோடு மட்டும் பார்க்காதீர்கள். முதல் காரணம் வருகின்ற செய்திகள் இதில் அதிமுக என்ற கட்சியில் இருப்பவர்கள் மட்டும் இல்லை. கட்சி சார்பாக நாம் இங்கே சண்டை போட்டுக்கொண்டிருக்க அங்கே கட்சி பாகுபாடு இல்லாமல் பெண்களை வேட்டையாடி இருக்கின்றன அந்த நாய்கள். இரண்டாவது காரணம் இதை அரசியல் நோக்கத்தோடு மட்டுமே அணுகினால் தேர்தலுக்கு பிறகு இந்த விவகாரம் நீர்த்துப் போய்விடும். அல்லது கூட்டணியை பொறுத்து பலர் மௌனமாகி விடுவார். இப்போதே பிஜேபி, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளிடம் இருந்த எந்த எதிர்வினையும் இல்லை.

ஆகவே இதை தயவுசெய்து அரசியல் நோக்கத்தோடு அடையாளப்படுத்த வேண்டாம். இதைக் கண்டிக்க நாம் அரசியல்வாதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு அக்காவுக்கு தம்பியாகவோ அல்லது ஒரு தங்கைக்கு அண்ணனாகவோ இருந்தாலே போதும். அதுகூட வேண்டாம் குறைந்தபட்ச மனிதாபிமானம் மிக்க மனிதனாக இருந்தாலே போதும். இந்த சம்பவத்தை கொஞ்சம் பொறுப்புடன் அணுகுங்கள். சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை கண்ணை மூடிக்கொண்டு பரப்பாதீர்கள். மக்களிடம் பயத்தையும் பதட்டத்தையும் விதைக்காதீர்கள்.

இப்போது அரசியல் ஆக்கப்படுவது தேர்தலுக்கு பிறகு அனைவரின் ஜாதியும் தோண்டி எடுக்கப்பட்டு முக்கிய பிரச்சனையில் இருந்து விலகி உன் ஜாதியா என் ஜாதியா என ஜாதிச்சண்டை ஆகி விடும். ஆகவே இதை கண்டிக்க சாதி மதம் அரசியல் பார்க்காமல் அனைவரும் கை கோர்க்க வேண்டியது மிக அவசியம்.

முதல் உண்மை இந்த சம்பவத்தில் கைதானவர்கள் யாரையும் ஜாமீனில் விடுவிக்கவில்லை. புகார் செய்த பெண்ணின் அண்ணனை ஆள் வைத்து மிரட்டிய வழக்கில் மிரட்டப் போன நபர்கள் மட்டுமே நிபந்தனை ஜாமீனில் உள்ளனர். அதற்கு சேர்த்துதான் கைதானவர்கள் மீது மிரட்டல் வழக்கும் போடப்பட்டுள்ளுது. இரண்டாவது இது கற்பழிப்பு வழக்கு இல்லை. இருநூறு பெண்கள் முன்னூறு பெண்கள் கற்பழிப்பு என்று நீங்களே அந்தப் பெண்களை கேவலப்படுத்தாதீர்கள். பாலியல் துன்புறுத்தல் வழக்கு மட்டுமே இது.

இன்னொரு பயமும் இயற்கையாக எழுகிறது. இதுவரை கைப்பற்றப்பட்ட காணொளிகள் மற்றும் இன்னும் அந்தக் கயவர்களிடம் மீதமிருக்கும் காணொளிகள் பாதுகாப்பு பற்றியது. உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் நாட்டின் ராணுவ கோப்புகளே காணாமல் போகும் காலம் இது. அந்த காணொளிகள் வெளியில் கசிந்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை எதற்குப் பயந்து புகார் அளிக்காமல் இருந்தார்களோ அதற்கு அர்த்தமே இல்லாமல் அந்தப் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.

சமூக வலைத்தளங்களில் உள்ளவர்களின் பார்வைக்கு தப்பி தவறி அந்தக் காணொளிகள் வந்தால் "அக்கிரமத்தைப் பாரீர்" என்று கண்ணை மூடிக்கொண்டு பரப்பாமல் உங்களுக்கு அனுப்பிய அல்லது அப்லோட் செய்த தளத்தை பற்றி காவல் துறையில் புகார் அளியுங்கள். பாதிக்கப்பட்ட இருநூறு பெண்களை வைத்து, பெண்கள் எப்படி இருக்கவேண்டும் என்றும் அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் அட்வைஸ் மழை பொழியாமல் அவர்களை அப்படி ஆக்கிய அந்த ஆறு ஆண்களை வைத்து ஆண்களை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் அவர்கள் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்றும் உங்கள் பிள்ளைகளுக்கோ தம்பி அண்ணன்களுக்கோ கற்றுக்கொடுங்கள்.

இறுதியாக.. அந்தக் கயவர்களின் முகங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவது சரியாக இருந்தாலும் அவர்கள் குடும்பத்தோடு மற்றும் சகோதரிகளோடு இருக்கும் புகைப்படங்களை பகிர்வது அவர்களுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்றே காட்டுகிறது. எந்த ஒரு தாய் தகப்பனும் அல்லது சகோதரிகளும் அந்தக் கயவர்களின் இந்த மறுபக்கத்தை அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே உணர்ச்சி வேகத்தில் எதையும் செய்யாமல் கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். சமூக வலைத்தளத்தில் இருப்பதாலேயே எல்லாவற்றிற்கும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கயவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுங்கள் அல்லது தண்டனை வாங்கி கொடுக்கும் ஆட்கள் ஆட்சிக்கு வர வாக்களியுங்கள். அதுமட்டுமே உங்கள் இப்போதைய கடமை.

Friday, 25 January 2019

இந்தி எதிர்ப்புப் போராட்ட மொழிப்போர்!

சென்னை நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம் பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி! இவையெல்லாம் வெறும் பெயர்கள் அல்ல. தமிழகத்தின் சரித்திரம். தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் நீத்தவர்கள்! இங்கு ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்துதான் போராட்டமே தவிர இந்தியை தனிப்பட்ட முறையில் பயில அல்ல. காலங்காலமாக வரலாறு தெரியாத்தார்கள் செய்யும் சூழ்ச்சி பிரச்சாரம்தான் இந்தி மொழியையே எதிர்த்தார்கள் என்று. அன்றைக்கு ஒரே நாடு ஒரே மொழி என்று இந்தியை கட்டாயமாக்கியிருந்தால் இன்று இந்தக் கட்டுரையை தமிழில் நீங்கள் படித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள்!

இந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் 1965-ல் தீவிரமடைந்தது என்றாலும் அதன் விதை 1938லேயே விதைக்கப்பட்டு விட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 21-4-1938 அன்று ராஜாஜி தலைமை யிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டோர் அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சென்னையில் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்ற சென்னை நடராசனின் உடல் நலம் குன்றியது. மன்னிப்புக் கோரி கடிதம் எழுதித் தந்தால் விடுதலை செய்வதாக அரசு கூறியது. மன்னிப்புக் கேட்க மறுத்த நடராசன், 15-1-1939 அன்று உயிரிழந்தார். தமிழ் மொழிக்கான முதல் உயிர்த்தியாகம்!

இதனை தொடர்ந்து இரண்டு மாதம் கழித்து மார்ச் 12-ம் தேதி கும்பகோணத்தை சேர்ந்த தாளமுத்து என்பவரும் சென்னை சிறையில் உயிர் நீத்தார்! இரண்டாவது உயிர்த்தியாகம்! இந்த உயிர் தியாகங்களால் போராட்டங்கள் மேலும் தீவிரமடைய அரசாணையை 21-02-1940 அன்று திரும்பப் பெற்றது அரசு. பிறகு மீண்டும் 1948-ல் ஓமந்தூரார் முதல்வராக இருந்தபோது இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டதால், அரசு பின்வாங்கியது. மேலும், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்ற நேருவின் உறுதிமொழியால் போராட்டம் சற்று ஓய்ந்தது.

இந்நிலையில், 26-1-1965 அன்று முதல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற 1963-ம் ஆண்டின் ஆட்சி மொழி சட்ட மசோதாவால் மீண்டும் போராட்டம் உருவானது. அண்ணாவின் தலைமையில் போராட்டங்கள் தீவிரமானது மீண்டும். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த சின்னசாமி, இந்தி மட்டும் ஆட்சி மொழியாக அரியணையில் அமர்வதைத் தடுத்தாக வேண்டும் என்று, திருச்சி ரயில் நிலையம் எதிரே 25-1-1964 அன்று தீக்குளித்து மாண்டார். சின்னச்சாமியின் மரணம் போராட்டங்களை இன்னும் தீவிரப்படுத்தியது. இதன் திருப்புமுனையாக 1965 ஜனவரி 25-ம் தேதி முதல் மாணவர் இயக்கங்கள் போராட்டத்தில் குதித்தன.

அதே தினம் சென்னை மாநகராட்சி ஊழியராக பணி யாற்றி வந்த கோடம்பாக்கம் சிவலிங்கம், தீக்குளித்து மாண்டார். மறுநாள், விருகம்பாக்கம் அரங்கநாதன் தீ்க்குளித்து இறந்தார். அதே நாளில் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் முத்து, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். 27-ம் தேதி ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஊர்வலமாகச் சென்ற சிவ கங்கை மாணவர் ராசேந்திரன், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அதன் பிறகும் போராட்டங்கள் குறையாமல் வேகம் எடுத்தன. போலீஸ் துப்பாக்கிச் சூடுகளும் அதிகரிக்க, உயிர்ப் பலிகளும் அதிகரித் துக் கொண்டே சென்றன. உலக வரலாற்றில் முதல் முறையாக தான் மொழிக்கான போராட்டத்தை போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வந்தது. பொள்ளாச்சியில் பிப்ரவரி 12-ம் தேதி ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சூழ்நிலையில் இந்தித் திணிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் போக்கைக் கண்டித்து அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசன் ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த ராஜினாமாக்களை ஏற்கும்படி குடி யரசுத் தலைவருக்கு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பரிந்துரை செய்தார். தமிழகம் தனி நாடாக பிரிந்து போக வேண்டாம் என்று கருதினால், பரிந் துரையை திரும்பப் பெறுங்கள்' என்று சாஸ்திரியிடம் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார். வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கில மும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் வந்தனர். இதனால் மாணவர்களின் 50 நாள் போராட்டம் மார்ச் 15 அன்று முடிவுக்கு வந்தது.

காங்கிரஸ் அரசின் மீதான தமிழக மக்களின் கோபம் அத்தோடு முடியவில்லை. 1967-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசை படுதோல்வி அடையச் செய்து அண்ணா முதல்வராக ஆனார். அன்று ஆட்சியை இழந்த காங்கிரஸ் இன்றுவரை தமிழ்நாட்டில் ஒட்டுண்ணியாகவே வாழ்ந்து வருகிறது மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல். இவ்வளவு போராட்டங்கள் உயிர் தியாகங்களுக்கு மத்தியில் கிடைத்த நம் தமிழ் மொழியின் உரிமையை இந்த 54 வருடங்களில் எந்த அளவுக்கு காப்பாற்றி வருகிறோம் என்று அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். ஆனால் ஒன்று நீறு பூத்த நெருப்பாக தமிழ் மக்களிடம் கனன்று கொண்டிருக்கும் தமிழுணர்வை இந்தி கொண்டு எந்த அரசும் அணைக்க விரும்பினால் அதை வேடிக்கை பார்க்க மட்டும் மாட்டார்கள் தமிழ் மக்கள்!

இந்த  காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்தவர் காமராஜர்! போராட்டங்களை ஒடுக்க மத்திய அரசுக்கு பணிந்து ராணுவத்தை இறக்கி பல உயிர்கள் பலியாக காரணமும் அவரே. அதன் விளைவுதான் அதை தொடர்ந்த தேர்தலில் தமிழக மக்கள் அவரை தோற்கடித்தது! ஒரு வரலாற்றுப் பிழையின் சாட்சியாக இருந்தவர் அவர்! அதைவிட ஊமை சாட்சியாக இருந்தவர்! ஆகவே அவர் தோற்கடிக்கப்பட்டதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை மொழிப்போர் வரலாறு தெரிந்தவர்களுக்கு. எந்த வரலாறும் தெரியாமல் காமராஜர் ஒருமுறை காரில் போய்க் கொண்டிருக்கும்போது வகையான பார்வர்ட் செய்திகளை நம்பும் இன்றைய போராளிகளுக்காக இதை இங்கே குறிப்பிடுகிறேன்!

இன்று 54 -ம் வருட மொழிப்போர் தியாகிகள் தினம். தமிழுக்கு நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் குறைந்தபட்ச்சம் நம் முன்னோர்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்றாவது தெரிந்துகொள்ளுங்கள். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய அஞ்சலி!

Saturday, 19 January 2019

மாட்டுப்பொங்கல்!
மாட்டுப்பொங்கல்! கிராமங்களை இன்னும் கிராமமாக உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு திருவிழா! பெயர் என்னமோ மாட்டுப்பொங்கல்தான்! ஆனால் வீட்டில் உள்ள ஆடு, கோழி, நாய் போன்றவற்றிற்கும் இன்றுதான் பொங்கல்! இது பொங்கல் என்பதை விட ஒரு நன்றி கூறும் விழா. இந்த ஓராண்டு காலம் எனக்கு உறுதுணையாக இருந்து என் வாழ்வாதாரத்தை என் வாழ்க்கையை உயர்த்த துணை புரிந்த உனக்கு என் நன்றி என்று தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு விழா. இதன் பாரம்பரியத்தின் வேர் தேடினால் அது சிந்து சமவெளி காலத்திற்கு முன் கொண்டு போய் விடும். ஆதி தமிழர்கள் இயற்கையோடும் கால்நடைகளோடும் இயைந்த ஒரு வாழ்க்கையை நடத்தியவன். அதன் தொடர்ச்சிதான் இது.

என் சிறுவயது மாட்டுப்பொங்கல் இன்றும் நினைவில் உள்ளது. அப்போதெல்லாம் ஊரில் விவசாயம் செய்யாதவர்களை கூட பார்க்கலாம் ஆனால் ஆடு மாடு இல்லாதவர்களைப் பார்க்க முடியாது. மாட்டுப்பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னமே அதற்கு தயாராக துவங்கி விடுவோம். கொம்புகளை இழைத்து மெருகேற்றி முதல் நாள் வண்ணம் தீட்டுவோம். மூக்கனாங் கயறு திரித்து கழுத்துக் கயறு மாற்றுவது வரை அந்த ஒரு வாரத்தில் நடக்கும். மூக்கணாங் கயறு திரித்து மாட்டுக்கு மூக்கு கயறு மாற்றுவது என்பது ஒரு கலை. அதனால் என் தெருவில் அனைவரது வீட்டு மாடுகளுக்கும் மாற்ற அப்பாவுக்கு ஒரு வாரம் முழுவதும் வேலை இருக்கும்.

மாட்டுப்பொங்கல் முதல் நாள் இரவே தெரு நண்பர்கள் கூட்டம் போட்டு முடிவு செய்வோம். காலையில் காட்டுக்கு போக. குளிரையும் பொருட்படுத்தாது விடிகாலை எழுந்து வையைக்கரை பத்தைக்கு போவோம். கள்ளியம் பட்டை, ஆவாரம் பூ, கூழைப்பூ, மாவிலை போன்றவற்றை தெருவிற்கே சேர்த்து கொண்டு வருவோம் தோரணம் கட்ட. மறக்காமல் துவரை செடி குச்சியும் வெட்டிக்கொள்வோம். மாடுகளைப் பிடித்துக்கொண்டு கண்மாய்க்கு செல்வோம் குளிப்பாட்ட. கடைசியாக எங்கள் வீட்டில் இருந்த மாடுகளின் பெயர்கள் இன்றும் ஞாபகம் உள்ளது. கொரட்டை, காக்காச்சி என்ற பசு மாடும் மண்டையன் என்ற உழவு மாடும். மூணுமே ரொம்ப சாது. இதுல மண்டையன் மட்டும்தான் வெளி ஆட்களை பார்த்தல் முட்டுவான்.

குளிப்பாட்டி பசு மாடுகளுக்கு கொம்பில் முகத்தில் மஞ்சள் பூசி பொட்டு வைத்து, மண்டையனுக்கு கொம்பில், முகத்தில் மற்றும் திமிலில் சந்தனம் பூசி பொட்டு வைத்துப் பார்த்தல் அவ்வளவு அழகாக இருக்கும். அவைகளை வீட்டில் விட்டு விட்டு திரும்ப கும்பலாக கண்மாய்க்கு போவோம். போகும் முன் மறக்காமல் எங்கள் மணியையும்(நாய் ) குளிப்பாட்டி கட்டி விடுவோம்.கண்மாய்க்கு போகும்போது  கையில் ஒரு சொம்பையும் வெட்டி வந்த துவரங் குச்சியையும் எடுத்து போவோம். கண்மாயில் ஆட்டம் போட்டுவிட்டு சருகு கூட்டி நெருப்பு வைத்து துவரங்குச்சியை அதில் வாட்டி அதில் உள்ள பட்டையை உரித்து விடுவோம். பிறகு பெரியமடை புறமடை போய் அதில் அந்த துவரங்குச்சியால் மூன்று முறை அடித்து சொம்பு நிறைய நீர் எடுத்து வீட்டுக்கு வந்து விடுவோம்.

இனி எல்லாம் அம்மா மற்றும் அக்காக்களின் வேலை. அம்மா மாட்டுக்கூடத்தில் மண் பானையில் பொங்கலிட்டு இறக்கி வைத்துவிட்டு வாழைக்காய் பொடிமாஸ், பலாக்காய் குருமா, பரங்கிக்காய் புளிக்கறி,முளைக்கீரை மசியல்,சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொரியல்,வள்ளிக்கிழங்கு கூட்டு,கருணைக்கிழங்கு மசியல்,கூட்டுக்காய் குழம்பு,பருப்பு மசித்து நெய் கூட்டி எல்லாம் தயார் செய்து மாட்டுக்கூடத்தில் கடகாப்பொட்டியை (பனையோலையால் செய்த பெரிய அளவு பெட்டி) தலை கீழாகக் கவிழ்த்து அதன் மீது இலை விரித்து பொங்கலை வைத்து,எல்லாப்பதார்த்தங்களையும் பரப்பி வைப்பார்கள். அதற்குள்ளாக நானும் அப்பாவும் கரும்பை சிறு துண்டுகளாக வெட்டி நூலில் கட்டி எல்லா மாட்டு கழுத்திலும் கட்டி, கழுத்து மற்றும் கொம்பில் பூ சுற்றி விடுவோம். எங்கள் மணிக்கும் கரும்பு கட்டி விடுவோம். 
கட்டுத்தரை(மாட்டு தொழுவம்) வாசலில் நாங்கள் கொண்டுவந்த கள்ளிப்பட்டை, கூழைப்பூ, ஆவாரம்பூ, மாவிலை கொண்டு தோரணம் கட்டி அதில் கோடி துணி(புதுத் துணி) போடுவோம். பிறகு நல்ல நேரம் முடிவதற்குள் பெரியவர்கள் பசங்களை அழைத்துக்கொண்டு வந்து திருஷ்டி கழிப்போம். "பொங்கலோ பொங்கல்.நாடு செழிக்க நல்ல மழை பெய்ய,ஊரு செழிக்க உத்தம மழை பெய்ய பொங்கலோ பொங்கல்,நாலு காட்டுல ஒரு காடு பாங்காடு கிடக்க பொங்கலோ பொங்கல்" என்று பெரியவர் ஒருவர் கூற மற்றவர் பொங்கலோ பொங்கல் என்று கூவியபடி மாட்டுக்கொட்டகையையும், மாடுகளையும்  சுற்றிவருவோம. மூன்றாவது சுற்றில் சோற்றோடு சேர்த்து எல்லாப் பதார்த்தங்களையும் பிசைந்து மூன்று மாவிலையில் எடுத்துக்கொள்வோம். 

சனி மூலை  கன்னி மூலை, வாயு மூலை ஆகிய மூன்று மூலைகளில் மாவிலையை வைத்த சோற்றை நீர் தெளித்து வைப்போம். அக்னி மூலையில் மட்டும் சிறிது நெருப்புத்துண்டை வைப்போம். பிறகு சூடம் ஏற்றி குடும்பத்தோடு விழுந்து வணங்கி பிசைந்த சோற்றை மாடுகளுக்கும் சிறிது கொடுப்போம். மாடு அவிழ்ப்பதற்குள் ஒரு பெரிய கலவரமே(சந்தோசமான) நடக்கும். தயாராக வைத்திருக்கும் மாட்டுத்தண்ணி, கலர் தண்ணி சிலசமயம் சாணித்தண்ணி கூட முறை வரும் (மாமன், மச்சான்) ஆட்களின் மேல் ஊற்றுவோம். ஒவ்வொரு வீட்டிலும் இது நடக்கும். பிறகு மாடுகளை அவிழ்த்தால் அதன் கழுத்தில் இருக்கும் கரும்பை அறுக்க பெரிய போட்டியே நடக்கும். மஞ்சுவிரட்டுக்கு இணையானது அது. முடிவில் யார் எத்தனை மாட்டு கரும்பை அறுத்தோம் என்று கணக்கெடுப்பு நடத்தி அடுத்த வருடம் அந்த சாதனையை முறியடிக்க சபதம் எடுப்போம்.

பிறகு மாடுகள் வீட்டுக்குள் வரும்போது மறக்காமல் உலக்கையை போட்டு வைத்து தாண்டி வரச் செய்வார்கள். இந்தக் கொண்டாட்டமெல்லாம் மதியம் வரை நடக்கும். பிறகு மாலை வந்து விட்டால் கொப்பி கொட்டுவது என்ற ஒரு நிகழ்வு. சாணத்தை சிறு உருண்டைகளாக ஆக்கி அதில் ஆவாரம்பூ இதழ்களை வைத்து ஒட்டி தயார் செய்வார்கள் பெண்கள். அதற்கு கொப்பிக் கட்டை என்று பெயர். வயதுப்பெண்கள், பெண் குழந்தைகள் அனைவரும் கண்மாய் படித்துறைக்கு கொப்பி கொண்டு செல்வார்கள்.ஒரு தட்டில் கொப்பிக்கட்டைகள் பரப்பி,வெற்றிலை,பாக்கு வைத்து,சுட்ட பனங்கிழங்கு வைத்து,படைத்த உணவுக்கலவை வைத்த தட்டை தலையில் வைத்து ஊர்வலமாகச்சென்று சலவைத் தொழிலாளச் சகோதரர்கள் படித்துறையில் விரித்திருக்கும் வேட்டியில் கொட்டிவிட்டு,கொப்பிக்கட்டைகளை எடுத்துக்கொண்டு திரும்பி வந்து பிள்ளையார் கூடத்தில் தட்டுகளை வைத்து சாமிகும்பிட்டு அங்கேயே சிறிது நேரம் விளையாடுவார்கள். வாய்க்காலில் தண்ணீர் போனால் அதை எடுத்து மாற்றி மாற்றி ஊற்றியும் விளையாடுவார்கள். 

காலப்போக்கில் இப்போது விவசாயம் இல்லை, கால்நடை வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. கண்மாயில் தண்ணீர் இருப்பதில்லை. கொப்பி கொட்டுவது அடியோடு இல்லை. ஆனாலும் மாட்டுப்பொங்கல் என்றால் ஒரு உற்சாகம் வரத்தான் செய்கிறது. மாடுகள் இல்லையென்றாலும் இன்றும் எங்கள் வீட்டில் பொங்கல் வைத்து மாடு உள்ள வீட்டிற்கு அதை கொடுத்தனுப்பி சேர்த்து படைக்க சொல்கிறோம். நாங்கள் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை அடுத்த தலைமுறைக்கு சொல்வதற்காயினும் இதை தொடர்ந்து செய்கிறோம். விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் நம் குழந்தைகளுக்காவது இதை செய்ய வேண்டும். 

Friday, 19 October 2018

நாதஸ்வர ஓசையிலே!

கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி செந்திலை அடிக்கடி டேய் நாதஸ் என்று திட்டுவதை பார்த்த தொண்ணூறுகளுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு நாதஸ்வரம் என்பது ஒரு கிண்டல் விஷயமாகவே தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல. நாதஸ்வரம் என்பது கடவுளின் மொழி. இறையை உணர இறைவனுக்கும் நமக்கும் பாலம் அமைக்கும் வல்லமை கொண்டது. இதை தொடரும் முன் முடிந்தால் கீழே உள்ள இந்த தொடுப்பில் உள்ள இசையை கேட்டுவிட்டுத் தொடரவும்.


இது தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் ஒரு பகுதி. இதில் சிவாஜியின் நடிப்பையும் தாண்டி ஊடுருவிப் பார்த்தோம் என்றால் அங்கு MPN சகோதரர்கள் தெரிவார்கள். MPN சேதுராமன் மற்றும் MPN பொன்னுச்சாமி! இவர்கள்தான் இந்தப் படத்தில் வரும் நாதஸ்வர இசையின் நாதங்கள். ஆனால் வாயசைத்த சிவாஜியை கொண்டாடிய அளவு மக்கள் இவர்களைக் கொண்டாட வில்லை. இது மக்களின் சாபம் மட்டுமல்ல இந்த மண்ணின் சாபமும் கூட! மக்கள் அசலுக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது. இன்றைக்கும் கூட நாதஸ்வரம் என்று சொன்னால் மக்கள் மனதில் வருவது இவர்களின் இசைதான். ஆனால் இவர்கள் முகம் தெரியாமல். இவர்களின் இசைத்தொகுப்பை கேட்க வேண்டுமானால் கீழே உள்ளது.


நாதஸ்வரத்தின் பலமே அதை ரசிக்க இசையறிவு தேவையில்லை என்பதுதான். கேட்ட மாத்திரத்தில் மனதை உருக வைக்கும் திறமை கொண்டது. நாதஸ்வரம் என்பது நம் மண்ணின் இசை. இப்போது P.காரைக்குறிச்சி அருணாச்சலம் என்று சொன்னால் யார் என்று கேட்பவர்கள்தான் அதிகம். அதையே கொஞ்சும் சலங்கையில் வரும் "சிங்காரவேலனே" பாடலை வாசித்தவர் யார் என்றால் ஓ.. ஜெமினியா என்பார்கள்! சிங்காரவேலனே பாடலை உண்மையில் வாசித்தவர் இவர்தான். எத்தகைய ஜாம்பவானுக்கும் ஒரு திரைப்பட முகவரி தேவைப்படுகிறது. இதனாலேயே இந்த நாதஸ்வரத்தில் பல ஜாம்பவான்களை நமக்கு தெரியாமலே போய் விட்டது. காரைக்குறிச்சியின் இசை வெள்ளத்தில் நீந்த..


எவ்வளவு நாதஸ்வர வித்வான்கள் இருந்துருக்கிறார்கள் நமது மண்ணில். பத்மஸ்ரீ நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன். இவர் தந்தை பெரியாரால் "நாதஸ்வர சக்ரவர்த்தி" என்று பட்டம் அளித்து புகழப்பட்டவர்! திருப்பதி கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் இவர். இவரது இசைத்தொகுப்பு கீழே.


அப்பொழுதே சங்கீத கலாநிதி என்று புகழப்பட்ட TN.ராஜரத்தினம்பிள்ளை! 2008ல் முதல்வர் கருணாநிதியால் "ராஜரத்தினா" விருது கொடுத்து புகழப்பட்ட உமாபதி கந்தசாமி. "நாதஸ்வர ஆச்சார்யா" என்று புகழப்பட்ட ஷேக் சின்ன மௌலானா. இப்படி நமக்கு தெரிந்தும் தெரியாமலும் எண்ணிலடங்கா வித்வான்களை கொண்டதுதான் தமிழ்நாடு. மன்னர்கள் காலத்தில் உச்சத்தில் இருந்த இசை ஆங்கிலேயர் காலத்தில் கூட மதிப்பை இழக்கவில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக ஆங்கிலேயர் போனதுக்கு பிறகுதான் நமக்கு ஆங்கில மோகம் அதிகமானது.

திருமணங்களில் பேண்டு வாத்தியம் வைப்பது பேசனானது. திருவிழாக்களில் ஆர்கெஸ்டரா வைப்பது அவசியமானது. நம் மண்ணின் இசையை நம் மண்ணில் இருந்தே நாமே கொஞ்சம் கொஞ்சமாக அந்நியப்படுத்தினோம். ஆனாலும் இன்னும் அதன் வேர்களை காயவிடாமல் தண்ணீர் விட்டுக்கொண்டிருப்பது கிராமங்களும் திருவிழாக்களும்தான். அதற்கும் சோதனையாக இப்போது புதிதாக கேரளாவின் சென்டை மேளம் வைப்பது பேஷனாகி வருகிறது. நமக்கும் சென்டை மேளத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

சமீப காலமாய் இளைஞர்கள் கூட இணையத்தில் நாதஸ்வர இசையை தேடி பார்ப்பது ஒரு சின்ன ஆறுதல். அதற்கு முக்கிய காரணம் இணை பிரியா சகோதரர்களாக இருந்த நாதஸ்வரம் தவில் இடையே இப்போது வயலின் போன்றவைகளை இணைத்து ஒரு ஃபியூஷனாக கொடுக்கிறார்கள். காலத்திற்கு ஏற்ற முக்கிய மாற்றம் இது. இதில் முக்கியமாக குறிப்ப்பிடவேண்டியவர்கள் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த P.S.பாலமுருகன் மற்றும் K.P. குமரன். தமிழகத்திலும் இப்போது இதைப்பின்பற்றி இதுபோல தருகிறார்கள். கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்.


நம் கூடவே இருப்பதாலேயே சில நல்ல வித்வான்களை நாம் கொண்டாடாமலே போய்விடுகிறோம். கண்டனூர் வேதமூர்த்தி-பாலு சகோதரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிலும் சமீபத்திய கண்டனூர் பாலுவின் இழப்பு ஈடுசெய்ய இயலாதது. கண்டனூர் திருவிழா சாமி ஊர்வலங்களின் போது வேறு எதையுமே நினைக்காத வண்ணம் கட்டிப்போடவல்லது இவர்களின் நாதஸ்வர இசை. இவர்களுக்கு அடுத்து கண்டனூர் கணேசன்-ரெங்கநாதன் சகோதரர்களின் நாதஸ்வரம்-தவில் கூட.

இப்போது இருக்கும் கலைஞர்கள் தங்களின் திறமையை அடுத்த தலைமுறைக்கும் கடத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். வரப்பிரசாதமாய் இருக்கும் சமூக வலைத்தளங்களின் உதவியோடு இப்போது உள்ள இளைஞர்களையும் ஈர்க்க முயற்சி செய்ய வேண்டும். ஒரு தமிழனாய் நாம் செய்யவேண்டியது இவர்களைப்போல கலைஞர்களை ஊக்குவித்து எப்போதும் ஆதரிக்க வேண்டும் என்பதே!


Thursday, 27 September 2018

ஆனந்த ராகங்கள்! (1)

தனது எல்.எம்.எல்.வெஸ்பா ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு இசைஞானி இளையராஜாவின் பாடல் பதிவு அரங்கத்திற்குள் வருகிறார் உமா ரமணன். எப்போதும் போல் அல்லாமல் ஒரு வித்தியாசமான சூழலை உணர்கிறார். எப்போதும் துணைக்கு தன் தாயை அழைத்துவருபவர் அன்று தனியாக வந்திருக்கிறார். பாடல் பதிவு அரங்கத்திற்குள் உள்ளே போனதுமே அங்கு உள்ள வாத்தியக்காரர்களைப் பார்த்து ஒருகணம் திகைத்து நின்று விட்டார். இது நடக்கும் வருடம் 1981-ம் வருடம். 

அப்போது அவர் புதிய பாடகி கூட இல்லை. கணக்கில்லாத மேடை கச்சேரிகளை தன் கணவர் A.V. ரமணனனுடன் சேர்ந்து பண்ணியவர். அதுபோக 1977-ல் ஸ்ரீக்ருஷ்ணலீலை படத்தில் பாடகியாக தன் கணவர் கூடவே சேர்ந்து பாடி அறிமுகமானவர். அது கவனிக்கப்படாமல் போக மூன்று வருடம் கழித்து 1980-ல் ரமணனின் இசையில் நீரோட்டம் என்ற படத்தில் "ஆசை இருக்குதே நெஞ்சுக்குள்ளே" என்ற பாடல் பாடுகிறார். தமிழ் திரை இசையின் துரதிஷ்டம் அப்போதும் அது அதிக கவனம் ஈர்க்காமல் போகிறது. பிறகுதான் இசைஞானியின் கண்ணில் பட்டு நிழல்கள் என்ற படத்தில் "பூங்கதவே தாழ் திறவாய்" பாடலைப் பாடி தமிழ் திரை இசையின் பூங்கதவைத் திறந்துகொண்டு வருகிறார். படம் தோல்வி ஆனால் இன்றுவரை இசைக்காகப் பேசப்படும் படம். பின்னர் மூடுபனி படத்தில் "ஆசை ராஜா ஆரீரோ.. ' ஒரு சின்ன பிட் ஆனால் அதில் கூட அந்தக் குரலில் வெளிப்படும் தாய்மை, உருக்கம், ஆதரவு அனைத்தையும் குழைந்து கொடுத்திருப்பார்.
பிறகு 1981-ல் இசைஞானி தொடர்ந்து அவரைப் பாட வைக்கிறார். அதில் குறிப்பிட்டு சொல்லும்படி என்றால் கர்ஜனை படத்தில் "என்ன சுகமான உலகம்" மற்றும் நண்டு படத்தில் "மஞ்சள் வெயில் மாலை" பாடல்களை சொல்லலாம். ஆனாலும் அவருக்கு ஒரு பிரேக் த்ரூ பாடல் கிடைக்கவில்லை. இது இசைஞானிக்கும் தோன்றியதோ என்னவோ. அவருக்குக்காகவே ஒரு பாடலை தயார் செய்து அழைத்துவிட்டார். அந்தப் பாடலை உமா ரமணன் அவர்கள் பாட வந்த காட்சியைத்தான் நாம் முதல் பத்தியில் பார்த்தது. 

உள்ளே வந்து திகைத்து நின்றவர் மெதுவாக சூழலை உள்வாங்குகிறார். வயலின், செல்லோ, கிடார், புல்லாங்குழல் என இசைக்கலைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இசைக்கோர்வையை வாசிக்க பயிற்சியில் இருந்தனர். மெதுவாக உதவியாளர் வந்து பாடல் பதிவு இன்று மாலை வரை இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். அப்போதே பாடல் எவ்வளவு கடினமாக இருக்கும் என்று தெரிந்துவிடுகிறது அவருக்கு. ஆனால் அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை இந்தப்பாடல்தான் தனக்கு வாழ்நாள் அடையாளமாகவும் இளையராஜாவின் சரித்திரம் பேசும்வரை இந்தப் பாடலும் பேசப்படப்போகிறது என்று. அந்தப் பாடல்தான் பன்னீர்ப்புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற..

"ஆனந்த ராகம் கேட்கும் காலம்"  என்று எடுத்ததுமே பல்லவியில் நமது ஆன்மாவை ஊடுருவி உள்ளே இருந்து கொண்டே சின்ன ஜதியில் ஆடினால் எப்படி இருக்கும்! அப்படிதான் அதன் சரணம் வரும் 

"துள்ளி வரும் உள்ளங்களில்,
தூது வந்து தென்றல் சொல்ல தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்த தாளங்களே வெள்ளி மலைக் கோலங்களை, அள்ளி கொண்ட மேகங்களை காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்ததின் பாவங்களே கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ பற்றிக் கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ ராகங்கள் பாட, தாலங்கள் போட 
வானெங்கும் போகதோ " ..  

இதில் அவர் எங்கு மூச்சு எடுப்பார் என்று யோசிக்கும்போதே "ஆனந்த ராகம்.. என்று மீண்டும் பல்லவியைப் பிடிப்பார். நம்மை அங்கும் இங்கும் அசைய விடாமல் அந்த காதலர்களின் பின்னாலயே ஓடவைக்கும் அதிசயம் இந்தப் பாடலில் உண்டு. அது இசையாலா அல்லது உமா அவர்களின் குரலாலா என்பது பிரித்தறிய இயலாதது. பல்லவி முடிந்ததும் ஒரு வயலின் இசைக்கோர்வை வரும். எனக்குத்தெரிந்து இந்தப் பாடலுக்குப் பிறகு தளபதி படத்தில்தான் "ராக்கம்மா கையத்தட்டு' பாடலில் அதை உணரமுடியும். இடையிசையில் வரும் வயலின் இசைக்கோர்வை நம்மை குதிக்க வைக்கும் என்றால்  நடுவில் குழல் ஓசை நம்மை ஆரத்தழுவி அமைதிப்படுத்தும். இப்படி வயலின் இசைக்கும் குழல் ஓசைக்கும்  நடுவே நாம் மூச்சு முட்டும்போதே உமா ரமணன் ஆரம்பிப்பார்... 

"வண்ண வண்ண எண்ணங்களும்,
வந்து விழும் உள்ளங்களும் வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே சின்ன சின்ன மின்னல்களும் சிந்தனையின் பின்னல்களும் சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும் இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும் காவிய ராகம், காற்றினில் கேட்கும் காலங்கள் ஆரம்பம்… "

என்று மூச்சு எடுக்க நேரம் இல்லாத நீண்ட நெடிய மாரத்தான் ஓடியது போல மீண்டும் "ஆனந்த ராகம் என்று பாடி லாலலாலா லாலலாலா லாலாலாலா என்ற ஹம்மிங்கோடு நிறுத்துவார். அவர் நிறுத்தி விடுவார் ஆனால் நம்மால்தான் உடனே மீண்டுவர இயலாது. ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒரு ஞாபங்களை கிளறிவிடும் என்பார்கள். அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் இந்தப்பாடல் எல்லோருக்கும் ஒரே ஞாபகத்தைத்தான் கிளறும். அது முதல் காதல்! அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு.

உமா ரமணன் அவர்களின்திரையிசைப் பாடல்களை பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்தேன். ஆனால் இந்த ஒரு பாடலே ஒரு முழுக்கட்டுரையை நிரப்பிவிட்டது. இந்தப்பாடலுக்கு இந்த நியாயம் கூட போதாதுதான். முன்பே சொன்னதுபோல் இசைஞானி இளையராஜாவின் சரித்திரம் இருக்கும்வரை இந்தப்பாடல் குறிப்பிடப்படும். இந்தப்பாடல் குறிப்பிடப்படும்வரை உமா ரமணன் அவர்களில் இந்தக் குரலும் போற்றப்படும்!

பாடலை நீங்களும் கேளுங்கள்
உமா ரமணன் அவர்கள் பாடுவதே ஒரு தியானம் செய்வது போலத்தான் இருக்கும். சின்ன தலையசைப்பு கூட இருக்காது. நின்ற இடத்திலே நின்று கடவுளிடம் ஏதோ பிராத்தனை செய்வது போலத்தான் இருக்கும். ஆனால் இசை மட்டும் வெள்ளமாய் மடைதிறந்து வரும். வயது அறுபதுகளில் இருந்தாலும் அதே குரல் வளம் ! 2014-ல் கோலாலம்பூரில் ஒரு இசைநிகழ்ச்சியில் இதே பாடலை அவர் பாடியது! இந்தப் பாடல் உருவான விதம்பற்றி இளையராஜாவின் அனுபவத்தோடு நீங்களும் பாருங்கள் (8.20 - 20.00 நிமிடங்கள்)
Monday, 24 September 2018

"வைகைப்புயல்" வடிவேலு
"என் தங்கை கல்யாணி" படம். 1988-ல் டி.ராஜேந்தரின் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு... Etc.. இப்படி அவரின் பலமுகத் திறமையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த படம். அந்த படத்தில் ஒரு சிறுவன் தன் வீட்டு எதிரே ஒருவர் சைக்கிளை நிறுத்த அந்த சைக்கிளில் இருந்து பெல் திருடும் காட்சி வரும். கொஞ்ச நேரத்தில் அந்த ஆள் திரும்ப வந்து கத்தி ஊரைக்கூட்டி கொஞ்ச நேரத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு போய்விடுவார். இப்போது தேடிப்பிடித்து அந்தக் காட்சியை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க்கிறீர்களா? இருக்கிறது! ஏனென்றால் அப்போது அந்தக் காட்சியில் அந்த சைக்கிளை ஒட்டியவருக்கும் அதைப் பார்த்த மக்களுக்கும் தெரிந்திருக்கவில்லை இன்னும் சில வருடங்களில் அந்தப் புயல்தான் தமிழ்நாட்டை மையம் கொள்ளப் போகிறது என்று! ஆம்.. அந்தப் புயல்தான் "வைகைப்புயல்" வடிவேலு!

1960-ல் மதுரை மாவட்டம் ஐராவதநல்லூரில் சாதாரண கூலித் தொழிலாளி குடும்பத்தில் பிறந்து படிப்பு வாசனை இல்லாமல் புகைப்படங்களுக்கு பிரேம் பண்ணும் கடையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார் ஆரம்ப காலத்தில். நடிப்பு ஆர்வத்தில் அப்போதே உள்ளூர் மேடை நாடகங்களில் நகைச்சுவை வேடங்களை ஏற்று நடிக்க, நண்பர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் உற்சாகம் கொடுக்க மனைவி குழந்தைகளை விட்டு ஒரு நல்ல நாள் பார்த்து திறமையோடும் பை நிறைய கனவுகளோடும் கோடம்ப்பாகத்துக்கு பஸ் ஏறியிருக்கிறார். கோடம்பாக்கத்தின் மந்திரக்கதவு அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் திறந்துவிடுவது இல்லை. இவரும் முட்டி மோதி கடைசியில் கிடைத்த ஒரு சின்ன வாய்ப்புதான் நான் முதலில் சொன்ன "என் தங்கை கல்யாணி" படத்தில் ஒரு காட்சியில் வந்தது. 

அதன்பிறகு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் தோல்வியோடும் விரக்தியோடும் சொந்த ஊருக்கு போய் பழைய தொழிலை பார்த்து வந்ததாய் வடிவேலுவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். திறமையான குழந்தைகளை கலைத்தாய் அவ்வளவு சீக்கிரம் கைவிட்டுவிட மாட்டார் என்பதற்கிணங்க ராஜ்கிரண் மூலம் மீண்டும் தூது அனுப்புகிறார் கலைத்தாய் 1990-ல். மதுரை பக்கம் ஷூட்டிங் போன ராஜ்கிரணை சந்தித்து அங்கேயே நடித்து காண்பித்து அவரை சமாதானப்படுத்தி என் ராசாவின் மனசிலே படத்தில் ஒரு கேரக்டர் வாங்கி விடுகிறார் வடிவேலு. அதில் ஏற்கனவே கவுண்டமணி மற்றும் செந்தில் என்ற இரு ஜாம்பவான்கள் உண்டு. ஆனால் அவர்களையும் மீறி அறிமுக வடிவேலு கவனம் ஈர்த்தார். கவுண்டமணியிடம் வந்து "அண்ணே என் பொண்டாட்டி செத்து போய்ட்டாண்ணே' என்று சொல்லும் காமெடியும் பட்டாபட்டியோடு வெளியே வரும் கவுண்டமணியை பார்த்து சிரித்துவிட்டு "சிரிக்கலண்ணே.. கொட்டாவி விட்டேன்' என்று சொல்லும் மாடுலேஷன் எல்லாம் எவர்கிரீன்.

என் ராசாவின் மனசிலே படம் 1991 தமிழ் வருடப்பிறப்பிற்கு வந்தது. ஆனால் அதன்பிறகும் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கவில்லை. ஏனென்றால் அப்போது கவுண்டமணி-செந்தில் காம்போவின் பொற்காலம் அது. அவர்களை மீறி யாரும் அடுத்த காமெடியனை யோசிக்கவில்லை. ஆனாலும் வடிவேலு இந்தமுறை சோர்ந்துவிடாமல் அங்கேயே ராஜ்கிரண் அலுவலகத்திலே கிடைத்த வேலைகளை செய்துகொண்டு வாய்ப்புக்காக அலைந்திருக்கிறார். 1992-ம் வருடம் அவருக்கு ஒரு முக்கியமான வருடம். அவர் நடித்து ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் சின்னக்கவுண்டர் படமும் சிங்காரவேலன் படமும் ஒருவகையில் கவனம் ஈர்த்தது என்றால் தேவர் மகன் படம் காமெடியையும் தாண்டி வடிவேலுவின் குணச்சித்திர நடிப்பை ரசிக்க வைத்தது. அதிலும் கை வெட்டப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்பொழுது பார்க்கவரும் கமலிடம் "ஒத்தக் கையால காரு கூட ஓட்டிருவே அய்யா.. என்ன எழவு திங்கிற கைலே கழுவனும்..கழுவுற கைலே திங்கணும்' என்று தன் இயலாமையை சொல்லும்போது கமலுடன் சேர்ந்து பார்க்கிற ரசிகனுக்கும் கண்ணீர் வர வைக்கின்ற காட்சி அது. 

இதற்கு பிறகு வாய்ப்புக்காக அவர் காத்திருக்கவில்லை. அவருக்காக வாய்ப்புகள் காத்திருக்க ஆரம்பித்தன. ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போல கவுண்டமணி-செந்தில் ஆதிக்கத்தைத் தாண்டி அவரால் தனி காமெடி டிராக்கில் அவரை நிரூபிக்க இயலவில்லை. அதற்கு தீர்வாகத்தான் 1993 இறுதியில் "கிழக்கு சீமையிலே' படம் வந்தது. வடிவேலுவின் டைமிங் சென்ஸுக்கும் பாடி லேங்குவேஜ்க்கும் சரியான தீனி போட்ட படம் அது. அதுபோக காதலுக்கு துணையாக குணச்சித்திரத்திலும் வெளுத்து வாங்கியிருப்பார். 1994-ல் வந்த ராஜகுமாரன், கருத்தம்மா போன்ற படங்கள் இவரை இன்னும் உயர்த்தியது என்றால் காதலன் படம் உச்சத்தில் கொண்டுபோய் வைத்தது. பேட்டராப் பாடலில் நடனத்திலும் என்னால் இரசிக்கவைக்க முடியும் என்று காட்டினார்.

1995-ல் வந்த எல்லாமே என் ராசாதான் படத்தில் "எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டு பாடும்" என்று ஒரு பாடகனாகவும் தன்னை அடையாளப்படுத்தினார். வருடத்திற்கு 365 நாட்கள் போதாமல் நடித்துக்கொண்டிருந்தாலும் 1996-ல் வந்த "பாஞ்சாலங்குறிச்சி' படம் வடிவேலுவின் எவர்க்ரீன் க்ளாஸிக் காமெடியால் மக்களைக் கவர்ந்தது. அதுவும் சுருண்டுகொள்ளும் மூங்கில் பாயை விரிக்க அவர் படும் பாட்டை இன்று பார்த்தாலும் சிரிப்பு வரும். பிறகு 1997-ல் வந்த "பாரதிக்கண்ணம்மா" படம் வடிவேலுவின் காமெடியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது. பார்த்திபன்-வடிவேலு காமெடிக்கு ஒரு புதிய பாதையை வகுத்தது. அதே ஆண்டு வந்த பொற்காலம் படம் காமெடியையும் தாண்டி மீண்டும் அவருக்குள் உள்ள அற்புத நடிகனை அடையாளங் காட்டியது.

1998-ம் வருடம் டஜன் கணக்கில் படங்கள் நடித்தாலும் "கண்ணாத்தாள்" படத்தில் வந்த சு.ப -வை யாராலும் மறக்கமுடியாது. கிராமங்களில் நடைமுறையில் அன்றாடம் பார்க்கும் உதார் பார்ட்டிகளை நம் கண்முன்னே நிறுத்தியிருப்பார். அதிலும் விஷம் கலந்த சரக்கை மிரட்டி குடித்துவிட்டு "என்னடா தொண்டை கம்முது?" என்கிற மாடுலேஷன் வேறு யாராலும் முடியாதது. ஆடு திருடி விட்டு பஞ்சாயத்தில் அவர் செய்யும் அலப்பறை அல்ட்டிமேட் ரகம். 1999-ம் வருடமும் மாதக் கணக்கைவிட அதிக படங்களில் நடித்தாலும் நேசம்புதுசு படத்தில் வரும் "என்ன கைய புடிச்சு இழுத்தியாடா?' காமெடியும் பாட்டாளி படத்தில் வடிவுக்கரசியாக அவர் செய்யும் அலப்பறைகளும் இன்றும் ரசிக்க வைக்கும். பிறகு 2000-ம் வருடத்தில் வந்த வெற்றிக்கொடிகட்டு படத்தை பற்றி சொல்லவே வேண்டாம். அதே வருடத்தில் வந்த மனுநீதி படத்தின் "செவள.. தாவுடா தாவு' காமெடி நினைத்தாலும் சிரிப்பு வரும் ரகம். அதே வருடத்தில் வந்த "மாயி" படம் வடிவேலுவின் அளவில்லாத அலப்பறைகளை கண்முன் நிறுத்தியது.

2001-ம் வருடம் வடிவேலுக்கு மட்டும் அல்ல காமெடி ரசிகர்களுக்கும் பொற்காலம்தான். "பிரெண்ட்ஸ்" படத்தில் நேசமணியாக பட்டையைக் கிளப்பியவர் "என் புருஷன் குழந்தை மாதிரி' படத்தில் 'காதை தொட்டுட்டேனே' என்ற லூசிடம் மாட்டி சின்னாபின்னமானவர் "மனதை திருடிவிட்டாள்" படத்தில் ஸ்டீவ் வாக்காக வந்து "ஒய் பிளட்? சேம் பிளட்.. " என்று ரசிக்கவைத்தார். அடுத்த "தவசி" படத்திலே ஒசாமா பின் லேடன் அட்ரஸ் கேக்கும் பைத்தியத்திடம் மாட்டி சிக்கிச் சிதறினார். பிறகு 2003-ம் வருடம் வசீகரா படத்தில் கட்டப்பொம்முவாக வசீகரித்தவர் வின்னர் படத்தில் கைப்புள்ளையாக வந்து சிரிக்க தெரியாதவர்களையும் சிரிக்க வைத்திருப்பார். இதில் எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது படம் முழுவதும் சிரித்துக் கொண்டிருப்பதுதான் நமது வேலை என்று ஆக்கியிருப்பார். பிறகு "கிரி" வீரபாகு, "ஏய்" பழனி, "எங்கள் அண்ணா" மயில்சாமி, "சச்சின்" அய்யாசாமி, இங்கிலீஸ்காரன் "தீப்பொறி திருமுகம், "தலைநகரம்" நாய் சேகர், என நமக்கு ஓய்வே வழங்காமல் சிரிக்க வைத்தார்.

2006-ல் வந்த "இம்சை அரசன் 23-ம் புலிகேசி" வடிவேலு கேரியருக்கு மட்டும் அல்ல தமிழ் சினிமாவிற்கே ஒரு முக்கியமான படம். புலிகேசியாகவும், உக்கிரபுத்திரனாகவும் வடிவேலு கலக்கிய படம். இப்போது கூட சேனல் மாற்றுகையில் இதன் காட்சிகளை எந்த சேனலில் போட்டாலும் ஒரு நிமிடமாவது பார்த்துவிட்டுத்தான் அடுத்த சேனல் மாற்ற மனது வரும். இதில் இப்படியென்றால் அதே வருடம் வந்த "எம்டன் மகன்" படமும் ஒரு முக்கியமான படம். அக்காவை கட்டி மாமனிடம் மாட்டி முழிப்பவர் ஒரு தாய்மாமனாக அக்கா பையனிடம் ஆதரவாக இருக்கும் பாசப்பிணைப்பை கண்முன்னே காண்பிப்பார். அடுத்த "ஜில்லுன்னு ஒரு காதல்" படத்திலே வெள்ளைச்சாமியாக வந்து கிராமத்து வெத்துவேட்டை கண்முன் நிறுத்துவார். இவர் இப்படித்தான், எதையும் முன்முடிவோடு அணுக விடாத நடிப்புதான் இவர் வெற்றி. 

"போக்கிரி" சங்கி மங்கி, "கருப்பசாமி குத்தகைக்காரர்" படித்துறை பாண்டி, தொட்டால் பூமலரும்" கபாலிகான், "ஆர்யா" ஸ்னேக் பாபு, "மருதமலை" ஏட்டு ஏகாம்பரம், "ஆதவன்' பானர்ஜி, "கச்சேரி ஆரம்பம்" தீபாவளி, "சுறா" அம்பர்லா, "நகரம்" ஸ்டைல் பாண்டி, "காவலன்" அமாவாசை வரை இப்படி எண்ணற்ற தன் அவதாரங்களால் மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டவர் 2011 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்துடனான தனது சொந்தப் பிரச்சனைக்காக தவறான வழிகாட்டுதலில் தவறான முடிவெடுத்தார். பகுதி நேரமாக பிரச்சாரம் செய்ய வந்தவர் கூடிய கூட்டத்தைப் பார்த்து முழு நேரமாக பிரச்சாரத்தில் இறங்கினார். ஆனால் அவரது கணிப்பையும் மீறி அதிமுக - விஜயகாந்த் கூட்டணி வெற்றிபெற்றது. அதன்பிறகு அரசியல் சினிமா இரண்டிலும் இருந்து அறிவிக்கப்படாத ஓய்வில் இருந்தார். பிறகு 2014-ல் "தெனாலிராமன்" படத்தின் மூலம் கதாநாயகனாக ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பிறகு 2015-ல் "எலி" படத்தின் மூலம் வந்தார். ஆனால் அதுவும் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. கடைசியாக "கத்திச் சண்டை" மற்றும் "சிவலிங்கா" படங்களில் பழைய பாணியில் காமெடி ரோலில் தலை காட்டினார். நகைச்சுவையில் தன்னைத் தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைப்பது என்ற புதிய உத்தியைக் கையாண்டு மக்களை சிரிக்க வைத்தவர். எந்த நகைச்சுவை சானலை திருப்பினாலும் அதில் வடிவேலு காமெடி ஓடிக்கொண்டிருக்கும் என்பதே இவர் சாதனையை சொல்லும். காலங்கள் மாறி இன்று சோசியல் மீடியாவின் தாக்கத்தில் மீம்ஸ் என்ற வசனமில்லா நகைச்சுவை என்ற காலத்தில் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் தேவைப்படுவது வடிவேலுவின் ரியாக்சன்கள் என்பதிலே அவரது முக்கியத்துவம் நமக்கு புரிபடும். அரசியல்,சினிமா, பொது இப்படி எதைக் கலாய்க்க வேண்டுமென்றாலும் வடிவேலுவின் படங்கள்தான் அதற்கு அகராதி. 

ஐந்து முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதினை வாங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பது பாடல்களைப் பாடியிருக்கிறார். இன்று நாம் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போதே நமது உணர்வுகளைச் சொல்ல "வட போச்சே" இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டு இருக்கு?' "சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு" போன்ற அவரது ஒன்லைனர் காமெடிகள்தான் நமக்குத் தேவைப்படுகிறது! இதெல்லாம் சாகாவரம் பெற்ற வசனங்கள். வடிவேலுவுக்கு பிறகும் அவரது பெயரைச் சொல்லிக்கொண்டிருக்க போவது இதுபோன்ற வசனங்கள்தான்! ஏதாவது செய்து மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று பெட்டி கட்டி மதுரையில் இருந்து கோடம்பாக்கம் வந்தவரை மக்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றனர். நான் என்ன செய்தாலும் மக்கள் சிரிக்க வேண்டும் அவர் நினைத்த போது அவரை திரும்ப மதுரைக்கே அனுப்பிவிட்டார்கள் மக்கள். ஏதாவது செய்து சிரிக்க வைக்க வேண்டும் என்ற அதே பழைய வடிவேலுவாக அவர் திரும்ப வரவேண்டும். நாங்கள் காத்திருக்கிறோம்! 
 

Wednesday, 19 September 2018

நாட்டார் தெய்வங்கள்! (2) - பதினெட்டாம்படிக் கருப்பர்!

 

காலம் அறியாத அந்தக் காலத்தில்(புரிதலுக்காக கிபி ஆறாம் நூற்றாண்டு எனக்கொள்க) அடர்ந்த கானகத்தின் இரவு அது. மேற்கு தொடர்ச்சி மலையின் மலையாள நாட்டில் இருந்து நீண்ட அந்த நீண்ட கணவாயைத் தாண்டி சமவெளியை வந்தடைந்தன அந்த மூன்று புரவிகளும். தூரத்தில் ஒரு சிற்றோடை ஓடிய சலசலப்பும் காட்டு மிருககங்களின் கர்ஜனையையும் தவிர அங்கே வேறு சத்தம் இல்லை. நிலா மட்டும் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்லிச் சிரித்ததுக் கொண்டிருந்தது. நடுவில் உள்ள நல்ல உயரமான உயர்சாதிப் புரவியில் உள்ளவன்தான் முதலில் குதித்தான். குதித்ததும் புரவியின் பிடரியைத் தடவி அதன் காதில் ஏதோ சொன்னான். ஓய்வு கிடைத்த மகிழ்ச்சியில் குதிரை சிற்றோடையைப் பார்த்து குதித்து ஓடி நீர் அருந்திவிட்டு நிதானமாகப் புல் மேய ஆரம்பித்தது.

அதற்குள் முன் பின் வந்தவர்களும் குதித்து இறங்கி நடுவில் வந்தவனின் கட்டளைக்காக காத்து நின்றார்கள். முதலில் இறங்கியவன் யார் இவர்கள் இருவரும் யார் என்று இப்போது பார்த்துவிடுவோம். முதலில் இறங்கியவன் வளம் மிக்க வற்றாத பொருநை நதி பாயும் மலையாள நாட்டில் வஞ்சி நகரைத் தலைநகராய் கொண்டு(இன்றைய திருவாங்கூர்) ஆட்சி புரியும் மன்னன் ஏனாதி திருக்குட்டுவன். கூட வந்த இருவரும் அவரின் மெய்க்காப்பாளர்கள் பாஸ்கர மற்றும் ரவிவர்மா. ஆனால் இப்போது அவன் மன்னனாக வரவில்லை. ஒரு யாத்ரீகனாக பாண்டிய நாட்டு ராஜ்யத்துக்கு உட்பட்ட துவாரபதி நாட்டில் அடர்ந்த காடுகளை அரணாகக் கொண்ட இருக்கும் திருமாலிருஞ்சோலை(இப்போதைய அழகர்மலை) நோக்கி போய்க்கொண்டிருக்கிறான். 

ஒரு திங்களுக்கு முன்பு வரை திருக்குட்டுவன் நினைத்திருக்கவில்லை, இப்படி அடையாளம் மறைத்து மனிதத் தடம் இல்லா கானகம் ஊடறுத்து இப்படி ரதம் கூட இல்லாமல் நீண்ட புரவிப்பயணம் மேற்கொள்ளுவோம் என்று.அன்று அரசவையில் கொழு மண்டபத்தில் வீற்றிருக்கும்பொழுது, வஞ்சியில் இருந்து தென்னாடு திருமாலிருஞ்சோலை நோக்கி ஆன்மீகப் பயணம் போன அடியார்கள் பிரசாதத்துடன் காண விரும்புவதாக வந்து காவலர்கள் சொன்னார்கள். "உள்ளே வர சொல்" என்று கூறிவிட்டு சிம்மாசனம் விட்டு இறங்கி நின்றான் வரவேற்க. உள்ளே வந்த அடியார்கள் ஐவரும் மன்னனை ஆசிர்வதித்து திருமாலிருஞ்சோலை பெருமாளின் கருந்துளசியும் நூபுரகங்கை தீர்த்தமும் கொடுத்தார்கள். பயபக்தியுடன் வாங்கியவன் பின் அவர்களை அமரச்செய்து பயணம் பற்றியும் கோவிலைப் பற்றியும் விசாரிக்க துவங்கினான்.

அடியார்கள் பெருமாளின் அழகையும் அதனாலேயே சுந்தரராஜ பெருமாள் என்று வழங்குவதையும். அதுபோக "அபரஞ்சி" என்ற தேவலோக தங்கத்தால்செய்யப்பட்ட உற்சவரின் அழகையும் வர்ணிக்க வர்ணிக்க திருக்குட்டுவனுக்கும் அந்தப் பெருமாளை உடனே தரிசிக்க வேண்டும் என்ற அடக்கமுடியாத ஆவல் எழுந்தது. ஆனால் அப்போது மதுரையை தலைநகராக கொண்டு ஆண்டுவந்த பராங்குசப் பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது திருமாலிருஞ்சோலை. அனுமதி பெற்று பரிவாரங்களுடன் போக அப்போதிருந்த எல்லைப்பூசல் இடந்தரவில்லை. படையெடுத்து வென்று போவது அவ்வளவு சாதாரணம் அல்ல. ஆகவே உடனே ஒரு யாத்ரீகனாக போக முடிவு செய்தான். கூட இரண்டு மெய்க்காப்பாளர்களையும் அழைத்துக்கொண்டு இரவு பகல் பாராது பயணம் செய்து இதோ அதம்பநாடு(தற்போதைய திண்டுக்கல் பகுதி) வந்துவிட்டான். 

காடுகளையும் மேற்கே மலைகளையும் அரனாகக் கொண்ட அதம்பநாட்டு சமவெளியில் இரவைக் கழித்துவிட்டு விடிவதற்கு சில நாழிகை  இருக்கும் போதே திருமாலிஞ்சோலை நோக்கி புரவியைத் தட்டிவிட்டான். புரவியின் வேகத்தில் சூரியன் வந்து ஒரு நாழிகைக்குள்ளே கோவிலை வந்தடைந்தான். நேரே புரவியை நூபுரகங்கை நோக்கி விரட்டி நீராடிவிட்டு சாதாரண பக்தன் போல உள்ளே போனான். போனவன் சுந்தர்ராஜப் பெருமாளின் அழகில் மயங்கி அபரஞ்சி தங்கத்தில் ஜொலிக்கும் உற்சவரின் அழகில் தன்னை மறந்து கைகூப்பியபடியே பசி மறந்து உலகம் மறந்து தன்னை மறந்து உச்சிப் பொழுது நடை சாற்றும்வரை நின்றான். பிறகு வெளியில் வந்தவன் மெய்க்காப்பாளர்களைக் கூட கண்டுகொள்ளாமல் புரவியை விரட்டியவன் வஞ்சி நகர் வந்து கோட்டை வாயிலை அடைந்ததும்தான் சுயநினைவுக்கு வந்தான்.

அரண்மனையை அடைந்தவன் நிலைகொள்ளாமல் தவித்தான். பெருமாளின் அழகும் சக்தியும் அவனை தூங்கவிடாமல் செய்தது. எப்படியாவது பெருமாளை அதன் சக்தியோடு தனது வஞ்சியில் ஆவாகனம் செய்யத் துடித்தான். உடனே மந்திர தந்திரங்களிலும் வேதங்களிலும் தேர்ந்த பதினெட்டுப் பனிக்கர்களை வரவழைத்தான். அனைவரையும் அடியார்கள் போல வேடமிட்டு திருமாலிருஞ்சோலை சென்று சுந்தராஜப்பெருமானை அதன் சக்தியோடு கவர்ந்து வஞ்சியில் வந்து ஆவாகனம் செய்யக் கட்டளையிட்டான். உடனே பனிக்கர்களும் நாள் நட்ச்சத்திர பார்த்து காவலுக்கு மலையாளக் கருப்பனை பணித்து ஹோரை பார்த்து வஞ்சியில் இருந்து திருமாலிஞ்சோலை நோக்கிக் கிளம்பினர். 

அடியார்கள் போல வந்ததால் அதிக சிரமம் இல்லாமல் ஊர்களைக் கடந்து  ஒரு மாலைப்பொழுதில் திருமாலிஞ்சோலை வந்தடைந்தார்கள். ஊருக்குள் சற்று ஓய்வெடுத்துவிட்டு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நூபுர கங்கையில் நீராடி பெருமாளின் சன்னதி சென்றனர். உள்ளே போனதுமே பெருமாளின் அழகில் சொக்கி நின்றான் காவலுக்கு வந்த கருப்பு. தன்னை மறந்தான், தன் வேலை மறந்தான் கண்களில் கண்ணீர் மல்க கூப்பிய கரங்களுடன் பெருமாளை நோக்கி நின்றான். பதினெட்டு பனிக்கர்களும் வந்தவேலை மறக்காமல் கோவிலை மந்திரக்கட்டுக்குள் கொண்டுவந்து முதலில் அழகரின் சத்தியை கலசத்தில் ஆவாகனம் செய்ய ஆரம்பித்தனர். இதைப்பார்த்த பட்டர் ஒருவர் பதறி அடித்து ஊருக்குள் ஓடி ஊர்மக்களை திரட்டிவந்தார். ஆனால் அவர்களால் மாத்திரக்கட்டு இருப்பதால் சன்னதி வாயில் தாண்டி வரமுடியவில்லை. அழகரே, பெருமாளே என்ன இது சோதனை என்று கைகூப்பி கண்ணீர் விட்டுக் கதறினர் மக்கள்.

தன்னை மறந்து கைகூப்பி நின்ற கருப்புக்கு பெருமாள் உத்தரவிட திடீரென்று ஆவேசம் வந்தவராக பதினெட்டு பனிக்கர்களையும் ஒருவர் பின் ஒருவராக வெட்டி சன்னதி வாசல் தாண்டி வீசினான் கருப்பு. அப்படியும் ஆவேசம் அடங்காமல் பதினெட்டு பேர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி பதினெட்டுப் படிகளாகச் செய்து பதினெட்டாம் படியின்மீது ஏறி நின்றான் கருப்பு. பெருமாளின் உத்தரவின் பேரில் அன்றில் இருந்து பதினெட்டு படி மீது ஏறிநின்று பதினெட்டாம்படிக் கருப்பாக இன்றும் தன்னை நம்பி வந்தவர்களைக் காவல் காத்து வருகிறான் அந்த மலையாளக் கருப்பு! இதுதான் பதினெட்டாம்படிக் கருப்பு தமிழகத்தை அடைந்த கதை. அன்று முதல் அழகருக்கு படைக்கப்படும் அர்த்தஜாம பிரசாதங்கள்தான் கருப்புக்கும் படைக்கப்படும். கோவில் பாதுகாப்பை கருப்பு ஏற்ற நாளில் இருந்து அழகரின் நகைகளுக்கும் 
உடமைகளுக்கும் கருப்புதான் காவல். சித்திர திருவிழாவிற்கு அழகர் மதுரைக்கு புறப்படும்போதும், திரும்பி வந்த பிறகும் நகைகளின் பட்டியல் கருப்பு முன்பு படித்துக்காட்டப்பட்ட பிறகே பெட்டியில் இருந்து எடுக்கவும் பிறகு பூட்டவும்படும். இன்றுவரை இதுதான் நடைமுறை. கருப்புக்கு உருவம் இல்லை. பதினெட்டுப் படிகளும் அருவாளும்தான் அடையாளம். வரும் பக்தர்கள் பதினெட்டுப் படி மீது இருக்கும் கதவிற்குதான் சந்தனம், ஜவ்வாது பூசி, ரோஜாப்பூ சம்பங்கி மாலை அணிவித்து வழிபடுவார்கள். 

இவன் சன்னதியில் தீர்த்துக்கொண்ட பஞ்சாயத்துக்கள் ஏராளம். ஏனென்றால் இங்கு பொய் சொல்ல முடியாது. மீறி சொன்னால் கருப்பு தண்டித்துவிடும் என்ற பயம் இன்றளவும் மக்களிடம் உண்டு. ஒவ்வொரு ஆடிப் பவுர்ணமி போதும் மட்டுமே கருப்பின் நெடுங்கதவு திறக்கப்படும். ஆடித்தேருக்கு கள்ளழகரைக் காண ஒரு கூட்டம் போக கருப்புக்கு கிடாய் வெட்டி படையல் போடவும் இன்றும் மக்கள் வண்டி கட்டிப் போகும் வழக்கம் உள்ளது. அதில் நமது பாலைய நாடும் அடக்கம். ஆனால் ஆதியில் கொற்றவை வழிபாடு வழக்கத்தில் இருந்த சோழ நாட்டில் இருந்து குடிபெயர்ந்து பிற்பாடு பாண்டியர் வசம் வந்த பாலைய நாட்டில் குடியேறிய நமக்கும், நகரத்தார்களுக்கும் கருப்பனை எப்போது ஏற்றுக்கொண்டோம் என்பது தனி ஆராய்ச்சிக்கு உட்பட்டது. ஆனால் நம் ஊர்களில் உள்ள எல்லாக் கருப்பும் இந்த பதினெட்டாம்படி கருப்புக்கு அடங்கியதுதான். இங்கு இருந்து மண் எடுத்துதான் நம் வசதிக்கேற்ப பெயரிட்டு நம் குல முன்னோர்களையும் அவனுள் அடக்கி வணங்கி வருகிறோம். ஆனாலும் ஒருமுறையேனும் பதினெட்டாம்படி கருப்பரை தரிசிக்காமல் நம் பகுதி மக்களுக்கு வாழ்வு முழுமையடைவதில்லை. 

"எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

அக்கினியில் பிறந்தவராம் அரனாரியின் மைந்தனவன்
எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்
சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்
எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி"

பின்குறிப்பு: கருப்பு அழகர் கோவிலில் ஐக்கியமான காலம் குறித்து தெளிவான ஆதாரங்கள் இல்லை. மேலும் அப்போதைய மன்னர்கள் குறித்தும் தகவல்கள் இல்லை. ஏன்  அழகர் கோவில் எந்தக் காலத்தில் யாரால் கட்டப்பட்டது என்ற வரலாறு கூட இல்லை. பிறகு பிற்காலப் பாண்டியர்களாலும், நாயக்கர்களாலும் பல திருப்பணிகள் நடந்ததற்கு மட்டுமே ஆதாரங்கள் உள்ளது. ஆகவே இந்தக் கதை நடந்த காலம் மற்றும் பெயர்கள் கற்பனையாக நானே உருவாக்கிக்கொண்டது.

எவ்வாறு செல்வது? பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 843 LSS, 844 EXP, 844 LSS எண் நகரப் பேருந்துகள் உள்ளன. பயண நேரம் 0.40 நிமிஷம். ஆட்டோ மற்றும் டாக்சி வசதி உண்டு. அருகிலுள்ள இரயில் நிலையம் மதுரை ஜங்சன். அருகிலுள்ள விமானநிலையம் மதுரை. விமான நிலையம் .

சிவகங்கை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து செல்பவர்கள் நந்தம் திண்டுக்கல் சாலை போய் நத்தத்தில் பேருந்து எடுக்கலாம். அல்லது மதுரைக்கு முன்பே மேலூரில் இறங்கி அழகர் கோவிலுக்கு பேருந்து வசதி உண்டு.